
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9902
Date uploaded in London – 28 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 26-7-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி! – 2
ஒரே சமயத்தில் இரு இடங்களில் தோற்றம்
வேளச்சேரி ரங்க ஐயர் என்பவர் பகவான் ரமணரின் பள்ளிப்படிப்புக் காலத்தில் வகுப்புத் தோழராக இருந்தவர். அவர் தனது ஒரு அனுபவத்தை இப்படி விளக்கியுள்ளார்.
“ஒரு முறை நான் ஸ்காந்தஸ்ரமத்தில் பகவானை விட்டு சிறிது நேரம் வெளியில் சென்றேன். அவர் அப்போது உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார். நான் திருப்பி வந்த போது அவர் வெளியில் ஒரு படுக்கையில் அமர்ந்திருந்தார். உள்ளே இருந்தவர் வெளியில் வந்திருக்கிறார் போலும் என்று நினைத்த நான் அதைப் பற்றி பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை.
ஆனால் ஆசிரமத்தின் உள்ளே சென்ற போது அவரை எப்படிப் பார்த்தவாறு வெளியில் சென்றேனோ அதே போல அவர் உள்ளேயே இருந்தார். இதைப் பற்றி (உள்ளே இருப்பவரை வெளியேயும் பார்த்ததை) பகவானிடம் நான் சொன்ன போது அவர் சிரித்தவாறே கூறினார் :” அதை அப்போதே ஏன் சொல்லவில்லை? அந்தத் திருடனை அப்போதே நான் பிடித்திருப்பேனே!”
ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருப்பது போன்ற இந்த மாதிரியான அசாதாரணமான நிகழ்வுகளுக்கெல்லாம் பகவானின் பதில் இப்படித்தான் இருக்கும்! இப்படிப்பட்ட நிகழ்வுகளை அவரிடம் சொன்னால் அவர் அதை ஒதுக்கி விடுவார் அல்லது அதை ஜோக்காக எடுத்துக் கொண்டு விடுவார். அற்புத நிகழ்வுகளில் தனது பக்தர்கள் இழுத்துச் செல்லப்பட்டு தங்கள் முக்கிய லக்ஷியமான ஆத்மனை அறிவது என்பதை விட்டுவிடக் கூடாதே என்பதால் தான் அவர் இப்படி அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இப்படிச் செய்தார்.
திருவண்ணாமலை ரகசியம்
திருவண்ணாமலை அப்படி என்ன ஒரு அற்புதமலை? இந்தக் கேள்வி அனைவருக்கும் எழுவது சகஜமே.
ஒரு முறை பால் பிரண்டன் திருவண்ணாமலை பற்றிப் பல்வேறு கேள்விகளைக் கேட்டு ரமணரைக் குடைந்தார்.
மலைக்குள்ளே குகைகள் உள்ளனவா என்று கேட்டார் பிரண்டன்.
ரமணர், “எனது அகக் காட்சிகளில் குகைகள், நகரங்கள், தெருக்களைக் கண்டுள்ளேன்” என்று பதில் கூறினார்.
சித்தர்கள் அதனுள் இருக்கின்றனரா என்று கேட்டார் பிரண்டன். “பெரிய சித்தர்கள் இருக்கின்றனர்” என்றார் ரமணர்.
சித்தர்கள் இமயமலையில் இருப்பதாக அல்லவா சொல்கின்றனர் என்று அடுத்து கேட்ட பிரண்டனுக்கு விடையாக ரமணர், “கைலாயம் சிவனின் இருப்பிடம் தான்; ஆனால் சிவனே தான் இந்தத் திருவண்ணாமலை” என்று கூறினார். திருவண்ணாமலையின் ரகசியத்தை இப்படி விண்டுரைத்த ஒரே ரிஷி ரமணர் தான்.
சாமர்த்தியமான கேள்விக்குச் சரியான பதில்!
அன்பர் ஒருவருக்கு ‘இன்ஸ்டண்ட் ஞானியாக’ வேண்டும் என்று ஆசை. ரமண பகவானிடம் வந்தார்.
“நீங்களோ பகவான். ஆகவே எனக்கு எப்போது ஞானம் பிறக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் எப்போது ஞானி ஆவேன் என்பதைச் சொல்லுங்கள்” என்றார் அவர்.
ரமணர் அவரை நோக்கி, “ நான் பகவான் என்றால் ஆத்மாவைத் தவிர இரண்டாவது வஸ்து இல்லை. ஆகவே ஞானியோ அல்லது அஞ்ஞானியோ, இரண்டாவதாக ஒருவர் இல்லை. நான் ஒருவன் மட்டுமே தான்! நான் பகவான் இல்லை என்றால் நானும் உங்களைப் போல ஒருவன் தான்! எனவே உங்களுக்குத் தெரிந்த அளவே தான் எனக்கும் தெரியும். எப்படிப் பார்த்தாலும் உங்கள் கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது.”
கேட்டு அறிவதில்லை ஞான அனுபவம்! உணர்ந்து அறிவதே ஞானாநுபூதி!
ரமணரிடம் சாமர்த்தியமாகப் பேசித் தங்கள் கருத்துக்களை அவர் மேல் ஏற்றி அவரைப் பயன்படுத்த நினைத்த (மத மாற்றம் செய்யும்) ஸ்டான்லி ஜோன்ஸ் உள்ளிட்ட பாதிரியார் உடபட அனைவரும் ஏமாந்தே போனார்கள். இப்படிப்பட்ட நூற்றுக் கணக்கான சுவையான சம்பவங்கள் உண்டு.
நிஷ்காம்ய கர்மம் என்றால் என்ன?
நிஷ்காம்ய கர்மம் – பலனை எதிர்பாராமல் செயலைப் புரிவது – என்றால் என்ன?
ரமணர் பெரிய கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதிலைத் தருவார். ஒரு சம்பவம் இது:-
வெல்லூர் வர்கீஸ் கல்லூரியைச் சேர்ந்த தெலுங்கு பண்டிதர் ரங்காச்சார் என்பவர் ஒரு நாள் (25-12-1935 அன்று) ரமண மஹரிஷியிடம் நிஷ்காம்ய கர்மம் என்றால் என்ன என்று கேட்டார். பதிலே இல்லை.
கொஞ்ச நேரம் கழித்து ரமணர் அருணாசலமலையை மீது ஏறலானார். பக்தர்கள் பின் தொடர்ந்தனர். பண்டிதரும் தொடர்ந்தார்.
வழியிலே முள் நிறைந்த கம்பு ஒன்று கீழே கிடந்தது. அதை மஹரிஷி கையில் எடுத்துக் கொண்டார். ஓரிடத்தில் உட்கார்ந்து மெதுவாக அந்த முள்களைச் செதுக்கி எடுத்தார். கம்பில் இருந்த முண்டு முடிச்சுகளைத் தேய்த்து அதைச் சீராக்கினார். ஒரு சொரசொரப்பான இலையை எடுத்து அதைத் தேய்த்து வழவழப்பாக்கினார்.
சுமார் ஆறு மணி நேரம் இந்த வேலை தொடர்ந்தது. கம்பு பளபளவென்று பாலிஷானது. அனைவரும் இதைப் பார்த்து எப்படி இருந்த கம்பு இப்போது எப்படி மாறி உள்ளது என வியந்தனர்.
பிறகு ரமணருடன் பக்தர் குழு நகரத் தொடங்கியது.
அப்போது ஒரு இடையன் அங்கே வந்தான். தனது கம்பைத் தொலைத்து விட்டு மிக்க கவலையுடன் இருந்த அவனைப் பார்த்த மஹரிஷி தன் கையிலிருந்த கம்பை அவனிடம் கொடுத்து விட்டு மேலே நகரலானார்.
தனது கேள்விக்கு பிராக்டிகலான பதிலே – நடைமுறை பதிலே – கிடைத்து விட்டது என்று மகிழ்ந்தார் பண்டிதர்.
பிரதிபலன் எதிர்பாராமல் தம் கடமையைச் செய்வதே நிஷ்காம்ய கர்மம்!
பகவானின் உபதேச மொழிகள்
மிக நீண்ட சொற்பொழிவுகளோ பெரிய கஷ்டமான வழிகளைச் சொல்வதோ ரமணரிடம் இல்லை.
