

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9183
Date uploaded in London – –24 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

“ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா
மதுராபுரி சதனா மிருதுவதனா இஹ ஸ்வாகதம் கிருஷ்ணா!!
இஹ ஸ்வாகதம் கிருஷ்ணா!!
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது
குரு பகவானும் வாயு பகவானும் குருவாயூரப்பனை பிரதிஷ்டை செய்த அபூர்வ தலமான குருவாயூர் ஆகும். பரசுராமரால் உருவாக்கப்பட்ட கேரள மாநிலத்தில் உள்ள இந்தத் தலம் எர்ணாகுளத்திலிருந்து 84 கிலோமீட்டர் தூரத்திலும் கோழிக்கோடிலிருந்து 111 கிலோமீட்டர் தூரத்திலும் கோயம்புத்தூரிலிருந்து 144 கிலோமீட்டர் தொலவிலும் உள்ளது.
இந்த அதிசயமான தலம் பற்றி ஏராளமான புராணக் கதைகள் உண்டு. மஹாபாரத யுத்தம் முடிவுக்கு வந்தது. தன் அவதார நோக்கத்தை நிறைவேற்றி விட்ட கிருஷ்ணர் உத்தவரை அழைத்து எனது அவதாரம் முடிந்து விட்டது. இதோ இங்கு துவாரகையில் உள்ள ஆலயத்தில் இருக்கும் விக்ரஹத்தை தேவகுருவான பிரஹஸ்பதியிடம் தந்து புண்ணியமான பிரதேசத்தில் பிரதிஷ்டை செய்யச் சொல்” என்று கூறினார். காலப்போக்கில் யாதவ வம்சம் விப்பிர சாபத்தினால் ஒரு முடிவுக்கு வர, உத்தவர், குரு பகவானிடம், கிருஷ்ணர் இட்ட கட்டளையைக் கூறினார். அதை சிரமேற்கொண்ட குரு பகவான் த்வாரகைக்கு வர, அது கடலில் மூழ்கிக் கொண்டிருந்தது. குரு பகவானுக்கு அலை மோதும் கடலில் விக்ரஹத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. உடனே அவர் வாயு பகவானை வேண்டி ஸமுத்திரத்தை சாந்தமடையச் செய்தார். வாயு பகவானின் துணையோடு விக்ரஹத்தைக் கண்டு பிடித்து அதை ஸ்தாபிக்க புண்ய தேசம் தேடி வந்தார். இறைவனின் நாடான கேரளத்தின் மேற்கு எல்லையில் ஒரு தடாகத்தைக் காண அதில் சிவபிரான் க்ரீடை புரிந்து கொண்டிருப்பதைக் கண்டு குருவும் வாயுவும் அவரை வணங்க, உங்கள் வருகை ஏன் என்று எனக்குத் தெரியும். அம்பிகாபுரம் என்ற இந்த இடம் எனக்கு மிகவும் விருப்பமான இடம். இங்கே அந்த விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்யுங்கள்” என்று கூறி அருளினார்.
குருவும் வாயுவும் அவ்வண்ணமே அங்கே குருவாயூரப்பன் விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்தனர். குரு பகவானும் வாயு பகவானும் விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்த அந்தத் தலம் குருவாயூர் என்று பெயர் பெற்று பிரஸித்தமானது.

