
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9291
Date uploaded in London – –21 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று பிப்ரவரி -21 ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
Xxx
அசோக் சிங்கள் குடும்பத்தினர் 11 கோடி ரூபாய் நன்கொடை
ஸ்ரீராம ஜன்ம பூமி போராட்டம் என்றால் உடனே நம் மனதில் தோன்றும் பெயர் அசோக் சிங்கள். ஸ்ரீராம ஜன்ம பூமிக்காகவே வாழ்ந்தவர்.. அவர் வாழ்நாளில் அது நிறைவேறாமல் போய்விட்டது
அசோக் சிங்கள் குடும்பத்தினர் அயோத்தியில் புதிய ராமர் ஆலயம் கட்டிட 11 கோடி ரூபாயை அளித்தனர். முதலில் 6 கோடி ரூபாயை அளித்தனர். இப்போது மேலும் ரூ.5 கோடிக்கான காசோலையை அரவிந் சிங்கள் உதய்பூரில் வழங்கினார்.

xxxx
ராம ஜன்ம பூமிக்கு 50 லக்ஷம் நிதி:
குஜராத் மாநிலம் சூரத் மாநகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி பாவிகா ராம ஜன்ம பூமி ஆலய கட்டிடப் பணிக்காக ரூ.50 லக்ஷம் நிதி சேகரித்துத் தந்துள்ளார். இவர் ஒரு பாடகி. ராமாயணத்தை தனது இனிய குரலில் பாடி பக்தர்களிடம் இருந்து இந்த நிதியை திரட்டியுள்ளார்.

xxxx
சென்னை முஸ்லிம் தொழிலதிபர் ரூ.1 லட்சம் நன்கொடை
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை தன்னார்வலர்களுடன் இந்து முன்னணி உறுப்பினர்கள் இணைந்து அவரை அணுகியபோது, தொழிலதிபர் டபிள்யூ எஸ் ஹபிப் ரூ.1,00,008-க்கு காசோலையை நன்கொடையாக அளித்து நிதி திரட்டுபவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்
முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் மத நல்லிணக்க நட்பை வளர்க்க விரும்புகிறேன். நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள். இந்த நம்பிக்கையுடன் நான் இந்த தொகையை நன்கொடையாக அளித்தேன்” என்று தொழிலதிபர் ஹபீப் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
Xxx
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா தொடங்கியது
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா தொடங்கியது. பிரசித்தி பெற்ற பொங்கலிடும் நிகழ்ச்சி பிப்ரவரி 27 ம் தேதி
நடக்கிறது.
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா அம்மனுக்கு காப்பு கட்டு சடங்குடன் பிப்ரவரி 19 தொடங்கியது. மேல் சாந்தி பிரம்மஸ்ரீ ஈஸ்வரன் நம்பூதிரி காப்பு கட்டி விழாவை தொடங்கி வைத்தார்.

இந்த விழா 28-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் தினமும் பள்ளி உணர்த்தல், நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் , தீபாராதனை, உஷ பூஜை, , களபாபிஷேகம், , பந்தீரடி பூஜை, , உச்ச பூஜை, நடை அடைப்பு, மாலை 5 மணிக்கு நடை திறப்பு அத்தாள பூஜை, நடைபெறும் இரவு 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.
விழாவின் சிகரமான பொங்கல் வழிபாடு 27-ந் தேதி காலை 10.50 மணிக்கு நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு அவரவர் வீடுகளில் மட்டும் பொங்கல் படைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது
1997, 2009 ஆகிய ஆண்டுகளில் பொங்கலிடுவதில் உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மிக எளிமையாக கொண்டாட கோவில் அறக்கட்டளை தீர்மானித்து உள்ளது.
Xxxxxxxx
கோவில் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு?.. ஆக்கிரமிப்பாளர்கள் யார்?.. அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை கேள்வி
கோவில் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு என அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்; இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில், அதாவது கோவிலுக்கு சொந்தமான இடங்கள், அவற்றின் கட்டண விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பட்டியல் வைக்கவும், பூஜை கட்டணங்கள், வாடகை விவரம், நன்கொடை, செலவினங்கள், ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கோவில் சொத்துக்களை கண்டறிய அடையாள குழுவும், பரிசீலனை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நில குத்தகை மற்றும் வாடகைதாரர்கள் குடியிருப்போர் அனுபவத்தில் உள்ளோர், ஆகியோரிடம் இருந்து வரவேண்டிய 297.63 கோடி ரூபாய் பாக்கியை கேட்டு 42,818 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதில் 14,026 பேரிடம் இருந்து 32.49 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் கோவில் சொத்துக்களின் ஆக்கிரமிப்பாளர்கள் யார்?, சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? என்பது தொடர்பான முழு விவரங்களையும், 10 மாதத்திற்குள் இணையதளத்தில் வெளியிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Xxxx
திருக்கோவில் தொலைக்காட்சி: அரசாணையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
திருக்கோவில் தொலைக்காட்சி தொடங்க அறநிலையத் துறையின் பொது நல நிதியை பயன்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் நடைபெறும் விழாக்களை ஒளிபரப்புவதற்காக தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோவில் என்ற பெயரில் தொலைக்காட்சி ஒன்றை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 8.75 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், இந்து சமய அறநிலையத் துறையின் பொதுநல நிதியை கொண்டு தொலைக்காட்சி தொடங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில், பொதுநல நிதியை கோவில்களை சீரமைக்கும் பணிகளுக்கு மட்டுமே செலவிட முடியும். இதுபோன்று தொலைக்காட்சி தொடங்குவதற்கு செலவு செய்ய முடியாது. ஒருவேளை தொலைக்காட்சித் தொடங்குவதாக இருந்தால், அதுதொடர்பாக மக்களின் கருத்தைக் கேட்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பிப்ரவரி 18, விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருக்கோவில் தொலைக்காட்சிக்கு அறநிலையத் துறையின் பொது நல நிதியை பயன்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Xxxx

துர்கா பூஜையில் ரூ.32 ஆயிரம் கோடியில் படைப்பு தொழில்கள்
மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை திருவிழாவை ஒட்டி உருவாகும் படைப்புத் தொழில்களின் மதிப்பு ரூ.32,377 கோடி என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் துர்கா பூஜை மிகவும் பிரசித்திப் பெற்றது. ஒருவாரம் நடக்கும் இந்தத் திருவிழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, பொம்மைகள் தயாரிப்பு என படைப்புத் தொழில்கள் அதிகம் உருவாகும். துர்கா பூஜையை ஒட்டி உருவாகும் படைப்புத் தொழில்களின் பொருளாதார மதிப்பை ஆய்வு செய்வதற்கென்று மேற்குவங்க மாநிலம் அரசு குழுவை அமைத்தது. பிரிட்டிஷ் கவுன்சில், ஐஐடி காரக்பூர், இங்கிலாந்தில் உள்ள ராணி மேரி பல்கலை ஆகியவற்றில் உள்ள நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்; ‛துர்கா பூஜையை ஒட்டி உருவாகும் படைப்புத் தொழில்களின் பொருளாதார மதிப்பு ரூ.32,377 கோடி என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஏழு நாட்கள் நிகழும் பண்டிகையில் இது மிகப் பெரிய தொகை. இது மாலத்தீவின் ஜிடிபிக்கு ஒப்பிடத்தக்கது. துர்கா பூஜை திருவிழாவை உலகின் தலைசிறந்த திருவிழாக்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும்,’ எனக் கூறினார்.
Xxxx
திருப்பதி கோவிலுக்கு ஊறுகாய் நன்கொடை
இதோ ஒரு சுவையான செய்தி ; நாக்கில் உமிழ் நீரை சுரக்க வரும் செய்தி! திருப்பதி பாலாஜி கோவிலிருந்து வந்திருக்கிறது
திருமலை, திருப்பதி தேவஸ்தானத்திற்கு, 12.65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊறுகாய், நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. திருமலை, திருப்பதி தேவஸ்தான அன்னதான அறக்கட்டளைக்கு, ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் சிராபூரைச் சேர்ந்த, ‘விஜயா புட் ப்ராடெக்ட்ஸ்‘ உரிமையாளர் ராமு, 12.65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊறுகாயை நன்கொடையாக அளித்தார்.அதில், 4,500 கிலோ எடையுள்ள, ஏழு ரக ஊறுகாய்கள், 300 கிலோ மஞ்சள் பொடி, 200 கிலோ மிளகாய் காரம், 300 கிலோ புளியோதரை பொடி ஆகிவையும் அடங்கியுள்ளது.
Xxx

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழைகளுக்கு இலவச திருமணம்
ஆந்திர மாநிலம் நெல்லூரில் கோவில்களுக்கு பசு மற்றும் கன்றுகளை வழங்கும் கோ மாதா திட்டத்தை அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெகன்மோகன் ரெட்டி வழிகாட்டுதலின்படி திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் மத நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதன் ஒரு பகுதியாக கார்த்திகை மாதத்தில் கோவில்களுக்கு பசு வழங்கும் கோமாதா திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது.
தேவஸ்தானம் சார்பில் கல்யாண மஸ்து திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இலவசமாக திருமணங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்துவதற்காக 3 முகூர்த்த நாட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மே 28, அக்டோபர் 30, நவம்பர் 17 ஆகிய தேதிகளில் திருமணம் நடத்தப்பட உள்ளது.
இதற்காக திருப்பதியில் இயங்கி வரும் விசாரணை மையத்தில் தகவல்களை பெற்று ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யும் தம்பதிகளுக்கு தங்க தாலி, பட்டு வஸ்திரம், பூ மாலை, தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படும்.
மணமகன் வீட்டார் சார்பில் 10 பேரும், மணமகள் வீட்டார் சார்பில் 10 பேர் என திருமண விழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட் வெளியீடு
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, மார்ச் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட் 20-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதேபோல் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலை, திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்கி ஓய்வெடுக்க, 20-ந்தேதி மாலை 3 மணியளவில் காலியாக உள்ள அறைகளின் விவரம் ஆன்லைன் மூலமாக ெவளியிடப்படுகின்றன.
எனவே அறைகள் தேவைப்படும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாட்களில் திருமலை, திருப்பதிக்கு வந்து, தாங்கள் முன்பதிவு செய்த அறைகளில் தங்கி ஓய்வெடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம்.
Xxxx

விநாயகருக்கு அவமரியாதை புது சர்ச்சையில் ரிஹானா
விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ள, பிரபல பாப் பாடகி ரிஹானா, மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளார்.
தன் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரிஹானா, ஹிந்துக் கடவுள் விநாயகர் உருவத்துடன் கூடிய, ‘டாலர்’ அணிந்துள்ளதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த, பிரபல பாப் பாடகி ரிஹானா, டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவரைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்த, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க், பொய் தகவல்களை வெளியிட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில், புதிய படத்தை, ரிஹானா வெளியிட்டுள்ளார். அதில், மேலாடை ஏதும் அணியாமல், குட்டையான, ‘ஷார்ட்ஸ்’ எனப்படும், கால்சட்டை மட்டும் அணிந்துள்ளார்
ஹிந்து கடவுள் விநாயகரை அவமதித்துள்ளதாக, அவருக்கு பலரும் சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்து, கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
Xxxx
உலக நாடுகளுக்கு குருவாக வேண்டும் இந்தியா! ஆர்.எஸ்.எஸ்., தலைவர் அழைப்பு
”உலகையே குடும்பமாக கருதும் சிந்தனையால், உலக நாடுகளுக்கு குருவாக இந்தியா விளங்கி வந்தது. அதை மீட்டெடுக்க ஆர்.எஸ்.எஸ்., இயங்கி வருகிறது,” என்று, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசினார்.
கோவை, ‘கொடிசியா’ கண்காட்சி அரங்கில் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், கோவையின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பகவத் பிப்ரவரி 19 பேசியதாவது:உலக நாடுகளில் வித்தியாசமானது நம் நாடு. நம் முன்னோர் ஏராளமான நல்ல விஷயங்களை பொக்கிஷமாக தந்துவிட்டு சென்றுள்ளனர்.
வேறுபாடுகள் பல இருந்தாலும், நம் நாடு அனைத்துத் துறையிலும் முதன்மையாக விளங்கியது.நாடு உன்னதமான நிலையை அடைவதற்கு, தனிமனித நிர்மாணம் மட்டுமே தீர்வு என்பதை உணர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை, கேசவ் பலராம் ஹெட்கேவர் துவங்கினார்.
உலக நாடுகளுக்கு எல்லாம், வேறு நாடுகளை கைப்பற்றுவதில் தான் ஆர்வம் இருந்தது. ஆனால், உலகையே குடும்பமாக கருதும் சிந்தனையே இந்திய தேசத்துக்கு இருந்தது. அதனால் தான், உலக நாடுகளுக்கு குருவாக இந்தியா விளங்கி வந்தது. மீண்டும் அந்த நிலையை அடைய, ஆர்.எஸ்.எஸ்., பணியாற்றி வருகிறது. இவ்வாறு மோகன் பகவத் பேசினார்

Xxxx
உறவுகளின் மேன்மையை உணர்த்திய ‘ஹிந்து குடும்ப சங்கமம்
விவேக பாரதி’ மற்றும் ‘ராஷ்ட்ர சேவிகா சமிதி’ இணைந்து நடத்திய, ‘ஹிந்து குடும்ப சங்கமம் -2021’ என்ற நிகழ்ச்சி, சென்னையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்துவது, தம்பதியர் இடையே புரிதல் மேம்படுவது, சமுதாயத்தை உயர்த்த குடும்பத்தின் பங்களிப்பை புரிய வைப்பது உள்ளிட்ட நோக்கங்களுடன், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கு கோலப் போட்டி, சிறுவர் – சிறுமியருக்கு பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன.
இசை, உரை, நடனம் ஆகியவற்றுடன் விடுகதை, பாரம்பரிய அந்தாதி பாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. ‘கொரோனாவிற்கு பின் குடும்ப வாழ்க்கை’ மற்றும் ‘கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பின் தாக்கம்’ ஆகிய தலைப்புகளில், கலந்துரையாடல் நடந்தது.
இதைத் தொடர்ந்து, ஆர்.பி.வி.எஸ்.மணியன் தொகுத்த, ‘இனியதொரு ஹிந்துக் குடும்பம், சில உரத்த சிந்தனைகள்’ என்ற, புத்தக வெளியீடு நடந்தது.இதில், ‘விஜய பாரதம்’ இதழைச் சேர்ந்த வி.ஆனந்த் புத்தகத்தை வெளியிட, ஓய்வு பெற்ற எஸ்.பி.ஐ., வங்கி ஊழியர் கே.லட்சுமி
நாராயணன் பெற்றுக் கொண்டார்.அதன் பின், குறு நாடகம் அரங்கேறியது.
நிகழ்ச்சியின் நிறைவாக, ‘நம் பண்பாட்டை காப்பாற்றப் போவது நம் குடும்பங்களே’ என்ற தலைப்பில், ஆர்.பி.வி.எஸ்.மணியன் சொற்பொழிவு நடந்தது.நிகழ்ச்சியில், விவேக பாரதி செயலர் மங்கையர்க்கரசி, ஒருங்கிணைப்பாளர் சந்திரமவுலி, ராஷ்ட்ர சேவிகா சமிதி மாநகரச் செயலர் வித்யா ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர்.
Xxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன…………………………..
செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி,
வணக்கம்
TAGS – TAMIL HINDU , NEWS ROUNDUP, 21221