மனைவி பிணத்தை மூடி விட்டுப் புலவர் திருமணத்தை நடத்திய வடுகநாதர்! (Post No.9689)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9689

Date uploaded in London – –  –5 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொண்டை மண்டல சதகம் பாடல் 55

மனைவி பிணத்தை மூடி விட்டுப் புலவர் திருமணத்தை நடத்திய வடுகநாதர்!

ச.நாகராஜன்

வாயற்பதி வடுகநாத முதலியார் என்பவர் தொண்டைமண்டலத்தில் வாழ்ந்து வந்த பிரசித்தமான ஒரு வள்ளல். அவரது மனைவி மரணமடைய மிக்க துயர நிலையில் அவர் இருந்தார். அப்போது அங்கு ஒரு புலவர் வந்தார். அவருக்கு அன்று கல்யாணம். அதை நடத்தி வைக்க வேண்டியவர் வடுகநாத முதலியார். அவருக்கோ இப்படி ஒரு துயரநிலை. ஆனால் புலவரோ அவரைக் கட்டாயம் தன் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று கூறியதோடு இன்னொரு விஷயத்தையும அவருக்கு ஞாபகப் படுத்தினார். அதாவது வடுகநாத  முதலியாரது தந்தையாரின் சகோதரர் இறந்து விட்ட நிலையில் அன்று ஒரு வித்துவான் பசியோடு அவரது இல்லத்திற்கு வர அவர் தனது சகோதரனின் பிணத்தை மூடினார்; வந்த வித்துவானுக்கு அன்னமிட்டார். அப்படிப்பட்ட உத்தமருக்குப் பிள்ளையாக் நீ இருப்பாயாகில் என் திருமணத்தை வந்து நடத்து என்றார் அவர்.

அதை ஒரு பாடலாகவும் பாடி விட்டார் இப்படி:

முந்தவிளை யோன் மாள முத்தமிழோர்க் கன்னமிட்ட

வந்த வடுகன் மகனானால் வந்தென்

றலைக்கலியா ணத்துக்கே தான்பிணத்தை மூடி

யிலக்கணமாச் செய்குவைநீ யே

இந்தப் பாடலைக் கேட்ட வடுக நாதர் தன் மனைவியின் பிணத்தை மூடினார்;அந்தப் புலவருடன் நடந்தார். அவரது கல்யாணத்தை நன்கு நடத்தி வைத்தார்.

இப்படிப்பட்ட மேலானவர் வாழ்ந்தது தொண்டை மண்டலம் என்று தொண்டைமண்டல சதகம் 55 வது பாடலில் கூறுகிறது. பாடல் இதோ:-

நெடுகவிரித்துப் பிணமூடினோன்மக னீ யெனில்வா

கடுகவெனக்குமுன் முந்தவென்றேயோர் கவிதை சொல்லி

முடுகவழைப்ப மனையாள் பிணத்தினை மூடிச்சென்ற

வடுகனளித்த மகன்வாயிலான்றொண்டை மண்டலமே

இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க முடியுமா என ஐயம் கொள்ளவே வேண்டாம். சமீப காலத்தில் சர்தார் வல்லப் பாய் படேல் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நாம் நன்கு அறிவோம்.

அவர் இளைஞராக இருந்த போது அவரது மனைவிக்கு கான்சர் நோய் வர அவர் தனது மனைவியை பம்பாய்க்கு அழைத்துச் சென்று ஹர்கிஷன் தாஸ் மருத்துவ மனையில் அனுமதித்து விட்டு போர்ஸாத்துக்கு (Borsad) திரும்பி வந்தார். அப்போது அவர் ஒரு ப்ளீடர் (Pleader). கடமை அழைக்க கோர்ட்டுக்குச் சென்றவர் தனது வாதத்தைத் தொடங்கினார். அப்போது அவருக்கு ஒரு தந்தி வந்தது. அதைப் படித்து விட்டு அதைத் தன் சட்டைப் பையில் மடித்து வைந்துக் கொண்ட அவர் வாதத்தைத் தொடர்ந்தார். அந்த தந்தியில் அவர் மனைவி இறந்து விட்ட செய்தி வந்தது.

வாதம் முடிந்த பின்னர் அவர் தந்தியின் வாசகத்தை அனைவரிடமும் கூற அனைவரும் அதிர்ந்து விட்டனர்.

எரிமலை மீது ஐஸ்கீரீம் சாப்பிடுபவர் என்று சொல்வது உண்டு. மௌலானா சௌகத் அலி அவரை ‘எ வொல்கொனா இன் ஐஸ்” (A volcano in ice)- ஐஸில் இருக்கும் எரிமலை – என்று சொன்னார்.

ஆக தொண்டைமண்டல வடுகநாதர் போன்றோர் மிக அதிசயமாக உலகில் தோன்றும் மேன்மக்களே.

இதை தொண்டைமண்டல சதகம் கூறிப் பெருமைப் படுவது நியாயம் தானே!

***

tags- தொண்டைமண்டல சதகம், வடுகநாதர், புலவர் திருமணம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: