
WRITTEN BY B.KANNAN, NEW DELHI
Post No. 9819
Date uploaded in London –5 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 5-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!
பா.கண்ணன், புது தில்லி
ஞானமயம், தமிழ் முழக்கம் அன்பு நெஞ்சங்களுக்குத் தில்லியிலிருந்துப் பேசும் கண்ணனின் மனம் நிறைந்த வணக்கம் பல. நம்மை மீறியச் சக்தியின் எதிர்பாராத விளைவால் சில மாத இடைவெளிக்குப் பின் தமிழ் ஆர்வலர்களுடன் அளவளாவு வதில் பெரு.மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைக்கு நாம் கேட்கப் போவது, சூரியனைப் போற்றும் 100 செய்யுட் களைக் கொண்டு கவி மயூரபட்டரால் சம்ஸ்க்ருதத்தில் இயற்றப் பட்டச் சதக நூலான சூரியச் சதகம் பற்றியது. இதன் தமிழாக்கத்தை ஒட்டியே இப்பேச்சு அமைந்துள்ளது. இது ஒரு தஞ்சை சரஸ்வதி மகால் நூலக வெளியீடாகும்.
ஆதவனைத் தொன்றுதொட்டு உலகின் அனைத்து நாகரிகங்களும் போற்றிப் புகழ்ந்துள்ளன.. வேதகாலம் சூரியனுக்குத் தனியொரு இடம் கொடுத்துச் சிறப்பித்துள்ளதை அறியமுடிகிறது. நமது அனைத்து மொழி இலக்கியங்களும் சூரியனைப் போற்றியுள்ளன. பிரபலமாக விளங்கும் தனிக் கோவில்களும் பல இருக்கின்றன.
சூரியசதகம் நூலை இயற்றிய ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மயூரகவி என்ற மயூரபட்டர் ஹர்ஷ சக்கரவர்த்தியின் அவைப் புலவராக இருந்தார். உரைநடைக் காவியம் காதம்பரியை இயற்றியப் பாணபட்டரின் உறவினரும் ஆவார். அச்சமயம் அவர் குஷ்டரோக நோயினால் அவதிப்பட்டார் அதனால் ராஜசபையிலிருந்து வெளியேற்றப் பட்டார் அதிலிருந்து மீள சூரிய சதகத்தை இயற்றிப் பாஸ்கரனை உபாசித்து நோய் நீங்கப் பெற்றார் எனும் செவிச் செய்தி ஒன்றுண்டு ஆனால் இதில் குறிப்பிட வேண்டியது, தனக்கு வந்திருந்த நோயைத் தீர்த்துத் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று இந்நூலில் ஒருவரியில் கூட அவர் சூரியனை வேண்டவில்லை மாறாக உலகோருக்காகவே உபாசித்தார் என்பதே! நோயிலிருந்து நிவாரணம் பெற சூரியனைக் குறித்து நூறு செய்யுட்களாலானத் தோத்திர இலக்கியமாகவும் ,காவியமாகவும் இந்நூலை இயற்றியதாகக் கருதப்படுகிறது. நவக்ரஹங்களில் பிரதானமான ஆதவன் கண்நோய் முதலான உடல் உபாதைகளைக் களைபவர். ஆகையால் நோய்த் தீர்க்கும் கருத்துப் பொக்கிஷமாக வடமொழி சிற்றிலக்கியத்தின் ஓர் அங்கமாகச் சூரியச் சதகம் விளங்குகிறது.
மயூரகவி வேதங்கள் உபநிடதங்கள் சாஸ்திரங்கள் மகாபாரதம் ஆகியவற்றிலிருந்துப் பல கருத்துக்களை இந்நூலில் கையாண்டிருக்கிறார். ஆனாலும் மகாபாரதத்தில் காணப்படும் செய்திகளை இதில் வெகு பரவலாகக் காணமுடிகிறது. அதில் வனபர்வத்தில் யுதிஷ்டிரருக்கு அவர்களது குரு தௌம்யர் அருளிய சூரிய ஸ்தோத்திரமே இந்நூல் எழுத உந்துகோலாக இருந்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. ஏனெனில், அதில் இடம் பெறும் ஆதவனின் வேறு பல நாமங்கள், பிற செய்திகளையும் சூரிய சதகத்தில் காணமுடிகிறது.
அன்றாடம் காலையில் உதித்து மாலையில் மறைகின்ற ஒளிக்கோளத்துக்கு அளவற்றச் சக்தியை அருளுவது அதற்கும் அப்பாற்பட்டப் பரம்பொருள் தான் சூரியன். அரூபமானப் பரம்பொருளைஉருவமானச் சூரியக்கோளில் தெய்வமாகப் பாவித்து வழிபடுகிறோம். இக்கருத்தை ஆதாரச் சுருதியாக வைத்து இயற்றப்பட்டதே இந்தச் சூரியச் சதகம். சூரியச் சதகம். ஆதவனின் ஆற்றலைப் பல கோணங்களில் எடுத்துக்காட்டி நம் மனதில் பதிய வைக்கிறது. காட்டாற்று வெள்ளம் போல் அழகியக் கற்பனைகள் தங்குத்தடையின்றிச் சுழன்று ஓடுகின்றன.
தமிழகத்தில் பண்டையக் காலம் தொட்டுச் சூரிய வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. காஞ்சி மகாசுவாமிகளின் வழிகாட்டுதலில் காஞ்சி கச்சபேஸ்வரர் ஆலய பானுதீர்த்தப் படிக்கட்டுகளில் பொரிக்கப்பட்டிருந்தச் சுலோகங்களை ஆராய்ந்த வல்லுநர்களிடம் அவை சூரிய சதகச் செய்யுட் களே என்பதை அவர் உறுதிப் படுத்தினார். இதன் மூலம் தமிழக மன்னர்களின் ஆதரவுடன் சூரியசதகம் எனும் நூல் பண்டிதர் முதல் பாமரர் வரைப் பாராயணம் செய்யப்பட்டு வந்துள்ளது என்று அறிய முடிகிறது
அப்படி மயூரகவி கையாளும் சில விஞ்ஞானக் கருத்துக்களைக் காண்போம்.சுலோகம் 63-.சூரியனைச் சுற்றியுள்ள வாயு மண்டங்களான ஆவஹ, ப்ரவஹ, விவஹ, பராவஹ, ஸம்வஹ, உத்வஹ, பரிவஹ ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாகச் சூரிய ரதத்தைத் தங்கள் தோள்களில் சுமந்துச் செல்கின்றனவாம்.
சு.29, 98-ல் சூரியக் கிரணத்தின் தன்மைகளைப் பற்றி விளக்குகிறார். சு.18, 97-ல் பூமியின் சுழ்ற்சியால் சூரியன் உதிப்பது, மறைவது போல் தோன்றுகிறது என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்துள்ளார். சு.96-ல் சூரிய மண்டல விளக்கம். சு.2, 3-ல் காலை, மாலை வேளைகளில் காணப்படும் சூரியனின் நிறம் மற்றும் உருவம் விளக்கப் படுகிறது.
சூரிய நிறமாலையில் நிரவியிருக்கும் ஃபரான் ஹோஃபர் (JOSEPH VON FRAUN HOFER- 1787-1826) வரிகள் மூலம் ஒளிக்கதிர்கள் ஊடுருவி வெளிப்படும் போது அந்நிறங்கள் வெவ்வேறு வகையான வெப்பங்களைத் தருகின்றன. அதிலும் ஊதாசிவப்பு நிறமே அதிக வெப்பம் தரவல்லதாகும் என்ற விஞ்ஞானிகளின் கூற்றை அன்றே சொல்லிவிட்டார்! எந்த ஒளியின் வீச்சும் அகன்று, அகன்றுச் செல்கையில் ஒளி குறையும், ஆனால் சூரியக் கிரணங்கள் மட்டும் ஒளி குன்றுவதே கிடையாது.அவற்றின் தன்மைகளைப் பற்றியும் சு.29,98-ல் கவி ஒப்பீடு செய்கிறார். ஆதவனின் ஒற்றைச் சக்கரத் தேரின் 7 குதிரைகளும் 7 வண்ணங்களாக உருவகப் படுத்தப் பட்டுள்ளன. அருக்க தேவனின் வெண்மை ஒளி இவற்றின் ஒட்டுமொத்தக் கலவையே என்கிறார். சிவப்பு, பச்சை,நீலம் ஆகியவையே பிரதானம் என்ற விக்ஞானிகளின் கூற்றின்படி. இங்கு கவி அக்குதிரைகள் பச்சை நிறமுடையவை என சு.46, 60-ல் குறிக்கிறார்.
சூரியன் அளிக்கும் பயன்கள்(சு 85),யுக முடிவில் சூரியன்-அழிக்கும் ஆற்றல் பெற்ற வனாக உருவெடுப்பான், கடும் வெப்பத்தால் நீர்நிலைகளை வற்றச் செய்து, மலைகளை வெடிக்கச் செய்து எள்ளுப்பொடி போல் தூளாக்கி விடுவான்(சு 78)எனக் கூறி நம்மைச் சிந்திக்க வைத்து விடுக்கிறார்! நவீன விஞ்ஞானக் கருத்துக்களுடன் இக்கவியின் எண்ணோட்டங்களையும் ஒப்பாய்வு செய்துப் பார்க்கும்போது நம் முன்னோர்கள் அவர்களது யோக மகிமையினால் வானவி யல் விளக்கச் சாஸ்திரத்தில் எவ்வளவுப் புலமைப் பெற்றிருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.
இதோ சுலோகம் 59-ல் கவியின் வர்ணனை வார்த்தை ஜாலம்…உதயகிரி எனும் நாடக மேடையில்இருள் எனும் திரைச் சீலை நகர ஆரம்பிக்கிறது. ஒளியிழக்கும் விண்மீன்கள் புஷ்பாஞ்சலி செய்விக்கின்றன.சூரியன் உதிப்பது,வான வீதியில் பரவுவது, மேற்கே சாய்வது,அஸ்தமிப்பது,என்ற காட்சிகள் நடந்தேறப் போகின்றன. ஆதவனை வழிபடத் தேவர்கள் காத்திருக்கின்றனர். அவர்களைத் தேர் சாரதி அருணன் விசாரிக்கிறான். ‘ஓ,இந்திரனா!உமது ஆயிரம் தாமரைக் கண்களும் மலர்ந்து விட்டதே. ஹே அக்நி தேவரே! பளீரென்றுக் கண்களில் படமாட்டீரோ? பகவானின் ஒளிக்கதிர் முன்னே உமது ஒளி மங்கிவிட்டதோ? அட,எமதர்மராஜனா, உம் தந்தையார் பவனி வருவது தெரியுமல் லவா, பின் ஏன் இப்படி உமது வாகனம் எருமையுடன் பாதையின் குறுக்கே நிற்கிறீர்? மகிஷனைத் தள்ளி இருக்கச் சொல்லுங்கள்! என்ன,தென்மேற்கு மூலையில் ஒதுக்குப் புறமாக நிற்கிறீர்கள்,ராட்சதர்கள் தானே? பகவான் உங்களைப் பார்த்து விட்டாரே! வருணனா ,வாருமய்யா,இக் குதிரைகள் ஓடும்போதே சற்று குளிப்பாட்டுமய்யா, புண்ணியமாய்ப் போகட்டும்! ஓஹோ,வாயுதேவனா! எங்கே என் குதிரை வேகத்துக்கு ஈடாக ஓடி வாரும்,பார்க்கலாம்! இது யார்,குபேரனா? உங்கள் கஜானாவுக்குக் கட்டுக் காவல் சரியாக உள்ளதா? தகவல் தெரிவித்து விடுகிறேன். அட அடா!,ஈசான தேவனா,தாங்களுமா காத்திருக்க வேண்டும். அடியேனின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்”என்று எண்திசை அதிபர்களையும் குசலம் விசாரிக்கிறானாம் அருணன் மகிஷம், யமன் சனீஸ்வரர் சிரிக்கிறார்களோ, இல்லையோ நம்மைப் புன்முறுவல் பூக்க வைத்து விடுகிறார் கவி..
மற்றொரு காட்சி…அடிவானத்தில் எழும் சூரிய ஒளிக் கதிர்களைக் கண்டு ஶ்ரீகிருஷ்ணனுக்குப் பயமாம்,”ஏன்? இருளின் கருமையைப் போக்குபவனான கதிரவன் எங்கே தனது சியாமள மேனி யின் கருமையையும் வெளியேற்றி விடுவானோ என்ற ஐயமாம்! கண்ணனுக்குத் தன் கருமை நிறத்தில் அவ்வளவுப் பெருமை! பாஸ்கரா,கோபிகையர்கள் என்னைப் பரிகசிக்க வைத்துவிடாதே,,என் கருமையை அவமானப் படுத்திவிடாதே என்று வேண்டுகிறான்,போலும்! தேவகி மைந்தனின் எண்ணவோட்டம் இதுவென்றால், மகேசனின் கவலை வேறு விதம். தன் ஐடாமுடியில் அணிந்திருக்கும் சந்திரக் கலை சூரியனின் இளங் கதிர்கள் பட்டு முக்கியத்துவத்தை இழந்து விடுமோ எனச் சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறாராம்! (சு 16)
ஆதவனைப் பற்றிய மதுரகவியின் கற்பனை வளம், அன்றாடம் நடந்தேறும் இயற்கை நிகழ் வுகள் அனைத்தையும் தன் தேன்மதுரக் கவிதைத் துளிகளால் நம்மை ரசிக்க வைக்கும் போது, ‘எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா!’ என்ற பாரதியாரின் பாடல்வரிகள் தான் நினை வுக்கு வருகின்றன. எண்ணை ஆட்டும் செக்கைச் சுற்றி வரும் எருதுகளைப் போல்,நிலைகொள் ளாது அலைபாயும் நம் உள்ளங்களைச் சூரியதேவன் என்ற முளையில் கட்டி அதன் சிந்தனை ஓட்டங்களைச் சூரியனையேச் சுற்றி வருமாறுப் பல காட்சிகளைப் புகுத்தி நம் மனதை ஆதவ னுடன் பிணைத்து விடுகிறார் கவி.
மயூரபட்டர் வாழ்ந்த காலத்தில் சூரிய வழிபாடு நாட்டில் பரவலாக இருந்துள்ளது அதனால் ஆதவனைப் போற்றுபவர்களுக்குச் சூரியனின் அருள் பூரணமாகக் கிடைக்கட்டும் என்று வேண்டுகிறார் கவி. அதிலும், நோய் நொடிகள் நீங்கச் சில பாடல்களை மனனம் செய்ய மறை முகமாகச் சொல்கிறார். சில சுலோகங்களின் ஓசையை வெளிப்படுத்த ஒரே எழுத்தைப் பல முறை உபயோகித்துள்ளார். இதனால் அதன் சுவை கூடி ரசிக்க வைப்பதுமின்றி அப்படி பயன்படுத்துவதன் மூலம் அதன் மந்திரச் சக்தியை வலுவாக்கிப் பாராயணம் செய்வோருக்கு நற்பயன்கள் பெருக வழி காட்டுகிறார் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றனர் உதாரணமாக சு 36 ல் ‘த்ய’ ( ध्य ) எழுத்தும், சு 70ல் ‘ந்த’ ( न्द ), ‘ச’ ( श ) என்ற எழுத்துக்களும் பெரிதும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. நாம் அதையும் தொடர்ந்துப் படித்து உடல் நலம் பேணுவோம். அவற்றில் இரு சுலோகங்கள் இதோ……..
கந்தர்வை:கத்ய பத்ய வ்யதிகரிதவசோ ஹ்ருத்யமாதோத்யவாத்யை:
ஆத்யைர்யோ நாரதாத்யை: முநிபிரபிநுதோ வேதவேத்யைர் விபித்ய|
ஆஸாத்யாபத்யதே யம் புநரபி ச ஜகத்யௌவநம் ஸத்ய உத்யந்
உத்யோதோ த்யோதித்த்யௌ: த்யது திவஸக்ருதோ(அ)ஸாவத்யாநி வோத்ய|| (36)
சூரியனின் ஒளியைக்கண்ட கந்தர்வர்கள். மகிழ்ச்சி மேலோங்கத் துதித்து, மனதைக் கவரும் பல்வேறு இன்னிசைக் கருவிகளுடன் அதாவது, வீணை, தம்பூர், ஜாலர், சதங்கை, முரசு, மத்தளம், புல்லாங்குழல், நாதஸ்வரம் ஆகியவற்றுடன் புகழ்ந்துப் பாடுகின்றனர். வேதங்களில் வல்லவர்களான நாரதர் தும்புரு முனிவர்களால் துதிக்கப்படுபவனும், வான்வெளியில் பிரகாசிக்கும் சூரியனின் புத்தம் புதிய ஒளி, உலகை யௌவனப் பூரிப்புடன் விளங்கச் செய்கிறது. அது உங்களது பாபங்களை அழிக்கட்டும்.
நி: ஸ்பந்தாநாம் விமாநாவலி விவத்திவாம் தேவ்வ்ருந்தாரகாணாம்
வ்ருந்தை: ஆநந்த ஸாந்த்ரோத்யமமபி வஹதாம் விந்த்தாம் வந்திதும் நோ|
மந்தாகித்யாம் அமந்த: புலிநப்ருதி ம்ருதுர்மந்தரே மந்திராபே
மந்தாரை: மண்டிதாரம் தததரி தநக்ருத்ஸ்யந்தந: ஸ்தாந்முதே வ:|| (70)
சூரிய ரதத்தின் வேகத்தைக் குறிப்பிடும் ஸ்லோகம் இது. பெரிய மாடங்களில் வாழும்தேவர்கள் அருக்கனை நேரில் கண்டு வணங்க வான ஊர்திகளில் பயணிக்கின்றனர். ஆதவனின் ரதம் போகும் வேகத்தால் அவர்களால் வணங்க முடியாதத் தொலைவில் அவன் காணப்படுகிறான். அதனால் அவர்களின் ஊர்திகள் மேலே செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்று விடுகின்றன. ஆனால் சூரிய ரதம் ஆகாச கங்கையான மந்தாகினி மணற்பரப்பில் வேகம் குறையாமல் ஒரே சீராகச் செல்கிறது. அதேசமயம் சந்தடி மிகுந்த நகரம் போல் தோற்றமளிக்கும் மந்தரமலைக் குன்றின் முகடுகள், குகைகளில் மெதுவாகச் செல்கிறது. இத்தனைச் சிறப்பு வாய்ந்ததும்மந்தார மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சூரிய ரதம் உங்களுக்கு எல்லாவிதத்திலும் மகிழ்ச்சியை அளிக்கட்டும்…என்கிறார்.
சு.71 இவரது இலக்கணப் புலமையைக் காட்டுகிறது. இதன் பதங்கள் யமகவணி சொல் அலங்காரத்தில் அமைக்கப் பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ளத்
தேவதைகளின் பெயர்களுக்கும், ரதத்தின் பாகங்களுக்கும் உள்ளச் சொற்பொருத்தத்தை எடுத்துக் காட்டி, அவர்கள் அவற்றை வழிபடுவதாக அமைத்துள்ளார் கவி. (உ.ம்.) ஹரி என்பது இந்திரனையும், குதிரையையும் குறிக்கும். சக்ரீ என்ற சொல் திருமாலையும், தேர் சக்கரத்தையும் குறிக்கும்.
இப்படியே இச்செய்யுள் முழுவதையும் படித்து ரசிக்கலாம்!
சூரியனின் செயல்பாடுகள் தனித்தன்மை வாய்ந்தவை. இருளை நீக்கி வெளிச்சம் மட்டும் அளிக்கவில்லை. பக்தர்களின் பாபங்களையும் களைகிறான். தாமரையை மட்டும் மலரச் செய்யவில்லை. அதிகாலையில் தன் திருவடி தொழுது காத்து நின்றவர்களின் உள்ளங் களையும் மலர்விக்கிறான். நாள் என்பதை மட்டும் தினமும் தோற்றுவிப்பதில்லை. அடியார் களுக்கு ஒப்பில்லா மேன்மைகளையும் அருள்கிறான். உதயமாவது என்பது ஒன்றே அவன் எடுக்கும் ஒரே முயற்சி. அதன் விளைவுகள் அனைத்தும் உலகோர்க்கு நன்மைப் பயக்கின்றன.
மகாகவி பாரதியார் பாடுவது போல், ”நின்றன் ஜோதி நிறைந்ததுவாகி, நன்று வாழ்ந்திடச் செய்குவை ஐயா ஞாயிற்றின் கண் ஒளி தரும் தேவா” எனும்
அத்தகையச் சூரியதேவன் நம்மைக் காத்தருளட்டும். படித்துப் பலனடையுங்கள் என்று வேண்டுகிறேன்.
இப்படிப்பட்ட அரியப் பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது இந்தப் புண்ணியப் பாரதபூமி, என்று நினைக்கையில் மனம் உவகையில்
ஆழ்ந்துப் போகிறது, பெருமைக் கொள்ள வைக்கிறது!
நன்றி, வணக்கம்

வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்!
tags – சூரிய சதகம், மயூரபட்டர்
————————————————————————————————————