
Post No. 9698
Date uploaded in London – – –7 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
யோக வாசிஷ்டம்
மனம் என்னும் மகோன்னத சக்தி பற்றிச் சொல்லும் லவணன் கதை!
ச.நாகராஜன்
வசிஷ்ட மஹரிஷி மனதின் மகோன்னத சக்தி பற்றி ஸ்ரீ ராமருக்கு விவரிக்கலானார். அதை நன்கு அவர் புரிந்து கொள்ளும் பொருட்டு லவணன் என்ற மஹராஜனின் கதையைக் கூறலானார்.
லவணன் என்ற மஹராஜன் தன் தேசத்தைச் சிறப்பாக அரசாண்டு வந்தான். ஒரு நாள் அவன் அரசவையில் ஒரு மாயாஜால நிபுணன் வந்தான். அவன் தனது வித்தையைக் காட்ட அனுமதி கேட்டு அரசவையினர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அரசனை மனோவசியம் செய்தான். தனது கையிலிருந்த மயிலிறகுகள் கொண்ட மந்திரக் கோலை அவன் அசைத்தான். அவ்வளவு தான், அரசன் ஒரு ஆழ்ந்த உறக்கநிலைக்குச் சென்றதை அனைவரும் பார்த்தனர். சிறிது நேரம் கழித்தது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து திகைப்புடன் எழுந்த மன்னன் என்ன நடந்தது என்பதை விளக்கினான்.
மன்னனின் கீழ் பணியாற்றிய ஒரு படைத்தலைவன் அவனுக்கு ஒரு அழகிய குதிரையைப் பரிசாகத் தந்தான். அதன் மீது மன்னன் ஏறி அமர, அது வாயு வேகம் மனோவேகமாகப் பறக்கலாயிற்று. அது வேகமாக ஓடி ஒரு அடர்ந்த வனப்பகுதியை அடைந்தது. மன்னன் குதிரையின் வேகத்தைக் கண்டு தாள முடியாமல் அதனிடமிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டுமென்று நினைத்தான். குதிரை ஒரு மரக்கிளையின் வழியே ஓடும் போது மரக்கிளையைப் பிடித்துக் கொண்ட அரசன் குதிரை வெகு தூரம் ஓடிய பிறகு கீழே குதித்தான். அவன் காட்டில் அங்குமிங்கும் சுற்றி அலைந்தான். ஒரே தாகம், பசி.
என்ன செய்வதென்று தெரியாத நிலையில் ஒரு சண்டாளப் பெண்மணி அருகில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தன் தந்தைக்காக உணவு எடுத்துச் செல்வதைக் கண்டான். அவளிடம் சென்று உணவில் ஒரு பகுதியைத் தருமாறு கேட்டான். அவளோ ஒரு நிபந்தனை விதித்தாள். தன்னை அவன் மணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டால் மட்டுமே தன்னால் உணவு தர முடியும் என்று அவள் சொன்னாள். அரசன் அதற்கு இணங்கினான். அரசனுக்கு உணவு வழங்கிய அந்தப் பெண்மணி அவனைத் தன்னுடன் தந்தை இருக்குமிடம் அழைத்துச் சென்றாள். தந்தை சம்மதம் தர அவனை மணந்தாள்.
சண்டாளர்கள் வசிக்கும் இடத்திற்குச் சென்ற அரசன் அவர்கள் வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டி இருந்தது. மாமிசம் முதலிய அவர்களது உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற வேண்டியதாயிற்று. காலக் கிரமத்தில அந்தப் பெண் முதலில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். பின்னர் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். குடும்பம் பெரிதானது. அரசனுக்கு வயது கூடிக் கொண்டே போனது.
ஒரு சமயம் அந்தப் பகுதியில் பெரிய பஞ்சம் வந்து அனைவரையும் வாட்டியது.எவ்வளவோ கஷ்டப்பட்டு பார்த்தும் அவனால் தன் குடும்பத்தைப் பராமரிக்க முடியவில்லை. அவர்களைப் பராமரிக்க முடியாமல் போனதால் அவன் எரியும் நெருப்பில் குதித்து உயிரை விட்டான்.
இந்தக் கணத்தில் திடீரென்று லவணனுக்குச் சுய உணர்வு வந்தது. அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எப்படி இது சாத்தியம் என்று எண்ணலானான். உடனே தான் கனவில் கண்ட வனாந்திரப் பகுதிக்கு நிஜமாகவே சென்றான். அப்படி ஒரு பகுதி அவன் கனவில் கண்டது போலவே இருந்ததை ஆச்சரியத்துடன் அவன் பார்த்தான். தான் கனவில் கண்டபடியே பொருள்களும், இதர அம்சங்களும் இருந்தன. அத்துடன் மட்டுமல்லாமல் தனது மாமனார் மாமியாரையும் அவன் பார்த்தான். மிக கோரமாக இருந்த அவர்களையும் அவலட்சணம் பிடித்த அவர்களது மகளையும் அவன் பார்த்தான். அவளைத் தான் தனது பசியைத் தணிக்க வேண்டி அவன் மணம் புரிந்து கொண்டிருந்தான்.
கதையில் வரும் சம்பவங்களைச் சில நிமிடங்களிலேயே அனுபவித்து விட்டான் லவணன். ஆனால் அவையோ கனவு கண்ட சமயத்தில் நெடுங்காலம் நடந்தவை.
கதையைக் கூறி முடித்த வசிஷ்டர் இதன் தத்துவத்தை விளக்கலானார். மனம் என்பது மகோன்னத சக்தி கொண்ட ஒன்று. காலம், வெளி என்ற உண்மைகளுக்கு உட்பட்டு பல காலம் நடந்த சம்பவங்களை ஒரு சில நிமிடங்களிலேயே அரசன் அனுபவிக்க மனத்தின் அனுபவங்களே காரணம்.
லவணன் ஒரு காலத்தில் அப்படிப்பட்ட வனப்பகுதிக்குச் சென்று அவர்களையோ அல்லது அவர்களைப் போன்று ஒத்து இருப்பவர்களையோ பார்த்தும் இருக்கலாம். கணப்பொழுதில் அவன் அவற்றை மறந்திருந்தாலும் மனப் பதிவுகள் அவனை விட்டு நீங்காமல் இருந்திருக்கும்.
உலகம் என்னும் வனத்தில் இரையாகும் மிருகங்கள் போல வலையில் சிக்கித் தடுமாறுபவை மனிதர்களின் மனங்களே. எவன் ஒருவன் இதை விசாரத்தினால் அறிந்து கொள்கிறானோ அவன், மேகம் விலகிய சூரியன் போல ஆன்மாவின் ஒளியைப் பெற்றவன் ஆகிறான்.
அருமையான இந்தக் கதை யோக வாசிஷ்டத்தில் உத்பத்தி பிரகரணத்தில் இடம் பெறுகிறது
****

tags- மனம் , சக்தி, லவணன் கதை,