புனர்ஜென்மம் (Rebirth) உண்டா?- Part 1 (Post No.9253)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9253

Date uploaded in London – –12 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 8-2-20121 அன்று ஒளிபரப்பான உரை.

IF YOU WANT TO LISTEN TO THE TALK , PLEASE  GO TO FACEBOOK.COM/ GNANAMAYAM

புனர்ஜென்மம் உண்டா?

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

புனர் ஜென்மம் உண்டா என்பதைத் தெரிந்து கொள்ள அனைவருக்குமே ஆவல் உண்டு. ஹிந்துமதக் கொள்கையின் படி புனர்ஜென்மம் உண்டு. இதை ஜைனம் மற்றும் பௌத்தமும் வலியுறுத்துகின்றன. ஆனால் செமிடிக் மதங்கள் எனப்படும் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் இதை ஒப்புக் கொள்வதில்லை.

புனர்ஜென்மம் உண்டா என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

இப்போது கூறப்போகும் பலருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்ன?

காஞ்சி மஹா பெரியவாள், சிருங்கேரி ஆசாரியாள், பிளேட்டோ, பித்தகோரஸ், மஹாத்மா காந்திஜி, லியனார்டோ டா வின்சி, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், கவிஞர் ஷெல்லி, எமர்ஸன், மாஜினி, தோரோ, தாமஸ் ஆல்வா எடிஸன், ஹென்றி ஃபோர்டு, கார்ல் ஜங் – என்ன, சம்பந்தமே இல்லாமல் நாடு, மதம், தொழில் என்பதைத் தாண்டி இவர்கள் அனைவருக்கும் அப்படி என்ன ஒற்றுமை இருக்கிறது என்று யோசிக்கத் தோன்றுகிறதல்லவா? இவர்கள் அனைவருமே மறுபிறப்பில் நம்பிக்கை உள்ளவர்களே!

கர்ம பலனை சனாதன தர்மமான ஹிந்து மதம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது.

பகவான் கிருஷ்ணர் கீதையில் நைந்து போன உடைகளைக் களைவது போல பழைய சரீரங்களை உதறி விட்டு புதிய சரீரங்களை ஆன்மா எடுக்கிறது என உபதேசிக்கிறார்.

முன் பிறப்பில் தம் சிஷ்யர்களாக இருந்தவர்களைத் தம்மிடம் ஈர்ப்பதை ‘ருணானுபந்தம்’ என்று ஷீர்டி சாயி பாபா கூறுவார்.

ஒருமுறை அவர் வழிநடையாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு பாம்பு, தவளை ஒன்றை விழுங்கப் பார்ப்பதையும் தவளை தப்பிக்கப் போராடுவதையும் பார்த்து விட்டு, “என்ன, இன்னுமா உங்கள் சண்டை முடியவில்லை?” என்று உரக்கக் கூவினார். உடனே பாம்பும் தவளையும் வெவ்வேறு பாதையில் விலகி ஓடின. அருகிலிருந்தோர் ஆச்சரியத்துடன் பாபாவிடம், என்ன நடந்தது என்று விவரிக்குமாறு வேண்ட, அவர் கூறினார் இப்படி: “போன ஜென்மத்தில் விரோதிகளாக இருந்த இவர்களின் விரோதம் இந்த ஜென்மத்திலும் தொடர்கிறது. நான் அவர்களைக் கூப்பிட்டவுடன் முன் ஜென்ம நினைவு வந்து வெட்கப்பட்டு ஓடிவிட்டனர்” இப்படிச் சொன்னார் பாபா!

இது போன்ற முன் ஜென்மம் பற்றிய சம்பவங்களை பல மகான்களும் சொல்லி இருப்பதை அவர்கள் வரலாறு கூறும்.

நம்முடைய இதிஹாஸ புராணங்கள் இறைவனது அவதாரங்களுக்கும் கூட பூர்வ ஜென்மம் இருப்பதை விளக்குகின்றன. மஹாபாரதம் அதில் வரும் வீரர்கள் முன் ஜென்மத்தில் யாராக இருந்தார்கள் என்பதை மிக விரிவாகவே விளக்குகிறது. ஹிரண்யகசிபுவே சிசுபாலன் என்றும் பிரகலாதனின் தம்பியான சம்ஹ்லாதனே சல்லியன் என்றும் இப்படி ஒவ்வொருவரின் முன் பிறப்பையும் சம்பவ பர்வம் விளக்குகிறது!

பர்மாவில் முன் ஜென்மங்களை விவரிக்கும் குழந்தைகளை ‘வின்ஜா’ என்று அழைக்கின்றனர்.

 இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க தளபதியாக இருந்த பிரபலமான ஜெனரல் பாட்டன் (George S Patton) தனது முந்தைய ஜென்மங்களின் விவரங்களை உள்ளுணர்வு மூலம் அறிய முடிகிறது என்று கூறி இருக்கிறார்.

வரலாற்று முந்தைய கால போர்வீரனான சைரஸ் மன்னனுக்கு எதிராகப் போரிட்ட கிரேக்க படைவீரன், ஜூலியஸ் சீசரின் படை தளகர்த்தன், அலெக்ஸாண்டர் படையில் ஒரு போர்வீரன், க்ரேஸி யுத்தத்தில் ஆங்கிலப் படையின் போர்வீரன், நெப்போலியனின் படையில் ஒரு தளகர்த்தன் என்று இப்படி தனது முந்தைய ஜென்மங்களை அவர் விளக்கிக் கூறியுள்ளார்.

