
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9617
Date uploaded in London – – –18 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 17-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்,

ஹிந்துக்கள் வாழ்வில் தீபம் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகிறது.
கடன் தொல்லை, தாங்க முடியாத தரித்திரம், வியாபார நஷ்டம், தீராத வறுமை, அளவில்லாச் செலவு என்று இப்படி அல்லல் படுவோருக்கு நமது அறநூல்களும் மகான்களும் காட்டும் ஒரு நல்ல வழி திருவிளக்கைத் தினமும் வீட்டில் ஏற்றுக என்பது தான்!
வீட்டுக்கு வரும் மணப்பெண்ணை மகாலெட்சுமியாகக் கருதுகிறது நமது பண்பாடு. வீட்டிற்குள் நுழைந்தவுடன் மருமகளை விளக்கேற்றி வைக்கச் சொல்வது ஒரு அர்த்தமுள்ள பழக்கம். அப்படி தீபத்தை ஏற்றி வைப்பதன் மூலம் தரித்திரம் தொலைவதோடு இனி ஆரம்பிக்க இருக்கும் வாழ்க்கை செல்வ வளம், உடல் ஆரோக்கியம், சமூக நலம் உள்ளிட்ட அனைத்திற்குமான அடிப்படையாக அமைகிறது என்பதை ஆன்றோர் அனுபவத்தால் கண்டு அதை மரபாகக் கடைப்பிடித்தனர்.
மஹாலட்சுமி வாசம் புரியும் இடங்களில் முக்கியமானதாகத் திகழ்வது விளக்கு. தினமும் காலையும் மாலையும் பூஜை அறையில் விளக்கை ஏற்றி வழிபடுவது வளத்தையும் செல்வத்தையும் கொடுக்கும்.
மாலையில் சூரிய அஸ்தமன சமயம் வாயிலின் இரு புறங்களிலும் அகல் விளக்கு ஏற்றி வருவோர், ஒரு நாளும் வறுமை என்ற கொடிய பிணியை அடைய மாட்டார்கள்.
சங்க இலக்கியத்தில் அகநானூறு, நற்றிணை உள்ளிட்ட நூல்களில் விளக்கை ஏற்றி வைப்பது பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. ‘நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா’ என்று விளக்கு அணைந்தால் அது தீய சகுனமாகக் கருதப்பட்டதை புறநானூறு (பாடல் 280) குறிப்பிடுகிறது.
ஆயிரக்கணக்கான பாடல்கள் தீபம் பற்றிக் குறிப்பிடுகின்றன.புராண் இதிஹாசங்கள் அனைத்தும் தீப மஹிமையை விரிவாக விளக்குகின்றன.
விளக்கில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. அனைத்துமே நலம் பயப்பவை தான்.
விளக்கை கிழக்கு, வடக்கு, மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து ஏற்றலாம்.
இதன் அரிய பலன்கள்:

துன்பம் விலகும். கடன் தொல்லை போகும் மங்களம் உண்டாகும் திருமணத் தடை நீங்கும் பல விதமான கிரக தோஷங்களும் நீங்கும். பெண்கள் நலம் பெறுவர்.
குத்துவிளக்கில் அடிப்பாகம் பிரம்மாவையும் நீண்ட நடு தண்டுப்பாகம் விஷ்ணுவையும் மேற்பகுதி சிவனையும் குறிப்பதால் அது மும்மூர்த்திகளைக் குறிப்பதாக ஆகிறது. மும்மூர்த்திகளையும் போற்றி வணங்குவதாக ஆகிறது!
திருவிளக்கு உலகியல் வாழ்க்கைக்கான செல்வ வளத்தையும் சௌபாக்கியத்தையும் மட்டும் தரும் ஒன்றல்ல.
ஆன்மீக வாழ்க்கையில் ஏற்றம் பெறச் செய்து பெறுதற்கு அரிதான முக்திக்கும் வழிவகை செய்யும் ஒரு அரிய சாதனம் அது!
இறைவன் ஜோதி வடிவம் என்பதை நமது அருளாளர்கள் ஆயிரக்கணக்கான பாடல்களில் பாடி வலியுறுத்தியுள்ளனர்.
தமஸோ மா ஜோதிர் கமய: – இருளிலிலிருந்து ஒளிக்கு என்னை இட்டுச் செல்க என்பதே உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வேத பிரார்த்தனை!
திருவண்ணாமலை அக்னி தலம். அங்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை அன்று தீபத் திருவிழா உலகம் கண்டிராத அரிய திருவிழாவாக தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
ஜோதி வடிவாகச் சிவன் எழும்ப, முடியையும் அடியையும் பிரமனும் விஷ்ணுவும் காண முடியாத நிலையை இத் திருவிழா புலப்படுத்துகிறது.
திருவண்ணாமலை மஹா தீபத்தில் ஏழு அடி உயரமுள்ள தாமிர விளக்கு பயன்படுத்தப்படுகிறது. முக்திக்கு வழி காட்டும் இந்த ஜோதியைத் தான் தீப மங்கள ஜோதி நமோ நம என அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். ஜோதியைக் கும்பிடுவதே சிவ வாழ்வாகும். ‘ஜோதி உணர்கின்ற வாழ்வு சிவமென்ற சோஹமது தந்து எனை ஆள்வாய்’ எனப் பெரிய மந்திர ரகசியத்தை அருணகிரிநாதர் (வாதினை யடர்ந்த எனத் தொடங்கும் திருப்புகழில்) விளக்குகிறார். (சோஹம் = ஸ + அஹம் = அவனே நான் என்று பொருள் – சிவனே நான்!)

சமீப காலத்தில் வாழ்ந்த வள்ளலார் ‘அருட் பெரும் ஜோதி தனிப் பெருங்கருணை’ என்ற தாரக மந்திரத்தை அருளியதோடு ஜோதியின் பெருமையை அருட்பெருஞ்சோதி அகவலில் தெள்ளத் தெளிவாக எடுத்து இயம்புகிறார். அவரது பாடல்களை ஊன்றிக் கற்போர் அறிவது : ‘ஜோதி வழிபாட்டால் சிவ அருள் சித்திக்கும்; நீடித்த நோயற்ற வாழ்வும் பெரும் பேறும் கிடைக்கும் என்பதையே! இரவில் விளக்கு எரியும் அறையில் படுப்பது ஆயுளை நீட்டிக்கும் என வள்ளலார் வலியுறுத்துகிறார்.
மாணிக்க வாசகர் ஜோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே என்றும், தேசுடைய விளக்கே என்றும், தூண்டா விளக்கின் சுடர் அணையாய் என்றும் சிவபிரானைப் போற்றுகிறார்.
ஞானசம்பந்தர் விண்களார் தொழும் விளக்கு என்று சிவபிரானைத் தொழுது பஞ்சாக்ஷர பதிகத்தில் ஞான விளக்கினை ஏற்றுவோம் என்கிறார்.
சுந்தரரோ திருக்கழிப்பாலை பதிகத்தில்,
பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான் மை ஆர் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலை அதே என்று கூறி நின்று எரியும் விளக்காக இலங்கும் சிவபிரானைத் துதிக்கிறார்.
அப்பர் பிரான் 4,5,6 ஆகிய மூன்று திருமுறைகளில் 22 இடங்களில் விளக்கு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு இடத்தையும் பார்த்து அதன் விளக்கத்தை உணரும் போது பிரமிப்பு ஏற்படுகிறது.
நமச்சிவாய பதிகத்தில்
இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது
பல்லக விளக்கு அது பலரும் காண்பது
நல்லக விளக்கு அது நமச்சிவாயவே
என்று கூறி நல் அக விளக்காக விளங்குவது நமச்சிவாயவே – பஞ்சாக்ஷரமே என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார்.

திருக்கயிலாய பதிகத்தில் நால் திசைக்கும் விளக்காய நாதா போற்றி என கயிலைமலையானைப் போற்றுகிறார்.
பழமொழிகளின் வாயிலாகக் கூட சிவ வழியைக் காட்டும் அப்பர் பிரான் திருஆரூர்ப் பூங்கோயிலில் பாடிய பழமொழி பதிகத்தில் விளக்கு இருக்க மின்மினியிடம் எவனாவது தீக் காய்வானா என்கிறார்! ‘மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய் மடுத்துப் பருகி உய்யும் விதி இன்றி, மதி இலியேன், விளக்கு இருக்க மின்மினித் தீக் காய்ந்தவாறே’ என்கிறார். அருமையான விளக்கான நமச்சிவாய என்னும் பஞ்சாக்ஷரம் நம்மிடம் இருக்க, மின்மினியில் தீக் காய்ந்தது போன்ற விதி உடையவனாக, புத்தியின்றி இருந்தேனே என உருகுகிறார்.
இன்னொரு சுவையான ஈசனின் விளக்குத் திருவிளையாடல் பற்றி திரு ஆரூர்ப் பூங்கோயில் பதிகத்தில் அவர் குறிப்பிடுகிறார்:
‘ஆராய்ந்து அடித்தொண்டர் ஆனிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்தரம் பாற்படுத்தான்
நாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால் திருவிளக்கு இட்டமை நீள்நாடு அறியும் அன்றே’’
நீரால் திருவிளக்கு இட்டால், எண்ணெய்க்குப் பதிலாக நீரை ஊற்றினால், அது எரியுமா?
நமிநந்தி அடிகள் நாயனாரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு அற்புதத்தை இந்தப் பாடல் சுட்டிக் காட்டுகிறது. நமிநந்தி அடிகள் நாயனார் ஒரு முறை அரனெறி என்னும் கோவிலில் புகுந்து விளக்கு ஏற்றி வழிபட எண்ணினார். ஆனால் விளக்கிலோ எண்ணெய் இல்லை. அருகிலிருந்த ஒரு வீட்டிற்குச் சென்று எண்ணெய் கேட்டார். அது ஒரு சமணர் வீடு. அவர்கள் அவரை எள்ளி நகையாடி நீரை விட்டு விளக்கை எரித்துக் கொள் என்றனர். செய்வதறியாது திகைத்த நமிநந்தி அடிகள் ஈசன் முன் வந்து வணங்கினார். அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. “கவலையை விடுக. அருகிலிருக்கும் குளத்திலிருந்து நீரைக் கொணர்க; விளக்கை ஏற்றுக” என்ற ஒலியைக் கேட்ட நமிநந்தி அடிகள் மனம் மிக மகிழ்ந்து கமலாலயக் குளத்திலிருந்து நீரை மொண்டு வந்து விளக்கிலே ஊற்றினார். என்ன ஆச்சரியம்! விளக்கு எரிய ஆரம்பித்தது! 32 பாடல்களில் நமிநந்தி அடிகள் நாயனார் புராணத்தை பெரிய புராணத்தில் கூறும் சேக்கிழார் பிரான் இந்தச் சம்பவத்தை அழகுற இப்படிக் கூறுகிறார்:
‘வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்குப் பணிமாற
இந்த மருங்கில் குளத்துநீர் முகந்து கொடு வந்து ஏற்றும் என
அந்தி மதியம் அணிந்தபிரான் அருளால் எழுந்த மொழி கேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலரால்’
அசரீரி வாக்கின் படியே நீரை முகந்து அவர், கோயில் அடைந்து முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்குந் திரிமேல் நீர் வார்த்தார். ‘ஜோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு’ எழுந்தது.
பொள்ளத்த காயமாயப் பொருளினை, போகமாதர் வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் வழி என்ன? இதற்கு திருக்கடவூர் வீரட்டத்தில் ஒரு ரகசிய வழியைக் கூறுகிறார் அப்பர். விரும்புமின் விளக்கை என்கிறார் அவர். என்ன விளக்கு அது? விளக்கை எப்படி ஏற்ற வேண்டும். பதில் இதோ:
பொள்ளத்த காயமாயப் பொருளினை, போகமாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்
உள்ளத்த திரி ஒன்று ஏற்றி உணருமாறு உணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே”

விளக்கை, உள்ளத் திரி கொண்டு ஏற்றுக என்பது அவர் காட்டும் வழி. இன்னொரு பாடலில் மிகத் தெளிவாக அவர் விளக்கு ஏற்றுவதைக் கூறுகிறார். உள்ளமே தகளி ஆக வேண்டும் என்கிறார் அவர். தகளி என்றால் அகல் விளக்கு.
