

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9263
Date uploaded in London – –14 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறு தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பப்படும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 14-2-2021 அன்று ஒளிபரப்பான உரை!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

“அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன்,
பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய
இணை இலி, என்றும் இருந்த கோயில், இராமேச்சுரம்
துணைஇலி தூ மலர்ப்பாதம் ஏத்த துயர் நீங்குமே”
வாழி திருஞானசம்பந்தர் திருநாமம்! ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான இராமெஸ்வரம் ஆகும். இது சென்னையிலிருந்து 555 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்தலம் சரித்திர பூர்வமான ஒன்று என்பதோடு, நாஸாவினால் சேது பாலம் இருப்பது சாடலைட் மூலமாக நிரூபிக்கப்பட்டிருப்பதனால், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மிகப் பழமை வாய்ந்த, உலகின் ஒரே திருத்தலம் இது தான் என்ற பெருமையைப் பெறுகிறது. உலகின் வேறு எந்தத் தலமும் விஞ்ஞான பூர்வமாக இப்படி நிரூபிக்கப்படவில்லை என்பது இதன் தனிச் சிறப்பாகும்.


பாரதத்தின் பழம் பெரும் இதிஹாஸமான ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தலம் இது என்பதால் இலக்கிய முத்திரையையும் பெற்றுள்ளது இது. வானர வீரர்களுடன் இராமேஸ்வரத்தில் தங்கி இருந்து, அவர்களின் துணை கொண்டு, சேது பாலம் அமைத்து, ராமர் இலக்குவனுடன் இலங்கை மீது போர் தொடுத்து, ராவணனை வதம் செய்து, சீதையை மீட்டார். பிராமணனான ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, இந்த இராமேஸ்வர தீவில் ஜோதிர்லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட, பெரியோர்களின் உபதேசப்படி, எண்ணினார். அநுமனை கைலாயத்திலிருந்து ஒரு லிங்கம் கொண்டு வருமாறு அவர் பணித்தார். ஆனால் அனுமன் வரச் சற்று தாமதமானது. அப்போது சீதா தேவி மணலினால் பிடித்து ஒரு லிங்கத்தைக் கொடுத்தார். அதை இராமர் வழிபடத் தொடங்கினார். அனுமன் சிவனை வணங்கி கைலாயத்திலிருந்து பெற்ற லிங்கம் வரவே அதையும் பிரதிஷ்டை செய்தார். இராமநாத லிங்கத்தை வழிபடும் முன்னர் அனுமன் கொண்டு வந்த விஸ்வலிங்கத்தையும் முன்னதாக வழிபட வேண்டும் என்ற நியமத்தை ஏற்படுத்தினார். ஆதி சங்கரர் இங்கு ஸ்படிக லிங்கத்தை ஸ்தாபித்துள்ளார். அதற்கு முதலில் பூஜை நடைபெறுகிறது. சைவ-வைணவ ஒற்றுமைக்கு ஒரு உதாரணமாகத் திகழும் இந்தத் தலத்தில் சிவன் சந்நிதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கோவிலுக்கு அருகே உள்ள சமுத்திரம் அக்னி தீர்த்தமாகும். சீதை தனது கற்பை நிரூபிப்பதற்காக அக்னி ப்ரவேசம் செய்யவே, அவளது கற்பின் சூடு தாங்க முடியாமல், அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தைத் தணித்துக் கொண்டதோடு, அக்னியிலிருந்து சீதையை வெளிப்படுத்தி, உலகிற்கு சீதா தேவியின் தூய்மையையும் நிரூபித்தார். இந்த அக்னி தீர்த்தத்தில் பித்ரு கடன்களைச் செய்வது காலம் காலமாக இருந்து வரும் மரபாக விளங்குகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து நீராடி வழிபாடு செய்தால் புத்திர பாக்கியம் ஏற்படும் என்பது அனுபவபூர்வமான உண்மையாகும். ‘ஆ ஸேது ஹிமாசலம்’ என்ற பழம் பெரும் மொழியால் சேது முதல் இமயம் வரை பாரத நாடு ஒரே நாடு என்ற உண்மை வலுப்பட்டு, ஒற்றுமை ஓங்குகிறது. இங்கிருந்து மணலை எடுத்துக்கொண்டு காசி சென்று கங்கையில் கரைத்து விட்டு அங்கிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து இராமநாதருக்கு அபிஷேகம் செய்து வருவது தொன்று தொட்டு நடந்து வரும் பாரம்பரியப் பழக்கமாகும். சிறிய தீவான இராமேஸ்வரம் சங்கு வடிவத்தில் அமைந்துள்ள ஒரு தீவு.


மூலவர் – இராமநாதர்; அம்மன்: பர்வதவர்த்தனி. சேது சக்தி பீடம் என்று அழைக்கப்படும் இது, சக்தி பீடங்களில் ஒன்று. பர்வதவர்த்தனி அம்பிகை பீடத்திற்குக் கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் உள்ளது. நான்கு மதில்களைக் கொண்டு பிரம்மாண்டமான பிரகாரத்தைக் கொண்டு தனக்கு நிகர் இல்லாத கோவிலாக விளங்குகிறது இராமநாதர் ஆலயம். மொத்த பிரகாரங்களின் நீளம் 3850 அடி. மூன்றாவது பிரகாரத்தில் மட்டும் 1212 தூண்கள் உள்ளன. 690 அடி நீளமும் 435 அடி அகலமும் கொண்டு உலகின் பெரிய பிரகாரம் என்ற முதலிடத்தை இது பெறுகிறது.
இராமேஸ்வரத்தில் உள்ள உயரமான இடம் கந்தமாதன பர்வதமாகும். இங்கிருந்து தான் ராமர் இலங்கையை நோக்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இங்குள்ள முக்கியமான 22 தீர்த்தங்களின் மஹிமை எல்லையற்ற ஒன்றாகும். மஹாலக்ஷ்மி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம்,காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சங்கு தீர்த்தம், சுர தீர்த்தம், சேது மாதவ தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், குவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனை தீர்த்தம், கயா தீர்த்தம், சர்வ தீர்த்தம், சிவ தீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், கோடி தீர்த்தம் ஆகியவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறைக் கொண்டு ஒவ்வொரு வளத்தை அருள்பவை. இவற்றில் 14 தீர்த்தங்கள் கோவிலுக்கு உள்ளேயே உள்ளன. அன்பர்கள் தாங்களே கயிறு, வாளி கொண்டு சென்று அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி அனைத்து வளங்களையும் பெறலாம்; சகல தோஷங்களையும் போக்கிக் கொள்ளலாம். ராமர் தனது ஜடையைக் கழுவிக் கொண்ட தீர்த்தம் ஜடா தீர்த்தமாகும்.

இது தவிர கந்தமாதன பர்வதம் அருகே 8 தீர்த்தங்களும் திருப்புல்லாணி, தங்கச்சிமடம், தேவிபட்டினம், தனுஷ்கோடி ஆகிய இடங்களிலும் பல தீர்த்தங்கள் உள்ளன. தனுஷ்கோடி, ராமேஸ்வரத்திற்கு தென்புறம் 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு முதலில் நீராடுவது மரபாகும். திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும் திருநாவுக்கரசர் ஒரு பதிகத்தையும் இந்தத் தலத்தில் பாடி அருளியுள்ளனர். அருணகிரிநாதர் இரு திருப்புகழ் பாடல்களை இத்தலத்தில் பாடி அருளியுள்ளார்.
காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் வழிபடும் இராமநாதரும் பர்வதவர்த்தனி தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திகிறோம். அப்பர் அருள்வாக்கு : “ஆர் வலம் நம்மின் மிக்கார் என்ற, அவ் அரக்கர் கூடிப் போர் வலம் செய்து மிக்குப் பொருதவர் தம்மை, வீட்டித், தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தைச் சேர் மட நெஞ்சமே, நீ செஞ்சடை எந்தை பாலே”

நன்றி, வணக்கம்.
tags- ஆலயம் , அறிவோம், இராமேஸ்வரம்,