
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9735
Date uploaded in London – – –15 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 14-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!
துளஸிதாஸர்!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்!

பக்தி தேவதை தன்னைப் பற்றி பாகவதத்தில் கூறுகையில் ‘நான் தமிழ் தேசத்தில் பிறந்தவள்’ என்கிறாள். ஆம், உண்மை தான். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிரதிவ்யபிரபந்தம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நூல்களை நினைத்துப் பார்த்தாலேயே போதும் இது உண்மை தான் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஆனால் பக்தி பாரதமெங்கும் பரவ ஏராளமான மகான்கள் அவதரித்தனர். வடக்கே ஒரு பெரும் பக்தி யுகமே தோன்றியது. சமர்த்த ராமதாஸர், பத்ராசல ராமதாஸர், சூர் தாஸர், ஜெயதேவர், கிருஷ்ண சைதன்யர், லீலா சுகர் என்று இந்தப் பட்டியல் மீக நீண்ட பட்டியல். இந்த மகான்களின் சரிதங்களை ஸ்ரீ மஹா பக்த விஜயம் என்ற நூலில் காணலாம். இந்த மஹான்களிலே குறிப்பிடத் தகுந்த ஒருவர் இருக்கிறார். அவர் புண்ணியத்திற்கான வழியைக் காட்டியவர்.
புண்ணியத்தை வீட்டிலேயே வைத்திருக்க ஒரு வழி உண்டு என்று சொன்னால் ஆச்சரியமாக இல்லை? இதை வட நாட்டில் பக்தர்களிடம் சொன்னால், “ ஓ, ராமசரிதமானஸம் வீட்டில் இருக்கிறதா என்று கேட்கிறீர்களா? என்பார்கள். ஆம், துளஸிதாஸர் இயற்றிய ராமசரிதமானஸத்தை வீட்டில் வைத்திருந்தாலே புண்ணியம் தான்! கோடானு கோடி மக்களுக்கு ஆன்மீக ஜீவனாகத் திகழ்வது ராமசரிதமானஸம். இதை இயற்றி அருளிய துளஸிதாஸர் ஒரு அபூர்வமான மகான்.
ராம சரிதத்தை உலகியல் மொழியான அவதி மொழியில் ராமசரித மானஸ் என்று துளஸிதாஸர் (1532 – 1623) இயற்றிய இடம் அயோத்தி!

துளஸிதாஸரின் வாழ்க்கை அற்புதமான சம்பவங்களைக் கொண்டது.ராஜாப்பூர் என்ற ஊரில் ஆத்மாராம்-ஹூலசி என்ற பிராமண தம்பதிகளுக்கு மூல நக்ஷத்திரத்தில் துளஸிதாஸர் அவதரித்தார். அவர் கர்ப்பத்தில் 12 மாதம் இருந்தார், பிறக்கும் போது 32 பற்களுடன் பிறந்தார், அத்துடன் பிறந்த உடனேயே ஐந்து வயதுக் குழந்தை போல இருந்தார். ராமா என்ற நாமத்தை உச்சரித்துக் கொண்டே பிறந்தார். இந்த நிலையில் பிள்ளையைப் பார்த்தால் தந்தை கண்டிப்பாகத் தன் பிள்ளையைத் துறந்து விடுவார் என்று அவரது தாயார் பயந்தார். ஆகவே சுனியா என்ற தாதியிடம் தன் குழந்தையைக் கொடுத்து வளர்க்கச் சொன்னார். ஆனால் அவரும் சில நாளில் இறந்து விடவே குழந்தை அனாதையாகவே வளர நேர்ந்தது. நரஹரியானந்தர் என்ற வைணவர் குழந்தையை அயோத்திக்கு அழைத்துச் சென்று யக்ஞோபவீதம், பஞ்ச சம்ஸ்காரம் உள்ளிட்டவற்றைச் செய்வித்தார். 15 வருடங்கள் வித்யாப்யாசம் செய்து வீடு திரும்பிய அவருக்கு பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பிராமணர் தன் பெண்ணை விவாகம் செய்து கொடுத்தார். இந்த மணவாழ்வில் தான் அவர் ராம பக்தராக மாறிய அதிசய சம்பவம் நிகழ்ந்தது.
அவரது மனைவி மீது கொண்ட அளவற்ற ஆசையால் அவர் மனைவி தனது பிறந்தகம் சென்ற போது அவரைத் தொடர்ந்து பின்னால் சென்றார்
அதைப் பார்த்த அவர் மனைவி, “எனது இந்த சதை மீதும் எலும்பின் மீதும் கொண்டிருக்கும் பற்றைப் போல ராமபிரானின் மீது கொண்டால் பிறப்பு இறப்பு பயம் நீங்குமே” என்று சொல்ல கண நேரத்தில் உலக வாழ்க்கையைத் துறந்து மஹா ஞானியானார் அவர்.
பாரத தேசமெங்கும் சுற்றி அலைந்து அனைத்து ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்து பக்தி மேலிட நெகிழ்ந்தார்; உருகினார்.
பின்னர் வாரணாசிக்கு அவர் வந்த போது அயோத்திக்குச் செல்லுமாறு இறைவனின் திருவருள் ஆணை பிறந்தது. அயோத்தி சென்றார் அவர்.
அங்கு அவர் துளஸி ராமாயணத்தை இயற்றியது பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
ராமாயணத்தை வால்மீகி முனிவர் இயற்றிய போது அதைப் படித்து அதற்கு தனது கையெழுத்திட்டு அங்கீகாரம் தந்தார் ராமபிரான்.
ஹனுமானும் ராம சரிதத்தை எழுத ஆசைப்பட்டு கற்களில் தன் நகங்களால் ராம சரிதத்தை எழுதினார். தனது ராமாயணத்தை ராமபிரானிடம் அவர் காண்பிக்க, ராமபிரான், அதுவும் சரிதான் என்று கூறி விட்டு,, “ஆனால் ஏற்கனவே வால்மீகி ராமாயணத்தில் கையெழுத்திட்டு விட்டதால் அதில் தன்னால் கையெழுத்திட முடியாது என்றும் வால்மீகியிடம் சென்று அதைக் காண்பிக்குமாறும் அருளுரை பகர்ந்தார்.
ஹனுமான் வால்மீகியிடம் சென்றார்; தனது ஹனுமத் ராமாயணத்தைக் காட்டினார்.’அதைப் படித்து வியந்த வால்மீகி தனது ராமாயணம் அதற்கு முன் நிற்காது என்ற முடிவில் ஹனுமனது ராமாயணத்தைக் கடலில் போடுமாறு கேட்டுக் கொண்டார்.
வால்மீகி கூறியபடி தனது ராமாயணத்தைக் கடலில் போட்ட ஹனுமார் இனி வரும் காலத்தில் தானே துளஸி என்ற பெயருடைய ஒரு பிராமணருக்கு உத்வேகம் ஊட்டி, தனது ராமாயணத்தை எல்லா மக்களும் எளிதில் அறியும் மொழியில் இயற்றச் செய்யப் போவதாக அருளுரை பகர்ந்தார்.
அதன் படியே நடந்தது. அயோத்திக்குச் சென்ற துளஸிதாஸர் அங்கு ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தார். அந்த இடம் அவருக்கு ஏற்கனவே ஏற்பாடாகி இருந்தது. ஒரு சாது அந்த இடத்தைப் பீடத்தால் அலங்கரித்து துளஸிதாஸர் அங்கு வருவதைத் தன் குரு முன்னதாகவே கணித்துச் சொல்லி விட்டார் என்று கூறினார்.
1575ஆம் ஆண்டு ராம நவமி நாள். அறிஞர்களின் கூற்றுப்படி திரேதா யுகத்தில் ராமர் பிறந்த நாளில் எந்த கிரக நிலைகள் இருந்தனவோ அதே கிரக சேர்க்கை அமைந்த நாள் அது. ராமரைத் துதித்து தன் ராமசரிதமானஸ் காவியத்தைத்த் தொடங்கினார் துளஸிதாஸர்.
ஏழு காண்டங்களை எளிய மொழியில் இரு வரிகள் கொண்ட 6700 ஸ்லோகங்களில் பாடினார். மானஸ சரோவருக்கு ஏழுபடிகள் வழியே செல்வதாக உள்ள கருத்துப்பட ராமசரித மானஸ் என்ற பெயரை தான் இயற்றிய ராமாயணத்திற்குச் சூட்டினார்.
இரண்டு வருடம் ஏழு மாதம் 26 நாட்களில் அற்புதமான காவியம் முடிந்தது. அது முடிந்த நாள், சீதா கல்யாணம் நடந்த அதே ஆண்டு விழா நாள்.
சரிதத்தைப் பூர்த்தி செய்த துளஸிதாஸர் வாரணாசி திரும்பினார்.
அங்கு அவரது காவியத்தின் பெருமை பரவியது. இது பொறுக்காத பண்டிதர்கள் சிலர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுவடிக் கட்டை எடுத்து வருமாறு இருவரை அனுப்பவே அவர்கள் ஆலயத்திற்கு இரவு நேரத்தில் சென்றனர்.
ஆனால் அங்கு இருவர் வில்லும் அம்புடனும் காவல் காத்து வருவதைப் பார்த்து அதிசயித்த அவர்கள் மறுநாள் துளஸிதாஸரை வணங்கி மன்னிப்புக் கேட்டு நடந்ததைக் கூறினர்.
‘அமிர்த கோ பி லஜ்ஜித கரதி சமர்த்த ஹோகர் ப்ராக்ருத வாணி’ -அமிர்தமே நாணமடையும் படியான சுவையான சொற்கள் கொண்டது எனப் புகழப்படும் காவியம் மக்களிடையே பரவி ராம பக்தியை வளர்த்தது.
சித்ரகூடத்தில் ராம தரிசனம் பெற்ற துளஸிதாஸர் சமாதி நிலையை எய்தினார்.
12 நூல்களைப் படைத்த துளஸிதாஸர் சம்ஸ்கிருதம் நன்கு அறிந்த ஒரு சம்ஸ்கிருத பண்டிதரும் கூட!
ராமசரித மானஸ் காவியத்தில் அமைந்திருக்கும் ஒரு அற்புதமான விஷயம் அதிசயமானது. வால்மீகியின் ராமாயணத்தில் ஒவ்வொரு ஆயிரமாவது ஸ்லோகத்திலும் காயத்ரி மந்திரத்தின் ஒரு எழுத்து தோன்றும். ராமசரித மானஸிலோ ஒவ்வொரு செய்யுளிலும் ச, த, ர, ம வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு எழுத்து வரும்.சீதாராமன் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்கள் இந்த ச, த, ர, ம வர்க்க எழுத்துக்கள். ஆக சீதை அல்லது ராமனை ஒவ்வொரு செய்யுளிலும் துதிக்கும்படியான ஒரு அற்புத அமைப்பு துளஸி ராமாயணத்தில் உள்ளது. காவியத்தின் கதையையும் சொல்ல வேண்டும், சந்த சாஸ்திரத்தின் படியும் அமைக்க வேண்டும், சீதாராமன் என்ற சொல்லில் உள்ள வார்த்தைகளில் ஏதேனுமொரு வார்த்தையைக் குறிக்கும் வர்க்க எழுத்தையும் தர வேண்டும் என்றால் அது மனித யத்தனத்திற்கு அப்பாற்பட்ட இறை செயல் அல்லவா? ராமனே தனது ஜென்ம பூமியில் தன் நினைவை மக்களுக்கு ஒவ்வொரு செய்யுளிலும் தரும் வரம் அல்லவா இது!
ராமசரிதமானஸத்தின் சிறப்புக்களைச் சொல்வது எளிதல்ல. இதன் ஏழு காண்டங்களும் ஏழு படிக்கட்டுகளாகும். சிவன் – உமை, சிவன் – காகுபசுண்டி, காகுபசுண்டி – கருடன், யாக்ஞவல்க்யர்- பரத்வாஜர் ஆகியோரிடையே நடந்த நான்கு சம்வாதங்கள் அதாவது உரையாடல்களும் நான்கு துறைகளாகும். மானஸத்தில் இருந்து சரயு, கங்கை, சோனை ஆகிய நதிகள் கிளம்புகின்றன. அது போல ராமசரிதமானஸத்தில் இருந்து கதை, பக்தி, வைராக்கியம் ஆகிய மூன்றும் வந்து நம்மைச் சேரும்.
யார் இந்த நூலுக்கு அதிகாரிகள்? இதற்கு அதிசயிக்கத்தக்க விளக்கம் வருகிறது. யார் இதைப் பாடுகிறார்களோ, யார் இதைச் சொல்கிறார்களோ, யார் இதைக் கேட்கிறார்களோ அவர்கள் எல்லாம் இதற்கு அதிகாரிகள். அட, கேட்டாலே இது நமது சொத்தாகி விடுகிறதா?! என்று அதிசயிக்கும் போது தான் இது வீட்டில் இருந்தாலேயே புண்ணியம் என்பதன் அர்த்தம் நமக்குப் புலப்படும்!
இந்த மானஸ்த்தில் குளிப்பதற்கான அன்னங்கள் தானே வரும். கொக்கு போன்றவை வரவே வராது. அன்னத்திற்கு ஆகாரம் உண்டு இங்கே! ஆனால் கொக்குகளுக்கோ ஆகாரம் இங்கு இல்லை.
ராமரைக் கண்ட சீதையின் பணிப்பெண் அவரின் அழகை விளக்க வழி தெரியாமல் கூறும் உவமை இது: “கிரா அநயனா நயன வினு வாணீ!”
இதன் பொருள் “நாக்குக்குக் கண்கள் இல்லை; கண்களுக்கோ பேசும் சக்தி இல்லை. எப்படி அவரின் அழகை விவரிப்பேன்?” இப்படி தோழி கூற, தன் தோழியை முன்னிட்டு சீதை அரசிளங்குமரர் இருவரையும் பார்க்கிறாள்.
இப்படி ஏராளமான உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உவமைகளும், உபதேசங்களும், சிவ விஷ்ணு பேதத்தை நீக்கும் பாடல்களும் இதில் உள்ளன.
இதில் ராட்சஸ வர்ணனை அதிகம் இல்லை; ஆனால் அவதாரத்தின் வர்ணனையோ அதிகம் உண்டு. நல்லதைச் சொல்; கெட்டது தானே அழியும் என்பது துளஸிதாஸரின் மனப்போக்கு.
துளஸிதாஸரைப் பற்றி முன்னூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன்னர் தோன்றிய வேணு கவி என்பவர், “துளஸி என்று ஒருவர் தோன்றி இப்படி ஒரு மானஸத்தை உருவாக்கி இராவிட்டால் நாம் வேதம் என்ன கண்டோம், பக்தி என்ன கண்டோம், நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடு தான் என்ன கண்டோம் என்று அழகுறக் கூறியுள்ளார். உண்மை தானே!