உடம்பு எனும் மனை அகத்து உள்ளமே தகளி ஆக
மடம்படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி இடம் படு ஞானத் தீயால் எரி கொள இருந்து நோக்கில்
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணலாமே
துவாரங்கள் பல உடைய மாயப் பிண்டமாகிய இந்த உடலினை சிற்றின்பத்தில் ஆழ்த்தி, பெண் பால் உள்ள ஆசையை அறவே நீக்க, விரும்புவீர் ஆனால், உள்ளத்தைத் தீபமாக மாற்றி உங்களது உயிர் என்னும் திரியை அதில் ஏற்றிச் சிவபிரானை வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டு ஞானம் என்னும் தீபத்தின் உதவியைக் கொண்டு சிவபெருமானை உணரவல்லவர்களின் தீங்குகள் அனைத்தையும் கடவூர் வீரட்டத்து இறைவன் போக்குவார்; அவர் அருள் பெறலாம்.
இப்படி அப்பர் மட்டும் விளக்கை ஏற்றவில்லை; நாலாயிர திவ்ய பிரபந்தம் அருளிய ஆழ்வார்களும் கூட விளக்கைப் பல இடங்களில் குறிப்பிடுகின்றனர். ஆழ்வார்கள் உலகம் முழுவதுற்குமான நன்மைக்காக, விளக்கை எப்படி ஏற்றுகின்றனர் என்று பார்ப்போம்:
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடராழி யான் அடிக்கே சூட்டினன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று
வையமே அகல்; வார் கடலே நெய். சூரியனே விளக்கு; துன்பமாகிய கடல் என்னும் இடர் ஆழி நீங்க, சுடர் ஆழி வண்ணனுக்கு இப்படிப் பாமாலை சூட்டித் தீபம் ஏற்றுகிறார் பொய்கையாழ்வார்.
பூதத்தாழ்வாரோ அன்பை அகலாகக் கொண்டு ஆர்வத்தை நெய்யாக ஊற்றி இன்புருகு சிந்தையை திரியாக ஆக்கி ஞானத் தமிழால் நாராயணனுக்கு ஞானச் சுடர் விளக்கு ஏற்றுகிறார்.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக்
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
பெரியாழ்வாரின் திவ்ய பிரபந்தங்களைப் பாடி வழிபடுவோர், “கோவிந்தன் தன் அடியார்களாகி எண்திசைக்கும் விளக்காகி நிற்பார்” என அவரே உறுதி கூறுகிறார்.
ஆக நாம் அன்றாடம் ஏற்றும் விளக்கு என்பது புற இருளை அகற்றும் ஒன்று; அது வாழ்க்கையை நடத்த மிக்க அவசியமானது. அக இருளைப் போக்கவோ இறைவன் திருநாமம் என்னும் விளக்கு தேவை. எண்திசைக்கும் விளக்காய் விளங்கும் நமசிவாய நாமம் அல்லது நாராயணன் நாமம் நமக்கு உற்ற துணையாய் இருக்கும். இதையே நாயன்மார்களும், ஆழ்வார்களும் நமக்கு உற்ற ஒரே வழியாகக் காட்டி அருள் பாலிக்கின்றனர்.
இறுதியாக திருமூலர் திருமந்திரத்தைக் கூறி என் உரையை முடிக்கிறேன்:
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்!
விளக்கின் முன்னே வேதனை மாறும்!!

பொருள் செல்வமும் அருள் செல்வமும் அருளும் தீபத்தை வெளியிலும் உள்ளத்திலும் ஏற்றுவோம்; நல்வாழ்வு பெறுவோமாக! நன்றி, வணக்கம்!
***
tags- சுடர், விளக்கு , ஹிந்து, தீபம் ,