
Post No. 9576
Date uploaded in London – – –7 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து 6-5-2021 அன்று சித்திரை மாத சதய நன்னாளில் அப்பர் குருபூஜை தினத்தன்று சிவஞான சிந்தனை வழிபாட்டு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை:-
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று சித்திரை மாதம் சதய நக்ஷத்திர நன்னாள். இதுவே தான் அப்பர் பெருமானின் குரு பூஜை தினம். சைவ சமயம் தழைக்கச் செய்த அதிசய புருஷர்களுள் பெரும் நாவலராக 81 வயது வரை வாழ்ந்து அனைவருக்கும் நல்வழி காட்டிய சொல்லரசர் திருநாவுக்கரசர் ஆவார். திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து ஏராளமான அற்புதங்களைச் செய்த துறவிக்கரசு அவர்; பல்வேறு இன்னல்கள் வந்தாலும் கூட அவற்றையெல்லாம் சிவனருளால் சிதறச் செய்து கல்லோடு மிதந்த ஞானப் பெருந்தகை அவர். இன்னும் அவர் புகழை ஆர்கலியது கடந்தோன், சொல் வேந்தன், வாகீசர், தாண்டகச் சதுரர், மெய்ஞானம் பூத்தவன், தண்டமிழ் பாடினார் என்பன போன்ற 55க்கும் மேற்பட்ட புகழ் மொழிகளால் சிவபுண்ணியத் தெளிவு, பரமதி திமிர பானு, அம்பர்ப் புராணம், ஆதித்தபுரி புராணம், புலியூர்ப் புராணம், பழனித்தல புராணம், காசி ரகசியம், திருவிளையாடல் புராணம்,சிவ ரகசியம் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நூல்கள் போற்றிப் புகழ்கின்றன.
அவர் வாழ்ந்த காலத்தில் சைவ சமயத்தைக் கடைப்பிடித்தோர் சற்று பயந்து வாழ வேண்டிய காலமாக இருந்தது. திருநீறைத் தரித்தவரைக் கண்டால் தோஷம்; சிவாய நம என்ற நாமத்தை உச்சரிப்பவரைக் கண்டால் தீட்டு என்று இப்படி சமணர்கள் வாழ்ந்ததோடு விபூதி பூசியவரைக் கண்டபோது ‘கண்டு முட்டு’ என்றும் சிவ நாமத்தை உச்சரிக்கக் கேட்டால் ‘கேட்டு முட்டு’ என்றும் கூறுவது வழக்கம்.
அப்படிப்பட்ட காலத்தில் அந்த சமணர்களோடு வாழ்க்கையின் முற்பகுதியைக் கழித்துப் பின்னால் சிவனருளால் அவன் தாள் வணங்கித் தானும் உய்ந்து மற்றவரையும் உய்ய வழி வகுத்தார் அவர்.
பன்னிரு திருமுறைகளில் நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று திருமுறைகளில் அவர் பாடிய சில பதிகங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. திருமுறை கண்ட புராணத்தில் உமாபதி சிவாசாரியார் ‘கூற்றாயினவாறு’ என்பது தொடங்கி ‘புகலூர்ப் பதிகம்’ ஈறாக சுமார் 16000 பதிகங்களை நாவுக்கரசர் பாடி அருளியதாகக் குறிப்பிடுகிறார். சுந்தரமூர்த்தி நாயனார் ஏழ் எழுநூறு என்று கூறுவதால் 4900 பதிகங்கள் அவர் காலத்தில் கிடைத்திருந்ததை அறிகிறோம். இன்றோ நமக்கு கிடைத்துள்ளவை சுமார் 312 பதிகங்களே. 3066 பாடல்களே!
ஆனால் இவற்றைப் பாடிப் பரவினாலேயே போதும்- சிவனருள் சித்திக்கும்; தெய்வ நற்றமிழ் நம் உள்ளிருந்து ஊற்றெடுத்துப் பெருகும்.
ஏராளமான இனிய சொற்களை, அறுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட சொற்களை, நாவுக்கரசர் தனது பாடல்களிலே நமக்குத் தருகிறார். அந்தச் சொற்களில் பொதிந்திருக்கும் பொருளும், இன்பமும் வர்ணனைக்கு அப்பாற்பட்டிருக்கும். ஊன்றிப் படித்தாலேயே புரியும்!
ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு பார்க்கலாம். நிலா என்ற சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டால் அதை அப்பர் சுவாமிகள் 34 இடங்களில் பயன்படுத்துகிறார்.
வெண்ணிலா, இள நிலா, தனி நிலா, பனி நிலா, ஒளி நிலா, முகிழ் நிலா, மணி நிலா, தெண் நிலா, மதி நிலா, நீள் நிலா, சில் நிலா என இப்படி பல நிலாக்களை அவர் நமக்குக் காண்பிக்கிறார். போழ் நிலா என்று ஒரு சொற்றொடர். அதாவது மறைந்து துண்டமாய்த் தோன்றும் சந்திரன் என்று இதற்குப் பொருள். இப்படி ஒவ்வொரு சொல்லாக எடுத்து அதன் சுவையைச் சொல்லப் போனால் தேனினும் இனிய சொல் என்று சொல்ல ஆரம்பித்து தேவர் தம் அமிர்தம் என்று சொல்லி முடித்து விடலாம்.
அவரது பாக்களில் உள்ள ஒரு சொல்லுக்குக் கூட நாம் ஆராய்ந்தே உரிய பொருளைக் காண முடியும். இதற்குத் தான் நாம் வல்லார் உதவியை – இதிலேயே ஊறித் திளைக்கும் சிவாசாரியர்களின் உதவியை, ஆதீனங்களின் உதவியை, அறிஞர்களின் உதவியை நாட வேண்டி வரும்.
உதாரணத்திற்கு ஒரு பாடலை இங்கு எடுத்துக் காட்ட் விழைகிறேன்.
திருநாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூரில் அருளிய ஒரு பாடல் இது.
பாடல் இது தான்:
“வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்துச்
சித்தம் ஒருக்கிச் சிவாய நம என்று இருக்கின் அல்லால்
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலாப் பேதை நெஞ்சே”
இங்கு சிவாய நம என்று சொல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி ஆணை இடுவதை அறியமுடிகிறது.
ஆனால் வைத்த பொருள் என்கிறாரே அது என்ன?
பொருள் என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டால் தமிழ் என்னும் பெருங்கடலில் மூழ்கி அர்த்தத்துடன் வெளியே வருவது என்பது சாதாரணமான ஒரு காரியம் அல்ல.
பொருள் என்ற சொல்லிற்கான பொருளை முதலில் பார்த்து விட்டுப் பின்னர் தான் வைத்த பொருள் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும், இல்லையா?
வள்ளுவரின் துணையை நாடுவோம் பொருளுக்கு என்ன பொருள் என்று அறிய! பொருள் என்றால் உண்மை அல்லது மெய்ப்பொருள். பொருள் என்றால் வினை. பொருள் என்றால் செய்தி. பொருள் என்றால் பயன். பொருள் என்றால் உறுதிக் குணம். பொருள் என்றால் சிறந்தது. பொருள் என்றால் சொற்பொருள் அல்லது உரை. பொருள் என்றால் பொருள் நூல் அதாவது economics. பொருள் என்றால் நூல் பொருள். பொருள் என்றால் உடைமை. பொருள் என்றால் பண்டம் அல்லது வஸ்து. பொருள் என்றால் செல்வம்.பொருள் என்றால் மதிப்பு. பொருளுக்கான இத்தனை பொருள்களையும் வள்ளுவர் தன் குறளில் ஏற்றி ஒன்றுடன் ஒன்றை இணைத்து அருமையாக ஒரு பொருள் மாலையைத் தொடுக்கிறார்.

அவரில் ஆழ்ந்து மூழ்கி,
இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு (குறள் 5) என்பதைப் படித்து இறைவனை அறிவதே பொருள் என அறிகிறோம்.
பிறப்பென்னும் பேதைமை நீஙகச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு (குறள் 358) என்றும் அவர் கூறுவதால் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கலக்க வல்லது செம்பொருள் என்பதை அறிகிறோம்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவர் கூறுகிறார் (குறள் எண் 423)
இப்படிப்பட்ட செம்பொருள், மெய்ப்பொருள் எது?
தமிழை உடலாகக் கொண்ட தமிழாகரன், தமிழ் ஞான சம்பந்தன் இப்போது நமக்கு உதவி செய்கிறார். நமச்சிவாய பதிகத்தில் எது மெய்ப்பொருள் என்பதை அவர் கூறி அருளுகிறார்.
காதல் ஆகி,கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
ஆக இப்போது மெய்ப்பொருள் ஆவது நமச்சிவாய நாமம் என்ற ரகசியம் நமக்குப் புலப்படுகிறது.
இதை அப்பர் சுவாமிகளும் உறுதிப் படுத்துகிறார்:
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது ஜோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே (நான்காம் திருமுறை)
நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின் றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே
சரி வைச்சபொருள் என்றால் என்ன?
