
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9479
Date uploaded in London – – 11 APRIL 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 11-4-2021 அன்று ஒளிபரப்பான உரை!
கஷ்ட நிவாரிணி இஷ்ட விதாயினி துஷ்ட விநாஷினி காமாக்ஷி |
ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே சமஜன ஸதயே காமாக்ஷி ||
ஸ்ரீ மஹா பெரியவாள் சரணம்! ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது சப்த மோக்ஷபுரிகளில் நடு நாயகமாகத் திகழ்வதும், பஞ்ச பூத தலங்களில் பிருதிவி தலமாகத் திகழ்வதும், சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்வதும், 108 வைஷ்ணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகத் திகழ்வதுமான காஞ்சீபுரம் ஆகும். ஏகாம்பரேஸ்வரர் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளிட்ட ஏராளமான கோவில்களைக் கொண்டுள்ள இந்த நகரம், சைவ வைஷ்ணவ ஒற்றுமை காட்டும் சிறந்த தலமும் ஆகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள இது சென்னையிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
புஷ்பேஷு ஜாதி, புருஷேஷு விஷ்ணு, நாரீஷு ரம்பா, நகரேஷு காஞ்சி என்ற சம்ஸ்கிருத ஸ்லோகம், நகரங்களில் சிறந்தது காஞ்சீபுரம் என்று கூறுகிறது. காஞ்சீபுரம் என்றவுடனேயே நம் கண் முன் தோன்றுவது காமாக்ஷி அம்மன் திருவுருவமே! 51 சக்தி பீடங்களில் பிரதானமான காமராஜ பீடம் என்றும் ஸ்ரீ காமகோடி பீடம் என்றும் இது அழைக்கப்படுகிறது.
காமங்களை அதாவது விருப்பங்களை பூர்த்தி செய்யும் அக்ஷி – கண்களை உடையவள் என்ற பொருள் பட காமாக்ஷி என்று துதிக்கப் பெறும் இந்த அன்னையைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உள்ளன.

ஸ்ரீ காமாக்ஷி தேவி தன் வலது கண்ணால் பிரம்மாவையும் இடது கண்ணால் மஹா விஷ்ணுவையும் கடாக்ஷித்து அருளி ப்ரம்மாவிற்கு ‘கா’ என்று கூறப்படும் சரஸ்வதியையும் விஷ்ணுவிற்கு ‘மா’ என்று கூறப்படும் லக்ஷ்மியையும் தன் கண்களிலிருந்து கிடைக்கும்படி அருளிச் செய்ததால் காமாக்ஷி என்ற பெயரைப் பெற்றாள் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. காமாக்ஷி தேவி காஞ்சியில் பிலாகாச ரூபத்திலும், ஸ்ரீ சக்ர வடிவத்திலும் சதுர்புஜங்களோடு காயத்ரி மண்டபத்தில் கொலுவீற்றிருக்கிறாள். இங்கு அன்னை பராசக்தி, காமாக்ஷியாக தோன்றிய வரலாற்றை புராணம் நன்கு விவரிக்கிறது.
முன்னொரு காலத்தில் பந்தகாசுரன் என்னும் அசுரன் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து வரங்கள் பல பெற்று தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் துன்பங்களைத் தொடர்ந்து செய்து வந்தான். எல்லையற்ற துன்பம் அனுபவித்த அனைவரும் சிவனிடம் தஞ்சம் புகுந்து தம்மைக் காத்தருளுமாறு வேண்ட, பிரம்மாவிடமிருந்து பல வரங்கள் பெற்ற இவனிடமிருந்து அனைவரையும் காக்கும் வல்லமை கொண்டவள் பராசக்தியே, என்பதை நன்கு உணர்ந்த சிவபிரான், தேவர்களை வடக்கே கோமுகம் என்ற இடத்தில் உள்ள பிலத்தினுள் நுழைந்து தெற்கே காஞ்சிபுரத்தில் உள்ள பிலத்தின் வழியே வெளி வந்து, அன்னையை வழிபடுவதே அவர்கள் துன்பத்தைப் போக்கும் என்று கூறி அருள் பாலித்தார். அதன்படியே தேவர்கள் வடக்கே உள்ள பிலத்தினுள் நுழைந்து, தெற்கே காஞ்சியில், பில துவாரம் வழியே வெளி வந்தனர். அங்கே காமகோடி பீடத்தின் அருகே உள்ள ஒரு செண்பக மரத்தில், கிளி வடிவம் கொண்டு அன்னையை வழிபட ஆரம்பித்தனர்.
தேவர்களின் துன்பத்தை அறிந்த தேவி அவர்களுக்கு அருள் புரிய மனம் கொண்டு மிகுந்த கோபத்துடன் பிலத்திலிருந்து வெளிப்பட்டாள். கைலாயத்தில் பந்தகாசுரன் நித்திரை செய்வதை அறிந்த தேவி, அவனது கண்டத்தில் ஒரு பாதத்தையும் மார்பில் மற்றொரு பாதத்தையும் வைத்து, 18 புஜங்களுடன் 18 ஆயுதங்களைத் தரித்து, பைரவ ரூபிணியாகத் தோன்றி, அவனது தலையை அறுத்து, சிகையைப் பிடித்து, ஐந்து வயது கன்னிகையாகத் தோன்றி, காமகோடி பீடமாகிய பிலத் துவாரத்தை வந்து அடைந்தாள். கன்னிகை கையில் இருந்த அசுரனின் தலையைக் கண்ட தேவர்கள் பயந்து மயங்கி வீழ்ந்தனர். உடனே அவர்கள் பயத்தைப் போக்கும் வண்ணம் அதி சுந்தர திருமேனியுடன், சர்வாலங்கார பூஷிதையாக, பட்டாடை உடுத்திய சிறு பெண் போல, தேவி தேவர்களுக்குக் காட்சி அளித்தாள். தேவர்கள் மகிழ்ந்து தேவியை வணங்கிக் கொண்டாடினர். தேவி அவர்களிடம் ஒரு பெரும் பள்ளம் தோண்டி பந்தகனைப் புதைத்து ஜெயஸ்தம்பத்தை நாட்டுமாறு பணித்தாள். இன்னும் இதன் விரிவான வரலாற்றைப் புராணம் தொடர்கிறது.

காமாக்ஷியின் நான்கு கரங்களில் ஒன்றில் கரும்பினால் ஆன வில்லும் இன்னொன்றில் புஷ்பங்களால ஆன அம்புகளும் உண்டு. மீதி இரு கரங்களில் பாசமும் அங்குசமும் உண்டு. காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில் அம்பிகைக்குத் தனி சந்நிதி கிடையாது. ஏனெனில் அங்கு இருக்கத் தக்க சக்திகள் அனைத்தும் காமாக்ஷியிடம் கலந்திருப்பதே காரணம் ஆகும். ஸ்ரீ சங்கர பகவத்பாதர் இங்கு ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்து ஸ்ரீசக்ர வடிவத்தில் ஆலயத்தை புதுப்பித்தார். அங்கு சர்வக்ஞ பீடத்தை ஸ்தாபித்து, பீடாரோஹணம் செய்தார். தன் பணியை முடித்த அவர் காமாக்ஷியின் சந்நிதியில் விதேஹ கைவல்யம் அடைந்தார். ஆதி சங்கரரின் மறு அவதாரமாகத் தோன்றி 68வது பீடாதிபதியாக இருந்து அருள் பாலித்த மஹா பெரியவாளும் காஞ்சிபுரத்தையே தன் அருளாட்சியின் தலை நகரமாகக் கொண்டிருந்தது குறிப்பிடத் தகுந்தது. மஹா பெரியவாளின் அதிஷ்டானமும் காஞ்சியில் உள்ளது.
இங்கு ராஜகோபுரத்தின் வழியே நுழைந்து மதிலைக் கடந்து சென்றதும் உயர்ந்த த்வஜ ஸ்தம்பமும் பலிபீடமும் உள்ளன. உள்ளே சுக்ரவார மண்டபம் உள்ளது. அதை அடுத்து விக்ன நிவாரண கணபதியையும் துர்வாச முனிவரையும் தரிசிக்கலாம். 24 காயத்ரி அக்ஷரங்களை அனுசரித்து இங்கு 24 தூண்களைக் கொண்டுள்ள காயத்ரி மண்டபத்தில், கொலு வீற்றிருக்கும் ஸ்ரீ காமாக்ஷி அம்மனை தரிசித்தோர், இந்தப் பிறவி எடுத்த பெரும் பயனை அடைந்தவர் ஆவர். மூல காமாக்ஷிக்கு வலப்புறம் தவக் கோலத்தில், தபஸ் காமாக்ஷி காட்சி தருகிறாள்.

கச்சி என்று இலக்கியம் புகழும் இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மொத்தம் 17 பதிகங்களையும் அருணகிரிநாதர் 44 பாடல்களையும் பாடி அருளியுள்ளனர். ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்து அருளியுள்ள தலமும் இதுவே தான்! காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் வழிபட்டு வரும் அன்னை காமாக்ஷி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். காமாக்ஷி தேவி சரணம், ஆதி சங்கர பகவத்பாதர் சரணம்.மஹா பெரியவாள் சரணம் குரு ப்ரஹ்மா குரு விஷ்ணுர் குருர் தேவோ மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம: திருஞானசம்பந்தர் அருள் வாக்கு:
மதி ஆர் கச்சி, நதி ஏகம்பம், விதியால் ஏத்தப் பதி ஆவாரே! நன்றி, வணக்கம்!

tags- காஞ்சீபுரம் ,காமாக்ஷி ,ஆலயம்,