
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9817
Date uploaded in London – – 5 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 4-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!
விமுத வல்ல சடையான் வினை உள்குவார்க்கு
அமுத நீழல் அகலாததோர் செல்வமாம்
கமுதம் முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
திரு ஞானசம்பந்தர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது பஞ்ச ஆரண்ய தலங்களுள் முதலாவதான திருக்கருகாவூர் தலமாகும். இது தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணத்திற்குத் தென்மேற்கில் 20 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமம் முல்லைவனேஸ்வரர் இறைவி கர்ப்ப ரக்ஷாம்பிகை தலவிருட்சம் முல்லைக் கொடி

தீர்த்தம் பாற்குளம். இந்தக் குளம் காமதேனுவால் உருவாக்கப்பட்டது.
இந்தத் தலம் பஞ்ச ஆரண்ய தலங்கள் எனப்படும் திருக்கருகாவூர், அவளிவநல்லூர், ஹரித்துவாரமங்கலம், ஆலங்குடி,
திருக்கொள்ளம்புதூர் ஆகிய ஐந்து தலங்களில் முதலாவது தலமாக அமைகிறது. பஞ்ச ஆரண்ய தல யாத்திரை மேற்கொண்டு ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் ஏராளமானோர் தரிசித்து வந்திருக்கின்றனர். ஒரு நாள் யாத்திரையை இந்தத் தலத்திலிருந்து அனைவரும் உஷத் காலத்தில் ஆரம்பிப்பது மரபாக இருக்கிறது. அருகருகே உள்ள இந்தத் தலங்களை காலையில் ஆரம்பித்து இரவுக்குள் தரிசித்து விட முடிகிறது.
மிக புராதன தலமாகிய இந்தத் தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. குறிப்பிடத் தகுந்த ஒன்று இத்தலத்தின் மஹிமையை விளக்கும் ஒன்று. நித்துருவர் என்ற ஒரு முனிவர் வேதிகை என்ற தன் மனைவியுடன் இத்தலத்தில் வசித்து வந்தார். ஒரு நாள் அவர் வெளியே சென்றிருந்த சமயம் ஊர்த்வபாதர் என்ற ஒரு முனிவர் இவரது ஆசிரமத்திற்கு வந்தார். உள்ளே வேதிகை கர்ப்பமாயிருந்த காரணத்தினால் தளர்ச்சியால் வருந்திக் கொண்டிருந்தார். அப்போது பிக்ஷை கேட்டு ஊர்த்வபாதர் குரல் எழுப்பினார். அயர்ச்சியினால் வேதிகை வர சற்று தாமதமானது. அதனால் கோபமுற்ற அந்த முனிவர் அவரை நோய் பிடிக்குமாறு சாபம் இட அதனால் வேதிகையின் கரு கலைந்து ஊனமுற்றது.
உடனே வேதிகை இந்தத் தலத்து அம்பிகையையும் இறைவனையும் வேண்ட, முல்லைவனேஸ்வரரின் கட்டளைப்படி காமதேனு தன் பாலைச் சுரந்து வேதிகைக்கு அளித்தது. அதனால் அவளது கரு காப்பாற்றப்பட்டது. இதனால் மனம் மகிழ்ந்த நித்துருவர் இந்தத் தலத்தில் கருவுற்ற பெண்களுக்கு எந்த வித ஒரு தீங்கும் வராமல் பிரசவம் எளிதில் நடைபெறுமாறும் இந்தத் தலத்தின் அம்பிகையை வேண்டும் பெண்டிர் அனைவருக்கும் சகல வித நன்மைகளும் உண்டாக வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். அதிலிருந்து இன்று வரை இந்த அம்பிகையை வேண்டும் கன்னிப் பெண்களுக்குத் திருமணத் தடை நீங்கி நல்ல கணவன் கிடைப்பதும் கர்ப்பிணிகளுக்கு சுக பிரசவம் ஏற்படுவதும் நடைபெற்று வருகிறது.
இன்று திருக்களாவூர் என்று அழைக்கப்படும் இந்தத் தலம் முன்னொரு காலத்தில் முல்லை வனமாக இருந்தது. ஆனால் தாயின் வயிற்றில் இருந்த கருவைக் காத்ததால் கரு, கா, ஊர் என்ற பெயரைப் பெற்றது. நான்கு வீதிகளுக்கு இடையில் அழகுற அமைந்துள்ள இந்தக் கோவில் 460 அடி நீளமும் 284 அடி அகலமும் கொண்டது. கிழக்கில் ராஜ கோபுரம் கம்பீரமாக விளங்க தெற்கில் ஒரு நுழைவு வாயில் உள்ளது. இந்தத் தலத்தில் உள்ள சுயம்பு மூர்த்தியான லிங்கம் புற்று மண்ணால் ஆனது. ஆகவே மூலவருக்கு இங்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகுச் சட்டம் மட்டும் பூசப்படுகிறது. சுயம்பு லிங்கம் மீது முல்லைக் கொடிகள் படர்ந்திருந்த வடுக்கள் இப்போதும் காணப்படுகின்றன.
மூலவரின் வலது புறம் உள்ள கற்பக விநாயகர் உளி படாத விநாயகர், அதாவது சுயம்பு மூர்த்தி ஆவார். சுவாமி சந்நிதிக்கு இடப்புறம் கருணையே வடிவான கர்பரக்ஷாம்பிகை நின்ற கோலத்தில் இருந்து அருள் பாலிக்கிறார். சுவாமி, அம்மன் சந்நிதிகளுக்கு இடையே முருகனின் சந்நிதி அமைந்து சோமாஸ்கந்தர் தத்துவத்துடன் விளங்குகிறது. இவை தவிர, தக்ஷிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, நடராஜர், மஹாலக்ஷ்மி, காளி உள்ளிட்ட தெய்வங்களும் இங்கு எழுந்தருளி வழிபாடு செய்யப்படுகின்றன. ஸ்தல விருக்ஷமான முல்லைக் கொடி சண்டிகேஸ்வரர் சந்நிதி அருகிலும், கோவில் சுற்றிலுமாக அமைந்து இது முல்லைவனமே தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.

குழந்தை வரம் வேண்டி இங்கு வரும் பெண்கள் அம்பாள் சந்நிதியின் படியை நெய்யால் மெழுகி அரிசி மாவால் கோலமிடுவது மரபாகும். குழந்தைப் பேறு வேண்டுவோருக்கு அம்பாள் பாதத்தில் வைத்து பிரார்த்தனை செய்யப்படும் நெய் பிரசாதம் வழங்கப்படுகிறது. நெய்யை பிரசாதமாக எடுத்துச் செல்வோர், வேண்டுதல் நிறைவேறி குழந்தைச் செல்வத்தைப் பெற்றவுடன் மீண்டும் இங்கு வந்து தங்கள் சக்திக்குத் தக துலாபாரம் தருவது வழக்கம். இந்த நிகழ்ச்சி இங்கு அன்றாடம் நடைபெறும் ஒன்று. இந்த துலாபாரம் அம்பிகையின் சந்நிதியில் அமைந்துள்ளது.
இந்தத் தலத்தில் வந்து வழிபட்ட திருஞானசம்பந்தர் இறைவனை அழல் வண்ணமாகக் கண்டு மகிழ்ந்து ஒரு பதிகம் அருளியுள்ளார். திருநாவுக்கரசரும் இறைவனை பல்வேறு விதமாக வர்ணித்து ஒரு பதிகத்தை அருளியுள்ளார்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் திருக்கருகாவூர் முல்லைவனேஸ்வரரும், கர்பரக்ஷாம்பிகையும், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். அப்பர் பெருமானின் அருள் வாக்கு இது : மூலனாம் மூர்த்தனாம் முன்னேதானாம் மூவாத மேனி முக்கண்ணினானாம்
சீலனாம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வனாம் செஞ்சுடர்க்கு ஓர் ஜோதி தானாம்
மாலனாம் மங்கை ஓர் பங்கன் ஆகும் மன்று ஆடியாம், வானோர் தங்கட்கு எல்லாம்
காலனாம் காலனைக் காய்ந்தான் ஆகும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே!
நன்றி வணக்கம்!

***
tags- திருக்கருகாவூர், ஆலயம் அறிவோம்