
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9582
Date uploaded in London – – –9 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருக்குறளுக்கு தற்காலத்தில் சிறந்த உரைநூல் இதோ!
ச.நாகராஜன்
1
கவிராஜ பண்டித ஜெகவீர பாண்டியனார் நமது சம காலத்தில் வாழ்ந்த சிறந்த தமிழ் அறிஞர்; தமிழ்ப் புலவர். மணியாச்சிக்கு அருகில் உள்ள ஒட்டநத்தம் என்ற ஊரில் 10-3-1886இல் இவர் பிறந்தார்.
தமிழின் பால் அளவற்ற ஈடுபாடு கொண்ட இவர் மதுரையில் மேலமாசி வீதியில் வாழ்ந்து வந்தார்.
திருவள்ளுவர் பால் அளவற்ற ஈர்ப்பு கொண்ட இவர் தனது இல்லத்திற்கு திருவள்ளுவர் நிலையம் என்றே பெயரைச் சூட்டினார்.
தனது நூல்களைப் பதிப்பிக்க தனது அச்சகம் ஒன்றை உருவாக்கினார். அதற்குப் பெயர் வாசுகி அச்சகம். அந்தக் காலத்தில் கம்போஸிங் எனப்படும் அச்சுக் கோர்ப்பிற்கு எழுத்து அச்சுக்களை எடுத்துக் கோர்க்க வேண்டும். அதையும் இவரே செய்தார். இவரது மகன்களையும் அந்தப் பணியில் ஈடுபடுத்தினார்.
அற்புதமான தமது நூல்களைத் தானே பதிப்பித்தார்.
கவிராஜ பண்டிதரை உரிய முறையில் தமிழகம் பாராட்டவில்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து. 17-6-1967இல் அவர் மறைந்தார்.
அந்தக் காலத்தில் எனது தந்தையார் மறைந்த தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம் புத்தகங்களைப் பணம் கொடுத்து வாங்கிப் படிப்பது வழக்கம். அவருடன் புத்தகம் வாங்கச் செல்கிறார் என்றால் தவறாமல் நானும் கூடவே செல்வது வழக்கம். டவுன்ஹால்ரோடில் உள்ள பாரதி புத்தக நிலையத்தில் உரிமையாளரான திரு சுவாமிநாதன் கல்லாவில் அமர்ந்திருப்பார். நாங்கள் உள்ளே சென்றவுடன் அன்பான வரவேற்பு இருக்கும். புத்தகங்கள் அனைத்தும் தெரிவு செய்யப்பட்டவுடன் அவற்றை அடுக்கிக் கட்டி வீட்டுக்கு அனுப்பி விடுவார் பில்லுடன். பணத்தை கடையிலிருந்து புத்தகத்தைக் கொண்டு வருபவர் வாங்கிக் கொள்வார்.
இப்படி ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் ஒரு நாள், பாரதி புத்தக நிலையத்திலிருந்து திரும்பி வரும் போது மேலமாசி வீதியில் ஒரு வீட்டிற்குள் நுழைந்தார் என் தந்தையார். யார் வீடு என்று நான் கேட்ட போது, ‘உள்ளே வந்து பார்’ என்றார்.
உள்ளே எங்களை அன்புடன் வரவேற்றவர கவிராஜ பண்டித ஜெகவீரபாண்டியனார்.
நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவரது அச்சகத்தைக் காண்பித்தார். எளிமையான தமிழ் அறிஞர். மடை திறந்த வெள்ளம் போல் தமிழ் செய்யுள்களும், கருத்துக்களும் பாய்ந்து வந்ததைப் பார்த்து பிரமித்தேன். வழக்கம் போல புத்தகக் கட்டு ஒன்று உருவானது. அதை அவரே வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பணமும் தரப்பட்டது.
அந்தப் புத்தகங்களைப் படித்த போது தமிழ்க் கடலின் விஸ்தீர்ணம் ஓரளவு புலப்பட்டது. அவரது அறிவின் ஆழத்தை அளக்கவே முடியாது என்றும் தோன்றியது.
அந்தப் புத்தகங்களுள் ஒரு குறிப்பிடத் தகுந்த புத்தகம் திருக்குறட் குமரேச வெண்பா.
இன்றளவும் அந்தத் தொகுதிகள் எனக்குத் துணையாக இருந்து வருகின்றன.
2
திருக்குறட் குமரேச வெண்பா என்பது 1330 குறட்பாக்களுக்கு ஒரு விரிவுரை. இது புதுமையான ஒரு விரிவுரை. ஒவ்வொரு குறளுக்கும் ஒரு சரிதம் உண்டு. 1330 குறட்பாக்களுக்கு 1330 நேரிசை வெண்பாக்கள். தெய்வ வணக்கமும் அவையடக்கமும் சேர்த்து மொத்தம் 1332 நேரிசை வெண்பாக்கள்.
அவர் நூலின் முகவுரையில் (7-8-1938 தேதியிட்ட பதிப்பு இது) குறிப்பிடுவது இது:-
“தெய்வப் புலமைத் திருவள்ளுவப் பெருந்தகை அருளியுள்ள திருக்குறளின் கருத்துக்களுக்குப் பொருத்தமான சரிதங்களை இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களினும், காந்தம், பாகவதம் முதலிய புராணங்களினும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களினும், வேறு பல நூல்களினும் இருந்து தெரிந்து எடுத்து எமது குலதெய்வமாகிய குமரேசனது முன்னிலையில் விண்ணப்பித்து அவற்றிற்கு விடை கூறும் முறைமையில் குறள்களை உதாரணமாக எடுத்துக் காட்டி இற்றைக்கு மூன்று வருடங்கட்கு முன்னரே இந்த நூலை முடித்து வைத்தும் வெளிப்படுத்தக் கூசி விலகி இருந்தேன். இங்ஙனம் இருப்ப, அறிஞர் பலர் இந்நூலுட் சில பாக்களைக் கேட்டு மகிழ்ந்து இதனை அச்சில் ஏற்றி அனைவருக்கும் உபகரிக்க வேண்டும் என்று என்பால் அன்பால் என்னைத் தூண்டினர். அன்னார் வேண்டுகோளைச் சிரமேற் கொண்டு இது பொழுது இதனை வெளியிடுகின்றேன்.விழுமிய உரையுடன் கெழுமித் தெளிவாய் வெளி வருகின்றது.”
சரிதங்களைக் குறட்பாவில் அமைத்துத் திருக்குறள்களோடு இணைத்துத் தனிச்சீரும் சேர்த்து அமைக்கப்பட்ட இந்த வெண்பாக்களைப் படிப்பதே ஒரு சுகானுபவம். 1-1-1957இல் இந்த நூல் மூன்றாம் பதிப்பைக் கண்டது.
முதல் குறளுக்கான அவரது குமரேச வெண்பா இது:-
பூவுலகோ டெங்குமேன் பூண்ட துமைகேள்வன்
கோமுகித்த தன்மை குமரேசா – மேவும்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இதற்கான விரிவுரையை அவரே மிக அழகுறத் தெளிவாகத் தருகிறார்.
நீத்தார் பெருமை அதிகாரத்தில் வரும் முதல் குறளுக்கான குமரேச வெண்பா இது:-
மண்டு புகழ் மாணிக்க வாசகரின் மாண்பினை நூல்
கொண்டு புகவ் வானேன் குமரேசா – கொண்ட
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
மாணிக்கவாசகரது பெருமையை நூல்கள் ஏன் உவந்து புகழ்கின்றன? எனில், ஒழுக்கத்து நீத்தார் பெருமை பனுவல் துணிவு விழுப்பத்து வேண்டும் என்க.
விரிவுரையில் பொருத்தமாக மாணிக்கவாசகர் சரிதம் தரப்படுகிறது.
சில குறள்களுக்கு நான்கு சரிதங்கள் கூடத் தரப்படுகின்றன.
அருமையான இந்த நூல் தற்காலத்திற்கேற்றபடி எளிய தமிழில் அழகிய எடுத்துக் காட்டு கதைகளுடன் தரப்பட்டுள்ளதால் இதுவே காலத்திற்கேற்ற நாம் படிக்க வேண்டிய திருக்குறள் விரிவுரை என்பதை அறுதியிட்டு உறுதி கூறலாம்.
சற்று யோசனை செய்து பார்த்தால் வியந்து போவோம். 1330 குறளுக்கும் பொருத்தமான கதையை புராண, இதிஹாச, இதர நூல்களிலிருந்து எடுத்து ஒரு நேரிசை வெண்பாவில் முதல் இரண்டு அடிகளில் அடக்கி அதற்குரிய குறளை கீழ் இரண்டு அடிகளில் தருவது என்றால் அது சாமானிய செயலா, என்ன! இறைவன் திருவருளும் திருவள்ளுவரின் ஆசியுமே காரணம் எனலாம்,
கண்ட உரைகளைப் படிக்காமல் திருக்குறளுக்கான சரியான உரை இதுவே. இதை அன்பர்கள் கண்டிப்பாகப் படித்துப் பயன் பெற வேண்டும்.
3
கவிராஜ பண்டிதரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு விட்டதால் அவற்றை இணையதளத்திலிருந்து, இலவசமாக, தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அன்பர்கள் தவறாது இந்த நூலைப் படிக்க வெகுவாக நான் பரிந்துரை செய்கிறேன்.
***

tags- கவிராஜ பண்டித, ஜெகவீர பாண்டியனார், திருக்குறட் குமரேச வெண்பா