
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9318
Date uploaded in London – –28 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராகங்கள் கொண்ட துறைப் பாடல், திரைப்படப் பாடல்கள்!
ச.நாகராஜன்
1
மாம்பழக்கவிச்சிங்க நாவலர் புகழ் பெற்ற கவிஞர். பழனியில் கி.பி. 1836ஆம் ஆண்டு முத்தையாசாரியாரின் மகனாகப் பிறந்த இவர் 1884ஆம் ஆண்டு சிவபதம் அடைந்தார். எந்தப் பொருளைக் கொடுத்தாலும் உடனுக்குடன் பாடுவதில் வல்லவர் இவர்.
அவர் ஒரு சமயம் வண்ட பொம்மைய நாயக்கர் என்னும் பெரு வள்ளலைச் சந்தித்தார்.
அவரிடம் ராகங்களால் அமைந்த ஒரு துறைக்கவி பாடலை உடனே பாடிக் காட்டினார்.
பாடல் இதோ:-
பூரிகன காம்பரியி னோடுபட மஞ்சரிகாம் போதி தோடி
யாரபிநா மக்கிரியை மோகனம நோகரிகல் யாணி தேசி
சீரியமு காரிமத்தி மாபதிஸ்திரீ ராகவகை தெரிதல் வேண்டுங்
கூரிய பன்னாட்டையுங் கைக்கொண்டவண்ட பொம்மேந்த்ர குணபூமானே
இதில் பூரி, கனகாம்பரி, மஞ்சரி, காம்போதி, தோடி, ஆரபி, நாமக்கிரியை, மோகனம், மனோகரி, கல்யாணி, தேஷ், முகாரி, மத்யமாவதி உள்ளிட்ட ராகங்களின் பெயர்கள் ஒரே பாடலில் இடம் பெற்றதைக் காணலாம்.
2
1958ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழகமெங்கும் திரையிடப்பட்டு மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட வெற்றிப் படம் சம்பூர்ண ராமாயணம். எம்.ஏ.வேணு தயாரித்த திரைப்படம் இது. கே.வி.மஹாதேவன் இசை அமைத்திருந்தார்.
அதில் ராவணனை அறிமுகப்படுத்தும் காட்சியே அமர்க்களமாக இருக்கும்.
இசையில் வல்லவனான ராவணனை அறிமுகப்படுத்தும் காட்சியில் பலரும் ராகங்களைப் பற்றிக் கேட்கும் ஒரு காட்சி இடம் பெற்றது.
‘நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நா’ என்று கம்பரால் புகழப்பட்ட ராவணன் வீணை வாசிப்பதில் வல்லவன். எல்லா ராகங்களிலும் தேர்ந்தவன். இசை நுணுக்கம் அறிந்தவன்.
சபையில் பலரும் ராகங்களைப் பற்றிக் கேட்க அதைப் பாடியே காண்பிக்கிறான் ராவணன்.
கவிஞர் ஏ. மருதகாசி அவர்கள் எழுதிய ‘சங்கீத சௌபாக்யமே என்றும் குன்றாத பெரும் பாக்யமே’ என்ற பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடலாக அமைந்து படத்திற்கு மெருகூட்டியது.
பல கேள்விகளுக்கும் ராவணன் அளித்த பதில்களில் இடம் பெறும் ராகங்கள் இவை:-
காலையில் பாடும் ராகம் பூபாளம் உச்சியில் பாடும் ராகம் சாரங்கா மாலையில் பாடும் ராகம் வசந்தா இரக்கத்திற்கான ராகம் நீலாம்பரி மகிழ்ச்சிக்கான ராகம் தன்யாசி யுத்தத்திற்கான ராகம் கம்பீர நாட்டை வெண்பா பாட சங்கராபரணம் அகவல் இசைக்க தோடி தாழிசைக்கு கல்யாணி இறுதியில் கயிலை நாதனைக் கானத்தால் கவர்ந்த ராகம் எது என்று மண்டோதரி கேட்க ராவணன் காம்போதி என்று பாடி முடிக்கிறான்.
3
1965ஆம் ஆண்டு வெளியான படம் திருவிளையாடல். ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் வந்த இந்தப் படம் பெரு வெற்றியைப் பெற்றது. அதில் ஹேமநாத பாகவதாரக நடித்த டி.எஸ். பாலையா தன் இசைப் பெருமையை விளக்குவதாக ஒரு பாட்டு அமைந்திருந்தது. பாடலை இயற்றியவர் கவியரசர் கண்ணதாசன். பாடலைப் பாடியவர் பிரபல பாடகரான பாலமுரளிகிருஷ்ணா. இசை அமைத்தவர் கே.வி. மஹாதேவன்.
பாடல் இது தான்:-
ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா
புது ராகமா சங்கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா
ராகமா சுக ராகமா கானமா தேவ கானமா ராகமா சுக ராகமா கானமா தேவ கானமா
என் கலைக்கிந்த திரு நாடு சமமாகுமா என் கலைக்கிந்த சிறு நாடு சமமாகுமா நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா
குழல் என்றும் யாழ் என்றும் சிலர் கூறுவார் என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
அழியாத கலை என்று என்னை பாடுவார்
அழியாத கலை என்று என்னை பாடுவார்
என்னை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்
என்னை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்
இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ எழுந்தோடி வருவார் அன்றோ எழுந்தோடி தோடி ஆஆ ஆஆ ஆஆ இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ
எனக்கு இணையாக தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ தர்பாரில் ஆஆ
எனக்கு இணையாக தர்பாரில் எவரும் உண்டோ
கலையாத மோகன சுவை நான் அன்றோ
மோகன சுவை நான் அன்றோ மோகனம் ஆஆ ஆஆ
கலையாத மோகன சுவை நான் அன்றோ
கானடா ஆஆ ஆஆ ஆஆ என் பாட்டு தேன் அடா
இசை தெய்வம் நான் அடா!
இந்தப் பாட்டில் தோடி, தர்பார், மோகனம், கானடா ஆகிய ராகங்களின் பெயர்கள் (இருபொருள் பட) இடத்திற்கேற்ற படி வருவதையும் அந்த ராகங்களிலேயே அவை இசைக்கப்படுவதையும் மக்கள் பெரிதும் ரசித்தனர்.

இப்படி ராகப் பாடல்கள் பல உண்டு.
அனைவரையும் மகிழ்விக்கும் இசை இப்படி புது விதத்தில் தரப்படும் போது ஏற்படுவது, இரட்டிப்பு மகிழ்ச்சி அல்லவா?!
***
tags- ராகங்கள்
C Sugumar Csugumar
/ March 9, 2021இப்பாடலை இயற்றியவா் கவிஞா் காமு செரிப் என்ற முஸ்லீம் ஆவாா். கண்ணதாசம் பல பாடல்கள் எழுதியும் பொருத்தமாக அமையவில்லை. பலா் முயற்சித்தும் பொருத்தமான பாடல் கிடைக்கவில்லை. மிகுந்த தயக்கத்துடன் காமு ஷெரிப் அவர்கள் எழுதிக்கொடுத்து விட்டு தனது பெயரை போட வேண்டாம் என்று தெரிவித்து விட்டாா். ஹிந்து சமய சார்பான பாடலை இயற்றியதற்காக அவருக்கு சற்று வெட்கம். சங்கடம். ஆகவே கண்ணதாசன் பெயரில் பாடல் வெளிவந்தது.
santhanam nagarajan
/ March 11, 2021நன்றி திரு சுகுமார் அவர்களே!
இணைய தளத்திலிருந்து எடுத்த பகுதி இது:-
இவரைப் பற்றிய மற்றொரு தகவல் திரையுலகில் பரவியிருந்தது. அது “சிவலீலா” எனும் நாடகத்துக்காக கவி.கா.மு.ஷெரீப் எழுதிய சில பாடல்களை ஏ.பி.நாகராஜன் தனது திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களில் எடுத்துக் கையாண்டார் என்பதுதான். அதன் முழு விவரமும் நமக்குத் தெரிய வரவில்லை. இவர் நிறைய அரசியல் கட்டுரைகள் எழுதியுள்ளார். நல்ல மேடைப் பேச்சாளர். கவிதைகள் தவிர, கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
திரைப்படத் துறையில் ஈடுபட்டாலும் ஒழுக்கம் குன்றாக் கவிஞர் கா.மு.ஷெரீப். ‘சிவ லீலா’ என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும், ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடல் இவருடைய பாடல் என்பது திரை உலகில் அன்றே பரபரப்பாகப் பேசப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு :https://tamizhagathiyagigal.pressbooks.com/chapter/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D/
ஒரு நாள் போதுமா கண்ணதாசன் எழுதிய பாடல் தான்!
நன்றி நாகராஜன்