ஞானசம்பந்தர் அருளிய ஒரு நல்ல, நல்ல, பதிகம் (Post 9349)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9349

Date uploaded in London – –  7 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞானசம்பந்தர் அருளிய ஒரு நல்ல, நல்ல, நல்ல, நல்ல, நல்ல பதிகம்!

ச.நாகராஜன்

வாழ்வில் நமக்கு ஏற்படும் இடர்கள் ஒன்றல்ல; இரண்டல்ல; இந்த இடர்கள் ஏற்படுவதும் ஒரே ஒரு காரணத்தினால் மட்டும் அல்ல; சில நம்மால் கட்டுப்படுத்தப்படக் கூடியது; சில நம்மால் கட்டுப்படுத்த முடியாதவை; இயற்கையின் சீற்றங்கள் எதிர்பாராது நம்மை வாட்டுவதைச் சொல்லலாம்; இந்த இடர்களும் எதிர்காலத்தில் எப்போது வரும் என்பதையும் சொல்ல முடியவில்லை, நம்மால்!

என்ன செய்வது, பரிதாபப் படுகிறோம். இதைப் பார்த்து மனம் கசிந்த திருஞானசம்பந்தர் மனித குல நன்மைக்காக ஒரு பதிகத்தை அருளியுள்ளார்.

அது தான் கோளறு திருப்பதிகம.

நமது வினைப் பயனால், கிரகங்களால் சில தீமைகள் நமக்கு ஏற்படுகின்றன.

வானத்தில் சில சமயம் பல கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்று கூடி மனித குலத்தையே ஓலமிட வைக்கின்றன.

சமீபத்திய கொரானா உலகையே ஆட்டி வைத்த- ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் – ஒரு கொடிய நோய், அல்லவா!

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் கோளறு திருப்பதிகம், அதை ஓதுபவர்க்கு இன்னலை அகற்றும்; நன்மையைத் தரும்.

கோளறு திருப்பதிகம் பதினோரு பாடல்களைக் கொண்டது. அதை ஓதுபவர்க்கு என்னென்ன நலன்கள் எல்லாம் வரும் என்பதை அந்தப் பாடல்களிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

தீமை பயக்கும் அனைத்துமே அடியார்க்கு நல்லனவையாக ஆகும் அல்லது ஆக்கும் அற்புதம் அவரது இந்தப் பதிகத்தில் உள்ளது.

திருஞான சம்பந்தர் 385 பதிகங்களை அருளியுள்ளார். இதில் உள்ள மொத்தப் பாடல்கள் 4169 ஆகும். இந்தப் பாடல்களில் அவர் ‘நல்ல’ என்ற சொல்லை 134 இடங்களில் பொருள் பொதிந்து பயன்படுத்துகிறார்.

இந்த 134 இடங்களில் கோளறு திருப்பதிகத்தில் மட்டும் 41 இடங்களில் ‘நல்ல’ பயன்படுத்தப்படுகிறது. அதிலும் 11 பாடல்களில் முதல் பாடலிலேயே ஐந்து இடங்களில் ‘நல்ல’ என்ற சொல் வருவதைக் கண்டு அதிசயிக்கலாம்.

வேய் உறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி

மாசு அறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும

 உடனே

ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே 

இந்தப் பாடலில் முதல் அடியில் ஒரு ‘நல்ல. இறுதி அடியில் நான்கு ‘நல்ல ஆக மொத்தம் ஐந்து ‘நல்ல வருவதைக் காணலாம்.

இதர பத்துப் பாடல்களில் வரும் இறுதி அடிகள் இவை:-

அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-2)

அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-3)

அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-4)

அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-5)

ஆள் அரி நல்ல நல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-6)

அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-7)

ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-8)

அலைகடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-9)

அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-10)

அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-2)

இந்த வரிகளில் 36 முறை நல்ல வருவதைக் காணலாம்.

ஆக முதல் பாடலில் 5 + மற்ற 9 பாடல்களில் 36, மொத்தம் 41 இடங்களில் நல்ல என்ற சொல் இந்தப் பதிகத்தில் இடம் பெறுவதைக் காண முடிகிறது.

எவையெல்லாம் தீங்கு பயப்பவையோ அவை எல்லாம் அடியார்க்கு நல்லனவாக ஆகி விடும்.

பெரிய பட்டியலே பதிகத்தில் இடம் பெறுகிறது.

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, பாம்பு இரண்டு.

ஆக நவகிரகங்கள் தீமையே செய்யாது; நன்மையே செய்யும்.

அடுத்து பயணத்திற்கு ஆகாது என்று விலக்கப்பட்ட நாட்கள் ஆயில்யம், மகம், விசாகம், கேட்டை, திருவாதிரை நட்சத்திரங்கள் வரும் நாட்கள் ஆகும்.

ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாட்கள் ஆகியவை நல்லதே பயக்கும் என்பது சம்பந்தரின் அருள் வாக்கு!

மொத்த நட்சத்திரங்கள் 27.

அதில் ஒன்பதாய் வரும் நட்சத்திரம் ஆயில்யம்!

ஒன்பதொடு ஒன்று – பத்தாவது நட்சத்திரம் மகம்!

ஒன்பதொடு ஏழு – பதினாறாவது நட்சத்திரம் விசாகம்!

பதினெட்டாவது நட்சத்திரம் கேட்டை.

ஆறாவது நட்சத்திரம் திருவாதிரை.

விலக்கப்பட்ட நாட்களும் கூட சிவனடியார்க்கு நல்லதையே செய்யும்.

அடுத்து மஹாலக்ஷ்மி, சரஸ்வதி,பூமி, திசை தெய்வங்கள் இவை அனைத்தும் நல்லனவற்றையே அருளும்.

அடுத்து கொதிக்கின்ற காலன், அக்னி, யமன், யமதூதர், ஏராளமான கொடிய நோய்கள் ஆகியவையும் தீமை பயக்காமல் அகன்று விடும்.

கோபம் கொண்ட அவுணர் கூட்டம், இடி, மின்னல், இன்னும் உள்ள பூதங்கள் ஆகியவையும் கூட சிவனடியாரைக் கண்டால் அஞ்சிடும்; தீமையைத் தராது.

புலி,யானை, பன்றி, நாகம், கரடி உள்ளிட்ட அனைத்து மிருகங்களும் தீமையைச் செய்யாது. நல்லனவாக ஆகி சிவனடியாரிடமிருந்து அகன்று விடும். வெப்பு நோய், குளிர், வாதம், பித்தநோய் ஆகிய எந்த வியாதியும் வந்து அடியாரைப் பீடிக்காது. இராவணன் போன்ற தீயவர்களால் வரும் கேடும் வராது. பிரம்மா, திருமால், வேதங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் நன்மையே செய்வர். எதிர்காலம் உள்ளிட்ட இன்னும் இங்கு சொல்லப்படாது உள்ள பலவும் நன்மையே செய்யும். ஆழ்கடல் நல்லது; அலைகடலும் நல்லதே!

நெற்றியில் இடும் திருநீறு மஹிமை வாய்ந்தது. திடமானது. அது அனைத்து இடர்களையும் எதிர்கொண்டு ஜெயிக்கும். அடியவர்க்கு நல்லதையே ஏற்படுத்தும்.

இது மட்டுமல்ல, இந்த கோளறு திருப்பதிகத்தை ஓதுபவர்க்கு ஒரு பெரும் பரிசாக ஒரு ஆணையை தாமே இட்டு உறுதி செய்கிறார் சம்பந்தர்.

“ஆன சொல் மாலை  ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர்-ஆணை நமதே என்கிறார்!

என்ன கம்பீரமான அதிகார தோரணையுடன் கூடிய சொற்றொடர்!

வானில் அரசு ஆள்வதற்கான இப்படிப்பட்ட ஒரு ஆணையை எல்லாம் வல்ல இறைவனே அல்லவா இட முடியும்.

அப்படி அதை இடுகிறார் – ஞானசம்பந்தனாக வந்து நடமாடிய தெய்வத் தமிழ் மகன்! முருகனே அல்லவா ஞானசம்பந்தர்!

ஐந்து ‘நல்ல உள்ள பாடலுடன் 41 ‘நல்ல தரும் இந்தப் பதிகத்தை ‘நல்ல, நல்ல, நல்ல என்று 41 முறை சொல்லி விட்டு நல்லன அருளும் பதிகம் இதுவே தான் என்று சொல்லலாம் இல்லையா!

ஓதுவோம் தினமும், நலன்கள் அனைத்தையும் பெறுவோம் எந்நாளும்!

****

tags – ஞானசம்பந்தர் பதிகம் வேய்உறுதோளிபங்கன்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: