
இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை – 2 (Post No.9749)
Post No. 9749
Date uploaded in London – –18 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
கட்டுரையின் முதல் பகுதி நேற்று 17-6-2021 வெளியானது. இது இரண்டாம் பகுதி.
சுவையான கதையைச் சொல்கிறேன் ……….
1800 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க மருத்துவர் காலன் (Galen) என்பவர் இரும்புத் துகளை பேதி மாத்திரையாக பயன்படுத்தலாம் என்றார். ஆனால் உண்மையில் அது மலத்தைக் கட்டுப்படுத்தும் என்பதை இன்று நாம் அறிவோம்.
காய்கறிச் சாம்பலில் இரும்பு இருப்பதை அறிந்த இத்தாலிய மருத்துவர் வின்செஞ்சோ மெங்கினி (Menghini) 1740-களில் ஒரு விந்தையான சோதனையைச் செய்தார் . ஒரு நாயைப் பிடித்து அதற்கு இரும்புச் சத்து அதிகமுள்ள உணவைக் கொடுத்து அதன் ரத்தத்தை எடுத்தார். அதைக் கருக்கி சாம்பல் ஆக்கி அதை காந்தம் அருகில் கொண்டு சென்றார். அப்போது ரத்தத்தில் இரும்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆயினும் இதன் முழு விவரத்தையும் 1832-ம் ஆண்டில் டாக்டர் பிளான்ட் (Dr Bland) வெளிப்படுத்தினார் . ரத்த சோகை உள்ள ஒரு நோயாளிக்கு இரும்பு சல்பேட் மாத்திரைகளைக் கொடுத்து குணப்படுத்தினார்.
ரத்தத்தில் உள்ள இரும்புச் சத்து நிறைந்த ஹீமோகுளோபின் உயிர் வாயுவான ஆக்சிஜனை எல்லா செல்களுக்கும் அளிக்கிறது என்பதை இன்று நாம் எல்லோரும் பள்ளியிலே கற்றுக்கொண்டு விடுகிறோம்.
xxx
இரும்பைக் கண்டுபிடித்தது யார் ?
உலகின் பழைய நூலான ரிக்வேதத்தில் ‘க்ருஷ்ண அயஸ்’ என்ற பெயரில் இரும்பு பற்றி பாடல்கள் உள்ளன. தில்லியில் குப்தர் காலம் முதல் துருப்பிடிக்காமல் இன்றும் நின்று கொண்டிருக்கும் இரும்புத் தூண் உலக அதிசயங்களில் ஒன்றாகும். 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்திலும் இரும்பினால் ஆன கத்தி, வாள் பற்றிய குறிப்புகள் உள . இந்தியாவுக்கு வெளியே துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளில் இரும்புத் தொழில் ஆலைகள் , பட்டறைகள் இருந்தன. எகிப்தில் கி.மு.3500 ஆண்டுப் பழமையான இரும்புப் பொருட்கள் கிடைத்தன. ஆயினும் அவை வானத்தில் இருந்து விழுந்த விண்கற்களைப் (Meteorites) பயன்படுத்தி செய்யப்பட்டவை. அதில் 7 சதவிகித நிக்கல் உலோகமும் இருப்பதை வைத்து இதை அறிந்தனர். விண்வெளியில் இருந்து பூமியில் விழும் விண்கற்களில் (Meteorites) இப்படி இரும்பும் நிக்கலும் இருப்பதை விஞ்ஞானிகள் அறிவர்.
கிரேக்க நாட்டிலுள்ள மக்னிஷியா (MAGNESIA IN IONIA )என்னும் ஊரிலிருந்து வந்த இரும்புத்தாது மற்ற இரும்புடன் ஒட்டிக் கொள்வதை கிரேக்கர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் அதற்கு மாக்னெட் (MAGNETS) என்று பெயர் வைத்தனர் . இன்று அதை நாம் காந்தம் என்கிறோம். காந்தம் பற்றிய குறிப்புகள் காளிதாசன் பாடல்களிலும் திருமூலரின் திருமந்திரத்திலும் இருப்பது குறிப்பிடத் தக்கது
xxx
போரில் இரும்பு ஆயுதங்கள்
இரண்டாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் போரில் இரும்பினாலான வாட்களைப் (Swords) பயன்படுத்தி வருகின்றனர். இன்றும் போர்த்தி தளவாடங்களான டாங்கிகள், பீரங்கிகள், துப்பாக்கிகளில் இரும்புதான் முக்கிய உலோகம். ரோமானிய போர்த் தெய்வமான மார்ஸ்(Mars) எனப்படும் செவ்வாய் தேவதையுடன் இரும்பைத் தொடர்புபடுத்தி எழுதினர் . பிளினி (PLINY) என்ற வரலாற்று ஆசிரியர் எழுதுகிறார்:-
“இரும்பைக் கொண்டு கட்டிடம் கட்டுகிறோம்; பாறைகளைப் பிளக்கிறோம் இன்னும் பல பயனுள்ள செய ல்களைச் செய்கிறோம். ஆனால் அதே நேரத்தில் இரும்பைப் பயன்படுத்தி போர் செய்கிறோம், கொலை, கொள்ளையும் செய்கிறோம். நேருக்கு நேர் மட்டுமா? எந்திரங்கள் மூலம் தொலைவிலுள்ள இலக்குகளையும் பறக்கும் ஆயுதங்கள் மூலம் தாக்குகிறோம்”. இது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய புலம் பல் !!
xxx
இரும்பு எங்கே கிடைக்கிறது ?
இரும்பு கலந்த தாதுக்கள் ஹேமடைட், மாக்னடைட் , சிடரைட் முதலியன ஆகும். இவை அதிகம் கிடைக்கும் நாடுகள்- இந்தியா , சீனா , பிரேஸில் , ஆஸ்திரேலியா , ரஷ்யா , அமெரிக்கா , கனடா .
இரும்பில் தேனிரும்பு, வார்ப்பிரும்பு , எஃ கு (Pig Iron, Cast Iron, Steel) என்று பல வகைகள் உள்ளன.
இரும்பினால் கட்டப்பட்ட பாரிஸ் நகர ஜபல் (Eiffel Tower in Paris, France) கோபுரத்தை, 100 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லோரும் குறைகூறி எள்ளி நகை ஆடினர் . இன்றோ அது உலகப் புகழ் பெற்ற சுற்றுலா கவர்ச்சியாகத் திகழ்கிறது
xxx
பொருளாதார உபயோகங்கள்
இரும்பு இல்லாத இடமே இல்லை என்று சொல்லிவிடலாம் . நாம் உபயோகிக்கும் ஆணி முதல் கம்ப்யுட்டர் , கார், விமானம் வரை எல்லாவற்றிலும் இரும்பும் அதனுடன் கலந்த கலப்பு உலோகமும் தான் இருக்கின்றன. இதைப் படிக்கும்போது உங்களைச் சுற்றிலும் உள்ள பொருள்களை நோட்டமிடுங்கள் . பெரும்பாலானவற்றில் இரும்பு இருப்பதைக் கண்டு வியப்பீர்கள் . பேனா முதல் நாணயம் வரை பலவற்றில் இரும்பின் கலப்பு இருக்கிறது; இயந்திரங்கள், பட்டறைகள் இல்லாத இடமும் உண்டோ!
இரும்பின் இரண்டு முக்கிய குணங்கள்
1.ஒன்று காந்தத்துடன் ஒட்டிக்கொள்ளும்.
2.இரண்டு துருப்பிடிக்கும்; அதாவது காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் கலந்து இரும்பு ஆக்சைடுகளை உண்டாக்கும்; குறிப்பாக ஈரப்பதம் இருந்தால் அதிகம் ‘ஆக்சிடேஷன்’ நடக்கும்.
xxx
இரும்பின் ரசாயன தகவல் :–
குறியீடு – Fe (எப்ஈ); பெர்ரம் என்ற லத்தின் சொல்லின் சுருக்கம்.
அணு எடை – 26
உருகு நிலை – 1535 டிகிரி C ஸி
கொதி நிலை – 2750 டிகிரி C ஸி
சுத்தமான நிலையில் இரும்பு என்னும் உலோகம் வெள்ளி போல பள பளக்கும் . ஈரப்பதம் இல்லாத இடங்களில் துருப்பிடிக்காது. துருப்பிடிப்பதைத் தடுக்க வேறு உலோகங்களைக் கொண்டு பூச்சு கொடுத்தால் போதும்.
இதற்கு நான்கு ஐசடோப்புகள் இருக்கின்றன. எதற்கும் கதிரியக்கம் இல்லை.
எளிதில் அமிலத்தில் கரையக்கூடியது இது .
xxx
கீரை சாப்பிட்டு ஏமாறாதீர்கள்!!
இந்த பூமியில் இரும்புக்கு பஞ்சமே இல்லை. ஏனெனில் பூமியின் பெரும்பகுதி இரும்புதான். நமது பூமியின் விட்டம் 12,742 கிலோமீட்டர் . இதன் உட்கருவின் (Core) விட்டம் 7000 கி.மீ .. அதிலும் 2000 கிலோமீட்டர் குறுக்களவுக்கு முழுக்க முழுக்க (Solid Iron) இரும்புதான்!
சிலவகை பாக்டீரியாக்கள் அவற்றிலுள்ள இரும்புத் துகளை ‘காம்பஸ்’ என்னும் திசை காட்டும் கருவியாகப் பயன்படுத்துகின்றன. தாவரங்களுக்கும் பிராணிகளுக்கும் மிகவும் தேவை இரும்புதான் .
கீரை பற்றிய ஒரு சுவையான விஷயத்துடன் கட்டுரையை முடிப்போம். பச்சை நிறம் உடைய தாவரங்களில் இரும்பு இருப்பது உண்மையே. ஆனால் கீரையிலுள்ள இரும்பு ச்சத்தை உடல் (not assimilated) ஏற்றுக்கொள்வதில்லை . ஆதிகாலத்தில் வெளியான பிரசுரங்களில் வெளியிடப்பட்ட தகவல் தவறு. அது இன்னும் சரி செய்யப்படவில்லை. கீரை நிறைய சாப்பிடுங்கள். ஆனால் இரும்புச் சத்துக்காக சாப்பிட்டு ஏமாறாதீர்கள்!!


–subham–
tags- இரும்பு -2, இரும்புச் சத்து-2