 மறுபிறப்பு என்ற கொள்கையை நம்பாதவர்கள் பல கேள்விகளை எழுப்புவர். இந்தக் கேள்விகளை ஆராய்ந்து தர்க்க ரீதியாக அன்னிபெஸண்ட் அம்மையார் தனது ‘ரீ இன்கார்னேஷன்’ என்ற நூலில் பதில் தருகிறார்.

    இந்தக் கேள்விகளுள் முதல் கேள்வி : – போன ஜென்மத்தைப் பற்றிய ஞாபகம் ஏன் அனைவருக்கும் இல்லை? இதற்கு அவர் தரும் பதில் :- “மூளையில் உள்ள உணர்வு முழுதுமானதில்லை. இதற்கு அப்பாற்பட்ட முழு உணர்வு ஒன்று இருக்கிறது. அதை ஒருவன் உணரும் போது அவன் எடுத்த அனைத்து ஜென்மங்களைப் பற்றியும் அவனால் கூற முடியும்”.

     அடுத்த கேள்வி:- “உலக ஜனத்தொகை அதிகமாகி வருகிறது. அதிகப்படியான உயிர்கள் எப்படி எங்கிருந்து வந்தன?”

இதற்கு அவர் தரும் பதில் :- “பிறக்க வேண்டிய உயிர்கள் ஏராளமாக இருக்கின்றன. அத்தோடு அவைகள் மறு ஜென்மம் எடுக்கும் கால இடைவெளி முறை வேறுபடுகிறது. தேவைக்கு ஏற்றபடி உயிர்கள் பிறக்கவே, ஜனத்தொகை கூடலாம் அல்லது குறையலாம். அது தவிர உலகத்தின் ஜனத்தொகையை அவ்வப்பொழுது எடுப்பது என்பது இயலாத காரியம். ஆகவே இந்த வாதம் சரியல்ல.”

  மறுபிறவி ஜென்மம் பற்றி விவாதிக்க ஒரு மேலை நாட்டுப் பெண்மணி காஞ்சி பரமாசார்யாளை – மஹா பெரியவாளை- பார்க்க வந்தார். தன்னைப் பார்க்க வந்த அவரை மஹா பெரியவாள், முதலில் அவர் உள்ளூர் பிரசவ ஆஸ்பத்திரிக்குச் சென்று ஒவ்வொரு அறையாகப் பார்த்து அங்கு இருப்பதை நுணுக்கமாக அறிந்து வருமாறு கூறினார். அவரும் அப்படியே ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று எல்லாவற்றையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு அறிந்து வந்தார். பரமசார்யாள் அவரை நோக்கி, “என்னவெல்லாம் பார்த்தாய்?” என்று கேட்டார்.

ஒரு குழந்தை சிவப்பு, இன்னொரு குழந்தை கறுப்பு, ஒருவர் பக்கத்தில் ஏராளமான உறவினர் சூழ்ந்து குதூகலமாக இருக்கின்றனர், இன்னொரு குழந்தையோ தாயுடன் மட்டும் இருக்கிறது என்று இப்படி தான் கண்ட விதவிதமான பல வேறுபாடுகளை விலாவாரியாக உற்சாகமாக விவரித்துக் கொண்டே வந்தார். திடீரென்று அவருக்குப் பொறி தட்டியது. மறுஜென்மம் பற்றி தான் விவாதிக்க வந்து பதிலைப் பெறுவதற்குப் பதிலாக அதற்குத் தானே விளக்கமாக பதில் அளித்துக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார்.

பரமாசார்யாள் பின்னர் விளக்கினார். பிறப்பால் அனைவரும் சமம் என்றாலும் பல வேறுபாடுகளும் கூடவே வருகின்றன. இந்த வேறுபாடுகளுக்கு முன் வினையே காரணம்! அதாவது கர்ம பலனே காரணம்!

இதை உணர்ந்து கொண்ட அவர் விக்கித்துப் போனார்!

   மறுபிறவியை இப்படி காரண காரியத்துடன் மதங்கள் விளக்கும் போது அறிவியல் ரீதியாக அதை அணுகி ஆராய பலரும் முயன்றுள்ளனர். இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் இயான் ஸ்டீவன்ஸன்.

வர்ஜீனியா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவன்ஸன் 1040 கேஸ்களை நேரடியாக ஆராய்ந்தார்.1974ஆம் ஆண்டு வெளி வந்த ட்வெண்டி கேஸஸ் சஜெஸ்டிவ் ஆஃப் ரீ இன்கார்னேஷன்” (Twenty Cases Suggestive of Re incarnation) மற்றும் 1975இல் வெளிவந்த ‘கேஸஸ் ஆஃப் ரீ இன்கார்னேஷன் டைப்’ (Cases of Reincarnation type) ஆகிய அவரது இரு நூல்கள்  உலகையே பரபரப்புள்ளாக்கின. தான் ஆராய்ந்த இருபது கேஸ்களை விளக்கமாக விவரித்த  ஸ்டீவன்ஸன் மறு ஜென்மத்தை மறுக்க இயலவில்லை என்று கூறினார்.

1937இல் இந்தியாவையே பரபரப்புள்ளாக்கிய சாந்தி தேவி கேஸும் இந்த இருபது கேஸ்களில் ஒன்று.

TO BE CONTINUED………………………………………….

 TAGS — புனர்ஜென்மம் ,Rebirth,  உண்டா, 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: