
Post No. 9367
Date uploaded in London – – 11 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கோகுலம்கதிர் மார்ச் 2021 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
சமையல் எரிவாயு
வேண்டாம், டீஸல் வேண்டாம், ராக்கட் ஸ்டவ் போதும்!
ச.நாகராஜன்
வாழ்க்கை என்பது சமையல் என்னும் மாஜிக் கலந்தது. நீங்கள் ஒரு நல்ல மாஜிக் நிபுணராக ஆகுங்கள்! – சமையலறைப் பொன்மொழி
நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் சிலிண்டர் கேஸ் விலையும் டீஸல் விலையும் நம்மை கவலை கொள்ளச் செய்கிறது. குறிப்பாக கிராமப் புறங்களில் கேஸ் வைத்து சமைக்க ஆரம்பிக்கும் பழக்கம் கொண்ட நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் வரவுக்கும் செலவுக்கும் ஈடு கட்ட முடியாமல் திண்டாடுகின்றனர்.
உலகில் இன்று 300 கோடி பேர்கள் விறகு மற்றும் கரி அடுப்பையே சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் இந்தியாவில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் 42.7சதவிகித மக்கள் விறகையும் 38.1 சதவிகிதம் பேர் சமையல் வாயுவையும் ஏனைய மக்கள் கெரோஸின், மின்சாரம் ஆகியவற்றையும் சமைப்பதற்குப் பயன்படுத்துகின்றனர் என்பது தெரிய வருகிறது.
பழைய காலத்தில், சம உயரம் உள்ள மூன்று கற்களை முக்கோண வடிவில் அமைத்து மேலே சட்டியை வைத்து கீழே விறகை வைத்து சமைப்பது வழக்கமாக இருந்தது. இதன் அடுத்தபடியாக களிமண்ணினால் பூசப்பட்ட அடுப்பில் கீழே விறகு வைத்து சமைப்பது ஆரம்பமானது. உலகில் ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரை பல்வேறு நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் இந்த முறையால் பல லட்சம் பேர்கள் ஆஸ்த்மா, சுவாசக் கோளாறுகள், கண் வியாதிகள்,இதய சம்பந்தமான நோய்கள் உள்ளிட்டவை ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். அத்துடன் வீடு முழுவதும் புகை படிந்து அசுத்தமாகி ஆரோக்கியமற்ற சுற்றுப்புறத்தில் வாழும் அவல நிலையும் ஏற்படுகிறது. இந்த அடுப்பில் உள்ள இன்னொரு குறை சமையலுக்கு ஏராளமான அளவு விறகு தேவைப்படுவது தான் – ஏனெனில் பெருமளவு வெப்பம் வீணாகிறது. ஆகவே சமையல் எரிவாயு இல்லாத, குறைந்த அளவு விறகை, திறன் வாய்ந்த முறையில் பயன்படுத்தும் அடுப்பே இன்றைய தேவை.
இந்தத் தேவையை ஈடுகட்ட திறன் வாய்ந்த ஒன்றாக இதோ வந்து விட்டது ராக்கெட் அடுப்பு.
ஒரு சிறிய சேம்பர் அல்லது அறை. அதில் சுள்ளிகளையோ விறகையோ போட வெண்டும். இன்சுலேட் செய்யப்பட்ட ஒரு சிம்னியும் இதில் இருக்கும். புகை வெளியிலே வராது. சாம்பலை எடுக்க கீழே தனி வழி உண்டு.
கிராமப் புறத்தில் சில செங்கல்களை வைத்து 300 ரூபாயிலும் இதை நாமே அமைத்துக் கொள்ளலாம். சுமார் 25 வருட ஆயுள் காலம் உள்ள அடுப்பை 3000 ரூபாய் கொடுத்து வெளியில் சந்தையிலிருந்தும் வாங்கிக் கொள்ளலாம்.
இதில் 500 டிசைன்கள் உண்டு. அனைத்தையும் யூ டியூப் மற்றும் இணையதளத்தில் பார்த்து, நமக்குத் தேவையான எளிய மாடலை நாமே அமைத்துக் கொள்ளலலாம். இதன் அடிப்படை விதி கீழே ஒரு அறை. அதில் சுள்ளிகள், விறகுகளைப் போட்டு ‘காம்பாக்டாக’ எரிக்க வேண்டியது தான். செங்கல்களை ஐந்து அடுக்கு உயரமாக அடுக்கி, இரு அடுப்புகளைக் கூட தயார் செய்து கொள்ளலாம். இதில் 30 சதவிகிதம் எரிபொருள் சக்தி கூடும். மாதத்திற்கு ஆகும் இமாலய கேஸ் விலையையும் சில கிலோ விறகுக்கான விலையையும் ஒப்பிட்டால் உள்ளம் குளிர்ந்து விடும். கிராமப்புறத்தில் எளிதாகக் கிடைக்கும் சுள்ளிகளும் விறகுத் துண்டுகளுமே இதை அமைக்கப் போதும். புகை எழாது.
நகரங்களிலும் கூட தோட்டம் உள்ள வீடுகளில் கிடைக்கும் சுள்ளிகளே போதும் இந்த அடுப்புக்கு – குறைந்த பட்சம் வெந்நீர் போட இதை உபயோகித்தாலேயே கேஸ் அல்லது மின்சார செலவு குறையும்.

சுற்றுப்புறச் சூழ்நிலை கெடாத அளவு இன்னும் ஒரு மாடல் அடுப்பு – சோலார் அடுப்பு ஆகும். 3000 ரூபாய் கொடுத்தால் இந்த சூரிய ஒளி அடுப்பை வாங்கிப் பயன்படுத்தலாம். கோவை, சேலம் உள்ளிட்ட ஊர்களில் தயாரித்து விற்கப்படும் இந்த சோலார் அடுப்புகள் நடுத்தர மக்களுக்கு ஒரு வரபிரசாதம். சூரிய ஒளியைப் பிடித்து குவிய வைத்து வெப்பத்தை உருவாக்கும் இந்த சோலார் குக்கரை சமைப்பதற்கும் நீரைச் சூடாக்கவும் பயன்படுத்தலாம்.
உலக மக்கள் 750 கோடி பேருக்கும் ஒரு நாளைக்குத் தேவைப்படும் ஆற்றலை சூரியன் 10 விநாடிகளுக்கும் குறைவான நேரத்திலேயே அளித்து விடுகிறான். சூரிய ஆற்றலை முழுவதுமாகப் பயன்படுத்த ஆரம்பித்தால் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு சமையல் கேஸ் வேண்டாம், டீஸல் வேண்டாம், வேண்டவே வேண்டாம்!
அடுத்து இன்ஸ்டண்ட் வாட்டர் ஹீ ட்டர் மலிவு விலையில் தயார். பத்தே பத்து விநாடிகளில் இந்த ஹீட்டரிலிருந்து சுடுநீர் வர ஆரம்பிக்கிறது. பாத்ரூமில் சிறிய ஒரு ஆணியில் இதை மாட்டி விட்டு வீட்டுக் குழாயுடன் இணைப்புக் கொடுத்தால் போதும். சிறிதளவே கரண்ட் செலவு. இதிலும் பல மாடல்கள் உண்டு.
வீட்டில் சமையலில் மிச்சமான வேஸ்ட் பொருள்கள், மற்றும் பசுஞ்சாணியைக் கரைத்து அந்த நீரைப் பயன்படுத்தி நாமே நமது பயோ கேஸையும் உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கான மொத்த செலவு பிரஷர் கேஜுடன் சேர்த்தே 3000 ரூபாய் தான்!
இந்த அனைத்து சமையலறை மற்றும் வீட்டு சாதனங்களை நம் இளைஞர்களே உருவாக்குகிறார்கள் என்பது தான் உள்ளம் குளிர வைக்கும் விஷயமாகும்.
ஒரு புறம் சுற்றுப்புறச் சூழல் கெடக் கூடாது; அதே சமயம் எளிதாகக் கிடைக்கும் உதிர்ந்து விழும் சுள்ளிகள், பசுஞ்சாணி ஆகியவற்றைப் பயனுள்ள முறையில் பயன்படுத்தலாம். இப்படிப்பட்ட வழிகளால் அறிவியல் ரீதியாக இயற்கைச் சூழ்நிலையில் வாழும் ஒரு புதிய உலகம் உருவாவதையும், அதை நாமே உருவாக்குவதையும் கண்கூடாகக் கண்டு மகிழலாம்.
***

tags- ராக்கட் ஸ்டவ்