தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும்! – 2 (Post.9195)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9195

Date uploaded in London – –28 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும்! – 2

தமிழ் முருகனைத் தமிழால் துதிக்க விரும்பும் அருணகிரிநாதர் புகலரிய தாந்த்ரி சங்கத் தமிழ் ஆய்ந்து  கொஞ்சிப் புவியதனில் வாழ்ந்து என்று கூறுகிறார்.

செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ் தெரி செந்திற்பதிநகர் உறைவோனே என முருகன் வாழும் இடம் தமிழ் வாழும் இடம் என்பதைத் தெரியப்படுத்துகிறார் அவர்.

முத்தமிழை ஆயும் வரிசைக்கார என்று தமிழ் வேளை அழைக்கும் அருணகிரிநாதர் தனக்கும் தமிழால் பாட அருள் வேண்டுகிறார்.

அதனால் தான் எங்கும் காண முடியாத சந்த வரிசைகளை அவர் பாடலில் காண முடிகிறது.

அடுக்குச் சொல்லில் வல்லவரான அவர் இரு இரு சொற்களில் பெரிய உண்மைகளை விளக்கி விடுவார்.

படைக்கப் பங்கயன்

துடைக்கச் சங்கரன்

புரக்கக் கஞ்சைமன் என்பார்

நீதிக்குப் பிங்கலன்

பதத்துக் கிந்திரன்

நிறத்திற் கந்தனென்று என்பார்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் அவர் சொல்லும் புராணக் கதைகளும் தெய்வீகத் திருவிளையாடல்களும் மகான்களின் அற்புத சரிதங்களும் ஏராளம்; அவற்றைக் கண்டு பிரமிப்போம்; வியப்போம்!

விநாயகர் பாரதம் எழுதியதையும், இராமாயணத்தில் இராமனது வீரச் செயலையும் மஹாபாரதத்தில் அர்ஜுனனின் பராக்ரமத்தையும் இன்னும் இது போன்ற ஏராளமான சரிதங்களையும் அவர் சுவைபட ஓரிரு வரிகளில் தந்து நம் சிந்தையைத் தூண்டி விடுவார்.அப்படி அவர் கூறிய ஒரு திருவிளையாடலை மட்டும் இங்கு எடுத்துக்காட்டிற்காகச் சுட்டிக் காட்ட விழைகிறேன்.

முருகனின் சிறப்பான ஒரு தமிழ் விளையாட்டை அவர் ‘பத்தி தரள’ என்று தொடங்கும் திருப்புகழின் கடைசி வரியில் கூறுகிறார்.

பாடல் இதோ:

பத்தி தரள கொத்து ஒளிர் வரி

    பட்ட புளக செப்பு இள முலை

    பட்டு இட்டு எதிர் கட்டு பரதவர்     உயர் தாள

 பத்மத்தியர் அற்பு கடுகடு

    கண் சத்தியர் மெத்த திரவிய

    பட்சத்தியர் இக்கு சிலை உரு       விலி சேரும்

சித்த தருணர்க்கு கனி அத

     ரம் புத்தமுதை தரும் அவர்

     சித்ர கிரண பொட்டு இடு பிறை     நுதலார்தம்

  தெட்டில் படு கட்ட கனவிய

     பட்சத்து அருளற்று உற்று உனது அடி

     சிக்கிட்டு இடை புக்கிட்டு அலைவது  தவிராதோ

மத்த பிரமத்த கய முக

     னை குத்தி மிதித்து கழுகுகள்

     மட்டிட்ட இரத்த குருதியில்          விளையாட

  மற்றை பதினெட்டு கண வகை

     சத்திக்க நடிக்க பலபல

     வர்க்க தலை தத்த பொரு படை      உடையோனே

முத்தி பரமத்தை கருதிய

      சித்தத்தினில் முற்ற தவ முனி

      முற்பட்டு உழை பெற்று தருகுற  மகள் மேல் மால்

  முற்ற திரி வெற்றி குருபர

      முற்பட்ட முரட்டு புலவனை

      முட்டை பெயர் செப்பி கவி பெறு     பெருமாளே

இந்தத் திருப்புகழில் ‘முற்ற திரி வெற்றி குருபர முற்பட்ட முரட்டு புலவனை முட்டை பெயர் செப்பி கவி பெறு பெருமாளே’ என்ற வரிகளில் ஒரு பெரும் வரலாறு அடங்கியுள்ளது.

பொய்யாமொழிப் புலவர் என்னும் பெரும் புலவர் ஒருவர் அகத்துறையில் தன்னைப் போலப் பாடுவார் யாரும் இல்லை என்று எண்ணம் கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர் பாலை நிலத்தின் வழியே சென்று கொண்டிருந்தார். வேடுவ உருவம் மேற்கொண்டு அவரை எதிர்ப்பட்ட முருகக் கடவுள், ‘நீங்கள் யார்?” எனக் கேட்டார்.

“யாம் ஒரு தமிழ்ப் புலவர்” என்று பதில் சொன்னார் புலவர்.

“அப்படியானால் இந்தப் பாலை நிலத்தைச் சிறப்பித்து ஒரு வெண்பா பாடுங்கள் பார்ப்போம்” என்றார் முருகன்.

“உமது பெயர் என்ன?” என்று கேட்டார் புலவர்.

“எனது பெயர் முட்டை” என்றார் முருகக் கடவுள். அத்துடன் புலவர் பாடும் பாடல் சுரம் போக்குத் துறையாய் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

உடனே புலவர்.

“பொன் போலுங் கள்ளிப் பொறி பறக்குங் கானலிலே

என்பேதை செல்லற் கியைந்தனளே – மின்போலும்

மானவேன் முட்டைக்கு மாறாய தெவ்வர் போம்

கானவேல் முட்டைக்குங் காடு

இதன் பொருள் :-

மின் போலும் – மின்னலை நிகர்க்கின்ற

மானம் – பெருமை உடைய

வேல் – வேலாயுதத்தை ஏந்திய

முட்டைக்கு மாறு ஆய – முட்டை என்பவனுக்கு மாறுபட்ட

தெவ்வர் போம் – பகைவர் போகின்ற

கான – மணம் வீசுகின்ற

வேல் முள் தைக்கும் காடு – வேல் முள் தைக்கின்ற காட்டில்

பொன் போலும் – பொன்னை நிகர்க்கும்

கள்ளிப் பொறி பறக்கும் – கள்ளிச் செடிகளிலிருந்து நெருப்புப் பொறி பறக்கின்ற

கானலிலே – கானல் பரவிய பாலை நிலத்தில்

என் பேதை – என் பேதைப் பெண்ணானவள்

செல்லற்கு இயைந்தனள் – செல்வதற்கு மனம் இசைந்தாள்

ஏ – அடடா, இது என்ன பாவம்!

இந்தப் பாடலைக் கேட்ட முருக பிரான், பாடல் அவ்வளவாகச் சிறந்து விளங்கவில்லை என்று கூறித் தானே ஒரு பாடலைப் பாடி அருளினார் இப்படி:

“விழுந்த துளி யந்தரத்தே வேமென்றும் வீழின்

எழுந்து சுடர்சுடு மென் றேங்கிச் – செழுங்கொண்டல்

பொய்யாத கானகத்திற் பெய்வளையுஞ் சென்றனளே

பொய்யா மொழிப் பகைஞர் போல்”

இதன் பொருள் :-

“விழுந்த துளி அந்தரத்தே வேம் என்றும் – விழுந்த மழைத்துளியானது ஆகாயத்திற்குத் தான் ஏகும் என்றும்

வீழின் – வீழ்ந்தால்

எழுந்து – மேலே தாவி

சுடர் சுடும் என்று – அனலானது சுடும் என்று

ஏங்கி – ஏக்கமுற்று

செழுங் கொண்டல் – செழுமையாகிய மேகங்கள்

பொய்யாத கானகத்தில் – பொய்யாத காட்டில்

பொய்யாமொழிப் பகைஞர் போல் – பொய்யாமொழிப் புலவரது பகைவர்கள் போல

பெய்வளையும் சென்றனளே – வளையலை அணிந்த என் பெண்ணும் போனாள்

ஏ – அடடா, இது என்ன பாவம்!

இந்தப் பாடலைக் கேட்ட பொய்யாமொழிப் புலவர் பாடலின் அருமை கண்டு திகைத்துப் போனார். எதிரில் இருப்பது குமரக் கடவுளே என்பதை உணர்ந்து அவரைத் துதித்தார்.

முருகனும் அவர் முன் தோன்றி அருள் பாலித்து அவர் நாவில் வேல் கொண்டு ஊன்றிச் சென்றார்.

இதைத் தான் அருணகிரி நாதர் தன் பாடலில் கூறிச் சிறப்பிக்கிறார்.

இந்த நிகழ்ச்சி திருமுருகன் பூண்டித் திருத்தலத்தின் அருகில் நடந்ததாகக் கர்ணபரம்பரை வழக்காகப் பெரியோர் கூறுகின்றனர்.

இப்படி அருள் பெற்ற பெரும் புலவரான பொய்யாமொழிப் புலவர் காளையார் கோயில் சென்று மிகவும் பிரசித்தி பெற்றார். பின்பு அங்கிருந்து புறப்பட்டார். தஞ்சைவாணன் கோவை பாடிப் பெரும் புகழ் பெற்றார். பின் மதுரை சென்று சில அற்புதங்களை நிகழ்த்தினார்.

பின் சீனக்கன் என்ற வள்ளலுடன் நட்பு பூண்டு அவருடன் இருந்தார்.

அவர் உயிர் துறக்கவே அவர் உடலுடன் உடன்கட்டை ஏறினார் என்பர் பெரியோர்.

இத்தகைய முருகனின் அருள் விளையாடலைக் கொண்டது கொங்கு மண்டலமே என்று பாடல் 97இல் கூறிப் பெருமைப் படுகிறது கொங்கு மண்டல சதகம்.

பாடல் இதோ:-

முட்டையென் பேர் சுரம் போக்கா வொரு பா மொழியெனக் கேட்

டிட்ட முறுபொய் யாமொழி பொன்போ லெனவுரைக்கச்

சுட்டழகில்லை யீ தென்று விழுந்த துளியென்றுநன்

மட்டவிழ் தார் முருகோன்சொன்ன துங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் :

முட்டை என்பது என் பெயர். சுரம் போக்காக ஒரு பாடல் கூறுவாயாக எனக் கேட்க, பொய்யா மொழிப் புலவர் மகிழ்ந்து பொன் போலும் என ஒரு வெண்பா பாடலை உரைக்க, அதைக் கேட்டு, இது அழகில்லை என்று கூறி, விழுந்த துளி என்ற ஒரு வெண்பாவை முருக வேள் பாடி அருளியதும் கொங்கு மண்டலத்திலே தான்!                   

***

tags- திருப்புகழ் -2

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: