
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9261
Date uploaded in London – –14 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹெல்த்கெர் பிப்ரவரி 2021 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
கொரானா காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள் சில!
ச.நாகராஜன்
கொரானா காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள் சுவாசத்தைப் பற்றியதாகும். இது கொரானா காலத்திற்கு மட்டும் பொருந்தாது; எந்தக் காலத்திற்கும் பொருந்தும் உண்மைகளாகும்.
சுவாசிப்பது என்பது ஜீவனுடன் இருப்பதாகும்.
நாடோடிப் பாடல் ஒன்று உண்டு:
தூங்கையிலே வாங்குகிற மூச்சு;
அது சுழி மாறிப் போனாலும் போச்சு!
ஆம், கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு விடத் திணறுவதைப் பார்க்கும் போது பகீர் என்கிறதில்லையா?
நன்கு சுவாசிப்பதானது என்னென்ன நன்மைகளைத் தருகிறது?
- இதய நோய்களைத் தடுக்கிறது; தவிர்க்கிறது. முக்கியமாக மாரடைப்பைத் தடுக்கிறது.
- மனச்சோர்வை வரவிடாமல் செய்கிறது. கவலையைப் போக்குகிறது.
- வயிற்றில் அமிலத்தன்மையைத் தடுப்பதோடு மலச்சிக்கலை இல்லாமல் செய்கிறது.
- நல்ல தூக்கத்தை உறுதி செய்கிறது. நல்ல தூக்கம் உடல் செயல்பாட்டை நன்கு பாதுகாப்பதோடு நாள் முழுவதும் புத்துணர்ச்சியைத் தருகிறது.
- ஆஸ்த்மாவை அதிகமாக்காமல் அத்துடன் போராடி கட்டுப்பாடாக வைக்க உதவுகிறது.
- நல்ல ஆக்கபூர்வமான சக்தியை உடலுக்கு நல்குகிறது.
- நுரையீரலை நன்கு பாதுகாப்பதனால் நீடித்த ஆயுளை உறுதி செய்கிறது.
- ஒவ்வாமை எனப்படும் அலர்ஜிகளை வேரோடு களைகிறது.
- சக்தி நிறைந்த வாழ்வைத் தருகிறது; அதனால் மன நிம்மதி ஏற்படுகிறது.
ஆகவே சரியாக சுவாசிக்க வேண்டும்; ஆரோக்கியத்தை உறுதிப் படுத்த வேண்டும்; அதை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

