
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9873
Date uploaded in London – 20 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 19-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!
ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் -1
ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்! அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்!

பாரத தேச வரலாற்றில் சமர்த்த ராமதாஸர் முக்கியமான வித்தியாசமான ஒரு பங்கை வகிக்கிறார். முகலாயரால் ஹிந்து மதம் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் அவதரித்த அவர் மக்களிடம் ஆன்மீக எழுச்சியை ஊட்டியதோடு அல்லாமல் முகலாயரின் ஆக்கிரமிப்பையும் விஸ்தரிப்பையும் தடுத்து நிறுத்தி மக்களிடம் ஹிந்து எழுச்சியையும் ஊட்டினார். பக்தி இயக்கத்தில் எவ்வளவு பெரும் பங்கு வகித்தாரோ அதே அளவு அரசியலிலும் பங்கு வகித்து சத்ரபதி சிவாஜிக்கு ஆசி அளித்து அவரது செயலுக்கு ஊக்கம் அளித்தார். சந்த் துகாராம் வாழ்ந்த சம காலத்திலேயே அவர் வாழ்ந்தார்.
ஜம்ப் சமர்த் என்ற ஊரில் சமர்த்த ராமதாஸர் சைத்ர சுக்ல நவமியில் சரியாக 12 மணிக்கு ஹிந்து சகாப்தப்படி 1530ஆம் ஆண்டும் கி.பி.1608ஆம் ஆண்டு ஸ்ரீ ராமர் பிறந்த அதே ராமநவமி அன்று அதே நேரத்தில் அவதரித்தார். இந்த இடம் இன்றைய மஹராஷ்டிர மாநிலத்தில் ஜல்னா மாவட்டத்தில் உள்ளது. தேசஸ்த ருக்வேத பிராமண குடும்பத்தில் சூர்யதாஸ் தாஸருக்கும் ராணுபாய்க்கும் இளைய மகனாகப் பிறந்தார். அவருக்குச் சூட்டப்பட்ட பெயர் நாராயணன். அவரது அண்ணனின் பெயர் கங்காதர். அவர் பிறந்த இல்லம் இன்று ராமர் கோவிலாக விளங்குகிறது. நானாசாஹப் தேவ் 1943ஆம் ஆண்டு இதை ஸ்தாபித்தார். இன்று இதை ஒரு டிரஸ்ட் நிர்வகிக்கிறது. 240 ஹெக்டேர் நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளது.

சூர்யாஜியின் குடும்பம் சூரியனை வழிபட்டு வந்த குடும்பம். ஒருநாள் சூரியன் அவர் முன் தோன்றி உனக்கு இரு மகன்கள் பிறப்பார்கள். மூத்தவன் ராமனின் அம்சமாகவும் இளையவன் அநுமனின் அம்சமாகவும் பிறப்பார்கள் என்றார். அதன் படியே இளையவனாக அநும அம்சமாகப் பிறந்த குழந்தைக்கு வாலும் இருந்தது. அது நாளடைவில் மறைந்தது. இளம் வயதில் நாராயணனின் குறும்புத்தனத்திற்கு அளவில்லை. அவருக்கு மணத்தை முடித்து வைக்க ஏற்பாடு நடந்தது. ஆனால் திருமணமந்திரத்தில் சாவ்தான் என்ற வார்த்தையைக் கேட்ட அவர் ஜாக்கிரதை என்ற அதன் பொருளை ஆழமாக ஊன்றி நினைத்து உணர்ந்தார். அங்கிருந்து அகன்றார். நேராக இன்றைய நாசிக்கில் உள்ள பஞ்சவடிக்குச் சென்றார். அங்கு 12 ஆண்டுகள் தவம் மேற்கொண்டு இடைவிடாது ராம நாமத்தை ஜபிக்கத் தொடங்கினார். காயத்ரி மந்திரத்தையும் அவர் தொடர்ந்து ஜபித்து வந்தார். இப்படியாக மூன்று கோடிக்கும் மேலாக காயத்ரியையும் பதிமூன்று கோடிக்கும் மேலாக த்ரயோதசாக்ஷரி என்று கூறப்படும் ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்’ என்ற மந்திரத்தையும் ஜபித்தார். ராம தரிசனத்தையும் பெற்றார். 24ஆம் வயதில் அவர் சித்தி பெற்றார்.
