

WRITTEN BY S NAGARAJAN
Post No. 9849
Date uploaded in London – 14 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞானமயம் ஆனி மக நாளன்று (13-7-2021) மாணிக்கவாசகரின் குருபூஜை நாளையொட்டி சிவஞான சிந்தனை மணிவாசகர் குருபூஜை தினத்தை உலகளாவிய விதத்தில் சிறப்பாக இணையதள வழியே கொண்டாடியது. இந்த விழாவில் திருவாசகம் என்னும் தேன் பற்றி ஆற்றிய உரை:-
திருவாசகம் என்னும் தேன்! -1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.நமஸ்காரம்.

இன்று மாணிக்கவாசகரின் குரு பூஜை நாள். சிவஞான சிந்தனையை உலகெலாம் உள்ள அனைவரும் பெறவும், தரவும் ஒரு அருமையான வாய்ப்பை இணைய வாயிலாக வழங்கி இருக்கிறார் லண்டன் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி. அவர்களுக்கு எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். திருவாசகத்திற்கு விளக்கமோ அர்த்தமோ கூறுவதற்கு எனக்குத் தகுதி இல்லை என்பது நிதர்சனமான உண்மை. ஏனெனில் பண்டு தொட்டு பெரியோர்கள் திருவாசகத்தை விளக்க பெரும் ஆதீனகர்த்தர்களும், சைவப் பெரியோர்களும், குறிப்பாக அதைப் பாடம் கேட்டுப் பொருளுணரும் சைவப் பெரியோர்களும் மட்டுமே தகுதியானவர்கள் என்று சொல்லி வந்திருக்கின்றனர்.
மஹாமஹோபாத்யாய உ.வே.சுவாமிநாதையர் ஒரு சுவாரசியமான சம்பவத்தை தனது நல்லுரைக் கோவை நூலின் நான்காம் பாகத்தில் குறிப்பிடுகிறார். திருச்சியில் இருந்த பட்டாபிராம பிள்ளை என்ற டெபுடி கலெக்டர் தமிழின் பால் மிக்க பற்றுள்ளவர். தக்க பண்டிதர்களை பல நூல்களுக்கும் உரை எழுதச் சொல்லி வேண்டுவது அவர் பழக்கம். இப்படி அவரது அரும் முயற்சியினால் பல உரை நூல்கள் வெளி வந்தன. அப்போது திருவானைக்காவில் பெரும் தமிழறிஞர் திரு தியாகராஜ செட்டியார் வாழ்ந்து வந்தார். தியாகராஜ செட்டியார் மீதுள்ள மதிப்பின் காரணமாகவும் அவரது ஆழ்ந்த தமிழறிவின் மீது கொண்ட வியப்பினாலும் அவரை திருவாசகத்திற்கு உரை எழுதச் சொல்லி பல முறை பட்டாபிராம பிள்ளை வற்புறுத்திய போது அவர் மறுத்தார். மீண்டும் மீண்டும் அவர் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.. ஒரு நாள் காவிரி ஆற்றில் குளித்து விட்டு பாலத்தின் மீது களைப்புடன் அவர் நடந்து வருகையில் எதிரில் வந்த அந்த நண்பர் திருவாசக உரை எழுத வேண்டும் என்பது பற்றி வழக்கம் போலக் குறிப்பிடவே, தியாகராஜர், “அதற்குப் பெரும் தகுதி அல்லவா வேண்டும், வேதம், உபநிடதம், யோக சாஸ்திரம் உள்ளிட்ட அனைத்தும் அல்லவா படித்திருக்க வேண்டும், இன்னும் வற்புறுத்தினால், இதோ இந்த ஆற்றில் குதித்து விடுவேன். பட்டாபிராம பிள்ளை வற்புறுத்தியதால் தியாகராஜ செட்டியார் ஆற்றில் வீழ்ந்து உயிரை விட்டார் என்ற அவப் பெயர் உமக்கு வரும்” என்று சொல்ல நண்பர் பயந்து போய், இனிமேல் இது பற்றி உங்களிடம் கேட்க மாட்டேன் என்றாராம். ஆக பெரும் பண்டிதர்களும் கூட விளக்க முடியா மாணிக்க வாசகரின் திருவாசகம் எப்படிப்பட்ட அரிய இறை நூல் என்பது நமக்குத் தெரிய வருகிறது.
மணிவாசகர் சொல்லச் சொல்ல திருச்சிற்றம்பலமுடையான் தன் கையால் எழுதிய பெரும் வாசகத்தை மனம் உருகிப் படிக்கலாம்; அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவன் அருளைப் பெறலாம்!
ஆனால் திருவாசகத்தின் விளக்கவுரையை மேற்கொள்ளாது அதன் பெருமையை எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசலாம் அல்லவா!
அந்தத் தொண்டர் தம் திருக்கூட்டத்தில், சிவனடியாரின் அடியானாக, திருவாசகத்தின் அருமை பெருமை பற்றிப் பேச யானும் ஒருவன் என்று இங்கே உங்கள் முன் வந்துள்ளேன். இணையம் வழியாக உலகத்தை எட்டிப் பார்த்து அவர் தம் பெருமையைப் பேச, இன்று மணிவாசகப் பெருமானின் குருபூஜை தினத்தை விட வேறு எந்த நாள் தான் சிறப்பாக இருக்க முடியும்.
திருவாசகப் பெருமை
திருவாசகப் பெருமையைப் பற்றி சிவப்பிரகாச சுவாமிகள் அருளியுள்ள அருளுரையைப் படித்தாலேயே நமக்கு அந்தப் பெருமை புரியும்.
விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கண்
காரணன் உரையெனும் ஆரண மொழியோ
ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்தது என்குவீர் ஆயின்
வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி
நெஞ்சு நெக்கு உருகி நிற்பவர் காண்கிலேம்
திருவாசகம் இங்கு ஒரு கால் ஓதின்
கருங்கல் மனமும் கரைந்து உகக் கண்கள்
தொடுமணற் கேணியின் சுரந்து நீர் பாய
மெய்ம்மயிர்ப் பொடிப்ப விதிர்விதிர்ப்பு எய்தி
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகில் மற்றையர் இலரே!

ஆக ‘வேதத்தை ஓதி நெஞ்சுருகி விழி நீர் பெருக்கும் அன்பரைக் காணேன்; ஆனால் திருவாசகம் ஓதி உளம் உருகும் நல்லோரைப் பார்க்கிறேன். ஆகவே திருவாசகம் அன்பர்க்கு எளிது; யார் வேண்டுமானாலும் அதை ஓதலாம்’ என்கிறார் அவர்.
அடுத்து அருட்பிரகாச வள்ளலார் திருவாசகத்தை அனுபவித்து ஓதி அதன் பொருளை உணர்ந்து ஆனந்தம் அடைந்தவர். அவர் கூறுகிறார்:
வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ் சுவை கலந்தென்
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
என்கிறார் அவர்.
திருவாசகத்தை ஓதும் முறையை அவர் மிக அருமையாக இப்படி விளக்கியுள்ளார்.
பாடுபவர், தான் கலந்து பாட வேண்டும்; ஊன் கலந்து, உயிர் கலந்து பாட வேண்டும். அப்போது தான் திருவாசகப் பெருமை புரியும்.
பழைய காலம் போல ஓரிடத்திற்குச் சென்று தினமும் பாடம் கேட்டுப் பொருளுணரும் வசதி இன்றைய உலகில் உலகெங்கும் பரவியுள்ள தமிழ் அன்பர்களுக்கு இல்லை; ஆகவே தான் இணைய வழியாகப் பொருளுணர்ந்த பெரியோர் தம் உரை கேட்க விழைகிறோம். காலப் போக்கில் சுவடிகள் படிப்பது மாறி அச்சுப் பதிப்புகள் வரவே கற்றறிந்த பெரியோர் பலர் உரைகளைத் தர ஆரம்பித்தனர்.
திருவாசகத்தை நன்கு உணர்ந்த பெரியோர்கள் நாற்பது பேர் உரைகளை எழுதியுள்ளனர். அவர்களது உரைகள் நமக்குப் பொருள் விளங்க உதவி புரியும்.
1835ஆம் ஆண்டில் செந்தமிழ்ப் புலவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் கற்றறிந்த சில வித்வான்களுடன் மூலத்தைப் பரிசோதித்து முதல் பதிப்பை வெளியிட்டார். பின்னர் பல நல்ல பதிப்புகள் வந்து விட்டதால் திருவாசகம் எங்கும் கிடைக்கும் ஒன்றாக ஆகி இருக்கிறது.

1897இல் ப.வாசுதேவ முதலியார் பல வித்வான்கள் எழுதிய உரையை வெளியிட்டார். 1933இல் கா.சுப்பிரமணியப் பிள்ளை ஒரு உரையை எழுதினார். 1954இல் சீகாழித் தாண்டவராயர் ஒரு உரையை வெளியிட அதன் அருமையையும் பெருமையையும் உணர்ந்த அன்பர் பலர் அதைப் படித்து திருவாசகத்தை நன்கு அனுபவித்தனர். திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ச.தண்டபாணி தேசிகர் 1964இல் ஒரு அற்புதமான உரையை வெளியிட்டார். அதன் பின்னர் 1968இல் சுவாமி சித்பவானந்தர் ஒரு உரையை வெளியிட்டார். மிக விரிவான இந்த உரை இன்றளவும் அனைத்து அன்பர்களாலும் வாங்கப்பட்டு படிக்கப்பட்டு வருகிறது.
இந்த உரைகளை இன்று படிக்க வேண்டிய அவசியம் ஒன்று உள்ளது. ‘சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து’ என்று மணிவாசகப் பெருந்தகை சொல்வதால் சொல்லிய பாட்டில் உள்ள, அந்தப் பொருளை உணர பெரியோர்களின் உரையை நாட வேண்டி இருக்கிறது. முடிந்த போதெல்லாம் இன்று இப்போது இங்கு கேட்பது போல் அவர் தம் உரைகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.
வடமொழியும் தென்மொழியும் கற்று அதில் வல்லார்கள் வேதக் கருத்தையும் உபநிடதக் கருத்தையும் பிட்டுப் பிட்டு வைக்கும் போது திருவாசகத்தில் இல்லாதது ஒரு வாசகத்திலும் இருக்காது என்ற அனுபவ உண்மையை அவர்களின் விளக்கம் நமக்குத் தருகிறது.
__தொடரும்
TAGS-
tags- திருவாசகம்-1, தேன்