
Post No. 9629
Date uploaded in London – – –21 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதியை இயற்றிய துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்!
ச.நாகராஜன்
தமிழில் உள்ள பல சிறப்புக்களில் ஒன்று நிரோட்டக யமக அந்தாதி. நிரோட்டகம் என்றால் நிர் + ஒட்டகம் அதாவது உதடு ஒட்டாமல் இருப்பது. (நிரோஷ்டம் என்ற வடமொழிச் சொல்லுக்கு நிர் + ஒஷ்டம் என்று பொருள்; ஒஷ்டம் என்றால் உதடு) இப்படிப் பட்ட உதடு ஒட்டா எழுத்துக்கள் கொண்ட சொற்களை பொருள் வருமாறு இணைத்துப் பாடுவது நிரோட்டகச் செய்யுள் ஆகும்.
திருக்குறளில் இப்படி பல குறட்பாக்கள் நிரோட்டகமாக உள்ளன. எடுத்துக்காட்டாக ஒன்றை இங்குச் சுட்டிக் காட்டலாம்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (குறள் எண் 341)
இப்படிப்பட்ட நிரோட்டகச் செய்யுளுடன் யமக வடிவைச் சேர்ப்பது நிரோட்டக யமகம் ஆகும். யமகம் என்றால் செய்யுளின் ஒவ்வொரு அடியிலும் முதல் சில எழுத்துக்கள் அல்லது சொற்றொடர் திருப்பித் திருப்பி வரவேண்டும், ஆனால் வெவ்வேறு பொருளில் வர வேண்டும். இப்படி வந்தால் யமகம் ஆகும்.
அந்தாதி என்றால் ஒரு செய்யுளின் இறுதி அடியில் வரும் இறுதிச் சொல்லோ அல்லது எழுத்தோ அடுத்த செய்யுளின் முதல் அடியின் முதல் சொல்லாக அமைந்து பாடல்களைத் தொடுக்க வேண்டும்.
இப்படி நிரோட்டகமாகவும் யமகமாகவும் அந்தாதியாகவும் அமைந்திருக்கும் ஒன்றையே நிரோட்டக யமக அந்தாதி என்று சொல்வோம்.
இப்படிப்பட்ட அபூர்வமான ஒரு நிரோட்டக யமக அந்தாதியை, திருச்செந்தில் முருகனைப் பாடிப் பரவி திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதியை அருளியவர் துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் ஆவார்.
ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் வேளாள மரபினைச் சேர்ந்தவர். ஒரு முறை திருச்செந்தூரில் முருகனை தரிசித்து பிரகாரத்தில் வலம் வந்த போது அங்கிருந்த புலவர் ஒருவர் அவரை வாதுக்கழைத்தார்.
அவர் சிவப்பிரகாச சுவாமிகள் திருநெல்வேலி சிந்து பூந்துறையில் இருக்கும் தர்மபுர ஆதீனத்து வெள்ளியம்பல சுவாமிகளிடம் பாடம் கேட்டவர் என்பதை அறிந்து அவரை தூஷணை செய்யவே சிவப்பிரகாச சுவாமிகள் அது பொறுக்காது வாதுக்கு வர ஒப்புக் கொண்டார்.
யார் ஒருவர் முதலில் நிரோட்டக யமக அந்தாதி ஒன்றை முதலில் பாடுகிறாரோ அவரே வென்றவர் என்பது தீர்மானிக்கப்பட்டது.
முருகனை வணங்கிய சிவப்பிரகாச சுவாமிகள் உடனே 30 பாடல்கள் அடங்கிய திருச்செந்தூர் நிரோட்டக யமக அந்தாதியைப் பாடி முடித்தார். வாதுக்கழைத்த புலவரோ ஒரு பாடலும் பாட முடியாமல் திகைத்திருந்தார்.
வாதில் தோற்ற அவர், சிவப்பிரகாச சுவாமிகளுக்கு அடிமையாக ஆனார், அவரை வெள்ளியம்பல சுவாமிகளிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தார் சிவப்பிரகாச சுவாமிகள்.
நிரோட்டகத்தில் ப, ம,வ, உ, ஒ ஆகிய எழுத்துக்கள் வராமல் செய்யுள்களை அமைக்க வேண்டும்.
கட்டளைக் கலித்துறையில் அமைக்கப்பட்ட நூல் இது. காப்பு மற்றும் முதல் ஐந்து பாடல்களைக் கீழே காணலாம்.

கட்டளைக் கலித்துறை
காப்பு
கொற்ற வருணனை நின்றன் றுழக்கிய கொக்குருவைச்
செற்ற வருணனை யன்னசெவ் வேற்படைச் செந்திலர்க்கு
முற்ற வருணனை யந்தாதி யென்று முதிர்மதப்பேர்
பெற்ற வருணனை யானனத் தாதியைப் பேசுவனே.
நூல்
யானைக்கண் டங்கரி சென்றேத் தெழிற்செந்தி லின்றடைந்தே
யானைக்கண் டங்கரி யங்கங் கயிலையை யேய்ந்ததகை
யானைக்கண் டங்கரி சேரெண்டிக் காக்கினற் கீநலிசை
யானைக்கண் டங்கரி தாகிய சீர்க்கதி யெய்தினனே. 1
தினகர னந்த நனியிலங் காநின்ற செய்யநற்செந்
தினகர னந்த நிதியா யினனடற் சீரயிலேந்
தினகர னந்த கனைச்செற்ற தாளர் திகழ்கனகா
தினகர னந்த நடனர் தனயனென் சிந்தையனே. 2
சிந்தனை யாகத் திசையந் தணர்க்கிறை சேரகங்க
சிந்தனை யாகத் தரையளித் தாடரை சென்றிரந்த
சிந்தனை யாகத் திடையிடைந் தான்றந்த சேயளியாற்
சிந்தனை யாகத்த நற்செந்தி லாய்நினைச் சேர்ந்தனனே. 3
தனத்தலங் கார நிறைநா ரியரந் தரத்தசைகே
தனத்தலங் கார நிகழரங் காடச்செய் தன்னினயத்
தனத்தலங் கார தராயியங் கத்தக்க தண்செந்திற்கந்
தனத்தலங் காரனை யானய னேத்திடத் தங்கினனே. 4
தங்கந் தனங்க ளடையத் தனியெனைத் தள்ளியங்கே
தங்கந் தனங்க டரச்சென் றனரறிந் தாரிலைகா
தங்கந் தனங்க ளலர்காக்க ணாரெழிற் றண்செந்திலார்
தங்கந் தனங்க நிகர்செக்கர் செய்சஞ் சலத்தினையே. 5
28வது பாடலாக அமைவது இது:-
கணக்காக நாய்கடின் காய நிலையெனக் கண்ணியென்ன
கணக்காக நானலைந் தெய்த்தே னெழிற்செந்திற் கந்தநெற்றிக்
கணக்காக னார்தந்த நின்றனை யேயினிக் காதலினாற்
கணக்காக னாநிகர்த் தேயழி யங்கத்தின் காதலற்றே. (பாடல் எண் :28)
இதன் பொருளைப் பார்ப்போம்:-
கணம் என்றால் கூட்டம். காயம் என்றால் உடல். கண்ணி என்றால் நினைத்து என்று பொருள்.நெற்றிக் கண் அக்கு ஆகனார் என்றால் எலும்பினை உடலில் அணிந்த நெற்றிக்கண்ணன் -சிவபிரான் ஆனவர் என்று பொருள். கண+ கா என்றால், நினைக்க காப்பாயாக என்று பொருள்.
பாடலின் திரண்ட பொருள்:
கூட்டமான காக்கை மற்றும் நாய்கள் தின்னும்படியான இந்த உடலை நிலையாக நிற்பது என்று நினைத்து என்ன கணக்காக நான் அலைந்து திரிந்து இளைத்தேன்! எழில் செந்தில் கந்த பிரானே! உடலில் எலும்பணிந்த நெற்றிக்கண் பிரானாகிய சிவபிரான் தந்த நின்னையே இனிமேல் காதலினால் அன்பு கலந்து நினைக்க நீ (எமக்கு வரம் தந்து), கனவு நிகர்த்த, அழிகின்ற இந்த அங்கத்தின் மீது தேகாபிமானம் இல்லாமல் செய்து, காத்தருள்வாயாக!
அருமையாக இப்படி ஒரு அந்தாதி அமைத்துப் பாடிய ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள வாழ்வு செம்மையான வாழ்வு! அவரைப் பற்றி நன்கு அறிவோமாக! (இன்னொரு கட்டுரை தொடரும்)

***
tags- திருச்செந்தில், நிரோட்டக, யமக அந்தாதி, சிவப்பிரகாச சுவாமிகள்,