திருப்பாதிரிப்புலியூரில் பாடிய பாடலைத் தவிர சிதம்பரத்தில் பாடிய பாடலிலும் அப்பர் பிரான் ‘வைச்ச பொருள்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன் பிறப்பு இலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த
கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே
இப்படி இரு முறை அவர் குறிக்கும் வச்ச பொருள் எது?
வள்ளுவரின் குறள் ஒன்று நமக்கு நினைவுக்கு வருகிறது. ‘ஒருவன் பெற்றான் பொருள் வைப்புழி’ என்கிறார் குறள் 226இல்! வைப்புழி என்றால் பிக்ஸட் டெபாஸிட். ஆக வைச்ச பொருள் என்பது நமச்சிவாய நாமத்தைச் சொல்லி டெபாஸிட் செய்வது தான்! அந்த ஃபிக்ஸட் டெபாஸிட் நமக்கு எப்போதும் ஆகும்; உதவிக்கு வரும்!
ஆக மெய்ப்பொருள் ஆகிய நமச்சிவாய என்னும் நாமத்தைச் சொல்லி அதை வைப்புழியாக, டெபாஸிட் செய்து வைப்பதைத் தான் அப்பர் பிரான் சொல்லியுள்ளார் என்பது தெளிவாகிறது.
வைத்த பொருள் நமச்சிவாய நாமம் தான்! ‘அது நமக்கு ஆகும்’ என்று அச்சம் ஒழிந்தார் அப்பர்.
மெய்ப்பொருளைக் கண்டு அதைச் சொல்லி அதைச் சேர்த்து பத்திரமாக வையுங்கள்; அது உமக்குப் பின்னால் இகத்திற்கும், பரத்திற்கும், ‘ஆகும்’ என்ற அற்புதக் கருத்தை அவர் இரு முறை வலியுறுத்தியுள்ளார்.
வள்ளுவப் பிரான் வழியில் மெய்ப்பொருள் காண விழைகையில் இந்த இரகசிய விஷயத்தை நாம் அடைகிறோம்; அறிகிறோம்.
ஆக வாழ்நாளில் முற்பகுதியில் சமணருடன் இருந்து தன் வாழ்வின் ஒரு பகுதியை வீணாக்கி விட்டதை எண்ணி அவர் ‘குறிக்கோளின்றிக் கெட்டேனே’ என்கிறார். தனது அனுபவத்தை நம்மிடம் முதலீடு செய்து நல்லக விளக்கு அது, நமச்சிவாய நாமம் அதை எந்திக் கொள்; பிறப்பு இறப்பு என்னும் இருவினையும் சேராது என்கிறார்.
இதை அடைவதற்கான வழிகளையும் அவர் தெளிவாகப் பலபடியாகக் கூறுகிறார்.
சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்துத் தின்று உழலும்
புலையரேனும்
கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நான் வணங்கும் கடவுளாரே.
சொர்க்கம் பூமி இரண்டின் ஆட்சி, சங்க நிதி பத்ம நிதி இவற்றைத் தந்தால் ஒருவனுக்கு எப்படி இருக்கும்! ஆனால் அப்பர் தெளிவு பட, ‘நீ சிவபிரான் பக்தனா?’ என்கிறார். ‘இல்லை’ என்றால் ‘உன் நிதியும் வேண்டாம்; நீயும் வேண்டாம்’ என்கிறார்! ஆ உரித்து தின்று உழல்பவனாக இருப்பினும் நமச்சிவாய என்று சொல்லும் சிவ பக்தன் எனில் அவன் நாம் வணங்கும் கடவுள் என்கிறார். இதுவே அவர் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும், வழிகாட்டி அருளும் பாங்கு.
அவரது நெஞ்சத் துணிவையும் நமக்கு அவர் இந்த வழியில் ஊட்டுகிறார்.

கல்லிலே கட்டி அவரை கடலிலே பாய்ச்சிய போது அவர் கூறுகிறார்:
சொற்றுணை வேதியன் ஜோதி வானவன்,
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கை தொழக்
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே என்றார் அவர். கல் என்ன செய்யும்? கடல் தான் என்ன செய்யும், அவரை?!
சிவனருளால், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம், ஏராளம். திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் அவர் நிகத்திய அற்புதங்களை ஒரே பாடலில் தனது திருக்களிற்றுப்படியாரில் கூறுகிறார்:
கொல்கரியின், நீற்றறையின், நஞ்சின், கொலைதவிர்தல்,
கல்லே மிதப்பாய்க் கடல் நீந்தல் – நல்ல
மருவார் மறைக்காட்டின் வாசல்திறப்பித்தல்
திருவாமூர் ஆளி செயல்.
கொல்கரியின் கொலை தவிர்தல் – திருவதிகைப் பதிகம்
நீற்றறையின் கொலை தவிர்தல் – மாசில் வீணையும் பதிகம்
நஞ்சின் கொலை தவிர்தல் – திருநனிபள்ளிப் பதிகம்
கல்மிதப்பின் கொலை தவிர்தல் – நமசிவாயத் திருப்பதிகம்
மறைக்கதவு திறப்பித்தல் – மறைக்காட்டுத் திருப்பதிகம் என இப்படி அற்புதங்களைச் சுட்டிக் காட்டும் திருப்பதிகங்களாக இவை ஆயின.
ஆட்சியாளருக்கே அவர் எச்சரிக்கை விடுக்கிறார்,துணிவுடன்
நாம் ஆர்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன
சங்கரன் நற் சங்கவெண்குழை ஓர் காதிற்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர் சேவடி இணையே குறுகினோமே
சிவனை வழிபடுவோர்க்கு அச்சமில்லை, அச்சமில்லை, அச்சம் என்பதில்லையே!
‘ஏழ் உலகும் விண்பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே’ என்று நம்மையும் தைரியப்படுத்தும் அவர் அதற்கான காரணமாக, ‘திண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திருப்பாதிரிப்புலியூர்க் கடவுள் சுடரான் கழல் இணையே’ என்கிறார்.
சங்கரனுக்கே மீளா ஆளாய்த் தான் ஆனதைச் சொல்லும் அவர் நம்மையும் கூவி அழைத்து, தொண்டர் கூட்டத்தில் சேர வாரும் ஜெகத்தீரே என அழைக்கிறார்.
அவரது அன்பான அழைப்பை ஆணையாகவே பல தலங்களிலும் பட இடங்களிலும் அவர் கூறுகிறார்; வற்புறுத்துகிறார். ஏன், நம் மீது உள்ள அன்பினால், பரிவினால், பாசத்தினால்!
அவர் கூறிய அன்புரைகளில் அறிவுரைகளில் ஆணைகளில் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்துக்காட்டிற்காக இங்கு உங்கள் முன் வைக்கிறேன்.
திரு அங்க மாலையில் – தலையே நீ வணங்காய்! கண்காள் காண்மின் நெஞ்சே நீ நினையாய்!
திரு அதிகை வீரட்டானம், வெண் நிலா பதிகத்தில் – ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள் உள்ளத்துள்ளே
திருக்கடவூர் வீரட்டத்தில் – பொள்ளத்த காயமாயப் பொருளினைப், போக மாதர் வெள்ளத்தைக் கழிக்க வேண்டில், விரும்புமின்
திருமறைக்காடில் – பத்தர்கள் பணிய வம்மின், வாசனை செய்து நின்று வைகலும் வணங்குமின்கள்!
திருச்சோற்றுத்துறையில் – பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்றுமின்
திருத்துருத்தியில் – எப்பொழுதும் நெஞ்சுள் இறைவனை ஏத்துமின்கள்
அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினைமின்
திருவொற்றியூரில் – வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள்!
இப்படி வாருங்கள், காணுங்கள், நினையுங்கள், வணங்குங்கள் என்ற அவரது அன்புரைகள், ஆணைகள் இது போல ஏராளம் அவரது பாடல்களில் பளிச்செனத் தென்படும்; அவற்றை ஏற்று உய்வோமாக.
இப்படிச் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றியும் பல நூறு பாடல்களில் அவர் கூறுகிறார். அவற்றையும் ஓதி உணர்வோமாக. சிவனடியார்க்கு சிவனைத் தொழுவதால் என்ன பயன்? ஒரே வரியில் கூறுவதென்றால அவர் வாக்காலேயே அதைக் கூறி விடலாம்.
“இன்பமே எந்நாளும் துன்பமில்லை”!
அப்பர் திருவடிகள் போற்றி!
இந்த வாய்ப்பினைக் கொடுத்த லண்டன் ஸ்ரீ கல்யா சிவாசாரியாருக்கு என் உளம் கலந்த நன்றியையைக் கூறி இங்கு குழுமியுள்ள கற்றறிந்த சிவனடியார்களுக்கு என் நமஸ்காரங்களைத் தெரிவித்து அமைகிறேன். நன்றி, வணக்கம்!

நமச்சிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
–subham–
tags-அப்பர்