குருவாயூரப்பன் இங்கு கிழக்கு முகமாக பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். ஆகவே கிழக்கே நடை பிரதானமாகும். அதைத் தாண்டினால் ஒரு நடைப்புரை. அதை யானைப்பந்தல் என்றும் சொல்வார்கள். மூலஸ்தானத்திலிருந்து கிழக்குப் புறமாக வந்தால் இதை அடையலாம். உள்ளேயிருந்து வெளி வரும் போது பெரிய பலிபீடத்தைக் காணலாம். இது குருவிற்கும் வாயுவிற்கும் அதிஷ்டானமென்று சொல்லப்படுகிறது. நடைப்புரையின் மேலப் புறங்களில் வர்ணப்படங்கள் உள்ளன. இதன் தென்கிழக்கு மூலையில் கூத்தம்பலம் உள்ளது. இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் உள்ளன. தெற்கே விலை உயர்ந்த ஆபரணங்கள் உள்ள அறை உள்ளது.
ஆதி சங்கரர் ஒரு முறை இங்கு ஆகாய மார்க்கமாக வர அங்கு ஏகாதசி பண்டிகை விமரிசையாக நடந்து கொண்டிருக்க, இது என்ன வீண் கேளிக்கை என்று அவர் நினைத்தார். அப்போது அவர் மேனி தளர்ந்து குருவாயூரப்பன் சந்நிதியின் முன் விழுந்து விட்டார். மூர்ச்சை தெளிந்து பார்க்கையில் அங்கு இருக்கும் அனைத்தும் விஷ்ணுமயமாய் இருப்பதைக் கண்டு வியப்புற்றார் அப்போது ஆகாயத்திலிருந்து தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். இப்படி மலர்மழை பொழிந்த இடத்தையும் நிகழ்ச்சியையும் நினைவூட்டும் வண்ணம் இந்தப் பந்தலின் மேற்புரையில் ஒரு பகுதி திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மேள தாளங்களுடன் பகவான் இங்கு வரும் சமயங்களில், முன் நிகழ்ந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வண்ணம், பகவான் இங்கு சற்று நிறுத்தப்படுவார்! அப்போது மேளதாளங்கள் நிறுத்தப்படும்.
தனது அனுபவத்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்த ஆதி சங்கரர் சில நாட்கள் குருவாயூரிலேயே வசித்தார். குருவாயூரப்பனை பஜனம் செய்து பூஜாகிரமங்களில் சில விசேஷ முறைகளை நியமித்தார்;
அதன்படியே அவை இன்றும் நடைபெற்று வருகின்றன.

கர்பகிருஹத்திற்கு நான்கு பக்கங்களிலும் உள்ள கட்டிடங்களுக்கு நாலம்பலம் என்று பெயர். நாலம்பலத்தின் தெற்கு மூலயில் பகவானுக்கு உரிய நைவேத்திய பதார்த்தங்கள் பாகம் செய்யப்படும். இங்கு தினமும் கணபதி ஹோமம் நடைபெற்று வருகிறது. இங்கு அக்ஷய திரிதியை, ஜென்மாஷ்டமி, கார்த்திகை முதல் நாள் முதல் நாற்பது நாட்கள் கொண்ட மண்டல காலம், கார்த்திகை மாதம் சுக்கில ஏகாதசியான குருவாயூர் ஏகாதசி, சித்திரை மாதம் முதல் தேதி அன்று விஷுக்கனி தரிசனம் உள்ளிட்ட பல உற்சவ தினங்கள் இன்றும் சிறப்புற நடைபெற்று வருகின்றன.
இந்தத் தலத்தில் தான் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாராயண பட்டர் அவர்களால் நாராயணீயம் என்னும் தெய்வீக நூல் இயற்றப்பட்டது. குருவாயூரப்பனை வழிபட்டு தன் வியாதியை போக்கிக் கொண்ட அவர் 1036 ஸ்லோகங்களில் குருவாயூரப்பன் முன் நின்று தினம் பத்து ஸ்லோகங்கள் வீதம் பாடி நாராயணீயத்தை முடித்தார் என்கிறது வரலாறு.. நரசிம்மாவதாரம் பற்றி அவர் பாடிய போது அதை விவரிக்க முடியாது திகைத்த நாராயண பட்டரின் முன் மண்டபத் தூண் ஒன்றிலிருந்து நரசிங்கம் கண் முன்னே தோன்றி அங்கும் இங்கும் நடமாடியது. அதைக் கண்டு அப்படியே பாடினார் பட்டர். இப்படி நாராயணீயத்தில் வரும் பல லீலைகள் பற்றிய பல அற்புதங்கள் உண்டு. ஒவ்வொரு சுலோகமாகப் பார்க்கும் போது, பட்டர் விக்ரஹத்தை நோக்கி, “நீ இப்படிச் செய்தாயாமே’ என்று கேள்வி கேட்பது போல இருக்கும். ஆமாம், அப்படித் தான் செய்தேன் என்று பிம்பம் அங்கீகரித்துத் தலை அசைத்ததாம். எல்லையற்ற மஹிமை கொண்டது இந்தத் தலம். அனுபவத்தாலேயே இதை உணரலாம். இங்கு பக்தர்கள் இன்று வரை அடைந்து வரும் உண்மை அனுபவங்கள் மிகவும் ஆச்சரியகரமானவை. எந்த நோய் இருந்தாலும் அதைத் தீர்க்கும் தலம் இது. காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் வழிபடும் குருவாயூரப்பன் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திகிறோம். ஹே! கலியுக வரதா! குருவாயூரப்பா,நின் பாதமே சரணம்! நன்றி வணக்கம்!

tags– குருவாயூர், ஆலயம் அறிவோம்,