
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9381
Date uploaded in London – –14 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 14-3-2021 அன்று ஒளிபரப்பான உரை!
“வண்டு தன் தேனுண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலிமாலை
கொண்டு, தொண்டர் பாடி, ஆடக், கூடிடில் நீள் விசும்பில்
அண்ட மல்லால், மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறிவோமே”
திருமங்கை ஆழ்வார் திருநாமம் வாழியே!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 108 திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான பத்ரிநாத் தலம் ஆகும்.

உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள இந்தத் தலம் ரிஷி கேசத்திலிருந்து 295 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10170 அடி உயரத்தில் இது உள்ளது.
சத்ய யுகத்தில் இதன் பெயர் முக்திப்ரதா; த்ரேதா யுகத்தில் இதன் பெயர் யோகசித்திகா. த்வாபர யுகத்தில் இதன் பெயர் மணிபத்ரிகா ஆஸ்ரமம். ஆகவே பல யுகம் கடந்த புண்ய ஸ்தலம் இது.
நரனும் நாராயணரும் தவம் செய்த இந்தத் தலத்தைப் பற்றிய சுவையான புராண வரலாறு ஒன்று உண்டு.
சஹஸ்ரகுண்டலன் என்று ஒரு கொடிய அசுரன் இருந்தான். மிகப் பெரும் வலிமை படைத்த அவனுக்கு ஆயிரம் குண்டலங்களும் ஆயிரம் கவசங்களும் இருந்தன. அவன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். பிரம்மா நேரில் தோன்ற, அவரிடம், “ பிரம்மதேவனே, எனக்கு இறப்பே இருக்கக் கூடாது” என்று சாகாமல் இருக்க அவன் ஒரு வரம் வேண்டினான். பிரம்மாவோ, “சஹஸ்ரகுண்டலா! பிறந்த உயிர் இறந்தே ஆக வேண்டும். இது இயற்கை நியதி. ஆகவே வேறு வரம் கேள், தருகிறேன்” என்றார்.
யோசித்த சஹஸ்ரகுண்டலன், “ஐயனே! என்னுடைய ஒரு குண்டலத்தையும் கவசத்தையும் அறுத்தவர்கள் உடனே இறக்க வேண்டும். ஆயிரம் கவசமும் ஆயிரம் குண்டலங்களும் அறுக்கப்பட்டால் நான் இறக்க வேண்டும். அதற்கான வரத்தை அருளுங்கள்” என சாமர்த்தியமாக இப்படி வரம் கேட்டான்.
பிரம்மா அப்படியே அந்த வரத்தை அவனுக்கு வழங்கினார். இப்படி ஒரு வரத்தைப் பெற்ற சஹஸ்ரகுண்டலன் முனிவர்களையும் தேவர்களையும் இன்னும் கொடிய முறையில் துன்புறுத்த ஆரம்பித்தான்.
இந்தக் கொடுமை அளவுக்கு மீறிப் போக அனைவரும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அவர்களை நோக்கிய நாராயணர், “அஞ்ச வேண்டாம். நானே அவனை அழிக்கிறேன்” என்று உறுதி கூறி அருளினார். விஷ்ணு நரன் என்றும் நாராயணன் என்றும் தன்னை இரு மூர்த்திகளாகப் பிரித்துக் கொண்டார். இருவரும் இமயமலையில் பத்ரிகாஸ்ரமத்தில் வந்து தவம் புரிய ஆரம்பித்தனர். ஆயிரம் ஆண்டுகள் சென்ற பின், நாராயணர் நரனை நோக்கி, “நரனே, நான் சென்று சஹஸ்ரகுண்டலனோடு போர் புரிந்து அவனது ஒரு கவசத்தையும் ஒரு குண்டலத்தையும் அறுப்பேன். பிரம்மாவின் வரத்தின் படி நான் இறப்பேன். அங்கு வந்து நீ என்னை உயிர்ப்பித்து விடு” என்றார்.
அப்படியே நாராயணர் சஹஸ்ரகுண்டலனின் ஒரு குண்டலம் மற்றும் ஒரு கவசத்தை அறுத்தார்; உயிரைத் துறந்தார். அங்கு சென்ற நரன், நாராயணரை உயிர்ப்பித்து தான் சஹஸ்ரகுண்டலனுடன் போரிட ஆரம்பித்தான். நாராயணர் தவம் செய்யச் சென்றார். இப்படியே ஆயிரம் ஆண்டுகள் மாறி மாறி ஒருவர் தவம் செய்ய இன்னொருவர் போர் புரிந்து இறக்க சஹஸ்ரகுண்டலனின் 999 குண்டலங்களும் கவசங்களும் அறுக்கப்பட்டன. இறுதியாக இருந்தது ஒரு குண்டலம்; ஒரு கவசம். தன் உயிருக்குப் பயந்த அசுரன் சூரிய பகவானிடம் ஓடி அவரிடம் தஞ்சம் புகுந்தான். சூரியன் அவனுக்கு அடைக்கலம் தந்து அவனைத் தன் உடலில் ஐக்கியம் செய்து கொண்டார். காலம் சென்றது. குந்தி தேவியானவள் துர்வாச முனிவருக்கு ஒராண்டு பணிவிடை செய்து பெற்ற மந்திரத்தை உச்சரிக்க, சூரிய பகவான் சஹஸ்ரகுண்டலனுடைய ஆவியை குந்தியின் உதரத்தில் வைத்து அருளினார். கவச குண்டலத்துடன் கர்ணன் பிறந்தான். நர நாராயணர்கள் இருவரும் அர்ஜுனன், கிருஷ்ணனாகத் தோன்றினர். அர்ஜுனன் கர்ணனைக் கொன்றான். இப்படி நரனும் நாராயணரும் பல்லாண்டுகள் தவம் புரிந்த க்ஷேத்திரமே பத்ரிகாஸ்ரமம். பத்ரி என்றால் இலந்தை என்று பொருள். பத்ரிகாஸ்ரமம் ஒரு இலந்தை வனம். அலக்நந்தா நதிக் கரையில் அமைந்துள்ளது இது. அருகில் ரிஷிகங்கா அலக்நந்தா நதியுடன் கூடுகிறது.

இந்தத் தலம் நீலகண்ட மலைச் சிகரத்தின் கீழே அமைந்து கண்கொள்ளாக் காட்சியைத் தருகிறது. பத்ரிநாதரின் பாதத் தடங்கள் இங்குள்ள ஒரு பாறையில் பதிந்துள்ளதை இன்றும் தரிசிக்கலாம்.இங்குள்ள கோயில் கிழக்கு நோக்கியது. தெற்கில் அலக்நந்தா ஓடுகிறது. கோவில் ஆறு மாதம் மட்டுமே – வைகாசி முதல் ஐப்பசி முடிய – திறந்திருக்கும். இறைவர் :பத்ரி நாராயணர் தாயார்: மஹாலக்ஷ்மி. ஸ்தல விருக்ஷம் லக்ஷ்மி சொரூபமான இலந்தை மரம். தீர்த்தம் தப்த குண்டம். இது கோவிலுக்கு எதிரில் உள்ளது. இது ஒரு வெந்நீர் ஊற்று. விமானம் தப்த காஞ்சன விமானம். கிருஷ்ண பகவான் உத்தவருக்கு உபதேசித்த கீதை உத்தவ கீதையாகும். உபதேசமெல்லாம் முடிந்த பின்னர் உத்தவரை பத்ரிகாஸ்ரமம் சென்று தவம் புரியக் கூறியதால் அவர் இங்கு வந்து தவம் செய்தார். ஆதிசங்கரர் இங்கு வழிபாட்டை நடத்தியதோடு பூஜை கிரமங்களையும் வகுத்தார். இன்றும் கேரள நம்பூதிரிகளே இங்கு பூஜை வழிபாடுகளைச் செய்து வருகின்றனர்.
பத்ரிநாத்தின் தென்மேற்காக 10 கிலோமீட்டர் சென்று மலையைப் பார்த்தால் அது அப்படியே இந்திய வரைபடத்தைக் காட்டும் காட்சி அதிசயத்திலும் அதிசயமான ஒரு காட்சியாகும். இப்படி ஏராளமான சிறப்புகளும் வரலாறுகளும் உள்ள இந்தத் தலத்திற்கு பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசாஸனம் செய்து அருளியுள்ளனர்.
காலம் காலமாக பக்தர்கள் வழிபட்டு வரும் பத்ரிநாராயணரும் மஹாலக்ஷ்மியும், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
“வருந்திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்துள்ளானை
கருங்கடல் முந்நீர் வண்ணனை எண்ணி கலியன் வாய் ஒலி செய்த பனுவல்
வரஞ்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவருலகுடன் மருவி
இருங்கடல் உலகம் ஆண்டு வெண் குடைக்கீழ் இமையவர் ஆகுவர் தாமே” நன்றி வணக்கம்!
***

tags – பத்ரிநாத் தலம்
