திரைப்படங்களில் பாரதியார்! – 2 (Post No.9251)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9251

Date uploaded in London – –11 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 8-2-20121 அன்று ஒளிபரப்பான உரை.

திரைப்படங்களில் பாரதியார்! – 2

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். பாரதியார் பாடல்கள் திரைப்படங்களில் இடம் பெற்றதைப் பற்றி முந்தைய எனது உரையில் சிறிது பார்த்தோம். இதோ அதைத் தொடர்வோம்.

ஏ.வி.எம்.செட்டியார் அவர்கள் நாம் இருவர் படத்தைத் தொடர்ந்து 1948இல் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வேதாள உலகம் என்ற படத்தை வெளியிட்டார். இதிலும் மஹாகவி பாரதியாரின் பாடல்கள் இடம் பெற்றன. ஓடி விளையாடு பாப்பா, தீராத விளையாட்டுப் பிள்ளை, விடுதலை விடுதலை, கொட்டுமுரசே ஆகிய பாடல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

‘ஓர் இரவு’ படத்திலும் பாரதியார் பாடல் இடம் பெற்றது. வாழிய செந்தமிழ் பாடல் மூலம் இந்தத் தொடரைச் சொல்லி கூட்டத்தைத் தொடங்குவது, முடிப்பது போன்ற பழக்கங்கள் ஏற்பட்டன.

பராசக்தி படம் 1952இல் வெளியானது. அதில் சிதம்பரம் எஸ்.ஜெயராமன் பாரதியாரின் நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாடலை அற்புதமாகப் பாடினார். இந்தக் கால கட்டத்தில் பாரதியார் தமிழ்க் கவிஞர் என்ற நிலையிலிருந்து இந்தியாவின் எழுச்சி மிகு கவிஞர் என்ற நிலைக்கு ஏற்றம் பெற்று பின் உலக மஹா கவிகளுடன் ஒப்பிடப்பட்டு திறனாய்வு செய்யப்படலானார்.

‘சுவை புதிது, நயம் புதிது, வளம் புதிது, சொற் புதிது, ஜோதி மிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மா கவிதை’ என்ற சொல்லுக்கு இணங்க அவரது கவிதைகள் உலக அளவில் உலா வரலாயின.

நல்ல பல தமிழ்ப் படங்களில் அவர் பாடல்கள் இடம் பெறலாயின. குறிப்பாகக் கப்பலோட்டிய தமிழனில் மறக்க முடியாத பாடல்கள் இடம் பெற்றன. ஜி.ராமநாதன் இசை அமைப்பில் திருச்சி லோகநாதன் பாடிய என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற பாடலைக் கேட்டு உருகாதவர் இருக்க முடியாது.

பி.பி. சீனிவாஸ், பி.சுசீலா பாடிய காற்று வெளியிடைக் கண்ணமா பாடலுக்கு ஜி.ராமநாதன் அமைத்த இசை அமைப்பைப் போற்றாதவர் இல்லை.

‘உயிர் தீயினிலே வளர் ஜோதியே’, ‘எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்’, ‘துயர் போயின போயின துன்பங்கள்’ போன்ற சொற்றொடர்கள் எத்தனை முறை சொன்னாலும், கேட்டாலும் இன்பம் பயப்பவை.

பி.சுசீலா மற்றும் பி.பி. சீனிவாஸ் தங்கள் அமுதக் குரலில் இதை உணர்ச்சியுடன் பாடக் கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க விரும்பும் பாடல் பட்டியலில் முதலிடத்தில் இதைச் சேர்ப்பது வழக்கமாயிற்று.

பாரதியாரின் உண்மையான கவித்துவத்தின் மகத்துவம் பிரகாசிக்க பிரகாசிக்க தமிழ் உலகம் அவரைப் போற்றிப் போற்றிப் பெருமைப்படலாயிற்று, தமிழ்த் திரையுலகமும் அவரது பாடல்களை பல்வேறு விதமாகப் பயன்படுத்திப் பலன் அடைந்தது.பெருமை பெற்றது.

‘படிக்காத மேதையாக’ நடித்து நடிப்பின் சிகரத்தில் ஏறிய சிவாஜி கணேசனையும் அவருக்கு ஈடு கொடுத்து அற்புதமாக நடித்த எஸ்.வி. ரங்காராவையும் தமிழ்த் திரைச் சரித்திரம் மறக்காது. அவர்களின் உறவை அற்புதமாகச் சித்தரிக்க பாரதியாரின் ஒர் பாடல் துணை நின்று ‘படிக்காத மேதை’ படத்தின் கதையையே சுருக்கமாகச் சொல்லி விட்டது.

‘எங்கிருந்தோ வந்தான்     இடைச்சாதி நான் என்றான்

ஈங்கிவனை யான் பெறவே    என்ன தவம் செய்து விட்டேன்

கே.வி.மஹாதேவன் இசை அமைக்க, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இந்தப் பாடலுக்கு பாரதியாரின் பாடல் வரிகளை கவியரசர் கண்ணதாசன் படத்திற்கு ஏற்ப அமைத்துக் கொடுத்தார்.

