
Post No. 9119
Date uploaded in London – –8 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது ஆரம்பிக்கப்படுகிறது.
புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 1
ச.நாகராஜன்
- யோக ரஹஸ்யம்
ஸ்ரீ தேவியானவள் பர்வதராஜனுக்கு யோக ரஹஸ்யங்களையும் மந்திர சித்தி பற்றியும் உபதேசித்து அருளுகிறாள்.
இது தேவி பாகவதம் ஏழாம் ஸ்கந்தம் 35ஆம் அத்தியாயத்தில் வரும் பகுதியாகும்.
தேவி : ஓ! யோகசீலனே! ஜீவாத்ம, ப்ரமாத்ம ஐக்கியமே யோகம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய ஆறு தடைகள் உள்ளன. இதைத் தடுப்பவர்களே ஜீவான்ம பரமான்ம ஐக்கிய யோகத்தை அடைவர். இந்த யோகத்திற்கு எட்டு அங்கங்கள் உண்டு. அவையாவன : இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்பவையாகும். இவையே யோகத்திற்கான சாதனங்களாகும்.
1. இயமமாவது :- அஹிம்சை, ஸத்தியம், களவில்லாமை, பிரம்மசரியம், தயை, சன்மார்க்கம், பொறுமை, தைரியம், மிதமான ஆகாரம், சௌசம் எனப் பத்தாகும்.
2. நியமமாவது :- தவம், சந்தோஷம், ஆஸ்திகம் அதாவது தெய்வம் உள்ளது என்ற நம்பிக்கை, தானம், தேவ பூஜை, சித்தாந்த சிரவணம், நாணம், புத்தி, ஜபம், ஹோமம் எனப் பத்தாகும்.
3. ஆசனமாவது : – பத்மாசனம், ஸ்வஸ்திகாசனம், பத்ராசனம், வீராசனம் என ஐந்தாகும்.
பத்மாசனம் என்பது பாதங்களைத் தொடைகளின் மேல் வைத்து இரண்டு கைகளால் பெரிய விரல்களைப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்திருத்தலாகும்.
ஸ்வஸ்திகாசனம் என்பது இரண்டு பாதங்களையும் தொடைகளுக்கும் முழங்கால்களுக்கும் இடையிலுள்ள சந்தில் வைத்து நேராக இருத்தலாகும்.

அடுத்து பத்ராசனம் என்பது புறங்கால்களைப் பிருஷ்ட பாகத்தில் மடக்கி வைத்து, விருக்ஷணத்தின் அடியின் வழியாக அப்பாதங்களை பாத சந்திகளோடும் கைகளால் பிடித்திருத்தலாகும்.
வஜ்ராசனம் என்பது தொடைகளின் மேல் பாதங்களை முறையாக வைத்து, முழங்கால்களில் கை விரல்களை மேல் முகமாக அமைத்து நிமிர்ந்திருத்தலாகும்.
வீராசனம் என்பது ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தைத் தொடையிலும் வைத்து சரீரத்தை நேராக வைத்திருத்தலாகும்.
4. பிராணாயாமம் : பிராணாயாமமாவது வெளியே இருக்கிற வாயுவை இடகலையினால் உள் வாங்கி பதினாறு மாத்திரையளவு சுழிமுனை நடுவில் நிறுத்திப் பின்னர் முப்பத்தியிரண்டு மாத்திரையளவு பிங்கலை நாடியின் வழியாய் விடுவதே ஆகும்.
இது சகர்ப்பம், விகர்ப்பம் என இருவகைப்படும். சகர்ப்பம் என்பது அடிக்கடி வெளியே செல்லும் வாயுவை பன்னிரண்டு மாத்திரை அல்லது பதினாறு மாத்திரை காலம் ஜபம் மற்றும் தியானிதிகளால் உள்ளே கிரஹித்து ஜபதியானிதிகளைச் செய்தல் ஆகும்.
விகர்ப்பம் என்பது ஜபம் மற்றும் தியானம் இல்லாமல் மேலே கூறியபடி பிராணாயாமம் செய்தலாகும். இப்படி முறையாக பிராணாயாமத்தைச் செய்யும் காலத்தில் சரீரம் வியர்க்குமானால் அதமம் என்றும், நடுங்குமானால் மத்திமம் என்றும் பூமியை விட்டு மேலெழும்புமானால் உத்தமம் என்றும் சொல்லப்படும்.
5. பிரத்யாஹாரம் : பிரத்யாஹாரமாவது இயம, நியமாதிகளால் கொள்ளப்பட்ட உத்தம குணங்கள் நிறைந்து, தான் எண்ணிய அபீஷ்டங்களைப் பெறுமளவும் இந்திரியங்களை விஷயங்களில் போக விடாமல் தடுத்து ஸ்வாதீனம் செய்து கொள்ளலாகும்.
6. தாரணை : தாரணையாவது காலில் உள்ள பெருவிரல்கள், முழங்கால்கள், தொடைகள், மூலாதாரம், ஆண்குறி, நாபி, இருதயம், கண்டம், கன்னம், நாசி, நடுப்புருவம், நெற்றி, தலை, துவாதசாந்தம் இவ்விடங்களில் பிராணவாயுவை விதிமுறையாக நிறுத்துவதாகும்.
7. தியானம் : தியானமாவது தன்னால் விரும்பப்பட்ட தேவதையோடு தனது அசைவற்ற மனதை லய்ப்பித்தல் ஆகும்.
8. சமாதி : சமாதியாவது ஜீவாத்மாவாகிய தான் பரமாத்மாவினின்று வேறாகாது, சமத்துவ பாவனை செய்து கொண்டு எப்போதும் இருப்பதாகும்.
இவையே அஷ்டாங்க யோக லக்ஷணம் என்று யோக விசாரம் உடையவர் கூறுவர்.
*

2. பரமபதம் அடைவது எப்படி?
ஸ்ரீமத் பாகவதத்தில் சதுர்த்த ஸ்கந்தத்தில் எட்டாம் அத்தியாயம் துருவ சரித்திரத்தை விவரிக்கிறது.
அதில் நாரத மஹரிஷி துருவனுக்கு பரமபதம் அடைவது எப்படி என்பதை விவரிக்கிறார். அதைக் கீழே காணலாம்.
நாரதர் துருவனிடம் கூறுகிறார் :-
எந்த ஒருவனுக்கு சுகமோ அல்லது துக்கமோ தெய்வாதீனமாய் விளையுமோ அவன் அங்ஙனம் நேர்ந்த சுக, துக்கங்கள் இரண்டினாலும் மனக் களிப்புற்றவனாகவே இருப்பானாகில் அவன் கடைசியில் பிரகிருதி மண்டலத்திற்கு வெளிப்பட்டதாகிய விஷ்ணுவின் ஸ்தானத்தைப் பெறுவான். தெய்வாதீனமாக சுகம் நேரும் போது மனக் களிப்புறலாம். ஆனால் துக்கம் நேரும் போது எப்படி மனக்களிப்பு அடைய முடியும் என்று கேட்பாய் ஆகில், சொல்லுகிறென் கேள்.
தெய்வாதீனமாய் வரும் சுகம் மற்றும் துக்கம் ஆகிய இரண்டிலும் மனம் கலக்கம் அடையக் கூடாது. இரண்டிலும் மனக்களிப்பு மாறாமல் இருப்பதே யுக்தம். சுகம் நேரில் புண்ணியமானது நசித்துப் போகின்றது. துக்கம் நேரில் பாவம் நசித்துப் போகிறது. எப்படி பாவம் துக்கத்தை அனுபவிப்பதாகி மென்மேலும் சரீர சம்பந்தத்தை விளைவித்து சம்சாரத்தை வளர்க்குமோ, அதே போலவே புண்ணியமும் சுகத்தை அனுபவிப்பதாகி மென்மேலும் சரீர சம்பந்தத்தை விளைவித்து சம்சாரத்தை வளர்க்கும்.
ஆனால் பாவத்தினால் விளையும் சரீரம் துக்கானுபவத்திற்கும், புண்ணியத்தினால் விளையும் சரீரம் சுகானுபவத்திற்கும் இடமாகும் என்பதால் அனுபவம் மாத்திரமே வித்தியாசமாக இருக்கும். ஆயின் சம்சாரத்தை வளர்ப்பதில் புண்ய பாவங்கள் இரண்டுமே சமமானவையே.
சம்சார வர்த்தகங்களான புண்ய, பாவம் இரண்டும் சுகம் மற்றும் துக்க அனுபவங்களால் கழிந்து விடும் என்றால் உடனே சம்சாரத்திலிருந்து ஜீவன் விடுபடுவான் ஆகையால் அந்த இரண்டைப் பற்றியும் விவேகம் உள்ளவன் சந்தோஷம் அடைய வேண்டுமேயன்றி வருத்தப்படலாகாது. சுகானுபவத்தில் சுகம் அனுபவிக்கப் பெற்றோம் என்று அதில் மனப்பற்றுடன் சந்தோஷிக்கக் கூடாது. சரீர சம்பந்தத்தை விளைவிக்கக் கூடிய புண்ணியம் நசித்துப் போகப் பெற்றோம் என்று சந்தோஷமே அடைய வேண்டும். அதே போல துக்க அனுபவத்தில் பாவம் நசிக்கப் பெற்றோம் என்று சந்தோஷிக்க வேண்டுமேயன்றி வருத்தப்படக் கூடாது.
இப்படி தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு விட்டு சுக துக்கம் ஆகிய இரண்டிலும் எவன் ஒருவன் மனக்களிப்பு மாறாது இருப்பானோ அவன் ப்ரக்ருதி மண்டலத்தைக் கடந்து பரம பதம் போய்ச் சேர்வான்.
TAGS – புராணத்துளிகள் 3/1, பரமபதம்,அஷ்டாங்க யோகம்
*