
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9784
Date uploaded in London – – 28 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆலயம் அறிவோம்- ஸ்ரீ காள ஹஸ்தி கோவில்-Part 35
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 27-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!
அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி
வட்டவார் சடையனை வயல் அணி காழியான்
சிட்ட நால்மறை வல் ஞானசம்பந்தன் சொல்
இட்டமாப் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு ஸ்தலமாக அமைவதும், சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்வதும், ராகு கேது ஸ்தலமாக அமைவதுமான ஸ்ரீகாளஹஸ்தி தலமாகும். இது திருப்பதியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஸ்ரீ என்றால் சிலந்தி. காள என்றால் பாம்பு. ஹஸ்தி என்றால் யானை என்று பொருள். இந்தத் தலத்தில் ஞானப் பிரஸூனாம்பாள் சமேதராகக் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் தன்னை வழிபட்ட சிலந்திக்கும், பாம்பிற்கும், யானைக்கும் ஒரே சமயத்தில் காட்சி அளித்து இவை மூன்றையும் ஒன்றாக முக்தி அடையச் செய்தார்.
அவ்வுருவங்களையும் அந்தப் பெயர்களையும், தான் இணைத்து, ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் என்ற திருநாமத்தைப் பெற்றார். ஏராளமான புராண வரலாறுகளையும் சரித்திரச் சம்பவங்களையும் கொண்டுள்ள மிகப் புராதனமான ஸ்தலம் இது. ராகுவும் கேதுவும் வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப் பெற்ற தலம் இது. ஆகவே, லிங்கத் திருமேனியில் நாகப்பாம்புகள் பின்னலிடப்பட்டது போன்ற தோற்றத்தை இங்கு காண முடிகிறது. இது ராகு கேதுவிற்கான விசேஷ ஸ்தலம் என்பதால் காலம் காலமாக ராகு, கேது தோஷம் உடைய லட்சக்கணக்கானோர் இங்கு வந்து வழிபடுகின்றனர். சர்ப்ப சாந்தி உள்ளிட்ட பல வழிபாடுகளை நடத்தி தங்கள் தோஷத்தைக் கழிக்கின்றனர். திருமணத் தடை உள்ளிட்ட பல தடைகள் நீங்கி மனம் மகிழ்கின்றனர்.
கோவிலைச் சுற்றி பிரம்மாண்டமான கற்சுவர்களும் வானளாவிய கோபுரங்களும் அழகிய சிற்பங்களும் உள்ளன. இதன் ஆதி வரலாறு ஒன்று உண்டு. கர்ப்பூர லிங்கம் ஒன்றை இங்கு ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாயு பகவான் வழிபட்டு வந்தான். இதனால் மனம் மகிழ்ந்த சிவபிரான் அவனுக்கு மூன்று வரங்களை அருளினார். அதன் படி வாயு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையையும், ஒவ்வொரு உயிரின் அந்தராத்மாவாக விளங்கும் தன்மையையும், அவன் வழிபட்ட கற்பூர லிங்கம் அவன் பெயராலேயே வழங்கப்படும் பெருமையையும் பெற்றான். இங்கு, சிறிதும் காற்று வீசாமல் இருக்கும் கர்பக்ருஹத்தில் உள்ள திருவிளக்கின் சுடர், தொடர்ந்து ஆடிக்கொண்டே இருப்பது ஒரு அதிசயமாகும். ஆகவே இங்குள்ள லிங்கம் வாயு லிங்கம் எனப்படுகிறது. படைப்புக் கடவுளான பிரம்மா ஒருமுறை கைலாயத்தைத் தன் தோளின் மீது எடுத்து பூலோகம் வழியாகச் செல்லும் போது எங்கு சிகரத்தின் பாரத்தை உணர்கிறாரோ அங்கு அதை பிரதிஷ்டை செய்து தவம் புரிந்தால் சுபிட்சம் ஏற்படும் என்ற அசரீரி ஒலி கேட்டது. தென் திசை வழியே செல்லும் போது சிவபிரான் வாயுலிங்கமாக சிகரத்தில் நுழைந்தார். பாரம் அதிகமானது. ஆகவே பிரம்மா அதை அங்கேயே வைத்தார். அந்த இடம் தான் திருக்காளத்தித் தலமாகும். அவர் அங்கேயே தங்கு தவம் செய்யத் தொடங்கினார்.

ஒருமுறை காமதேனுவை வழிபடாமல் புறக்கணித்த லக்ஷ்மி தேவி, அதனால் தன் ஒளியை இழந்தாள். திருமால் லக்ஷ்மியைப் புறக்கணித்து, காளத்தி சென்று தவம் புரியுமாறு கூற, அவரும் ஸ்வர்ணமுகி நதியில் நீராடி ஒரு ஸ்ரீ சக்ரத்தை அம்பிகை ஞானப் பிரஸூனாம்பாளின் திருப்பாதங்களில் வைத்து வழிபடலானார். சில காலம் கழித்து ஒரு வைகாசி மாதம் பௌர்ணமி கழிந்த ஐந்தாம் நாள் ஸ்ரீசக்ரத்திலிருந்து அம்பிகை வெளிப்பட்டுக் காட்சி தர லக்ஷ்மி தேவி இழந்த தனது பிரகாசத்தை மீண்டும் பெற்றாள். திருமால் லக்ஷ்மியை ஏற்றுக் கொண்டு வைகுந்தம் ஏகினார். பிரசித்தி பெற்ற சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று!
மிக பிரசித்தமான கண்ணப்ப நாயனாரின் சரித்திரத்தை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. அர்ஜுனனே கலியுகத்தில் வேடுவர் குலத்தில் கண்ணப்பனாகப் பிறந்தார் என்று தெலுங்குக் கவிஞர் தூர்ஜடி கூறுகிறார். ஒருமுறை கண்ணப்பன் இங்குள்ள தன் இஷ்ட தெய்வமான லிங்கத்தை வழிபடச் செல்ல, லிங்கத்தின் இடது கண்ணிலிருந்து இரத்தம் வழியவே திகைப்புற்ற கண்ணப்பன் தன் கண்ணைப் பிடுங்கி இறைவனின் கண் இருந்த இடத்தில் அப்ப, ‘நில்லு கண்ணப்ப, இது எனது திருவிளையாடலே’ என சிவ்பிரான் அவனுக்குக் காட்சி அளித்துக் கூறினார். கண்ணப்பனின் பக்தியின் பெருமையை உலகம் அறிந்த இடம் திருக்காளத்தியே.
சந்திர வம்சத்தைச் சேர்ந்த வரகுண பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் இங்கு வந்து தவம் புரிந்து இறைவனின் தரிசனத்தை நேரில் பெற்றான். ஆகவே இந்தத் தலம் வரகுணபுரம் என்ற பெயரைப் பெற்றது. சிவபிரானின் பாடல் பிழையானது என்று நக்கீரர் ஒருமுறை கூற சிவபிரான் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க, நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்றார் நக்கீரர். அதனால் சிவபிரான் அவருக்கு குஷ்ட நோய் வருமாறு சாபம் தர, தன் பிழையை உணர்ந்த நக்கீரர் இறைவனிடம் தன்னை மன்னித்து அருள் பாலிக்குமாறு வேண்ட சிவபிரான் நீ கைலாயத்தை அடையும் போது உன் நோய் தீரும் என்று அருள் பாலித்தார். திருமுருகாற்றுப்படையை இயற்றிய நக்கீரர் திருப்பரங்குன்றம் குளத்தில் குளித்து எழும் போது எதிரே ஸ்வர்ணமுகி ஆறு ஓடுவதைக் கண்டு அதிசயித்தார். தக்ஷிண கைலாய மலையான காளத்தியைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்ததனால் ஆனந்தம் அடைந்த அவர் கைலை பாதி காளத்தி பாதி என்ற அந்தாதி நூலை இயற்றி மனம் மிக மகிழ்ந்தார். காளத்தி கோவிலுக்கு கிழக்குப் புறமாக உள்ள தக்ஷிண கைலாய மலைச் சரிவில் நக்கீரருக்கு ஒரு கோவில் உண்டு. சித்துலய்யா என்று அங்கு இவர் அழைக்கப்படுகிறார். இந்தத் தலத்தில் வந்து வழிபட்டுள்ள திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும், திருநாவுக்கரசர் ஒரு பதிகத்தையும், சுந்தரர் ஒரு பதிகத்தையும் அருளியுள்ளனர்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஸ்ரீஞானப்ரஸூனாம்பாளும், ராகு, கேது பகவானும், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். சுந்தர நாயனாரின் நல் வாக்கு இது :
நீறார் மேனியனே, நிமலா நினை அன்றி, மற்றுக், கூறேன் நா அதனால், கொழுந்தே, என் குணக்கடலே, பாறார் வெண்தலையில் பலி கொண்டுஉழல்காளத்தியாய்,
ஏறே, உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே!
நன்றி வணக்கம்!
***
tags- காளஹஸ்தி கோவில்