
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9740
Date uploaded in London – – –16 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள் – 17 வெளியான தேதி 6-6-21 கட்டுரை எண: 9693
நடந்தவை தான் நம்புங்கள் – 18
ச.நாகராஜன்
விதவிதமான புத்திசாலிகள்!
புத்திசாலித்தனம் எங்கும் எப்போதும் இருந்தால் தான் பிழைக்க முடியும் என்பது தான் இந்தக் காலத்திற்கான உண்மை! வித விதமான சந்தர்ப்பங்களில் வித விதமான புத்திசாலிகள் விதவிதமாக நடந்து கொண்டு தங்கள் சாதுரியத்தாலும் புத்திசாலித்தனத்தாலும் நிலைமையைச் சமாளித்துள்ளனர். சில புத்திசாலிகளைப் பார்ப்போமா?!!
வக்கீலின் தர்மசங்கடம்
மஹராஷ்டிர கவர்னராக இருந்த சி.சுப்ரமணியம் புகழ் பெற்ற ஒரு கிரிமினல் லாயரும் கூட! அவர் ஒரு கொலை கேஸில் தன் கட்சிக்காரருக்காக பிரமாதமாக வாதிட்டார்.
நீதிபதி தீர்ப்பைக் கூறினார்: “குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் இழைக்கவில்லை. நிரபராதி, ஆகவே விடுதலை செய்கிறேன்”.
தீர்ப்பு இப்படி வழங்கப்பட்ட போதும் கூட குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளிக் கூண்டிலிருந்து இறங்கவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
நீதிபதி வக்கீலைப் பார்த்துக் கேட்டார்: “என்ன, உங்கள் கட்சிக்காரரைத் தான் நிரபராதி என்று சொல்லி விடுவித்து விட்டேனே. இன்னும் அவர் குற்றவாளிக் கூண்டிலிருந்து ஏன் நகர மாட்டேன் என்கிறார்?”
உடனே வக்கீல் கூறினார்: “ யுவர் ஹானர்! அவர் குற்றம் இழைக்கவில்லை என்று உங்களிடம் நான் நிரூபித்து விட்டேன். ஆனால் அவரிடம் நான் இன்னும் அதை நிரூபிக்கவில்லையே!”
நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
நல்லவேளையாக தீர்ப்பு முன்னதாகவே வழங்கப்பட்டிருந்தது!
– The Hindu பத்திரிகையில் 14-1-1995 இதழில் Kolam Krishna Iyer எழுதியுள்ள சம்பவம்
–
– ****
ஸ்வீடன் மன்னருக்கும் தெரியாத விஷயம்!

ஸ்வீடன் மன்னராக புகழ் பெற்று இருந்தவர் இரண்டாம் ஆஸ்கார் (King Oscar II-
1827-1907). ஒரு நாள் அவர் பள்ளி ஒன்றுக்கு விஜயம் செய்தார். 12 வயது மாணவர்கள் பயிலும் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்த அவர், மாணவர்களைப் பார்த்து, “ஸ்வீடன் சரித்திரத்திலேயே மாபெரும் மன்னர் யார்?” என்று கேட்டார்.
ஒரு பையன் எழுந்து, “குஸ்டாவஸ் வாஸா” (Gustavas Vasa) என்றான்.
இன்னொரு பையன் எழுந்து, “குஸ்டாவஸ் அடோல்பஸ்” (Gustavas Adolphus) என்றான்.
வாத்தியாருக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அவர் ஒரு பையன் காதில் மெதுவாக முணு முணுத்தார். அந்தப் பையன் எழுந்து, “இரண்டாம் ஆஸ்கார்”, என்று கூறினான்.
உடனே மன்னர், “அப்படி என்ன அவர் பெரிதாய்ச் செய்து விட்டார்?” என்று கேட்டார்.
பையன், “எனக்கு.. எனக்குத் தெரியாது” என்றான்.
உடனே மன்னர், “அதனால் என்ன, பரவாயில்லை, எனக்கும் தான் தெரியாது” என்றார்.
****

மூன்று கடித உறைகள்!
நாட்டின் மிகப் பெரிய சூப்பர் மார்கெட் நிறுவனம் ஒன்றினால் அவர் பொது மேலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் வேலைக்குச் சேர்ந்த போது அங்கிருந்து பதவி விலகிச் சென்ற பொது மேலாளர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். “சார், உங்கள் அறிவுரை என்ன சார்?” என்று கேட்டார் புது மேலாளர்.
“இதோ, மூன்று கவர்களைத் (கடித உறைகள்) தருகிறேன். மிக மிக கஷ்டமான சூழ்நிலையில் மட்டும் இந்தக் கவரைத் திறந்து பாருங்கள். ஒரு தீர்வு கிடைக்கும்” என்று கூறி, 1, 2, 3 என்று எண்ணிட்ட மூன்று கவர்களைப் புது மேலாளருக்குக் கொடுத்தார் பழைய மேலாளர்.
சூப்பர் மார்கெட்டில் வேலை சூப்பராகப் போய்க் கொண்டிருந்தது. சில மாதங்கள் கழிந்த பின்னர் சிக்கல் ஆரம்பித்தது. விற்பனை படு மந்தம். மேலே உள்ளவர்கள் மேலாளரைக் குடைய ஆரம்பித்தனர் – என்ன நடக்கிறது என்று?!
மூன்று கவர்களில் முதல் கவரைப் பிரித்தார் மேலாளர், ஏதேனும் வழி பிறக்கும் என்று.
அதில் எழுதி இருந்தது இப்படி: “ எல்லாப் பழியையும் முந்தைய பொது மேலாளர் மேல் போடு”
அவ்வளவு தான், உற்சாகமாக மேலிடத்திற்கு எப்படி முந்தைய மேலாளர் கண்ட கண்ட சரக்கை எல்லாம் வாங்கிக் குவித்து வைத்திருக்கிறார், அதைத் தள்ளுவதற்கு தான் எவ்வளவு கஷ்டப்படவேண்டி இருக்கிறது என்று ஒரு பெரிய புராணத்தையே பாடினார் மேலாளர். மேலிடம் அவர் விளக்கத்தை ஏற்றுக் கொண்டது.
தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று, கடுமையாக உழைத்து விற்பனையை சரி செய்தார் மேலாளர்.
இன்னும் சில மாதங்கள் நன்றாக ஓடின. அடுத்தாற் போல மீண்டும் ஒரு சிக்கல். விற்பனை கீழே இறங்கத் தொடங்கியது. மேலிடத்திலிருந்து கேள்வி வந்து விட்டது – என்ன நடக்கிறது, அங்கே என்று.
வேறு வழி தெரியாத நிலையில் இரண்டாவது கவரைப் பிரித்துப் பார்த்தார் மேலாளர்.
REORGANIZE – அனைத்தையும் மறுபடி சீர்படுத்து – என்று இருந்தது. உடனே உற்சாகமாக மேலிடத்திற்கு விவரத்தைச் சொன்னார் மேலாளர்.
காலத்திற்கேற்றபடி புது உத்தி தேவையாக இருக்கிறது என்று! மேலிடமும் ஒப்புக் கொண்டது. விதவிதமாக சரக்குகளை வாங்கி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து விற்பனையை உயர்த்தினார் மேலாளர். இன்னும் சில மாதங்கள் சூப்பராக ஓடின.
அடுத்தாற் போல ஒரு பெரிய சரிவு. இந்த முறை மேலிடம் மிகக் கடுமையாக விளக்கத்தைக் கேட்டிருந்தது.
வேறு வழியில்லாமல் மூன்றாவது கவரைப் பிரித்துப் பார்த்தார் மேலாளர்.
அதில் இருந்தது இப்படி : – “உடனே மூன்று கவர்களைத் தயார் செய்!”
***

tags – நடந்தவை தான், நம்புங்கள் – 17 , மூன்று உறைகள்,