அதிசயக் கனவுகள் (Post No.9645)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9645

Date uploaded in London – –  –25 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 24-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அதிசயக் கனவுகள்

     அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நாம் எல்லோருமே கனவு காண்கிறோம். சிலர் நான் கனவே காண்பதில்லை என்கின்றனர். ஆனால் என்ன கனவு கண்டோம் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் தான் அவர்கள்! காலையில் எழுந்தவுடன் ஒன்றுமே ஞாபகத்தில் இல்லையென்றால் கனவு கண்டதாகச் சொல்ல முடியாதல்லவா?!

    ஆராய்ச்சியாளர்கள் ஒருவர் எப்போது கனவு காண்கிறார் என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து விட்டனர். இமைகளுக்கு அடியே கண்கள் அங்கும் இங்குமாக எவ்வளவு முறை இயங்குகின்றன என்பதை கண் இமைப்பின் மூலமாகத் துல்லியமாக அறிந்து, இப்படிப்பட்ட நேரங்களில் ஒருவர் கனவு காண்கிறார் என்பதை ஆராய்ச்சியாளர்கள் துல்லியமாகக் கூறி விட முடியும். இதற்குத் ‘துரித கண் இயக்கம்’ – Rapid Eye Movement –  என அறிவியல் பெயர் சூட்டி இருக்கிறது. தூங்குபவர் ஒருவரை உற்றுக் கவனிப்பதன் மூலமாக நாமே கூட இதை அறியலாம்!

    காலம் காலமாகக் கனவுகளின் முக்கியத்துவத்தை புராணங்களும் இதிஹாஸங்களும் விளக்கி உள்ளன. சிலருடைய கனவுகள் கடவுளிடமிருந்து வரும் செய்திகளாகக் கருதப்பட்டன. ஸ்வப்ன சாஸ்திரம் என்பது நம்மிடையே நுணுக்கமாக உள்ளது. சந்தியாவந்தன மந்திரத்தில் தினமும் கடைசியில் ரக்ஷை மந்திரமாக, அத்யா நோ தேவ ஸவித: ப்ரஜாவத் ஸாவீ: ஸௌபகம்! பரா துஷ்வப்னியஹும் ஸுவ| என்று உச்சரித்து ஸவித்ரு தேவனே, இப்போது எங்களுக்கு ஸந்ததிகளுடன் கூடிய சௌபாக்கியத்தை அருள வேண்டும். கெட்ட கனவின் நிமித்தத்தையும் பலனையும் விலக்கி அருள்வீர் என்று வேண்டுகிறோம். அப்போது நல்ல கனவுகள் வரட்டும் என்பது உள்ளார்ந்த அர்த்தமாகிறது.

     சிலரது கனவுகள் கனவு காண்போரின் ஆழ்மனதின் செய்திகளாகக் கருதப்பட்டன. இவைகள் பலிக்கும் போது ஆச்சரியத்தால் பிரமிக்கிறோம்.

     முதலில் ராமாயண இதிஹாஸத்தில் வரும் ஒரு முக்கியமான கனவைக் காண்போம். அசோகவனத்தில் கற்பின் கனலியாம் சீதை அல்லல் பட, விபீஷணனின் பெண்ணான திரிஜடை, தான் கண்ட கனவை சீதையிடம் கூறுவது பிரசித்தமானது. வால்மீகியும், கம்பனும் இதை அற்புதமாகச் சித்தரிக்கின்றனர்.

     ராமர் சீதையுடனும் இலக்குமணனுடனும் அனைவரும் துதிக்க எழுந்தருளுவதையும், ராவணன் மொட்டைத்தலையனாய், எண்ணெய் இட்டுக் கொண்டு, சிவந்த ஆடையுடன், குடித்து விட்டு, அலரிப்பூ மாலை அணிந்து, கறுப்பு ஆடை உடுத்திய பெண்ணால் இழுக்கப்படுவதையும், கழுதை பூட்டிய ரதத்தில் தெற்குத் திசை நோக்கிச் செல்வதையும் சுந்தரகாண்டம், இருபத்தேழாம் சர்க்கம் விவரிக்கிறது.

      கம்பனோ ஒரு படி மேலே போய், காட்சிப் படலத்தில் திரிஜடை சீதையிடம், “ நீ தூங்குவதே இல்லை என்பதால் உனக்குக் கனவே தோன்றுவதில்லை – துயில் இலை ஆதலின், கனவு தோன்றல – என்று சொல்லி விட்டு, நான் ஒரு கனவு கண்டேன் என்று தான் கண்ட கனவைச் சொல்லஆரம்பிக்கிறாள். கனவை விவரித்தவள், பாதிக் கனவில் என்னை நீ எழுப்பி விட்டாய்; ஆகவே கனவு முடியவில்லை – என்னை நீ உணர்த்தினை; முடிந்தது இல் – என்று கூற சீதை, “அன்னையே! அதன் குறை காண்- இன்னமும் துயில்க”, என்று கூறி மீதி கனவையும் காண வேண்டுவதாக நயம்படச் சித்தரிப்பது அனைவரும் படித்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும்!

     அடுத்து இலக்கியக் கனவு ஒன்றைப் பார்ப்போம்! இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் கனவிற்காகவே ‘கனாத்திறம் உரைத்த காதை’ என்று ஒரு காதையைப் படைத்துள்ளார்.

     கண்ணகி கோவலனைப் பிரிந்து பல நாட்களாகி விட்ட நிலையில் அவளது நிலை கண்டு தோழிமாரெல்லாம் வருந்தி இரங்க, பார்ப்பனத் தோழியான தேவந்தி என்பவள் கண்ணகி துன்பம் தீர்ந்து கணவனைப் பெற வேண்டும் என்று கோவில் சென்று இறைவனை வேண்டி பிறகு கண்ணகியிடம் சென்று, “கணவனைப் பெறுக” என்று வாழ்த்துகிறாள். அதற்கு கண்ணகி, “நீ இப்படிக் கூறுவதால் நான கணவனைப் பெறுவேன். ஆனால் நான் ஒரு கனவு கண்டேன். அதில் நானும் என் கணவரும் வேறொரு ஊருக்குச் செல்கிறோம். அங்கு அவர் பெயரில் வீண் பழி உண்டாகி, தீங்கு ஏற்பட, நான் அரசருடன் வாதிட்டேன். அதனால் அந்த ஊருக்கும் தீங்கு ஏற்பட்டது” என்கிறாள். இதற்குப் பரிகாரமாக சோமகுண்டம், சூரிய குண்டம் ஆகிய இரு துறைகளில் மூழ்கி காமவேள் கோட்டத்தைத் தொழுமாறு தேவந்தி வேண்ட, கண்ணகியோ, “பீடன்று” என்று கூறி அதை மறுத்து விடுகிறாள்.அதாவது கற்புடைப் பெண்டிருக்கு கணவனைத் தவிர இன்னொரு தெய்வம் இல்லை என்பதால் அப்படி மறுத்து விடுகிறாள்.

     கண்ணகியின் வாயிலாக இப்படி கோவலனுக்குப் பின்னால் ஏற்பட இருக்கும் தீமையை இளங்கோவடிகள் சுட்டிக் காட்டுவதோடு, மீண்டும் கோவலன் வாயிலாக கண்ணகி துயருறப் போவதையும் காட்டுகிறார்.

    மாடலன் என்னும் மறையோன் கோவலனிடம், “ இப்பிறவியில் நல்லதையே செய்த உனக்கு ஏற்படும் இந்தத் துன்பம் நீ செய்த முன் வினைப் பயனோ” என்று வருந்திக் கூற, கோவலன், “ மதுரையில் ஒரு வஞ்சகனால் தனக்குத் துன்பம் நேர்வதாயும், அதனால் கண்ணகி துன்பப்படுவதாயும் மாதவி மணிமேகலையை புத்தருக்கு அர்ப்பணிப்பதாகவும்” தான் கனவில் கண்டதாகக் கூறுகிறான்.

     அடுத்து கனவு இல்லாத நல்ல இலக்கியமே இல்லை.  உலகப் பொதுமறையாம் திருக்குறளில் திருவள்ளுவர் ‘கனவு’ என்ற சொல்லைப் பத்து இடங்களில் கையாள்கிறார்.  (குறட்பாக்கள் 819,1054,1211 முதல் 1220 முடிய காணலாம்). ‘கனவு நிலை உரைத்தல்’ என்று ஒரு அதிகாரத்தையே கனவினுக்குத் தந்து தலைவியின் கனவுகளையும் அதன் தேவையையும் அவர் உணர்த்துவது படித்து இன்புறத் தக்கது.

     இப்படி தமிழ் இலக்கியக் கனவுகளைத் தொகுத்தால் அதுவே ஒரு பெரிய நூலாகி விடும்.

     இப்படிப்பட்ட இலக்கியக் கனவுகள் ஒரு புறம் இருக்க, உலகத்திலுள்ள மிக பிரம்மாண்டமானதும்  முக்கியமானதுமான படைப்புகள் பல கனவுகள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளன என்பது ஆச்சரியம் ஊட்டும் ஒரு உண்மையாகும்.

    உலக சரித்திரத்தையே ‘A Study of History’ என்ற பெயரில் 12 பாகங்களாக எழுதி வெளியிட்டார் பிரபல வரலாற்றுப் பேரறிஞரான ஆர்னால்டு டாயின்பி.

30 லட்சம் சொற்கள் அடங்கிய அற்புதமான இந்த நூலை ஆராய்ந்து எழுதுவது என்பது  மனித  முயற்சிக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும்.

 இதை எப்படி எழுத முடிந்தது என்று அவரே கூறி உள்ளார். படுத்தவுடன் கனவிலே பக்கம் பக்கமாகச் சொற்கள் அடங்கிய காட்சிகள் விரியுமாம். எழுந்தவுடன் அதை அப்படியே அவர் எழுதி விடுவாராம். கனவில் அகக் கண்ணில் விரிந்த காட்சிகள் படலம் படலமாக வர உலக சரித்திரம் மிளிர்ந்தது. இல்லையேல் இவ்வளவு துல்லியமான உலக சரித்திரத்தை ஆராய்ந்து எழுத யாரால் தான் முடியும்?

கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விளக்கப் புகுந்த அவர் அதற்கு விடையாக அமைவது தனது கனவு ஒன்று தான் என்றும் கூறியுள்ளார்.

இந்தக் கனவில் யார்க்‌ஷைரில் ஆம்பிள்ஃபோர்த் அப்பேயில் (Abbey of Ampleforth) பெனிடிக்டின் பீடத்தின் மேல் உள்ள சிலுவையின் அடிப்பாகத்தைப் பிடித்துக் கொண்டு தான் இருப்பதை அவர் கண்டார். பிறகு தெளிவான லத்தீன் மொழியில் கம்பீரமான ஒரு அசரீரி ஒலித்தது : ஆம்ப்ளெக்ஸ் எக்ஸ்பெக்டா!

இதற்கு “பற்றிக் கொள்; காத்திரு – CLING AND WAIT –  என்று பொருள்.

இதையும் அவரே விவரித்துள்ளார்.

ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸனையும் அவர் எழுதிய டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட் (Doctor Jekyll and Mr Hyde)  என்ற உலக பிரசித்தி பெற்ற நாவலையும் அறியாதவர் இருக்க  முடியாது.  இதுவும் ஒரு கனவுப் படைப்பே தான்.

அவர் இது பற்றிக் கூறினார் இப்படி: “ மனிதனது இரட்டை பர்சனாலிட்டியை சித்தரிக்க வெகு காலம் முயன்று வந்தேன். The Travelling Companion என்ற ஒரு நாவலைக் கூட எழுதினேன். அசிங்கமாக இருக்கிறது என்று பதிப்பாசிரியர் திருப்பி அனுப்பி விடவே அதை எரித்து விட்டேன். இரண்டு நாட்கள் மூளையைக் கசக்கினேன். இரண்டாம் நாள் இரவு ஜன்னலில் ஒரு காட்சியைக் கண்டேன். அது இரண்டாகப் பிரிந்தது. அதில் ஹைட் ஒரு பொடியைச் சாப்பிட்டுத் தன்னைத் தேடி வருபவர்களுடன் இணைந்து அவர்களிலே ஒருவனாக மாறி விடுகிறான். மூன்று சீன்கள் கனவில் வந்தன. மீதி முழுவதையும் எழுந்தவுடன் எழுதி விட்டேன்”

     ஈரோட்டிலே மிகுந்த ஏழ்மையான ஒரு குடும்பத்திலே பிறந்து உலகையே தன் கணிதக் கண்டுபிடிப்புகளால் பிரமிக்க வைத்த சீனிவாச ராமானுஜன் தனது கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் காரணம் தனது குல தெய்வமான நாமகிரி அம்மன் தான் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நாமகிரி என் நாவில் எழுதுவாள்; கனவு மூலம் அவள் எனக்கு உள்ளொளி தருவாள் – Namakiri would bestow insight in dreams – என்று அடிக்கடி கூறுவது அவர் வழக்கம்.

பேப்பர் வாங்கக் கூட காசில்லாமல் தேற்றங்களை சிலேட்டில் எழுதி அழித்து நிரூபண முடிவுகளை மட்டும் படிகள் – STEPS – இல்லாமல் அவர் ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைக்க, அதை அவிழ்க்க முடியாமல் கணிதமேதைகள் இன்றும் திணறும் நிலையை ஏற்படுத்தினார் அவர். தான் விழித்தவுடன் தனது கனவில் வந்த அனைத்தையும் அவர் எழுதி விடுவது வழக்கம். ‘An equation has no meaning unless it expresses a thought of God – இறைசிந்தனையை ஒரு சமன்பாடு வெளிப்படுத்தவில்லையெனில் அது அர்த்தமில்லாத ஒன்று தான் – என்ற அவரது கூற்று எண்ணி எண்ணி வியப்புறத் தக்கது. கடவுளும் கணிதமும் ஒன்றியிருப்பதை விளக்கும் ஒரு கூற்று அது.

கணித மேதை பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும் திணற வைக்கும் பிரச்சினைகளுக்குத் தனது கனவுகளே தீர்வுகளைத் தந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

வேதியல் துறையில் மேதையாக விளங்கியவர் ஜெர்மானியரான ஃப்ரெடெரிக் கெக்குலே. 1865ஆம் ஆண்டு ஒரு நாள் மதியம் அவர் கனவிலே ஒரு பாம்பு தன் வாலைக் கடிப்பது போலக் கனவு கண்டார். இதிலிருந்து பென்ஸீன் அமைப்புக்கான கருத்து உருவாகி பென்ஸீன் வளையத்தைக் கண்டுபிடித்தார். அவரது சீடர்களில் மூவர் நோபல் பரிசை வென்றனர்.

பல பிரபலங்களின் மரணங்கள் கனவின் மூலமாக முன்னரேயே அறிவிக்கப்பட்ட செய்திகளை உலக வரலாறு பதிவு செய்திருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியான் ஆப்ரஹாம் லிங்கன் 1865ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதம் தான் கண்ட கனவைத் தனது நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொண்டார். அவர் வெள்ளை மாளிகையில் படுத்திருந்த போது அழுகின்ற ஒரு ஓலக்குரல் கேட்டு அது வந்த திசையில் செல்கிறார். அங்கு கிழக்குப் பக்க அறையில் ஒரு சவப்பெட்டி இருக்கிறது. மக்கள் வெள்ளம் அலை மோதி இருக்க ஓவ்வொருவராக சவத்தின் முகத்தைப் பார்த்து விட்டு நகர்ந்து சென்று கொண்டிருந்தனர். இறந்தது யார் என்று லிங்கன் அங்கிருந்த காவலரைக் கேட்க அவர் “நமது ஜனாதிபதி தான் அவர், அவரை ஒருவன் கொலை செய்து விட்டான்” என்கிறார். இந்தக் கனவை லிங்கன் கூறியதைக் கேட்ட அவரது நண்பரான வார்ட் ஹில் லமோன் (Ward Hill Lamon) என்பவர் கொலை நடந்த பிறகு எழுதப்பட்ட தனது நூலான Recollections of Lincoln என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

இப்படிப்பட்ட கனவுக் காட்சிகள் வெறும் தற்செயலான கற்பனைத் தோற்றங்கள் தானா? அல்லது இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கங்கள் உண்டா? அதை அடுத்துப் பார்ப்போம். நன்றி வணக்கம்

 ***

tags– அதிசய, கனவுகள், 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: