
Post No. 9712
Date uploaded in London – – –10 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வைணவ அமுதத் துளிகள்
உண்மை தெரிந்தவுடன் சண்டை இல்லை; சந்தோஷம் தான்!
ச.நாகராஜன்
அடங்கு எழில் சம்பத்து
அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அக்தென்று
அடங்குக வுள்ளே 1-2-7
நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் வரும் பாசுரமான இது இறைவனுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்கும் ஒரு பாடல்.
இதை நஞ்ஜீயர் ஒரு கதை மூலம் அழகுற விளக்குகிறார். வியாபாரி ஒருவன் பணம் சம்பாதிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறினான். அவள் மனைவியோ கர்ப்பிணி. அவன் திரும்பி வர வெகு காலம் ஆயிற்று. இதற்கிடையே கர்ப்பிணி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவன் வளர்ந்து பெரியவன் ஆகி விட்டான். அவனும் வணிகத்தில் ஈடுபட்டான். வியாபார நிமித்தமாக வெளியில் செல்ல ஆரம்பித்தான். அகஸ்மாத்தாக அப்பனும் பிள்ளையும் ஒருவரை இன்னொருவர் யார் என்று அறியாமலேயே சந்திக்க நேர்ந்தது. அவர்கள் இருவரும் சாமான்களை வாங்கி ஒரே இடத்தில் வைத்தனர். அவர்கள் வைத்த கிட்டங்கியோ மிகச் சிறியதாக இருந்தது. இதனால் சண்டை ஒன்று உருவாயிற்று.
வாக்குவாதத்தில் ஆரம்பித்த சண்டை மிகப் பெரிதாகி ஒருவர் தலையை இன்னொருவர் எடுக்கக் கூடிய அளவு போய் விட்டது. அப்போது மூன்றாவது நபர் அங்கே வந்தார். அவருக்கு தந்தையையும் அவரது பிள்ளையையும் நன்கு தெரியும். இருவரும் சண்டையிடுவதைப் பார்த்த அவர் அவர்களுக்கு இடையெ சென்று நின்று, இது உன் தந்தை, இதோ இவன் தான் உன் மகன் என்று கூறினார். அந்த க்ஷணமே விரோதம் மறைந்தது. சண்டை நின்றது. இருவருக்கும் ஒரே ஆனந்தம். இருவரும் தாங்கள் வாங்கிய சாமான்களை ஒன்றாக ஆக்கினர். இருவருக்கும் இப்போது ஒரே நோக்கம் தான். தந்தை என்ற நிலையில் அவர் தனது பையனைக் காக்க வேண்டிய நிலையில் இருந்தார். பையன் என்ற நிலையில் அவன் தந்தையால் காக்கப்பட வேண்டியவன் ஆகி விட்டான்.
இதே போலத் தான் நாம் நமது இறைவனுடனான சம்பந்தத்தை மறந்தவர்களாகி விட்டோம். அவருக்கே நாம் சொந்தம். அவரது விருப்பமும் நமது விருப்பமும் ஒன்றே தான். நமது விருப்பம் அவரது விருப்பத்துடன் இணைந்து விட்டது. இருவரையும் தனித்தனியே பிரிக்கும், இருவருக்கும் இடையே இருந்த ஆழமான பிளவு இப்போது நீக்கப்பட்டு விட்டது. அவரது எல்லையற்ற கம்பீரத்தாலும் தலைமைத்தன்மையாலும் இறை மண்டலங்களாலும் நமது சிறுமையும் நம்மிடம் ஒன்றுமில்லாத் தன்மையும் நீக்கப்பட்டு விட்டது. அவரது எல்லையற்ற உயரிய நிலை முன்னர் நமது ஒன்றுமே இல்லாத நிலை தெள்ளத் தெளிவாகிறது. மாபெரும் அலைகடலில் ஒரு சிறு துரும்பென அல்லாடுகிறோம் நாம். பொங்கி ஆடும் அலைகளில் கரை சேரத் தவிக்கிறோம். ஆனால் அப்படி இல்லை; அவரே நமது சரியான அரசன் என்றும் நம்முடையது எல்லாமே அவருக்குச் சொந்தம் என்பதும் ஆனவுடன் நாம் அவரை அன்புடன் அணுகத் தகுதி உள்ளவர்களாக ஆகிறோம். அவருக்கும் நமக்கும் அலைகடலுக்கும் துரும்புக்கும் உள்ளது போன்ற எல்லையற்ற இடைவெளி இருப்பினும்கூட அன்பினால் அச்சமின்றி அவரை நம்மால் அணுக முடிகிறது.
இதைத் தான் அடங்கு பாசுரம் விளக்குகிறது (திருவாய்மொழி 1-2-7)
அச்சமின்றி இறைவனை நமக்கு உரியவனாக ஆக்கலாம், அவனுக்கு உரியவனாக நாம் ஆகும் போது!
இதை பகவத் விஷயம் முதல் தொகுதி பக்கம் 213-214இல் காணலாம்.
****
tags- உண்மை , சந்தோஷம்,