நல்ல சுவாசத்தைக் கொள்ள பிராணாயாமம் உதவுகிறது; என்றாலும் இதை யோகா மாஸ்டரிடமிருந்தே கற்க வேண்டும்- பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்க!
ஒரு எளிய முறை மூச்சை நன்கு உள்ளே இழுப்பதாகும். பிறகு நீண்ட ‘ஓம்’ என்ற ஒலியை எழுப்பினால் வெளி விடும் மூச்சு தானாகவே நீண்டு விடும்.
நாசியில் உள்ள இடது மற்றும் வலது துவாரங்கள் வழியே சுவாசிக்கும் முறை சிறந்தது என்றாலும் இதை யோகா மாஸ்டரிடமே கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த வேக யுகத்தில் அனைவரும் வேக வேகமாக சுவாசிக்கிறோம். லயத்துடன் இல்லாமல் மனம் போன போக்கில் சுவாசிக்கிறோம். அத்துடன் வாகனப் புகையால் மாசுபடுத்தப்பட்ட சாலைகள் வழியே சென்று புகைக் காற்றை – சுவாசத்தை – உள்ளிழுக்கிறோம்.
அன்றாடம் காலை நேரத்தில் நல்ல தூய காற்று இருக்கும் பூங்காங்கள், சோலகள், கடற்கரை என முடிந்த மட்டில் நமது இயற்கை சூழ்நிலைகளை அனுசரித்து நல்ல சுவாசத்தை அனுபவிக்க வேண்டும்.
இந்த சுத்தமான காற்று உள்ள சூழ்நிலையில் 30 நிமிடம் அன்றாடம் நடைப் பயிற்சி மேற்கொண்டால் அது இன்னும் சிறப்பாக அமையும்.
நடைப்பயிற்சியின் பலன்களும் நமக்குச் சேரும்.
உடல் வெப்பத்தைத் தவிர்க்க உதவும் உணவு வகைகளைப் பற்றியும் சற்று தெரிந்து கொள்வது நல்லது.
கோடை காலம் ஆரம்பிக்க இருப்பதால் ஆயுர்வேதம் கூறுவது போல வெப்பத்தை அதிகரிக்கும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இது பித்தம் கூடுவதைத் தடுக்கும்.
உடலில் நீர்ச்சக்தியை அதிகரிப்பதே நமது நோக்கம் என்பதால் கீரை வகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெள்ளரிக்காய், வாடர்மெலான், ஆரஞ்சுப் பழம், கரும்பு, திராக்ஷை ஆகியவற்றை உண்ணலாம்.
மாங்காய் உமிழ் நீர் சுரப்பதை அதிகமாக்கி தாகம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துகிறது.
நல்ல மாம்பழமும் உருளைக் கிழங்கும் சக்தி இழப்பை ஈடு செய்கிறது.
வெட்டிவேரை நீரில் போட்டு அந்த நீரைக் குடிப்பது குளுமையைத் தரும்.
ராகி, தேங்காய், வெங்காயம், மோர், இளநீர் ஆகியவை உடலுக்கு நல்லது.
தவிர்க்க வேண்டியவை :
பப்பாளிப் பழம், அதிக அளவிலான ஊறுகாய்கள், மிளகாய் சேர்ந்த கார உணவுகள், அமிலத்தை உருவாக்கும் உணவு வகைகள் ஆகியவை தவிர்க்கப் பட வேண்டும்.
விடமின்கள் பற்றிய அறிவும் நமது உடலைப் பாதுகாப்பதில் மிகப் பெரும் பங்கு வகிக்கிறது.
விடமின் ஏ : கண்பார்வைக்குத் தேவையானது விடமின் A. வண்ணங்களை அறியவும், இரவுப் பார்வைக்கும் இது தேவை.
விடமின் பி (B) : இது ஒரு பெரிய தொகுதி. இதில் ஏராளமான வகைகள் உள்ளன. ஒவ்வொரு அங்கத்திற்கும் ஆக்ஸிஜனை ஏந்திச் செல்லும் ரத்த செல்களுக்கு இது உதவுகிறது.
விடமின் சி (C) : நோய்வாய்ப்படுவதையும் காயம்பட்டால் ரத்த வெளிப்போக்கையும் தடுக்க உதவுவது விடமின் சி.
விடமின் டி (D) :வலுவான எலும்புகள், உறுதியான பற்கள் தேவை என்றால் விடமின் டியை உணவு வகைகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான கால்சியம் உடலில் சேர்வதை இது உறுதிப் படுத்துகிறது.
விடமின் இ (E) கண் மற்றும் உடல் திசுக்கள் வலிமையுடன் இருக்க விடமின் இ உதவுகிறது. தோல் பளபளத்து மினுமினுக்க விடமின் இ தேவை.
விடமின் கே (K) இது ரத்தம் உறைவதைத் தடுக்கிறது. ரத்தக் கட்டிகள் ஏற்படுவது இதனால் தடுக்கப்படுகிறது. பால் சம்பந்தப்பட்ட பொருள்களும், கீரையும் விடமின் கே உடலில் சேர்வதற்குத் தேவை.
புத்தம் புதிய கறிகாய்கள், பால் உள்ளிட்டவை அன்றாட உணவில் சேர்க்கப்பட்டால் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும்.

ஆக,
சரியாக மூச்சு விடல், காலத்திற்கு ஏற்ற உணவு, (இந்தக் கட்டுரையில் கோடை காலத்திற்கான உணவு வகைகளைப் பார்த்தோம்) விடமின்கள் சமச்சீர் அளவில் உள்ள உணவு ஆகிய இந்த மூன்றையும் எண்ணி வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் கொரானா உள்ளிட்ட கொடும் நோய்களைப் போ போ என்று சொல்லலாம்!
***

tags- கொரானா, உண்மைகள்,