
Post No. 9542
Date uploaded in London – – –28 APRIL 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருக்குறளில் அந்தணரும் வேதமும்!
ச.நாகராஜன்

உலகம் முழுமைக்கும் வாழ்வாங்கு வாழும் வழியைச் சொல்லும் திருக்குறள் இந்து மதத்தின் அற நூலே ஆகும். அது இந்து மதம் பெரிதும் போற்றும் வேதத்தைப் போற்றும் நூல். ஆகவே வேதம் மற்றும் இந்து மதத்தின் கொள்கைகளான வேதமே அறத்தின் அடிப்படை, புனர்ஜென்மம் உண்டு போன்றவற்றை மறுக்கும் பகுத்தறிவுவாதிகளும் புனர்ஜென்மத்தை மறுக்கும் செமிடிக் மதங்களைச் சார்ந்தோரும் அதைத் தங்களுடையது என்று சொல்வது முடியாத காரியம் – உண்மையின் அடிப்படையில் – திருக்குறளின் அடிப்படையில்!
அந்தணர் என்ற சொல்லை இரு முறையும் அந்தணன் என்ற சொல்லை ஒரு முறையும் 1330 குறள்களில் திருவள்ளுவர் கையாளுகிறார்.
குறள் எண் 8 – அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
அறவாழி அந்தணன் என்பது இங்கு இறைவனைக் குறிக்கிறது. அவனது தாளைப் பணியாதார்க்கு பிறவிக் கடலைக் கடப்பது அரிது.
குறள் எண் 30 – அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்
எல்லா உயிர்களிடத்தும் செம்மையான அருள் கொண்டு இருக்கும் அறநெறி வழி நிற்போர் அந்தணர் எனப்படுவர்.
குறள் எண் 543 – அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்
அந்தணர் போற்றும் வேதத்திற்கும் அறத்திற்கும் அடிப்படையாக நின்று அமைவது மன்னவனின் செங்கோலே!
‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல்’ என்ற மணிமேகலை வரிகளை பரிமேலழகர் தனது உரையில் சுட்டிக் காட்டுகிறார்.
இது தவிர பார்ப்பார் கண் என்ற சொல்லை ஒரு இடத்தில் -குறள் எண் 285இல் – எதிர்பார்ப்பவரிடத்தில் – என்ற பொருளில் பயன்படுத்துகிறார்.
அருள் கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார் கண்
அடுத்து குறள் எண் 134. இதில் பார்ப்பான் என்ற சொல் பார்ப்பனன் என்ற பொருளிலும் ஒத்துக் கொளல் என்பது வேதம் ஓதுதல் என்ற பொருளிலும் மிகத் தெளிவாக அமைகிறது.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
கற்ற வேதத்தை ஒருவேளை மறந்து விட்டான் என்றாலும் கூட அதை மீண்டும் ஓதிக் கொள்ளலாகும். ஆனால் பார்ப்பானின் பிறப்பு ஒழுக்கம் குன்றினால் கெட்டு விடும். இங்கு பரிமேலழகர் தனது உரையில், “அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும்” என்கிறார்.
ஆக வேதம் ஓதுதலை மறப்பினும் கூட பிறப்பு ஒழுக்கத்திலிருந்து ஒரு நாளும் ஒரு பார்ப்பான் விலகக் கூடாது என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர்.
அடுத்து மறைமொழி என்று வேதத்தை ஒரு குறளில் குறிப்பிடுகிறார் வள்ளுவர். குறள் எண் : 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

சான்றோரின் பெருமையை நிலவுலகில் அவரால் கூறப்படும் மறைமொழி காட்டி விடும். மறைமொழி என்பது வேதம்.
ஆனால் சிலரோ இதைத் திரித்து பழமொழி என்கின்றனர். பழமொழியை யார் வேண்டுமானாலும் கூறலாம் என்பதால் மறை மொழி என்பதற்கு வேதம் என்ற பொருளே சிறந்தது.
மணக்குடவர் தன் உரையில் “ கல்வி உடைய மாந்தரது பெருமையை அவரால் சொல்லப்பட்டு நிலத்தின் கண் வழங்கும் மந்திரங்களே காட்டும்” என்கிறார்.
பரிமேலழகரும் மந்திரங்கள் என்ற பொருளையே கூறுகிறார். ஆக மறைமொழி என்பது வேத மந்திரங்கள் என்பது தெளிவாகிறது.
அடுத்து மறை என்ற சொல்லை ஏழு இடங்களில் வள்ளுவர் பயன்படுத்துகிறார்.
குறள் எண் 847இல் அருமறை சோரும் அறிவிலான் என்று வள்ளுவர் கூறுவதற்கு பொருளாக பரிமேலழகர் “பெருதற்கு அரிய உபதேசப் பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன்” என்கிறார். ஆக இங்கு மறையை உபதேசப் பொருள் என்றே கொள்ளலாம்.
குறள் எண் 590இலும் 695இலும் மறை என்பது ரகசியம் என்ற பொருளில் வருகிறது. குறள் எண் 1076இலும் “தாம் கேட்ட மறை” என்பதற்கு தாம் கேட்ட இரகசியங்களை எல்லோருக்கும் சொல்லும் கயவரை, ‘பறை’ என்கிறார்.
குறள் எண் 1138இலும்1254இலும் ‘மறை இறந்து மன்று படும்’ காமமானது மறைத்திருத்தலையும் மீறி ஊர் உலகிற்கு வெளிப்படும் என்கிறார்.
குறள் எண்1180இலும் (காமத்துப் பால் கண்விதுப்பழிதல் அதிகாரத்தில்) ‘மறைபெறல்” என்ற வார்த்தை மறைத்து வைத்திருத்தல் என்ற பொருளில் வருகிறது.
அடுத்து அவி என்ற வார்த்தையை இரு இடங்களில் வள்ளுவர் பயன்படுத்துகிறார்.
குறள் எண் : 259
அவி சொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று
வேள்வித் தீயில் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்வதை விட ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
அவி என்பது நெய் முதலிய வேள்வியில் இடுவனவாம். அந்த வேள்வியினால் வரும் பயனை விட இந்த விரதத்தால் வரும் பயன் பெரிது என்பது
பரிமேலழகர் உரை.
இன்னொரு குறள் : எண் 413
செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து
இந்த பூமியில் செவி உணவாகிய கேள்வியினை உடையவர்கள் அவியை உணவாகக் கொண்ட ஆன்றாரோடு – தேவர்களோடு – ஒப்பாவார்.
அறிவால் நிறைந்தவர் என்பதால் ஆன்றார்; துன்பம் அறியாதவர் என்பதால் தேவர் – இது பரிமேலழகர் உரை.
(தேவரை மனம் போன போக்கில் நடக்கும் கயவரோடு ஒப்பிடும் ஒரு குறளும் உண்டு. குறள் எண் 1073 – “தேவர் அனையர் கயவர்!”)

ஆக திருவள்ளுவர் காட்டும் சமுதாயம் வேதம் நிறைந்த தமிழ்நாடு என்பதை அறிகிறோம். அதில் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றாமல் வாழ வேண்டும் என்று வள்ளுவர் அறிவுறுத்துவதைக் காண்கிறோம். அந்தணர் என்போர் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் அருளாளர் என்பதையும் அறிகிறோம்.
வேள்வி, அவி சொரிதல், ஆகிய வேத கால பழக்கங்களையும் தேவர் பற்றியும் கூட வள்ளுவர் குறிப்பிடுவதையும் பார்க்கிறோம்.
வள்ளுவர் பாரதீய பண்பாட்டின் அடிப்படையில் குறளைப் படைத்திருக்கிறார் என்பதற்கான சான்றுகளில் மேலே காட்டும் குறள்களும் நல்ல சான்றாகும்.
ஒரு சின்ன உண்மை:-
1967க்குப் பின்னர் வந்த திருக்குறளுக்கான உரைகளில் 99 சதவிகித உரைகளை ஒரு நகைச்சுவைக்காகப் படிக்கலாமே தவிர, பொருள் விளங்கிக் கொள்ளப் படிக்கக் கூடாது. எப்படி எல்லாம் வள்ளுவரைத் திரிக்கலாம் என்பதை “கயிறு திரித்துப் பழக்கப்பட்ட” “உ.பி.க்களின்” உரைகளிலும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உ.பி.களுக்கு ஜால்ரா போடும் “தமிழ் அறிஞர்களின்” உரைகள் மற்றும் கட்டுரைகளிலும் கண்டு திடுக்கிடலாம்!
வள்ளுவரை இவர்களிடமிருந்து காப்பாற்றுவோம் – நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள!
***

tags– அந்தணர், அந்தணன், மறைமொழி, பார்ப்பான், திருக்குறள்