
Post No. 9434
Date uploaded in London – – 29 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவுகள் திருக்குறளைப் படிக்கலாமா? – 2
ச.நாகராஜன்
திரு எனப்படும் லக்ஷ்மி தேவி
குறள் எண்கள் 179, 519, 617, 920
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் செரும்
திறன் அறிந்தாங்கே திரு (குறள் 179)
அற நெறி இதுவே என்று அறிந்து பிறர் பொருளை கவர நினைக்காதவர்களிடம் தானே சென்று சேர்வாள் திரு என்னும் லக்ஷ்மி தேவி.
வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக
நினைப்பானை நீங்கும் திரு (குறள் 519)
தான் மேற்கொண்ட வினையைக் கண்ணும் கருத்துமாகச் செய்யும் ஒருவனது நட்பை மதிக்காது வெறு விதமாக நினைக்கும் தலைவனை விட்டுத் தாமாகவே திருமகள் நீங்கி விடுவாள்.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையினாள் (குறள் 617)
தாமரையினாள் என்று அழகுற திருமகளைக் குறிக்கிறார் வள்ளுவர். அவளது அக்காவான முகடி என்னும் மூதேவியையும் இக்குறளில் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
ஒருவனது சோம்பலிலே தான் மூதேவி (மாமுகடி – கரிய மூதேவி) வாழ்கிறாள். முயற்சி உடையவனிடத்தில் தாமரை உறையும் திருமகள் வாழ்கிறாள்.
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப் பட்டார் தொடர்பு (குறள் 920)
இருமனப் பெண்டிர் என்றால் பொது மகளிர் – வேசிகள்! பொது மகளிர், கள், சூது ஆகிய இந்த மூன்றும் திருமகளால் கைவிடப்பட்டாரின் தொடர்பு ஆகும்.
மூதேவி
குறள் எண்கள் 617, 936
குறள் 617ஐ மேலே கண்டோம்.
அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
முகடியால் மூடப் பட்டார்
சூது என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர்கள் வயிறு நிறைய உண்ண உணவு இல்லாமல் பல வகைத் துன்பம் அடைந்து வருந்துவர்.
செய்யவளும் தவ்வையும்!
லக்ஷ்மி தேவியியும் மூதேவியையும் சேர்த்து இன்னொரு குறளிலும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். குறள் எண் 167இல் திருமகளை செய்யவன் என்றும் மூதேவியை திருமகளின் அக்கா எனப் பொருள்படும் தவ்வை என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறார். இங்கு வள்ளுவரின் நகைச்சுவையையும் நாம் காண்கிறோம். தான் வராமல் தன் அக்காளுக்கு வழி விடுகிறாளாம் இலக்குமி!
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
பொறாமை கொண்ட ஒருவனைத் திருமகளுக்குப் பிடிக்காது. அவள் தனது அக்கா மூதேவியைக் (தவ்வையை) காட்டி விட்டு விலகி விடுவாள்.
இப்படி பல்வேறு குறள்களில் லக்ஷ்மியையும் மூதேவியையும் வள்ளுவர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
யமன்
குறள் எண்கள் 269, 326, 765, 1083, 1085
யமனை மிகத் தெளிவாகக் கூற்றம் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு (குறள் 269)
தவ வலிமை பெற்றவருக்கு எமனிடமிருந்து தப்புதலும் கை கூடும்.
உதாரணம் : மார்க்கண்டேயன் கதை
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிர் உண்ணும் கூற்று (குறள் 326)
உயிரை உண்ணுபவன் எமன் (கூற்று). கொல்லாமை என்ற பெரும் நோன்பினை மேற்கொண்டவர் மீது அவர் தம் வாழ்நாளை உயிரைக் கவரும்
எமன் கவர்ந்து செல்ல மாட்டான்.
கூற்றுடன் மேல் வரினும் கூடி எதிர் நிற்கும்
ஆற்றல் அதுவே படை (குறள் 765)
படையின் இலக்கணம் பற்றிச் சொல்லப் புகுந்த வள்ளுவர் எமனே சினந்து வந்து எதிர் நிற்பினும் பயப்படாமல் எதிர் கொள்ளும் ஆற்றல் கொண்டதே படை என்று படைக்கான இலக்கணத்தைக் கூறுகிறார்.
அடுத்து இன்ப இயல் பேச வந்த வள்ளுவர் பிரான் காமத்துப் பாலில் இரு குறள்களில் எமனைக் குறிப்பிடுகிறார்.
பண்டறியேன் கூற்றென்பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கெட்டு (குறள் 1083)
முன்னால் எமனைப் பற்றிச் சொன்ன போதெல்லாம் அவன் யார் என்று அறிய மாட்டேன், அடடா, இப்போது இதோ அறிந்து கொண்டேன், என் முன்னால் நிற்கும் இந்தப் பெண் தகையின்
பொருத்தமான கண்களைக் கண்டு! அவள் பார்வையால் வீழ்ந்தேன் என்கிறான் தலைவன்.
தகை என்பதால் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களை உடைய மங்கைநல்லாள் என்கிறார் வள்ளுவர்.
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இம் மூன்றும் உடைத்து (குறள் 1085)
உயிர் உண்ண வரும் கூற்றமோ – எமன் தானோ?
கூர்மையாகப் பார்ப்பதால் கண்களோ?
மருண்டு பார்ப்பதால் மான் பிணை தானோ?
இந்த மூன்றின் தன்மையையும் இந்தப் பெண்ணின் கண்கள் கொண்டிருக்கின்றனவே!
இப்படி இந்து மத புராண இதிஹாஸங்கள் கூறும் தெய்வங்களைச் சிறப்புற அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பாலிலும் கையாள்வதோடு கடவுள் வாழ்த்தை முகப்பு அதிகாரமாக வைத்துள்ளார் தெய்வப் புலவர் வள்ளுவர்.
இப்போது சொல்லுங்கள், கடவுள் இல்லை என்று சொல்வோருக்கு திருவள்ளுவரின் திருக்குறள் பற்றிப் பேச உரிமை இல்லை அல்லவா!
கடவுளை ஒப்புக் கொண்டால் மட்டுமே ‘அகர முதல’ என்று ஆரம்பித்து வள்ளுவரைப் பயில ஆரம்பிக்கலாம். இல்லையேல் ஆத்திகவாதிகளிடம் வள்ளுவரை பத்திரமாக விட்டு விட்டு பகுத்தறிவுகள் செல்லலாம்!
*** முற்றும்
tags–கடவுள் இல்லை, திருக்குறள், பகுத்தறிவு,