திரைப்படங்களில் இடம் பெற்ற பாரதியாரின் பாடல்களைச் சொல்வதென்றால் ஒரு பெரிய பட்டியலையே சொல்ல நேரிடும். அதைப் பார்ப்போம். இந்தப் பாடல்கள் அனைத்தையும் இன்று யூ டியூபில் காணொளிக் காட்சியாகவே காண முடிகிறது. படத்தின் பெயரையும் பாடலின் முதல் வரியையும் பதிவு செய்தால் காணொளிக் காட்சியைக் கண்டு மகிழலாம்.

 பாடல்களின் பட்டியல் இதோ:-.

மலர்களே மலருங்கள் படத்தில் கங்கை அமரன் இசை அமைக்க பி.சுசீலா பாடிய ‘சுட்டும் விழிச் சுடர் தான்’ பாடல்.

‘ஏழாவது மனிதன்’ படத்தில் எஸ்.வைத்யநாதன் இசை அமைப்பில் கெ.ஜே. யேசுதாஸ் பாடிய ‘எந்த நேரமும்’, ராஜ்குமார் பாரதி பாடிய ‘நல்லதோர் வீணை செய்தே’ மற்றும் ‘காக்கைச் சிறகினிலே’ பாடல்கள்.

‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் எஸ்.பி. பாலசுப்ரமணியன் பாடிய ‘நல்லதோர் வீணை செய்தே’ மற்றும் தீர்த்தக் கரையினிலே பாடல்கள்.

‘நீதிக்குத் தண்டனை’ படத்தில் இளையராஜா இசை அமைப்பில் ‘சின்னஞ் சிறு கிளியே’ பாடல்.

‘கண்ணே கனியமுதே’ படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் ‘நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி; என்ற பாடல்.

‘சிந்து பைரவி’ படத்தில் இளையராஜா இசை அமைப்பில் கே.ஜே. யேசுதாஸ் பாடிய ‘மனதில் உறுதி வேண்டும்’ பாடல்.

கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஜி.ராமநாதன் இசையமைப்பில் ‘நெஞ்சில் உரமுமின்றி’, ‘ஓடி விளையாடு பாப்பா’, ‘வந்தே மாதரம் என்போம்’ உள்ளிட்ட பாடல்கள்.

‘கௌரி கல்யாணம்’ படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் சூலமங்கலம் ராஜலெக்ஷ்மி பாடிய ‘வெள்ளைக் கமலத்திலே’ பாடல்.

இது ஒரு நீண்ட பட்டியல். இப்பாடல்களில் எல்லாம் சிகரம் வைத்தது போல மஹாகவியின் ஒரு பாடல் ‘பாவை விளக்கு’ படத்தில் இடம் பெற்றது. இந்தப் படத்தில் அருமையாக சிவாஜி கணேசன் நடிக்க சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன் மங்கியதோர் நிலவினிலே என்ற பாரதியாரின் பாடலை அற்புதமாகப் பாடிப் படத்தின் புகழைக் கூட்டினார்.

‘மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்

வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை

பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளி முகமும்

புன்னகையின் புதுநிலவும் போற்றவரும் தோற்றம்

துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து

தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்

அங்கதனில் கண் விழித்தேன்; அடடாவோ அடடா

அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்”

அற்புதமான் இந்த வரிகள் காலத்தால் அழியாத இசைவடிவமாகவும் ஆனது தமிழர்களின் தவப் பயனே.

சிதம்பரம் ஜெயராமன் இதைப் பாடும் முன்னரே தேவநாராயணன் தன் மயக்கும் குரலில் பாடி இருந்தார். இந்தப் பாடல் ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களில் மதிய நேரத்தில் அவ்வப்பொழுது ஒலிபரப்பாகும். இதைக் கேட்பதற்கென்றே ரசிகர் கூட்டம் தயாராகக் காத்திருக்கும். அடடாவோ அடடா என்று ஒரு ஹம்மிங்குடன் தேவநாராயணன் பாடலை முடிக்கிறார். அந்த தேவ கானத்தை எத்தனை  முறை கேட்டாலும் அலுக்காது! இன்றும் என்றும்!! தேவநாராயணன் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார் என்றாலும் இந்தப் பாடல் பாடியதன் மூலம் காலத்தை வென்று அவர் நிலை நிற்கிறார்.

மங்கியதோர்  நிலவினிலே பாடலுக்கு மூவர் இசை அமைத்துள்ளனர். வெவ்வேறு விதத்தில் இந்தப் பாடல் பாடப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு சிறப்பைப் பெற்றுள்ளது.

இந்தப் பாடல்கள் அனைத்தையும் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் எப்போது வேண்டுமானாலும் யூ டியூபில் கேட்கலாம். இவற்றை நாமே பதிவு செய்து கொண்டும் அவ்வப்பொழுது கேட்டு மகிழலாம்.

பாரதியாரின் பாடல்கள் ஒருபுறமிருக்க அவரைப் பற்றிய முழுநீளத் திரைப்படம் ஒன்று வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதை பூர்த்தி செய்யும் வண்ணம் 2000ம் ஆண்டில் பாரதி திரைப்படம் வந்தது. அதைப் பற்றி இன்னொரு சமயம் பார்ப்போம். நன்றி வணக்கம்.

இப்போது தேவநாராயணன் அவர்கள் பாடிய மங்கியதோர் நிலவினிலே பாட்டைக் கேட்டு மகிழ்வோம்!

***

tags- மங்கியதோர்  நிலவினிலே,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: