மஹரிஷி அரிஷ்டநேமி – சாவுக்குப் பயமில்லை! (Post No.9246)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9246

Date uploaded in London – –9 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹரிஷி அரிஷ்டநேமி – சாவுக்குப் பயமில்லை!

ச.நாகராஜன்

ஹேஹய வமிசத்தில் மிகுந்த பராக்கிரமம் கொண்ட ஒரு ராஜகுமாரன் இருந்தான். அவன் ஒரு நாள் வேட்டையாடுவதற்காக காட்டிற்குச் சென்றான். பெரிய மரங்களும் புதர்களுமாக மண்டியிருந்த காட்டில் அவன் அலைந்து திரிந்த போது தோலைப் போர்த்தி இருந்த ஒரு முனிவரைக் கண்டான். அவரை ஒரு மான் என்று நினைத்து அம்பினால் எய்ய அவர் இறந்து போனார். தான் செய்ததை நினைத்துத் திகைத்துப் போன அவன் உடனே தன்னுடைய பெரியோர்களை அடைந்து நடந்ததைச் சொல்லி வருந்தினான். அவர்களும் நடந்ததை எண்ணி வருந்தி அவனுடன் சம்பவம் நடந்த இடத்தை நோக்கி விரைந்தனர். அங்கு ஒரு ரிஷி அம்பினால் மாண்டு கிடப்பதைப் பார்த்துத் திகைத்தனர். அங்கிருந்தவர்களை அணுகி அவர் யார் என அவர்கள் விசாரிக்க ஆரம்பித்தனர். பின்னர் அவர்கள் மஹரிஷி காஸ்யபருடைய குமாரரான அரிஷ்டநேமி மஹரிஷியின் ஆசிரமத்தை அடைந்தனர். அவரை நமஸ்கரித்து வணங்கினர். முனிவரும் அவர்களை வருக என வரவேற்றார்.

முனிவரை நோக்கி அவர்கள், “நாங்கள் ஒரு பிராமணரைக் கொன்று விட்டோம்.” என்று கூறினர்.

“எந்த பிராமணர் எப்படி உங்களால் எங்கு கொல்லப்பட்டார்” என்று ரிஷி வினவவே அவர்கள் நடந்ததைச் சொன்னார்கள்.

பின்னர் அவர்கள் அனைவரும் ரிஷி மாண்டுகிடந்த இடத்தை அடைந்து சென்று அங்கு அவர் பிணமாகக் கிடந்த இடத்தில் அவரைக் காணாமல் திகைத்தனர். மதிமயக்கத்துடனும் வெட்கத்துடனும் அவர்கள் மீண்டும் அரிஷ்டநேமியிடம் வந்தனர்.

பிறகு தார்க்‌ஷியர் என்று சொல்லப்படும் அந்த முனிவர், “ஒ! அரசர்களே! நீங்கள் கொன்ற பிராமணர் இவர் தானா, இதோ பாருங்கள், இவர் யோகாப்பியாசத்தினால் அஷ்ட சித்திகளையும் அடைந்த எனது புத்திரன் ஆவார்” என்றார்.

என்ன ஆச்சரியம்! அவர்கள் கொன்றதாகச் சொன்ன முனிவர் அங்கு உயிருடன் இருந்தார். இறந்தவர் எவ்வாறு உயிருடன் திரும்பி வந்தார் என அவரைப் பார்த்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

முனிவரிடமே அவர்கள், “இவர் பிழைத்தது எப்படி, தர்மத்தின் பயனோ, தவத்தின் பயனோ, அந்தக் காரணத்தைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுள்ளவர்களாக இருக்கிறோம்” என பயபக்தியுடன் வினவினர்.

அதற்கு மறுமொழியாக முனிவர் கூறிய பதில் இது:-

“யமன் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. அதன் காரணத்தைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் உங்களுக்குச் சொல்கிறேன், கேளுங்கள்! நாங்கள் எங்களுக்கு ஏற்பட்ட புண்ணிய  கர்மங்களைத் தவறாது செய்து வருகிறோம்; ஆதலால் இறப்பைப் பற்றி எங்களுக்குப் பயமில்லை.

நாங்கள் பிராமணர்களைச் சிறப்பித்துப் பேசுகின்றோம். அவர்களைப் பற்றி எப்போது தூஷணமாகப் பேசுவதில்லை. ஆதலால் சாவு என்றால் எங்களுக்குப் பயமில்லை. எங்களிடம் வருகின்ற அதிதிகளுக்கு அன்னபானாதிகளைக் கொடுத்து உபசரித்து விட்டு, பின்னர் மிகுதியாய் இருப்பதை நாங்கள் உண்ணுகிறோம். ஆதலால் இறப்பதைப் பற்றி நாங்கள் பயப்படுவதில்லை. நாங்கள் சமாதான குணம் உள்ளவர்களாகவும், பக்தியுள்ளவர்களாகவும், தானம் செய்பவர்களாகவும், பொறுமை உள்ளவர்களாகவும், புண்ணிய க்ஷேத்திரங்களிப் போய் தரிசிப்பதில் பிரியம் உள்ளவர்களாகவும் இருக்கின்றோம். புண்ணிய ஸ்தலங்களிலேயே நாங்கள் வசிக்கின்றோம். ஆகவே சாவைப் பற்றி நாங்கள் பயப்படுவதில்லை. மஹாத்மாக்கள் வசிக்கும் இடங்களிலேயே நாங்கள் வசிக்கின்றோம். ஆகவே மரணத்தைப் பற்றிய பயம் எங்களுக்கு இல்லை. நான் எல்லாவற்றையும் சுருக்கமாக உங்களுக்குச் சொல்லி விட்டேன். ஆகவே, உலக வாழ்க்கையின் பேரிலுள்ள வீண் பெருமைகளையெல்லாம் நீக்கி விட்டு, நீங்கள் உங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லுங்கள். உங்களுக்குப் பாபம் வந்து விட்டதென்று பயப்பட வேண்டாம்”.


முனிவரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அந்த மஹரிஷியை அனைவரும் வணங்கி விட்டுத் தங்களுடைய தேசத்துக்குத் திரும்பிச் சென்றனர்.

இந்த வரலாறு மஹாபாரதத்தில் வனபர்வத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

யம பயம் யாருக்கு இருக்காது என்பதை இந்த மஹரிஷியின் உரை அனைவருக்கும் புரிய வைக்கிறது.

***

tags — மஹரிஷி, அரிஷ்டநேமி

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: