சின்னச் சின்ன செயல்கள் = பெரிய பெரிய பலன்கள்! (Post.9173)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9173

Date uploaded in London – –22 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சின்னச் சின்ன செயல்கள் = பெரிய பெரிய பலன்கள்!

ச.நாகராஜன்

ஜென் புத்தமதப் பிரிவில் ஏராளமான குட்டிக் குட்டி உபதேசங்கள் உண்டு. அவை அன்றாட வாழ்வில் எளிதில் கடைப்பிடிக்கக் கூடியவை; ஆனால் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தவை. பார்க்க எளிதாக சுலபமாக இருக்கும் அந்த அன்றாடப் பழக்க வழக்கங்கள் மிக பிரம்மாண்டமான பலனைத் தரும்!

அசோகன் மாமன்னனாக எப்படி ஆனான்?

மாமன்னன் அசோகன் முந்தைய ஜென்மத்தில் ஒரு குழந்தையாக இருந்த போது அவர் புத்தபிரானைச் சந்தித்தார். புத்தருக்குக் கொடுக்க குழந்தையிடம் என்ன இருக்கும்? ஆனால் அந்தக் குழந்தை ஒரு பிடி மண்ணை எடுத்து புத்தபிரானிடம் பயபக்தியுடன் கொடுத்தது. அதை புத்தர் அன்புடன் வாங்கிக் கொண்டார்.

அந்தச் சிறிய செயலின் பலன் அந்தக் குழந்தை மாமன்னன் அசோகனாக உருவெடுத்தது. பெரும் செயல்களைச் செய்தது!

இது தான் ஒரு சிறிய நல்ல செயலின் பலன்!

xxx

பென்னியைச் சேகரித்தவர் கெடிலாக் கார் வாங்கிய சம்பவம்!

ஜென் பழக்க வழக்கங்களைப் பற்றி விளக்கும் ஜென் மாஸ்டர் டைனின் கடகிரி

(Dainin Katagiri) நம்மிடம் இருக்கும் ஒவ்வொன்றும் மதிப்பு மிக்கதே என்கிறார். “நமது வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள் மதிப்பு வாய்ந்தவை. நமக்குக் கிடைக்கும் அர்த்தமுள்ள ஞான மொழிகள் மதிப்பு மிக்கவை. ஒரே ஒரு வார்த்தையாக இருக்கலாம் அல்லது ஒரு சிறு சொற்றொடராக அது இருக்கலாம். ஒரு சின்ன பைசா கூட மதிப்பு மிக்கது தான்” என்று கூறும் அவர் தான் கண்ட ஒருவரைப் பற்றி விவரிக்கிறார் இப்படி:

“எனக்குத் தெரிந்த ஒருவர் பென்னி (Penny Coins) யைச் சேர்ப்பதைப் பழக்கமாகக் கொண்டவர். இப்படி பென்னிகளாகச் சேர்த்து வந்தவர் பல மூட்டைகளில் பென்னி நாணயங்களைச் சேகரித்தார்.  அந்த பென்னிகளைக் கொண்டு அவர் ஒரு கெடிலாக் காரையே வாங்கி விட்டார்.  ஆகவே பென்னி கூட மதிப்பு வாய்ந்தது தான் என்பது தெரிகிறது”

ஒரு புல் கூட மதிப்பு மிக்கது தான். புல் இல்லாமல் உரமான மண் உருவாகாது.

நமது வாழ்க்கைக்கு நாம் உண்மையானவராக இருந்தால் அது மிக்க மதிப்பு மிக்கதாக மாறி விடும். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உன்னதமான எண்ணமும் நமக்கு உருவாகும்.

xxxxx

மன்னர் மந்திரிக்குத் தந்த தாடி!

டாங் (Tang Dynasty) வமிசத்தில் ஒரு மன்னர் இருந்தார். அவரது முக்கியமான மந்திரி ஒருவர் ஒருமுறை நோய்வாய்ப்பட்டு விட்டார். ராஜ வைத்தியர் அவரைப் பரிசோதித்தார். நல்ல ஒரு தாடியை வறுத்து அவரிடம் கொடுத்தால் அந்த வியாதியிலிருந்து அவர் விடுபடுவார் என்றார் வைத்தியர்.

மன்னர் ஆசை ஆசையாக பெரிய தாடியை வளர்த்து வந்தார். அவர் உடனே தன் தாடியை மழித்து அதை வறுத்து மந்திரியிடம் தந்தார். என்ன ஆச்சரியம், மந்திரியின் கொடிய வியாதி நீங்கியது; அவர் குணமடைந்தார்.

மந்திரி தாடியைப் பற்றி, தாடி தானே என்று எண்ணவில்லை. அந்த தாடிக்குப் பின்னே அதை மழித்துத் தரும் மன்னரின் பேரன்பை நினைத்து உருகினார்.

தன் வாழ்நாள் முழுவதும் மன்னருக்குச் செருப்பாக உழைக்கத் தயார் என்று எண்ணிய அவர், அப்படியே வாழ்ந்து காட்டினார்.

ஒரு சிறிய தாடி, ஒருவரின் வாழ்நாள் உழைப்பைப் பெற்றது!

xxxx

ஒபாகுவின் தாழ்ந்த வணக்கம்!

ஒபாகு (Zen Master Obaku) என்பவர் சிறந்த ஜென் மாஸ்டர். அவர் புத்தபிரானைப் பார்த்தவுடன் தலை தாழ்த்திக் குனிந்து வணங்கினார். புத்தர், தர்மம், சங்கம் எதையும் அவர் பதிலாக புத்தரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இடுப்பளவு குனிந்து ஒரு வணக்கம்! அந்தச் சின்ன செயலிலேயே அவர் மிகவும் திருப்தி அடைந்தார். அந்த குனிந்து வணங்கிய சிறிய செயல் என்ன ஆனது? இன்று வரை அனைவராலும் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது செய்யும் வணக்க முறையாகி விட்டது.

சிறிய செயல்; பெரிய பழக்கத்தை உருவாக்கி விட்ட பெரிய பலன்!

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்!

xxx

வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அன்றாடம் சிறிய சிறிய நல்ல செயல்களை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும் – பயனை எதிர்பாராது!

ஆத்ம திருப்தியுடன் செய்யப்படும் அவை அதற்கு ஈடான சிறிய பலனைத் தராது; நேர்விகித பலனாக சரிக்குச் சரியான அளவாக இல்லாமல் அளவுக்கு மீறிய பிரம்மாண்டமான பலனை அது தரும்!

இது ஜென் பிரிவின் முக்கியமான ஒரு போதனை!

***

 tags- ஜென்,  சின்ன செயல், பெரிய பலன், 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: