
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9265
Date uploaded in London – –15 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கோகுலம் கதிர் மாத இதழில் பிப்ரவரி 2021 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ரொபாட் குக்கர்; மாஜிக் மிக்ஸி – நவீன சமையலறை சாதனங்கள் !
ச.நாகராஜன்
சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்!சமையல் சங்கடமானது; சங்கீதம் ரம்யமானது!
1942இல் வெளியான ஏ.வி.எம்மின் ‘என்மனைவி படத்தில்’ ரல்லபந்தி நடேசையா சமையலறையில் பாடி ஆடும் இந்தப் பாட்டை ரசிக்காதவர் அந்தக் காலத்தில் இல்லவே இல்லை. ஆம், பாம்பைப் படமெடுக்க விட்டு, பாட்டுப் பாடி பாலைப் பொங்க விடும் அவரைப் போலவே இந்தக் கால இளம் மனைவிகளுக்கும், தனியாக மாட்டிக் கொண்டு சமைக்கவும் தெரியாமல் ஆனால் சமைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் அனைவருக்கும் சமையல் சங்கடமானது தான்.
இதைப் போக்க நவீன அறிவியல் உதவி செய்கிறது. வேதத்தில் இடம் பெறும் நள மஹராஜன் சமைப்பதில் வல்லவனாக இருந்ததால் நள பாகம் என்ற அருமையான சமையலைப் பற்றிய சொற்றொடரையே உருவாக்கினான். அவனது சிறப்பு அவன் நீரும் நெருப்புமின்றி சமைப்பானாம்.
நமது அறிவியல் இப்போது பாதி நளனாக உருவெடுத்து நெருப்பு இல்லாமல் மின்சாரத்தை உபயோகித்து நள பாகத்தை உருவாக்க ஆரம்பித்து விட்டது.சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள சமயலறை சாதனங்கள் ஷோ ரூமுக்குப் போய்ப் பாருங்கள். என்னென்ன அங்கு வந்திருக்கின்றன தெரியுமா? ஒரு பார்வை பார்ப்போமா!
ரோபோ குக்கர்
ரோபோ குக்கர் என்பது தானாகவே சமையலை டிசைன் செய்து பக்குவப்படுத்தி பதினோரு விதமான உணவு வகைகளை சில நிமிடங்களில் தந்து விடுகிறது. மின்சாரம் மூலம் இயங்கும் இதை ப்ளக்கில் மாட்டி பிரியாணியோ அல்லது வேறு தேவைப்பட்ட உணவு வகையையோ தயார் செய்து கொள்ளலாம். குக்கரின் உள்ளே தேவையான சமையல் பொருள்களைப் போட்டு விட்டு பட்டனைத் தட்ட வேண்டியது தான் – பிரியாணி என்றால் அதை செலக்ட் செய்வது தான் நமது வேலை. தானே செய்ய வேண்டியதைச் செய்து அதன் வேலை முடிந்தவுடன் அறை கூவி அழைக்கும் நம்மை!
பொங்கல், சாம்பார், ரசம், கறி, இட்லி – இப்படி எதை வேண்டுமானாலும் செலக்ட் செய்து அதை உண்டு மகிழலாம். சைவ, அசைவ உணவு வகைகள் எதை வேண்டுமானாலும் செய்வது இதன் சிறப்பு அம்சம். அதை செய்வதற்கான புரோகிராம் ஏற்கனவே உள்ளே தரப்பட்டுள்ளது. சாதத்தை கஞ்சி வடிக்க ஒரு தனி வழியும் இதில் உண்டு. இன்னும் சமைத்ததை சூடாக வைத்துக் கொள்ள ஒரு பட்டன், சற்று தாமதமாக சமைக்க ஆரம்பிக்க ஒரு பட்டன் என்று அமர்க்களமாக இருக்கும் ரோபோ குக்கர் சமையலை சங்கடம் ஆக்காமல் சங்கீதம் நமக்குத் தரும் சுகானுபவத்தைத் தருகிறது.
மாஜிக் மிக்ஸி
கொரானா காலத்தில் வெளியில் சென்று மெஷினில் மசாலா பொடி, மிளகாய் பொடி அரைப்பது என்பதெல்லாம் கனவாய் போய் விட்டது. அத்துடன் மெஷினுக்குச் சென்றால் ஒரு கிலோவிற்குக் குறைந்து அரைக்க முடிவதில்லை.
இந்தக் குறையைப் போக்க இப்போது சந்தையில் ஆஜர் – மாஜிக் மிக்ஸி! இந்த மிக்ஸியில் அந்தந்த வேளைக்குத் தேவையான சமையலுக்கு வேண்டிய அளவு மசாலா பொடி, சட்னியின் பல வகைகள், (தேங்காய், தக்காளி சட்னி), மற்றும் ஜூஸ் ஆகியவற்றை சில விநாடிகளிலேயே செய்து கொள்ள முடிகிறது. நம்ப முடியாத அளவு குறைவான அளவு சமையல் மசாலா பொருள்களை இதில் போட்டு பட்டனை ஆன் செய்தால் உடனடியாக சிறிய் அளவில் கூட நமது தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
எவர் ஃபிரஷ்! நோ வேஸ்ட்.
ஜூஸை அப்படியெ இதிலிருந்தே குடிக்கும் படியாக ஜாடியும் பருகுவதற்கான மூடியுள்ள சிறு துவாரமும் உள்ளது.
ஆடோமாடிக் கிரைண்டர்!
பழைய காலத்தில் அதாவது சென்ற தலைமுறைக்கு முன்னர் மாவு அரைப்பது ஒரு தனி வேலை. அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு குழவி மூலம் அரைத்து அரிசியைத் தள்ளி தள்ளி விடவேண்டும். அப்புறம் வந்தது சமையலறை கிரைண்டர். இதில் ஒரு குறை கிரைண்டர் வீல் சுற்றும் – அதனால் வெப்பம் ஏற்படும். இப்போது வந்துள்ள ஆடோமாடிக் கிரைண்டரில் இந்தக் குறை களையப்படுகிறது. அரிசியையும் தண்ணீரையும் விட்டு விட்டு பட்டனை அமுக்கினால் போது. புரோகிராம் படி சில நிமிடங்களில் இட்லி மாவு தயார். இப்போதிருக்கும் கிரைண்டரில் கையால் தான் மாவை எடுக்க வேண்டும். ஆனால் இந்த நவீன கிரைண்டரில் குழாயைத் திறந்து விட்டால் மாவு கொட்டும். சரி, அதை கழுவுவது எப்படி? கவலையே இல்லை. தண்ணீரை உள்ளே விட்டால் கிளீன் செய்து பின்னர் தண்ணீரை வெளியே குழாய் வழியாகக் கொட்டி விடலாம்!
எண்ணெய் எடுக்க ஒரு மெஷின்!
பழைய காலத்தில் சுத்தமான எண்ணெயை விரும்புவோர் செக்கிற்கு சென்று புதிதாக ஆட்டி எடுக்கப்பட்ட செக்கு எண்ணெயை வாங்குவது வழக்கம். இப்போதோ பாக்கெட் எண்ணெய்!
செக்கும் பாக்கெட் எண்ணெயும் அந்தக் காலம். செக்கே வீட்டிற்குள் வந்தது இந்தக் காலம்!
இப்பொது வந்துள்ள நவீன மெஷினில் சமையலறையிலேயே எண்ணெயை செக்கில் ஆட்டி எடுப்பது போல சுத்தமாக அவ்வப்பொழுது எண்ணெய் விதைகளைப் போட்டு எண்ணையாக எடுத்துக் கொள்ளலலாம்.
சமையலறைக்கு மட்டும் தூக்கிச் செல்லும் படியான போர்டபிள் ஏசி வேண்டுமா, பாட்டரியில் இயங்கும் ஃபேன் வேண்டுமா – எல்லாம் ரெடி!
அடடா, காலம் மாறி விட்டது. இனி ஆணோ பெண்ணோ, இளம் வயதோ,அனுபவமான வயதோ எல்லோரும் நளபாகம் செய்யத் தெரிந்தவர்களே!
ஆகவே இன்றைய புதிய பாட்டு : சங்கீதம் போல சுகத்தைத் தரும், சங்கடம் இல்லாத, சமையலை செய்யப் போறேன்; நான் சமையலை செய்யப் போறேன்!
***

tags– ரொபாட் குக்கர்; மாஜிக் மிக்ஸி