அவரது உபதேசம் மிக மிக எளிமையானது; சாமான்யரான எந்த ஒருவர் நினைத்தாலும், இறைவன் அருளும் கூட இருந்தால், சுலபமாகக் கடைப்பிடிக்கக் கூடியது! செலவில்லாததும் கூட!
‘நான் யார்’ என்பதை தொடர்ந்து தியானித்து வா என்றார் அவர்.
உன்னைக் கண்டுபிடித்து அறிந்து விட்டால் அனைத்தையும் கண்டுபிடித்தவன் ஆவாய் என்பது அவர் அருள் உபதேசம்.
தன்னை அறிவதே ஆன்மீகம்!
அவர் அரிதாக அவ்வப்பொழுது இயற்றிய அருமையான ஸ்ரீ அருணாசல ஸ்துதி பஞ்சகம், உபதேசவுந்தியார், உள்ளது நாற்பது, ஏகான்ம பஞ்சகம், அப்பளப்பாட்டு உள்ளிட்ட நூல்கள் ரமணாசிரமம் வாயிலாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஏராளமான ரமண பக்தர்கள்
ஆயிரக்கணக்கான சுவையான சம்பவங்களைப் புத்தக உருவத்தில் தந்துள்ளனர். அனைத்தும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏன் உலகின் பல்வேறு மொழிகளிலும் கூட உள்ளன. இவற்றை ரமணாசிரமத்திலும் ரமணர் நூல்கள் கிடைக்கும் இதர இடங்களிலும் வாங்கிப் படித்துப் பயனடையலாம்.
ரமண – யாத்திரை இடங்கள்
ரமணரின் அருளைப் பெற விரும்பும் ஒருவர் நினைத்த இடத்திலிருந்து அவரை வணங்கலாம்; அருளைப் பெறலாம். அவர் வாழ்ந்த திருவண்ணாமலை ரமணாசிரமம், ஜெனித்த திருச்சுழி இல்லம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்குக் கோபுரத்திற்கு நேர் எதிரில் அமைந்துள்ள தெருவில் அவர் ஞானம் பெற்ற இல்லம் ஆகியவை அன்பர்கள் ஆன்மீக உயர்வுக்காக நாடிச் செல்லும் யாத்திரை இடங்களாக அமைந்துள்ளன.
இறுதி நாட்களில் அவர் கையில் கட்டி ஒன்று தோன்றவே அன்பர்கள் மனம் கலங்கினர். ஆனால் ரமணரோ, “நான் எங்கு போகப் போகிறேன். இங்கே தான் இருப்பேன்” என்று அருளினார்.
அதை நிரூபிக்கும் வகையில் அவரை அங்கு துதிப்போர் அனைவரும் ஆன்மீக அனுபவங்களை இன்றளவும் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர்.
ஒவ்வொருவருக்கும் எதிர்ப்படும் பிரச்சினைகள் அவரை வணங்கியவுடன் தீர்ந்து போவது ஒரு ஆச்சரிய அனுபவமாகும்.
1950ஆம் ஆண்டு எப்ரல் 14ஆம் நாள் இரவு 8.47க்கு அவர் மேலாம் நிலையை அடைந்து விண்ணில் கலந்த அதே கணத்தில் வானில் ஒரு பெரும் ஜோதி வேகமாகச் சென்றது.
ரமண ஜோதி பூவுலகில் தன் உடலை உகுத்து விண்ணில் ஜொலிக்கும் ஜோதியாக மாறியதைப் பார்த்தோர் அதிசயித்தனர்.
அற்புதமான அண்ணாமலையில் அருளாட்சி புரியும் அதிசய மஹரிஷி ரமணரை நினைத்தாலும் துதித்தாலும் குறைகளை எல்லாம் களையலாம்;கோடி நலம் பெறலாம் என்பது திண்ணம்!
வாழி ரமணேசன் வாழியவன் வாரிசத் தாள்
வாழி ரமணீய குணமாணடியார் – ஊழி பல
வாழி பராசக்தி வாழி சதாமூர்த்தி
வாழி சிவானந்த வளம்!
நன்றி வணக்கம்.
****

TAGS- ரமண மஹரிஷி! – 2