அவர் முன் தோன்றிய ஸ்ரீராமர், “அநுமனின் அம்சமாகத் தோன்றிய இனி நீ சமர்த் ராம்தாஸ் என அழைக்கப்படுவாய்; உனக்கு மாபெரும் பொறுப்பு உள்ளது. காட்டில் நான் இருந்த போது அணிந்த ஆடையை உனக்குத் தருகிறேன். அந்நியரின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்து” என்று கூறி மந்திரோபதேசம் செய்ததோடு வஸ்த்ர தீக்ஷை செய்து வஸ்த்ரத்தையும் கொடுத்து அருள, சமர்த்தர் அந்தப் பொறுப்பைத் தலை மேல் கொண்டார். ராம மந்திரத்தை உலகெங்கும் ஜபிக்கச் செய்து சமர்த் சம்பிரதாயத்தை அவர் நிறுவினார். அவர் அணிந்த ஆடை இன்றும் அவரது சமாதிக் கோவிலில் உள்ளது.
அந்நிய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் மகத்தான பணியில் அவர் ஈடுபட்டார்.
அதற்கெனவே அவர் சிவாஜிக்கு அருள் பாலித்தார். சிவாஜியுடனான அவரது சந்திப்பு சுவாரசியமான ஒன்று. ஒரு நாள் சிவாஜி ஆற்றங்கரையோரத்தில் அமர்ந்திருக்க நதி நீரில் மிதந்து வந்த சில ஓலைச் சுவடிகளில் மராத்தி மொழியில் அற்புதமான கவிதைகள் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். ஓலை வந்த திசை நோக்கிச் சென்ற சிவாஜி அங்கு ஒரு அதிசயமான காட்சியைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அங்கு ஒரு அருளாளர் அமர்ந்து அருமையான பக்திப் பாடலைப் பாட அதை அவருக்கு முன்னே கொடிய மிருகங்களும் அவற்றிற்கு இரையாகும் பல மிருகங்களும் பயமின்றி ஒன்றாகக் கூடி அந்த இசைப் பாடலைக் கேட்ட வண்ணம் இருந்தன. மிருகங்களின் கண்களிலும் நீர் துளிக்கும் அதிசயக் காட்சியையும் கண்டார் சிவாஜி. அங்கு இருந்த மகானே சமர்த்த ராமதாஸர் என்று அறிந்த சிவாஜி அவரைக் குருவாக ஏற்றார்.
ராமதாஸர் அவருக்கு அருள் பாலித்து சிவாஜியின் வாழ்க்கை நெடுக பல அதிசய சம்பவங்களை நிகழ்த்திக் கொண்டே இருந்தார்.

சிவாஜி 1627ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி பிறந்தார்.1674ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி ராய்கரில் சத்ரபதி சிவாஜியாக ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவி முடி சூட்டிக் கொள்கிறார். 1675ஆம் ஆண்டு சமர்த்த ராமதாஸர் பாலி கோட்டையில் தங்குகிறார். 1680ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிவாஜி அமரராகிறார்.
சிவாஜி பட்டாபிஷேகம் செய்யப்பட்ட அடுத்தபதினொன்றாம் நாளிலேயே அவரது தாயார் ஜீஜாபாய் மரணமடைந்தார். இதனால் சிவாஜி பெரிதும் துக்கமுற்றார். அத்துடன் அவரது மகன் சம்பாஜி பொறுப்புணர்ச்சி சிறிதும் இல்லாமல் இருந்தது அவரை பாதித்தது. அவரது உடல்நிலை சீர்குலைந்தது. அந்தச் சமயத்தில் ஒரு நாள் அவரது தூதுவன் அவரிடம் வந்து மஹராஜ்! தங்களைச் சந்திக்க சமர்த்த ராமதாஸர் வந்திருக்கிறார் என்றான். அதைக் கேட்டு துள்ளி எழுந்தார் சிவாஜி. அவரை வரவேற்க அவர் செல்வதற்குள் ராமதாஸரே அவரது படுக்கையறைக்கு வந்தார். அவர் கரங்களைப் பற்றி ஆசிர்வதித்தார். அத்துடன் சிவாஜியிடம் மென்மையான வார்த்தைகளைக் கூறி, “கவலைப்படாதே! அனைத்தையும் இறைவனிடம் விட்டு விடு” என்று கூறினார். சிவாஜி ராமதாஸரின் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார்.
“உனக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டட்டும். நான் உன் அருகிலேயே உள்ள பாலிக் கோட்டையில் தான் தங்கி உள்ளேன்” என்றார் அவர். அதன் பின் பாலிக் கோட்டைக்கு சஜ்ஜன் காட் – ஆன்றோர் உறைவிடம் – என்ற பெயர் சூட்டப்பட்டது.
ஒருமுறை சிவாஜியின் நந்தவனத்தில் சமர்த்த ராமதாஸர் இருந்த போது அவரது சீடர் மரத்தில் இருந்த பழங்களைப் பறிக்க அவரிடம் அனுமதி கேட்டார். உடனே சமர்த்தர் ஒரு கல்லை எடுத்து மரத்தின் மீது வீசினார். ஆனால் அந்தக் கல் ஒரு பறவையின் மீது பட அது கீழே விழுந்து இறந்தது. இதைக் கண்ட அனைவரும் ஞானியான இவர் ஒரு பறவையைக் கொன்று விட்டாரே என்று பேசத் தொடங்கினர்.
அதைக்கேட்ட சமர்த்த இராமதாசர் இராம மந்திரத்தின் மகிமையை விளக்கும் ஒரு பாடலை ‘ஜன்ஜூட்’ எனும் இராகத்தில் பாடினார். பாடலைப் பாடிய படியே கீழே இறந்து கிடந்த பறவையை எடுத்து ஆகாயத்தில் வீசினார. அந்தப் பறவை உயிர் பெற்று அப்படியே பறந்து ஓடியது. ஹிந்துஸ்தானி இராகமான ‘ஜன்ஜூட்’ என்ற இராகத்தைப் பாடினால் எப்படிப்பட்ட நோயும் நீங்கும் என்பது இன்றும்
நிலவி வரும் நம்பிக்கை.இந்த ஹிந்துஸ்தானி ராகத்திற்குச் சமமான கர்நாடக இசை ராகம் செஞ்சுருட்டியாகும்.
அனைவரும் ஆச்சரியப்பட்ட இந்த சம்பவம் உலகெங்கும் பரவியது. சிவாஜி ராமதாஸரை வணங்கி தஞ்சையிலிருந்து ஆட்சி புரிந்து வரும் தன் சகோதரர் வெங்கோஜிக்கு அருளாசி வழங்குமாறு வேண்ட ராமதாஸர் தஞ்சையை நோக்கி விஜயம் செய்தார். அங்கு வெங்கோஜிக்கு ஆசி வழங்கி ஒரு அநுமார் கோவிலைக் கட்டினார். சமர்த்த மடம் ஒன்றையும் ஸ்தாபித்தார். தஞ்சை நகரின் பிரதானமாக இருக்கும் இது இன்றும் செயல்பட்டு வருகிறது. நாடெங்கும் இமயம் முதல் குமரி வரை 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் ஊராக யாத்திரை செய்த அவர் ராம நாமத்தை எங்கும் பரப்பினார். பண்டரிபுரத்தில் அவருக்கு விட்டல தரிசனம் கிடைத்தது. மஹூர்காட்டில் அவருக்கு ஸ்ரீ தத்தாத்ரேயரின் தரிசனம் கிடைத்தது. ராஜஸ்தான், மஹராஷ்டிரம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் தமிழ்நாடு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் அநுமார் கோவில்களை அவர் ஸ்தாபித்தார். இவற்றில் 11 கோவில்கள் இன்று புகழ் பெற்று விளங்குகின்றன. கிருஷ்ணா நதி தீரத்தில் அவர், ராமர் சிலா விக்ரகங்களையும் கண்டுபிடித்து வழிபாட்டிற்கு வழி வகுத்தார்.மஹராஷ்டிரத்தில் உள்ள சதாரா நகரின் அருகே உள்ள மஹாபலேஷ்வருக்கு விஜயம் செய்த அவர் அருகே உள்ள மாசூரில் ராமநவமியைக் கோலாகலமாகக் கொண்டாடும் உற்சவ வைபவத்தைத் தொடங்கி வைத்தார். சீக்கிய குருவான ஹர்கோபிந்த் சிங்கையும் அவர் ஸ்ரீநகரில் சந்தித்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.இந்தச் சந்திப்பு வரலாறு முக்கியத்துவம் ஒன்றாக அமைந்திருந்தது.

TAGS- சமர்த்த ராமதாஸ் -1