சோமநாத்: ஆலயம் அறிவோம்!(Post No.9431)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9431

Date uploaded in London – –28 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 28-3-2021 அன்று ஒளிபரப்பான உரை!

ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்

நிர்மல பாஸித சோபித லிங்கம் |

ஜந்மஜ துக்க விநாசக லிங்கம்

தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ||

ஜெய் சோம்நாத்!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் முதலாவதாக அமையும் சோமநாத் ஆகும்.

 பிரபாச பட்டினம் என்று பெயரைப் பெற்றுள்ள இந்தத் தலம் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஒன்று.  இது அகமதாபத்திலிருந்து 415 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தத் தலம் பற்றிய வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று! தக்ஷ பிரஜாபதிக்கு இருபத்தேழு பெண்கள் பிறந்தனர். அவர்களை அவன் சந்திரனுக்கு மண முடித்து வைத்தான். சந்திரன் ரோஹிணியின் மேல் மட்டும் அளவற்ற ஆசை வைத்து இதர  அனைவரையும் கவனிக்கவில்லை. இதனால் மனம் வருந்திய அவர்கள் அனைவரும், தன் தந்தையிடம் முறையிடவே அவர் கோபம் கொண்டு, சந்திரனை நோக்கி, “நீ உருக்குலைந்து அழியக் கடவது” என சாபம் இட்டார். மனம் வருந்திய சந்திரன், சாப விமோசனம் கேட்கவே, தக்ஷன் ‘சிவனை நோக்கித் துதி செய்’ என்றான். பிரபாச பட்டினத்தின் கடற்கரையில் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த சந்திரன் பூஜை செய்து சிவனை வழிபட்டு வந்தான். மனம் மகிழ்ந்த சிவ பிரான் அவன் முன் தோன்றி அவன் குறையைக் கேட்டு, “பதினைந்து நாட்கள் நீ தேய்ந்து அடுத்த 15 நாட்களில் முற்றிலுமாக நீ வளர்வாயாக” என வரம் தந்தார். சந்திரனுடைய இன்னொரு பெயர் சோமன். அவன் வழி பட்ட தலம் என்பதால் சோமநாத் அல்லது சோமநாத புரம் என்று இத்தலம் பெயரைக் கொண்டது.

அரபிக் கடலின் கடற்கரை ஓரத்தில் ஒரு பெரிய பாறையில் அழகுற அமைந்துள்ள இந்த சோமநாதர் ஆலயம் பூர்வத்தில் தங்கத்தால் ஆன கோவிலாகும். ஸ்கந்த புராணத்தில் சோமநாதர் கோவிலில் உள்ள ஜோதிர்லிங்கம் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் பூமிக்கு அடியில் இருப்பதாகக் கூறுகிறது. ரிக் வேதம், சிவ புராணம், பாகவதம் உள்ளிட்ட நூல்களிலும் இது குறிப்பிடப்படுவதால் இது பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் என்பது பெறப்படுகிறது.

“ஸோம லிங்கம் நரோ த்ருஷ்ட்வா ஸர்வ பாபாத் ப்ரமுச்யதே என்ற அருள் வாக்கியம் சோம லிங்கத்தை தரிசிக்கும் ஒருவர் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுவார் எனக் கூறி அருள்கிறது.

இந்த ஆலய மணியின் சங்கிலி மட்டும் இருநூறு மடங்கு எடை கொண்ட தங்கத்தால் ஆனது. கோவிலின் கூரையை 56 சட்டங்களைக் கொண்ட தூண்கள் தாங்கி இருந்தன. ஏராளமான தங்க வெள்ளி ஆபரணங்களும் நவரத்தின மணிகளையும் கொண்ட இதன் செல்வச் செழிப்பு சொல்வதற்கு இயலாத ஒன்று. இதைக் கேள்விப்பட்ட கொள்ளைக்காரன் கஜினி முகம்மது 17  முறை படையெடுத்து வந்தான். இறுதியில் கோவிலை அழித்தான். கோவில் மீண்டும் அழகுறக் கட்டப்பட்டது. இப்படியாக இந்த ஆலயம் அலாவுதீன் கில்ஜி, ஜாபர்கான் உள்ளிட்ட முரட்டு வெறியர்களால் ஆறு முறை அழிக்கப்பட்ட போதும் பல்வேறு அரசர்களால் இது மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது.

இறுதியில் ஏழாம் முறையாக சர்தார் வல்லப பாய் படேலும் கே.எம். முன்ஷி அவர்களும் இணைந்து இதை மீண்டும் எழுப்ப கடும் முயற்சி செய்தனர். இதன் விளைவாக 1951 மே மாதம் 8ஆம் தேதி அஸ்திவாரக் கல் நாட்டப்பட்டு மீண்டும் சோமநாதர் ஆலயம் அழகுறக் கட்டப்பட்டது. முரடர்கள் பல முறை அழிக்க முயற்சி செய்தாலும் தர்மம் மீண்டும் எழுச்சி உறுவது போல சோமநாத்தின் எழுச்சி தர்மத்தின் எழுச்சியாகவே கருதப்படுகிறது.

 தினந்தோறும் சூரியனின் கதிர்கள் மாலையில் மறைய ஆரம்பித்தவுடன் ஆலயத்தின் மணி ஒலி எழுப்பப்பட்டு ஆரத்தி காண்பிப்பது இங்குள்ள மரபாகும். இந்த ஆலயத்தின் தென்புற வாயிலின் எதிரே  கடலை ஒட்டி உள்ள மதில் சுவரில் ஒரு சிறு கோபுரம் உள்ளது. அதில் உள்ள ஒரு அம்புக் குறி கடலைச் சுட்டிக் காட்டுகிறது. இந்த ஆலயத்திலிருந்து தென் துருவம் வரை நிலமே கிடையாது. சோமநாதரின் தெய்வீகத் திரு ஒளி தென் துருவம் வரை பரவுவதாக ஐதீகம். கோவில் கோபுரத்தில் 1400க்கும் மேற்பட்ட கலசங்கள் உள்ளன.

சோமநாத ஜோதிர் லிங்கத்தின் நேர் பின்புறம், 51 சக்தி பீடங்களில் ஒன்றாக அமைகிறது. இது தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த இடமாகும்.

சோமநாதர் ஆலயத்திற்குச் செல்லும் வழியில் பல்கா தீர்த்தம் அமைந்துள்ளது. கண்ணனின் கணுக்காலில் வேடன் அம்பு எய்திய இடம் இது தான். கண்ணன் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு ஆலமரத்தின் நிழலில் தன் சரீரத்தைத் துறந்தார். அந்த இடம் தேகோத் ஸர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.

ஹிரண்யா, கபிலா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமமும் இங்கு அருகில் உள்ளது. இந்த திரிவேணிக் கரையில் உள்ள கீதா மந்திர் குறிப்பிடத்தகுந்த ஒரு கோவிலாகும். காலம் காலமாக பக்தர்கள் வழிபட்டு வரும் சோமநாதர் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

திருஞானசம்பந்தர் அருள் வாக்கு:

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி 

ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயவே.

 நன்றி, வணக்கம்!

tags- சோமநாத், ஆலயம் அறிவோம், ஜோதிர் லிங்கம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: