
COMPILED BY LONDON SWAMINATHAN
Post No. 9560
Date uploaded in London – –3 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று May 2-ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx
XXXX
கும்ப மேளா நிறைவு-பிரதமர் வேண்டுகோளை ஏற்று அமைதியாக நடந்தது
கும்பமேளாவில் கடைசி புனித நீராடல் ஏப்ரல் 27 ம் தேதி
நடந்தது. பிரதமர் வேண்டுகோளை ஏற்று வெறும் சம்பிரதாய மாக நடத்தப்பட்டது
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. கொரோனா தாக்கம் காரணமாக, இதன் நாட்கள் ஒரு மாதமாக குறைக்கப்பட்டது. ஏப்ரல் 30 ம் தேதி

முடிவடைந்தது. கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கங்கை நதியில் குவிந்து புனித நீராடினர்.
கும்பமேளாவில் கடைசி புனித நீராடல் ஏப்ரல் 27 ம் தேதி
மதியம்வரை, பல்வேறு பிரிவுகளை சேர்ந்த சுமார் 700 மடாதிபதிகள் புனித நீராடினர். எந்த ஆரவாரமும் இல்லாமல் வெறும் சம்பிரதாய அளவில் புனித நீராடல் சடங்கை மேற்கொண்டனர்.மற்ற படித்துறைகளில் பக்தர்கள் கூட்டமும் மிகக்குறைவாகவே காணப்பட்டது.. மடாதிபதிகளின் ஒத்துழைப்புக்கு கும்பமேளா அதிகாரி தீபக் ராவத் நன்றி தெரிவித்தார்.
XXXX
23 ஆண்டுக்கு பிறகு வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்திய நாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வ முத்துக்குமார சுவாமி, நவக் கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தன்வந்திரிசுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
செவ்வாய் பரிகார தலமாகவும், நோய் தீர்க்கும் தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு
ஏப்ரல் 29 ம் தேதி வியாழக்கிழமையன்று கும்பாபிஷேகம் நடந்தது. ஏப்ரல் 29 காலை புனிதநீர் அடங்கிய கடங்கள், வேதமந்திரங்கள் முழங்கிட புறப்பட்டு கோயிலை வலம் வந்து கற்பக வினாயகர், வைத்தியநாதசுவாமி, தையல்நாயகிஅம்மன், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் மூலவர் விமானங்கள், 6 கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னியிலையில் குடமுழுக்கு நடைபெற்றது.
கோவிலை சுற்றியுள்ள வீடுகளில் இருந்த பக்தர்கள் மாடிகள் மீது ஏறி குடமுழுக்கை தரிசனம் செய்தனர்.

XXXX
திருப்பதி ஏழுமலையானுக்கு ‘இன்னோவா‘ கார் நன்கொடை
திருமலை பாலாஜி வெங்கடாசலபதி கோவிலுக்கு , 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ‘இன்னோவா‘ கார் நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருப்பதியில் உள்ள ஹர்ஷா டயோட்டா நிறுவனத்தினர், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா காரை, நேற்று நன்கொடையாக வழங்கினர். காருக்கு மாவிலை, சந்தன குங்குமம் இட்டு, அலங்கரித்து பூஜை செய்து, பழங்கள் படைத்து வழிபட்டு, அதிகாரிகள் அதன் சாவியை பெற்றுக் கொண்டனர்.
அசோக் லேலண்ட் நிறுவனம் பாலாஜி வெங்கடாசலபதி கோவிலுக்கு ஒரு மினி பஸ்ஸை நன்கொடையாக கொடுத்தது

XXXX
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.94½ லட்சம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் சமீபத்தில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இந்த விழாவில் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த நிலையில் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்களது காணிக்கையாக கோவில் உண்டியலில் பணம், தங்கநகை, வெள்ளிநகை போன்றவற்றை செலுத்தினார்கள். கடந்த 34 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி திருத்தணி முருகன் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் நடைபெற்றது.
கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.96 லட்சத்து 51 ஆயிரத்து 200 செலுத்தி இருந்தனர். மேலும் 560 கிராம் தங்கம், 4 கிலோ 900 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
XXXX
திருவண்ணாமலையில் ஸ்டாலின் மகள் கிரிவலம்
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை, தடையை மீறி, திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். அவர்களை போலீசார் தடுக்கவில்லை என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவலால், 14வது மாதமாக, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது சித்ரா பவுர்ணமி திதி நேரத்தில் கிரிவலம் செல்ல தடை விதித்து, கலெக்டர் சந்தீப் நந்துாரி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகனும், தி.மு.க., மருத்துவ அணி மாநில துணைத் தலைவருமான கம்பன் உள்ளிட்ட மூன்று பேர், முக கவசம் அணிந்து, கிரிவலம் சென்றனர்.
இவர்கள் மூவரும், இரவு, 8:50 மணியளவில், கிரிவலப் பாதையில், அடி அண்ணாமலை கிராமத்தை கடந்த போது, ‘இவர்களை மட்டும் எப்படி கிரிவலம் செல்ல அனுமதித்தனர்’ என, உள்ளூர்வாசிகள் கேள்வி எழுப்பினர். அந்த பகுதியில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், கிரிவலப் பாதையில் ஆங்காங்கே இருந்த போலீசாரும், இவர்களை கண்டுகொள்ளவில்லை.
இது குறித்து, கலெக்டர் சந்தீப் நந்துாரியிடம் கேட்க முயன்றபோது, மொபைலில் தொடர்பு கொள்ள முடியவில்லை. பி.ஆர்.ஓ., முத்தமிழ் செல்வன் கூறுகையில், ”மாவட்ட நிர்வாகத்திடம், ஸ்டாலின் மகள் கிரிவலம் செல்ல அனுமதி கேட்கவில்லை; அனுமதியும் தரவில்லை,” என்றார்.
XXXXX
தங்ககுதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வைகையில் கள்ளழகர்
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் .27 நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக செயற்கையாக வைகை ஆறு செட் அமைக்கப்பட்டு அழகர் வைகையில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக மீனாட்சி திருக்கல்யாணம், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி நடத்தப்பட்டது. இந்தாண்டும் கொரோனா 2வது அலை பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்கு ஆடி வீதியில் செயற்கையாக வைகை ஆறு செட் அமைக்கப்பட்டு, காலை ஆண்டாள் மாலை சாற்றுதல் முடிந்த பின், ஆடி வீதியில் காலை 8:30 மணிக்கு குதிரை வாகனத்தில் வைகையில் இறங்குவதாக கருதி அழகர் புறப்பாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பச்சை பட்டுடுத்தி அழகர் அருள்பாலித்தார்.
7-ம் நாள் விழா காலையில் கோவில் ஆடி வீதியின் வடக்கு பகுதியில் ஏற்கனவே மாதிரியாக அமைக்கப்பட்ட வைகை ஆறு பகுதியில் கருட வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.
அங்கு மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக கடலூர் மாவட்டத்தில், கைவினைக் கலைஞர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட 3 அடி உயர புதிய மண்டூக முனிவர் சிலை அங்கிருந்து அழகர்கோவில் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்து, விழாவில் வைக்கப்பட்டது.
XXXX
சட்ட விதிகளின்படி கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா? அறிக்கை அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

சட்ட விதிகளின்படி, கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பாகவும், பாகன்களை நியமிப்பது தொடர்பாகவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு வனப்பகுதியில், யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானையைப் பாகன் அடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது குறித்து நீதிபதிகள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், வளர்ப்பு யானைகள் பராமரிப்புச் சட்ட விதிகளைக் கோயில் நிர்வாகங்கள் முறையாகப் பின்பற்றுகின்றனவா என, இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தமிழக வனத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படும் வகையில், புதிய கொள்கை வகுப்பது தொடர்பாக யானைகள் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கடந்த 23-ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டு, அரசுக்குப் பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமான அறிக்கையைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.. ஜூன் மாதத்துக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
XXXXXX
கொரோனா மையம் அமைக்க ஈஷா பள்ளிகள் ஒப்படைப்பு
: ஈஷா யோகா மையம் சார்பில், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்படும் எட்டு பள்ளிகள், கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்துவதற்காக, அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, தன், ‘டுவிட்டர்’ பதிவில், ‘ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்திக் கொள்வதற்கு, தமிழக அரசுக்கு ஒப்படைக்கிறோம். ‘இந்த சவாலில் இருந்து வெளிவர, நம் சமூகம் ஒன்றிணைந்து, அரசு நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்.
XXX

நோயாளிக்காக படுக்கை தியாகம் செய்த ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் காலமானார்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 வயது நோயாளியை காப்பாற்ற தன் மருத்துவமனை படுக்கையை தியாகம் செய்த ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை சேர்ந்த 85 வயது முதியவர் வீட்டில் இறந்தார்.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் நாராயண் தபோல்கர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர். கொரோனாவுக்கு நாக்பூரிலுள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட 40 வயது கணவருக்கு மருத்துவமனையில் படுக்கை வேண்டி பலரிடம் அவரது மனைவி கெஞ்சினார்.
இதையறிந்த தபோல்கர் டாக்டரிடம் ‘எனக்கு 85 வயது. வாழ்ந்து முடித்துவிட்டேன். பெண்ணின் கணவரை காப்பாற்றுவது தான் முக்கியம். என்னை ‘டிஸ்சார்ஜ்‘ செய்து அவருக்கு படுக்கையை வழங்குங்கள்‘ எனக் கூறினார்.
‘உங்கள் நிலை ஆபத்தாக உள்ளது. வீட்டுக்கு செல்வது நல்லதல்ல‘ என டாக்டர்கள் கூறியும் தபோல்கர் தன் படுக்கையை பெண்ணின் கணவருக்கு வழங்கிவிட்டு வீடு திரும்பினார். அதன்பின் மூன்று நாட்களில் தபோல்கர் இறந்துவிட்டார். தபோல்கர் செய்த உதவியால் பெண்ணின் கணவர் பிழைத்துவிட்டார் .தபோல்கர் தியாகத்தை பலரும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.
Xxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்…………………………

நன்றி, வணக்கம்
tags – tamilnews2521