
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9729
Date uploaded in London – – –14 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 9 கட்டுரை எண் 9598 வெளியான தேதி 13-5-2021
புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 10
ச.நாகராஜன்
26. ஆன்ம தத்துவங்கள் 24
முதலில் பிரகிருதியிலிருந்து மாறத் என்பது உண்டாயிற்று. மாறத்தினிடத்தில் ஸத்வம், ராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்கள் உண்டாயின. இந்த முக்குணங்களிலிருந்து பஞ்ச தன்மாத்திரைகளான சப்தம், ஸ்பரிஸம், ரூபம், ரஸம், கந்தம் ஆகிய ஐந்தும் உண்டாயின. பஞ்ச தன்மாத்திரைகளிலிருந்து ஆகாசம், வாயு, தேயு, அப்பு, பிருதிவி (வானம், காற்று, நெருப்பு, நீர், நிலம்) எனப்படும் ஐந்து பஞ்ச பூதங்கள் உண்டாயின. இந்த பஞ்ச பூதங்களிலிருந்து கர்மேந்திரியங்களான வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபஸ்தம் (வாய், கை, கால், மலவாய், கருவாய்)என்கிற ஐந்தும், ஞானேந்திரியங்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவையும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கும் உண்டாயின.
பூதங்கள் ஐந்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும், தன்மாத்திரைகள் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்) ஐந்தும், தன்மாத்திரைகள் ஐந்தும், அந்தக்கரணங்கள் நான்கும் ஆக இந்த இருபத்துநான்கும் ஆன்ம தத்துவங்கள் ஆகும்.
(சிவபுராணம் முதல் அத்தியாயம்)

27. ஜோதிர்லிங்கங்கள் 12
சூதர் கூறியதாவது:
ஜோதிர்லிங்கங்கள் மொத்தம் 12. அவையாவன:
- சௌராஷ்டிரத்தில் சோமநாத லிங்கம்
- ஸ்ரீ சைலத்தில் மல்லிகார்ஜுன லிங்கம்
- உஜ்ஜயினில் மஹாகாள லிங்கம்,
- சிவபுரியில் ஓங்கார லிங்கம்
- ஹிமோத்ரியில் கேதார லிங்கம்
- டாகினியில் பீமசங்கர லிங்கம்
- காசியில் விஸ்வேஸ்வர லிங்கம்
- கோதாவரி தீரத்தில் த்ரியம்பக லிங்கம்
- ஜார்கண்டில் வைத்தியநாத லிங்கம்
- தாருகாவனத்தில் (உத்தரகண்ட்) நாகேஸ்வர லிங்கம்
- சேதுவில் இராமேஸ்வர லிங்கம்
- ராஜஸ்தான் சிவாலயத்தில் குஸ்மேஸ்வர லிங்கம்
(சிவபுராணம் 12ஆம் அத்தியாயம்)
28. உப ஜோதிர்லிங்கங்கள் 12
சூதர் கூறியதாவது:
ஜோதிர்லிங்கம் பன்னிரெண்டிற்கும் உபலிங்கங்கள் உண்டு.
அவையாவன:
சோமநாத லிங்கத்துக்கு உபலிங்கம் மஹீநதி சமுத்திர சங்கம தீரத்தில் உள்ள அந்தகேச லிங்கம்.
பிருகு பர்வதத்திற்கு சமீபத்திலுள்ள ருத்திர லிங்கம் மல்லிகார்ஜுன லிங்கத்திற்கு உபலிங்கமாகும்.
மகாகாள லிங்கத்திற்கு உபலிங்கம் துக்தேச லிங்கம் ஆகும்.
ஓம்காரேஸ்வர லிங்கத்திற்கு உபலிங்கம் கர்த்தமேச லிங்கம் ஆகும்.
யமுனா தீரத்தில் உள்ள பூதேச லிங்கம் கேதார லிங்கத்திற்கு உபலிங்கம் ஆகும்.
பீமசங்கர லிங்கத்திற்கு உபலிங்கம் பீமேஸ்வர லிங்கம் ஆகும்.
விஸ்வேஸ்வர லிங்கத்திற்கு உபலிங்கம் சரஸ்யேஸ்வர லிங்கம் ஆகும்.
த்ரியம்பக லிங்கத்திற்கு உபலிங்கம் சித்தேஸ்வர லிங்கம் ஆகும்.
வைத்தியநாத லிங்கத்திற்கு உபலிங்கம் வைஜநாத லிங்கம் ஆகும்.
நாகேஸ்வர லிங்கத்திற்கு உபலிங்கம் ஜில்லிகா சரஸ்வதி சங்கமத்தில் இருக்கும் பூதேஸ்வர லிங்கம் ஆகும்.
இராமேஸ்வர லிங்கத்திற்கு உபலிங்கம் குப்தேஸ்வர லிங்கம் ஆகும்.
குஸ்மேஸ லிங்கத்திற்கு உபலிங்கம் வியாக்கியேஸ்வர லிங்கம் ஆகும்.
(சிவபுராணம் 12ஆம் அத்தியாயம்)
29. பத தானங்கள்!
சூத முனிவர் சௌனகாதி முனிவர்களுக்குக் கூறியது:
கருடன் பக்தவஸ்தலப் பெருமாளை நோக்கிப் பத தானம் பற்றிக் கேட்க அவர் கூறியதாவது:
“கருடா! குடை, மாரடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதக கும்பம், ஆசனப் பலகை, அன்னம், பூஜாதிரவியம், பூணூல், தாமிரச் செம்பு, அரிசி ஆகியவற்றை சத் பிராமணருக்குத் தானமாகக் கொடுக்க வேண்டும்.
குடை தானம் செய்தால் ஜீவன் யமபுரிக்குப் போகும் போது குளிர்ந்த நிழலுள்ள மார்க்கமாக கிங்கரர்களால் அழைத்துச் செல்லப்படுவான். மாரடி தானம் செய்தால் குதிரை மேல் செல்வான். இந்த தானங்களால் யமதூதர்கள் மகிழ்ச்சி அடைந்து ஜீவனை வருத்தாமல் ஆதரவோடு அழைத்துச் செல்வர்.
கருட புராணம் அத்தியாயம் 8


***
tags– ஆன்ம தத்துவங்கள் , ஜோதிர்லிங்கங்கள் ,