
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9128
Date uploaded in London – –10 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

VOICE RECORDING IS AVAILABLE IN FACEBOOK.COM/GNANAMAYAM AND YOU TUBE (GNANA MAYAM CHANNEL); BROADCAST ON 10TH JANUARY 2021.
“ஓம் மஹாகால மஹாகாய மஹாகால ஜகத்பத் – மஹாகால மஹாயோகின் மஹாகால நமோஸ்துதே -மஹாகால மஹாதேவ மஹாகால மஹா ப்ரபோ – மஹாகால மஹாருத்ர மஹாகால நமோஸ்துதே!
மஹாகாலேஷ்வருக்கு நமஸ்காரம்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது சப்த மோக்ஷபுரிகளில் ஒன்றும் பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ள, அவந்திகா என்று பழைய காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த உஜ்ஜயினி ஆகும். மத்யபிரதேசத்தின் தலைநகரான போபாலிலிருந்து இது 192 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தூரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ஒவ்வொரு யுகத்திலும் இது ஒவ்வொரு பெயரைக் கொண்டது என்பதால் இது யுகம் கடந்த நகரம் என்பதை அறியலாம். கனகசிருங்கா அதாவது பொன் வேய்ந்த வீடு என்றும்,குசஸ்தலி அதாவது விசேஷ தர்ப்பை தலம் என்றும், பத்மாவதி அதாவது தாமரை மலர்களை முழுதுமாகக் கொண்ட இடம் என்றும் அமராவதி அதாவது என்றும் அழியாத தேவர்களின் இருப்பிடம் என்றும் இவ்வாறாகப் பல பெயர்களைக் கொண்ட திவ்ய நகரம் இது!
க்ஷிப்ர நதிக் கரையில் அமைந்துள்ள அற்புத ஸ்தலம் இது. க்ஷிப்ர என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இமைப்பொழுது என்று பொருள். இந்த புண்ணிய நதியில் ஸ்நானம் செய்தால் இமைப்பொழுதில் ஒருவன் செய்த பாவங்கள் அனைத்தும் பறந்தோடும். இங்கு நடக்கும் கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு புண்ய ஸ்நானம் செய்வது வழக்கம்.
இந்த தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. தூஷணன் என்ற வேதாளம் ஒன்று, அவந்தி நகர் அதாவது உஜ்ஜயினி நகர் வாழ் மக்களைக் கொடுமைப்படுத்தி வந்தது. மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அங்கு வேதத்தில் வல்ல ஒரு அந்தணரிடம் சென்று முறையிட்டனர். அவர் மக்கள் படும் துன்பத்தைக் கண்டு இரங்கி ஒரு யாகம் செய்தார். அவரது தவத்தை மெச்சிய சிவபிரான் பூமியைப் பிளக்கச் செய்தார். அதிலிருந்து மஹாகாலர் தோன்றினார்; தூஷணனை வதைத்தார். அங்கு பூமிக்கு அடியிலேயே கோவில் கொண்டார். அது தான் நாம் இன்று காணும் மஹாகாலேஸ்வர் ஆலயம் ஆகும். இதன் வெளி பிரகாரம் பரந்து அகன்றது. இதன் தல விருட்சம் சித்தவடம் என்னும் ஆலமரம் ஆகும். இந்த மரத்தைத் தொன்று தொட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

ஐந்து அடுக்குகள் கொண்ட இந்தக் கோவிலில் மூன்று அடுக்குகளில் மூன்று லிங்கங்களைக் காணலாம். பூமிக்குக் கீழே இருந்து அருள் பாலிப்பவரே மஹா காலர். ஜோதிர் லிங்கமான இவர் பூமிக்கு அடியில் இருப்பதால் படியில் இறங்கிச் சென்று இவரை தரிசிக்க வேண்டும். அவருக்கு மேலே இருப்பவர் ஓம்காரேஸ்வரர். அவருக்கும் மேலே இருப்பவர் தாரகேஸ்வரர்.
மஹாகாலேஸ்வரர் கோவிலில் இருக்கும் கோடி தீர்த்தத்தை எடுத்து நாமே அவருக்கு அபிஷேகம் செய்யலாம். இதற்காக குளக்கரையில் செம்பினால் ஆன சொம்புகள் உண்டு.
மஹாகாலேஸ்வரர் நிலை கொண்டுள்ள புள்ளி வழியாகத் தான் பூமியின் முதலாவது தீர்க்க ரேகை செல்கிறது. இதை வைத்துத் தான் கால நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆகவே தான் இவர் மஹாகாலேஸ்வரர் ஆகிறார். உலகெங்குமுள்ள வானவியில் நிபுணர்களுக்கு மூலாதாரம் இந்தப் புள்ளியே.
கோவிலுக்கு தெற்கில் உள்ள கோடி தீர்த்தம் அபூர்வமான ஆற்றல் கொண்டது. இராவணனை வதைத்த இராமபிரானின் பட்டாபிஷேகத்திற்கென அனைத்து தீர்த்தங்களையும் சேகரித்து வந்த ஹனுமான் க்ஷிப்ர நதி வந்த போது இந்தத் தலத்தில் காகபுஜண்ட மஹரிஷி தவம் செய்து கொண்டிருந்தார். ஹனுமான் தீர்த்தத்தை எடுக்க முயன்ற போது அவர் தவம் கலைய, அவரது தபோபலத்தால் ஹனுமாரால் தீர்த்தத்தை எடுக்க முடியவில்லை. ரிஷியை வணங்கிய ஹனுமார் தான் வந்த காரியத்தைப் பணிவுடன் கூற, கொண்டு வந்த பல்வேறு தீர்த்தங்களில் ஒரு துளியை அங்கு விடுமாறு பணித்தார் ரிஷி. ஹனுமான் அப்படியே செய்ய அவரால் தீர்த்தத்தை எடுக்க முடிந்தது. அவர் மனம் மிக மகிழ்ந்தார். இந்த தீர்த்தத்தில் சரும வியாதி உள்ளவர்கள் குளித்தால் அந்த வியாதிகள் போகும் என்பது அனுபவ உண்மையாக அமைகிறது.
இந்தத் தலத்தில் தான் சாந்தீபனி மஹரிஷி தன் குருகுலத்தை நடத்தினார். பலராமரும் கிருஷ்ணரும் குருகுல வாசம் செய்தது இந்த முனிவரின் ஆசிரமத்தில் தான். இது உஜ்ஜயினி நகரின் வெளியில் உள்ளது.
விக்ரமாதித்தன் உலகம் வியக்கும் வண்ணம் சிறப்பாக ஆண்ட இடம் உஜ்ஜயினியே. இங்கு அவன் வழிபட்ட ஹர்சித்தி ஆலயம் மிக சக்தி வாய்ந்த சக்தி பீடங்களில் ஒன்று. தட்சனின் யாகத்தின் போது சிவபிரான் வீசி எறிந்த தேவியின் உறுப்புகளில் அவள் விலா எலும்பு விழுந்த இடம் இது. அங்காரகன் எனப்படும் செவ்வாய் பிறந்த இடமும் உஜ்ஜயினி தான். அவனுக்கு இங்குள்ள குன்றின் மேல் சிறிய கோவில் ஒன்று உண்டு. உலகம் வியக்கும் மஹாகவி காளிதாஸன் காளி அருள் பெற்று கவி மழை பொழிந்து வாழ்ந்த இடமும்
இதுவே. மேகதூதத்தில் மேகத்தை நோக்கி, ‘நீ மாலை நேரத்தில் அங்கே இருந்து இரவில் இடிமுழக்கத்தால் மஹா காலருடைய பறையைத் தொட்டு வணங்கி விட்டுப் பின் மேலே செல்வாயாக” என்று சொல்வதோடு இன்னும் பலவாறாக உஜ்ஜயினியை அவர் போற்றிச் சித்தரிக்கிறார். மாபெரும் மன்னனாக இருந்து பின்னர் உலகைத் துறந்து மஹரிஷியாக மாறிய பர்த்ருஹரி தவம் செய்த குகையையும் ஊருக்கு வெளியே காணலாம்.
உலகெங்கிலும் உள்ள அறிஞர்களும் யாத்ரீகர்களும் இங்கு வந்து வியக்கும் வண்ணம் நல்லறிவு மற்றும் அனைத்துக் கலைகளின் தலைநகரமாகத் திகழ்ந்தது இது!

காலம் காலமாக கோடிக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும், மஹா காலேஷ்வரும் மஹா காளியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். மஹாகவி பாரதியாரின் அருள் வாக்கு – “யாதுமாகி நின்றாய் காளீ, எங்கும் நீ நிறைந்தாய்! காளி மீது நெஞ்சும் என்றும் கலந்து நிற்க வேண்டும்! அன்னாய் வாழ்க நின்றன் அருளே! நன்றி வணக்கம்!


–subham–
tags- உஜ்ஜயினி, ஜோதிர்லிங்கம்,மஹாகாலேஸ்வரர்
rcraja2001
/ January 12, 2021மிகவும் அருமை….வாழ்க உங்கள் சேவை..வளர்க உங்கள் தொண்டு
santhanam nagarajan
/ January 12, 2021thanks