
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9274
Date uploaded in London – –17 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தங்களது பிறந்த தேதி,நேரம்,இடம் ஆகியவற்றைக் குறிப்பிடுவோருக்கு சரியாகக் கணிக்கப்பட்ட அவர்களது ஜாதகமும், பலன்களும் அனுப்பப்படும் என்று விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏராளமான கடிதங்கள் வந்து குவிந்தன.

கடிதங்கள் அனைத்திற்கும் ஒரே ஜாதகத்தை அனுப்பிய காக்லின் பலனாக, “நல்ல மனம் படைத்தவர்”, ‘அனைவரையும் வரவேற்பவர்’, ‘நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்’ என்று தனக்குத் தோன்றியதை எல்லாம் எழுதி அனுப்பினார். அத்துடன் ஒரு வினாத்தாளையும் அதில் இணைத்துத் தான் கூறிய பலன்கள் எல்லாம் சரிதானா என்றும் கேட்டிருந்தார்.
94 சதவிகிதம் பேர் பலன்கள் சரியாக இருக்கிறது என்றும் 90 சதவிகிதம் பேர் தங்கள் குடும்பத்தினரும் அவை சரியாக உள்ளன என்று குறிப்பிடுகின்றனர் என்றும் தெரிவித்தனர்.
ஆனால் பிறந்த தேதி, இடம் குறித்து அனுப்பியோருக்கு காக்லின் அனுப்பிய ஜாதகமோ ஒரு பயங்கர கிரிமினலின் ஜாதகம்! பல கொலைகளைச் செய்ததோடு, கொலை செய்யப்பட்டோரின் உடல்களை மறைத்து சாட்சியங்களையும் மறைத்தவன் அவன்.
ஜோதிடம் நிச்சயமாக நம் தலைவிதியை நிர்ணயிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார் காக்லின். என்றாலும் ஆராய்ச்சியை நிறுத்தாமல் தொடர்ந்து பிறந்த தேதிகளைச் சேகரித்து ஜாதக பலன்களை ஆராய்ந்து வந்தார்.
அவருக்குத் தன் ஆராய்ச்சியின் மூலம் சில அதிசயமான உண்மைகள் தெரிய ஆரம்பித்தன.
சனியும் செவ்வாயும் பிரதானமாக உள்ள ஜாதகங்களை உடையவர்கள் மருத்துவத் துறையில் பிரபலங்களாக இருப்பதை அவர் கவனித்தார். சோதனைகளை மேலும் தொடர்ந்தார்.
போர் வீரர்கள், விளையாட்டு வீரர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் ஜாதகத்தில் செவ்வாய் பிரதானமாக இருப்பது அவருக்குத் தெரிந்தது.
ஆனால் கலைஞர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வியாழன் பலம் பொருந்தியவனாக இருந்தான்.
எழுத்தாளர்களுக்கோ சந்திரன் பிரதான கிரகமாக அமைந்திருந்தான்.
அவர் கடைப்பிடித்த முறை ஸ்டாடிஸ்டிக்ஸ் எனப்படும் புள்ளிவிவர இயலை அடிப்படையாகக் கொண்டது.

இந்த ஆராய்ச்சி சுமார் பத்து வருட காலம் நீடித்தது. 1955இல் அவரது முதல் புத்தகம் வெளியானது. 347 பக்கம் கொண்ட அந்தப் புத்தகத்தில் 1084 டாக்டர்கள், 570 விளையாட்டு வீரர்கள், 676 ராணுவ வீரர்கள், 906 பிரபல ஓவியர்கள், 301 சாதாரண ஓவியர்கள், 500 நடிகர்கள், 494 அரசியல்வாதிகள், 349 விஞ்ஞானிகள் 884 பாதிரிகள் ஆக மொத்தம் 5824 பேர்களின் பிறந்த தினக் குறிப்புகள் இருந்தன. முதன் முதலாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ஜோதிடக் குறிப்புகள் வெளியான முதல் புத்தகம் இது தான்.
காக்லின் ஆய்வை கடுமையாக விமரிசித்த பலர் பிரான்ஸில் மட்டும் புள்ளிவிவரம் சேகரித்து முடிவு சொன்னால் போதாது, இதர நாடுகளிலும் இப்படி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்றனர். இதற்கு ஒத்துக் கொண்ட காக்லின் மேலும் 15000 ஜாதகங்களை ஆராய்ந்தார். முடிவுகளை இரண்டாவது புத்தகமாக 1960ஆம் ஆண்டு வெளியிட்டார்.
தொடர்ந்து செய்த ஆய்வில் அவரிடம், மலைக்க வைக்கும் ஐந்து லட்சம் பேர்களின் பிறந்த தேதி, அவர்களைப் பற்றிய அதிகாரபூர்வமான வாழ்க்கைக் குறிப்புகள் இருந்தன.
ஆனால் காக்லினின் கண்டுபிடிப்புகளுக்கு ஜோதிடர்களும் விஞ்ஞானிகளும் அவ்வளவாக முக்கியத்துவம் தரவில்லை.
1981ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டு நாடுகளிலிருந்து 110 நிபுணர்களை அவர் லண்டனுக்கு அழைத்து ஒரு மாநாட்டை நடத்தினார். வந்திருந்த அனைவரும் காக்லினின் பணியை மனதாரப் பாராட்டினர்.
ஜோதிடத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான ஆய்வு என்றும் இது போல இன்னொரு ஆய்வு உலகில் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
ஆனால் இதற்கு பதிலாக விஞ்ஞானிகள் அவரது புள்ளி விவரச் சேகரிப்பில் பெரும் பிழை உள்ளது என்றும், அதில் ‘எஃபக்டிவ் சைஸ்’ இல்லை என்றும் டெக்னிகலாகக் கூறினர்; ஆகவே அதை ஒரு ஆய்வு என ஒப்புக் கொள்ள முடியாது என்று பதில் விடுத்தனர்.
பெரும் ஆய்வை நடத்தி, நடத்தி ஓய்ந்து போய் மன உளைச்சலுக்கு ஆளான காக்லின் கடைசி கடைசியாக, “ஜோதிடம் என்பது ஒரு பெரிய மர்மம். பல நூற்றாண்டுகளாக இது பற்றி அறிஞர்கள் ஆராய்ந்து வந்துள்ளனர். இதில் ஓரளவு வெளிச்சத்தைக் காட்டிய திருப்தி எனக்கு இருக்கிறது” என்று கூறி முடித்துக் கொண்டார். அதிக மனச்சோர்வுக்கு ஆளாகவே அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தன் வாழ்வையும் முடித்துக் கொண்டார்.
காக்லினின் புள்ளிவிவர இயல் ரீதியான ஜோதிட ஆராய்ச்சியை மறுக்கும் விஞ்ஞானிகள் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உளவியல் விஞ்ஞானியான கார்ல் ஜங் (தோற்றம் 26-7-1875 மறைவு : 26-6-1961) ஜோதிடம் பற்றிய கூறிய கூற்றுக்கள் பற்றி எதுவும் சொல்ல முடிவதில்லை. அவ்வளவு அறிவியல் பூர்வமான ஆணித்தரமான ஆராய்ச்சி அவருடையது!
சைக்கோ அனாலிஸிஸ் எனப்படும் உளநிலை பகுப்பாய்விற்கு ஜோதிடத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்பது குறித்து அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
ஜோதிடக் கலையை நன்கு ஆய்வு செய்து வந்த அவர், “ஜோதிடம் என்பது உள்ளுணர்வின் அடிப்படையிலான ஒரு மாபெரும் கலை. அறிவியல் ரீதியாக சரியான அடித்தளம் கொண்டு அது இன்னும் ஆராயப்படவில்லை” என்று கூறியுள்ளார். ஜங் இந்தியாவிற்கு வந்து பல இடங்களுக்குச் சென்றார். சாஞ்சியில் புத்தர் உபதேசம் செய்த இடம் அருகே சென்றவுடன் அவருக்கு ஒரு உயரிய நிலை ஏற்பட்டது. ஜோதிடத்தின் அடிப்படையில் அவர் கண்டுபிடித்தது தான் சிங்க்ரானிசிடி எனப்படும் தற்செயல் ஒற்றுமை பற்றிய புதிய கொள்கை விளக்கமாகும். அவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் அன்பர்கள் கனவுகள், கடவுள், ஜோதிடம் பற்றிய பல அதிசய விஷயங்களை அறிந்து பிரமித்துப் போவர் என்பது நிச்சயம்.
இனி விண்ணில் உள்ள கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் நமது பூமிக்கும் ஒரு தொடர்பு உள்ளது உண்மையே என்பதற்கு அறிவியல் பத்துக் காரணங்களை அளிக்கிறது. இவற்றை விளக்கமாகக் கூற நேரம் போதாது என்பதால் மிகச் சுருக்கமாகக் கூறுகிறேன்.

- விண்வெளி சாடிலைட் மூலம் கிடைத்த விவரங்களை ஆராயும் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டொமினிக் க்னிவெடன், எத்தனை விண்வெளிக்கதிர்கள் பூமியைத் தாக்குகின்றனவோ அந்த எண்ணிக்கைக்குத் தக்கபடி மழை ஏற்படுகிறது என்று கண்டுபிடித்துள்ளார். விண்வெளி பூமியின் மீது ஏற்படுத்தும் முதல் விளைவு இது.
- ஸ்வீடிஷ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த லுண்ட் ஆப்ஸர்வேடரியைச் சேர்ந்த டாக்டர் ஹென்றிக் லுண்ட்ஸ்டெட், சூரியக் காற்றிற்கும் நார்த் அட்லாண்டிக் ஆஸிலேஷன் என்று கூறப்படும் ஒருவகை அழுத்த மண்டல அமைப்புகளுக்கும் ஒரு தொடர்பு உள்ளது என்று கண்டறிந்துள்ளார்.
- எரிமலை குமுற சந்திரனே காரணம் என்பதற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் குவிந்து வருகின்றன. கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மாயா இதைக் கண்டுபிடித்துள்ளார்.
- நமது பூமி சந்திரனுடன் நேருக்கு நேர் வரும்போது 40 செண்டிமீட்டர் மேலெழும்புகிறது. தினமும் இப்படி மேலெழும்பி இறங்குவதை ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல செர்ன் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
- சூரியனும் சந்திரனுமே இன்றைய பூமியின் நிலப்பரப்புக்கு காரணமாகும். பூமியின் நடுப்பகுதியையும் அதைச் சுற்றியுள்ள மாண்டில் என்ற பகுதி வரையிலும் கூட அவை ஊடுருவி அசைக்கிறது என்பதை பாரிசில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் க்ளோபல் பிஸிக்ஸ் நிறுவன விஞ்ஞானிகள் மரியன் க்ரெப்லெப்ஸ் நிரூபித்துள்ளார்.
- கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெஞ்சமின் ஆர்லாவன் தென் அமெரிக்க பழங்குடியினரை ஆராய்ந்தவர். கார்த்திகை நட்சத்திரம் பிரகாசமானால் மழை வரும் என்றும் ஆகாயத்திற்கும் எல் நினோ உஷ்ண அலைகளுக்கும் தொடர்பு உள்ளது என்றும் அவர்கள் கூறுவது கண்டு அவர் பிரமித்தார். அவை உண்மையே!
- ஐஸ் காலம் என்று நாம் விவரிக்கும் காலமானது சந்திரனும் இதர கிரகங்களினாலும் உருவாக்கப்பட்டதே. சர் ஜான் ஹெர்ஷல் இதை 1830இலேயே சுட்டிக் காட்டி விட்டார்.
- லண்டனைச் சேர்ந்த அஸ்ட்ரோ பிஸிஸ்ட் பியர்ஸ் கார்பின் என்பவர் சூரிய புள்ளிகளை வைத்து ஒன்பது மாதங்களுக்கு முன்பேயே நமது வானிலையைக் கூற முடியும் என்று கண்டு பிடித்திருக்கிறார்.
- சூரியனே நாம் கூறும் லிட்டில் ஐஸ் காலம் உருவாகக் காரணம். பனிப்படலம் உருவாக சூரியனே காரணம். மீன்வளம் குறையவும் சூரியனே காரணம். இதை நவீன அறிவியல் கூறுகிறது.
- பௌர்ணமி அன்று பவழப்பாறைகளின் உள்ள பவழங்கள் ஏராளமான விந்தணுக்களையும் முட்டைகளையும் கடலுக்குள் விடுகின்றன. உயிர்களின் மீது சந்திரனுக்கு ஆதிக்கம் உண்டு என்பதை இப்படி அறிவியல் உறுதிப் படுத்துகிறது.
இது தவிர ஏராளமான விஞ்ஞானிகள் ஜோதிடம் உண்மையே என்பதை உறுதிப் படுத்துகின்றனர். பிரிட்டிஷ் வானவியல் விஞ்ஞானி பெர்சி செய்மூர் தனது ஸயிண்டிபிக் பேஸிஸ் ஆஃப் அஸ்ட்ராலஜி என்ற நூலில் பல ஆதாரங்களைத் தருகிறார்.
இப்படி அறிவியல் ஆமோதிக்கும் ஜோதிடத்தைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம். அடுத்து இன்னொரு உரையில் மேலும் இது பற்றி சுவையான சம்பவங்களுடன் இதைப் பற்றி மேலும் ஆராய்வோம்.

நன்றி, வணக்கம்!
**
TAGS- ஜோதிடம் உண்மையா-2