உலகத்தோரின் துன்பத்தைக் கண்டு உருகி அழுத உத்தமர்! (Post.9813)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9813

Date uploaded in London – 4 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்வாமி விவேகானந்தர் சமாதி தினம் ஜூலை 4; அவர் நினைவைப் போற்றுவோம்!

உலகத்தோரின் துன்பத்தைக் கண்டு உருகி அழுத உத்தமர்!

ச.நாகராஜன்

ஸ்வாமி விவேகானந்தர் உள்ளம் பத்தரை மாத்து தங்கத்தை விடச் சுத்தமானது; விலை மதிப்பே கணக்கிட முடியாதது.

முதல் தடவை அமெரிக்காவை ஒரு கலக்கு கலக்கி ஹிந்து மத மேன்மையை அங்கு அனைவருக்கும் உணர்த்தி விட்டு அவர் இந்தியா திரும்பிய சமயம் அது. பலராம் போஸ் வீட்டில் அவர் தங்கியிருந்தார். ஒரு நாள் அவரைக் காண அவரது சக துறவியான துரியானந்தர் வந்தார். ஸ்வாமிஜி வாரந்தாவில் தனியே நடந்து கொண்டிருந்தார். ஆழ்ந்த சிந்தனை அவருக்கு. அவர் துரியானந்தர் வந்ததைக் கவனிக்கவே இல்லை. சிறிது நேரம் கழித்து மீராபாயியின் கீதம் ஒன்றை ஹம்மிங் செய்யலானார் ஸ்வாமிஜி. அப்போது அவர் கண்களிலிருந்து நீர் பெருகி ஓடிற்று. அவர் தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டார். அங்கிருந்த கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு அதில் சாய்ந்தார். தொடர்ந்து பாட ஆரம்பித்தார்.

“ஓ! யாருமே எனது துயரைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே!

யாருக்கு இரத்தம் வடியவில்லையோ, அவருக்கு வேதனை புரியாது”

அவர் கீதம் தொடர்ந்தது!

   பின்னால் இந்த சம்பவத்தைக் கூறிய துரியானந்தர், “ அவரது வார்த்தைகள் என் நெஞ்சைக் கூரிய அம்புகள் பிளந்தது போல் பிளந்தன. எனக்குக் கண்ணீரை வரவழைத்தன.” என்றார்.

ஸ்வாமிஜி எந்தக் காரணத்திற்காக இப்படி உருகுகிறார் என்பதை அறியாத துரியானந்தர் மிகவும் வருத்தப்பட்டார். ஆனால் அவர் மனதில் பளிச்சென ஒரு எண்ணம் தோன்றியது. “உலகினர் படும் துன்பங்களைக் கண்டு வேதனை தாள முடியாமல் தான் அவர் கண்ணீர் பெருக்கினார். ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே அவர் உருகி அழுதார்” – இந்த எண்ணம் தான் ஸ்வாமிஜியின் வருத்தத்திற்குக் காரணமாகத் துரியானந்தருக்குத் தோன்றியது.

ஸ்வாமிஜி உலகனைத்திற்கும் உரித்தானவர் அல்லவா!

*

இரண்டாவது முறையாக அமெரிக்க விஜயம் மேற்கொண்டார் ஸ்வாமிஜி. ஒரு நாள் நதிக் கரையோரம் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு நதிக்கரையில் ஒரு இளைஞர்கள் கூட்டம் குழுமி இருந்தது. அவர்கள் நீரில் தோன்றும் நீர்க்குமிழிகளைக் குறிபார்த்து சுட்டுக் கொண்டிருந்தனர்.  ஆனால் ஒருவருக்கும் வெற்றி தான் கிடைக்கவில்லை. ஸ்வாமிஜிக்கு இந்தக் காட்சி வேடிக்கையாக இருந்தது. அவர் பார்ப்பதைக் கண்ட இளைஞர்களுள் ஒருவன், “இது ஒன்றும் அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை, சார்! நீங்கள் வேண்டுமானாலும்  முயற்சி செய்து பாருங்கள்” என்றான்.

ஸ்வாமிஜி ஒன்றும் சொல்லவில்லை. அவனிடமிருந்து துப்பாக்கியைப் பெற்றுக் கொண்ட அவர் குறி பார்த்து நீர்க் குமிழிகளைச் சுடலானார். ஒன்றல்ல, இரண்டல்ல, பன்னிரெண்டு குமிழிகளைத் தொடர்ந்து அவர் சுட்டார்.

இளைஞர்கள் அனைவரும் பிரமித்துப் போயினர். இவர் ஒரு மார்க்கர் – குறி பார்த்துச் சுடுவதில் வல்லவர் – என்று அவர்கள் பேசிக் கொண்டனர்.

ஸ்வாமிஜி அவர்களிடம் கூறினார்:” நான் எனது வாழ்க்கையில் ஒரு போதும் துப்பாக்கி ஏந்தி சுட்டதில்லை. இப்படிச் சுட முடிந்ததற்கான காரணம் கான்செண்ட்ரேஷன் – ஒரு முனைப்பட்ட கவனக் குவிப்பு தான் “ என்றார்.

*

நூற்றுக் கணக்கான அபூர்வமான சம்பவங்கள் ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.

அவர் ஜூலை நான்காம் தேதி சமாதி எய்தினார். அவர் நினைவைப் போற்றுவோமாக!

***

INDEX

ஸ்வாமி விவேகானந்தர்

ஸ்வாமி துரியானந்தர்

மீராபாய் கீதம்,

உலகினருக்கான கீதம்

அமெரிக்கா இரண்டாவது முறை விஜயம்

நீர்க்குமிழிகளைக் குறிபார்த்து 12 முறை சுட்டது,

ஒருமுனை கவனக் குவிப்பு தான் காரணம்

ஜூலை 4, ஸ்வாமிஜி சமாதி தினம்

tag- ஸ்வாமி விவேகானந்தர்

Leave a comment

Leave a comment