நம்மாழ்வார் திருவாய்மொழியில் எதைக் கற்க வேண்டும் என்பதை அழகுறக் கூறியுள்ளார்
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே
இராமபிரானைக் கற்று அவனை சரணாகதி அடைந்தால் வரும் பயன் என்ன? ராமரின் உறுதி மொழியே அதைத் தெரிவிக்கிறது! ராமாயணத்தின் உயிர்நாடியாக விளங்கும் அவரது ‘உறுதி மொழி ஸ்லோக’மானது யுத்தகாண்டம் 18ஆம் ஸர்க்கத்தில் 33ஆவது ஸ்லோகமாக அமைகிறது
ஸக்ருத் ஏவ பிரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே |
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம ||
ஒரு முறை சரணம் அடைந்தாலும் உனக்கு அடியேனாக நான் ஆகிறேன், யாசிப்பவன் பொருட்டு எல்லா பிராணிகளிடத்திலும் நின்று அபயம் கொடுக்கிறேன். இதுவே எனது திட விரதம் – இது ராமபிரானின் சத்திய வாக்கு. சரணாகதி அடைந்த பக்தனை ராமன் எப்படிக் காப்பாற்றுவான்?
ஒரு சின்னக் கதை!
கடுமையான வெயில். காடு அடர்ந்த மலைப் பகுதி. பாதை சேறும் சகதியுமாக இருக்கிறது. சில பகுதிகளோ கல்லும் முள்ளுமாக கரடுமுரடாக இருக்கிறது. அந்த வழியில் செல்ல வேண்டியிருந்த பெருமாள் பக்தன் ஒருவனால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. பெருமாளைச் சரணடைந்தான் அவன். காப்பாற்று காப்பாற்று, சரணம் என்று கத்தினான் அவன். அவன் முன்னே பெருமாள் தோன்றி ஏன் கத்துகிறாய்? என்றார். ‘பெருமாளே சரணம். எனக்கு பயமாய் இருக்கிறது?’ என்றான் அவன். ‘சரி, நான் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டார் பெருமாள். ‘வேறு ஒன்றும் வேண்டாம், கூடவே வந்தால் போதும், எனக்கு தைரியமாக இருக்கும்’ என்றான் பக்தன். “சரி, அப்படியே ஆகட்டும்” என்றாள் பெருமாள். அவர் மறைந்தார். சேறும் சகதியும் நிறைந்த பாதையில் தன் இரு காலடித் தடங்களைப் பதித்தான் பக்தன். என்ன ஆச்சரியம், கூடவே இன்னும் இரு பாதத் தடங்கள் இருந்தன. பக்தனுக்கு பரம சந்தோஷம், பெருமாள் வாக்குக் கொடுத்தபடி கூடவே வருகிறார் என்று. சற்று தூரம் சென்ற பின்னர் பாதை இன்னும் கடுமையாக ஆனது. பக்தனுக்குக் களைப்புத் தாளவில்லை. மெல்ல அடி எடுத்து வைத்தான். திடீரென்று பார்த்தால் இரண்டு காலடித் தடங்கள் மட்டுமே இருக்கிறது பாதையில். பக்தன் திடுக்கிட்டு அலறினான். ‘பெருமாளே! சரணம் அடைந்த என்னை இப்படிப் பாதியில் விட்டு விடலாமா. இரண்டு தடங்கள் தானே இருக்கிறது?’ என்று கூறி ஓவென்று அலறினான். ஒரு குரல் கேட்டது. “அட முட்டாளே! அது என்னுடைய பாதத் தடம். நீ நடக்க முடியாமல் தவித்ததால் உன்னை என் தோளின் மீது அமர்த்தி வைத்துக் கொண்டு நான் நடக்கிறேன்” என்றது அசரீரி குரல்! பக்தன் கண்ணீர் சொரிந்தான்.
GOD HAS NEVER BROKEN A PROMISR EVER SPOKEN!
ராம நாம மஹிமை பற்றி கவிச்சக்கரவர்த்தி கம்பன் மிக அழகாகக் கூறி விட்டான் இப்படி:-
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமவென்ற இரண்டெழுத்தினால்.
துளஸி ராமாயணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பும் கிடைக்கிறது.
துளஸி ராமாயணம் கற்போம்; இராமரைச் சரணடைவோம்! இக பர சௌபாக்யம் அடைவோம்!
நன்றி, வணக்கம்!
tags- துளஸிதாஸர், ராமசரிதமானஸ,
