

WRITTEN BY S NAGARAJAN
Post No. 9199
Date uploaded in London – –29 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும்! – 3

காலனைக் கண்டு அஞ்சாதவர் உலகில் யாரே இருக்க முடியும்? திருவோடு ஏந்தும் பிச்சைக்காரன் முதல் மாநிலம் ஆளும் மஹாராஜன் வரை யாரால் தான் காலனின் பாசக் கயிறிலிருந்து தப்ப முடியும்?
ஆனால் அருணகிரிநாதரோ முருகனே தன் தனி வழிக்குத் துணை ஆவான் என்கிறார்.
நாளும் கோளும் முருக பக்தர்களை ஒன்றும் செய்யாது என்பது அவரது அருள் வாக்கு.
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் கொடுங்கூறறு என் செயும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் ஷண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே என்று தைரியமாக அவர் கூறும் போது பக்தர்களும் அந்த கந்தரலங்காரத்தைப் பாடி தம் தம் வினையகற்றி முருகனின் அருளைப் பெறுவது திண்ணம் அல்லவா!
நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவர்க்கு அவர் தரும் எச்சரிக்கை கடுமையானது!
சினத்தவர் தமக்கும் பகைத்தவர் குடிக்கும் செகுத்தவர் உயிர்க்கும் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் றறிவோம் யாம்
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து திருப்புகழானது ஓதுபவர்க்கு என்னென்ன நலன்களைத் தரும் என்பதையும் அவரே கூறுகிறார்:
நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் நிசிக்கருவறுக்கும் பிறவாமல்
நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும் நிறைப்புகழ் உரைக்கும் செயல் தாராய்!
எதைப் பெற எந்தத் திருப்புகழைப் பாட வேண்டும் என்பதற்கு ஒரு பெரிய பட்டியலே உள்ளது!
அருள் பெற பாடுங்கள் உம்பர் தருதேநுமணிக்கசிவாகி பாடலை
யமன் வருவதை நினைத்து பயப்படாமல் இருக்க ஒரு பாடல் இசைந்த ஏறும் கரிஉரி போர்வையும் என்ற பாடல்
தரிசனம் வேண்ட ஒரு பாடல் ஓலையும் தூதரும் கண்டு என்ற பாடல்
எப்போதும் எதிலும் முருகனின் துணை வேண்ட ஒரு பாடல் ;
விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவநன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே
இப்படி திருப்புகழின் அருமை பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
தித்திக்கும் திருப்புகழ் பாடல்களை வெவ்வேறு இனிய ராகங்களில் கேட்கும் போதும் பாடும் போதும் அருள் உலகில் திளைப்பது உண்மை.
தமிழின் வல்லமையையும் முருகனையும் அருளையும் தரும் திருப்புகழைப் பரப்புவதும் பேணுவதும் தமிழர் தம் தலையாய கடமை.

இந்தப் பணியை சிரமேற்கொண்டு நடத்தி வரும் லண்டன் திரு கல்யாண சுந்தர சிவாசாரியார் லண்டனில் நடக்கும் எந்த நல்ல காரியத்தையும் முன்னின்று நடத்துபவர். இப்போதோ நியூஜிலாந்திலிருந்து அமெரிக்கா வரை அவர் புகழ் பரந்து விரிந்திருக்கிறது. அவர் இன்று என்னை தொடர்பு கொண்டு பேச அழைத்த போது முருகனின் அருளே அழைத்தது என எண்ணி மகிழ்ந்தேன். அவருக்கு எனது நன்றி கலந்த வணக்கம் உரித்தாகுக.
தோகை மேல் உலவும்கந்தன் வெற்றி வாகையே சுமக்கும் வேலை வணங்குவதே எமக்கு வேலை.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
நன்றி வணக்கம்
***


tags- திருப்புகழ்-3