

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9922
Date uploaded in London – – 2 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 1-8-2021 அன்று ஒளிபரப்பான உரை!
போதார் தாமரையாள் புலவிக் குல வானவர் தம்
கோதா! கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா! தூமொழியாய்ச் சுடர் போல் என் மனத்திருந்த
வேதா! நின்னடைந்தேன், திருவிண்ணகர் மேயவனே!
திருமங்கையாழ்வார் திரு நாமம் வாழி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாக அமைவதும் தென் திருப்பதி என்று அனைவராலும் அழைக்கப்படும் திருவிண்ணகர்த் தலமாகும்.
ஒப்பிலியப்பன் கோவில் என்று அனைவராலும் அறியப்படும் இந்தத் தலமானது தமிழகத்தில், கும்பகோணம் நகருக்குத் தெற்கில் 7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
ஆகாச நகரம், வைகுண்ட நகரம், ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன் ஆகிய பெயர்களையும் கொண்டுள்ள இந்தத் தலம் ஏராளமான பக்தர்களைத் தினமும் ஈர்க்கும் திருத்தலமாகும்.
மூலவர் நாமம் : திருவிண்ணகரப்பன் – ஒப்பிலியப்பன் – உப்பிலியப்பன். பிராட்டியின் திரு நாமம் – பூமி தேவி அல்லது பூமி நாச்சியார்
பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும் பிராட்டியார் வடக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்திலும் இருந்து அருள் பாலிக்கின்றனர்.
இங்குள்ள விமானத்தின் பெயர் சுத்தானந்தம். இங்குள்ள புஷ்கரணி அஹோராத்ர புஷ்கரணி என அழைக்கப்படுகிறது. காலை, மாலை என எந்த நேரமும் நீராடலாம் என்பதால் இது இந்தப் பெயரைப் பெற்றது. கோவிலுக்கு வெளியே சார்ங்க தீர்த்தம், சூர்ய தீர்த்தம், இந்த்ர தீர்த்தம், ப்ரஹ்ம தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளன.
இங்கு எம்பெருமான் நம்மாழ்வாருக்கு பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் ஆகிய ஐந்து வடிவங்களுடன் காட்சி அளித்துள்ளார் என்பதை வரலாறு தெரிவிக்கிறது. நம்மாழ்வார் எம்பெருமானைப் பிரிந்து மிகவும் வருந்தினார். அப்போது எம்பெருமான் தானே அவர் மேல் விழுந்து ஆழ்வாரை அணைத்து அருளினார். ஆகவே எம்பெருமான் எந்நாளும் பிரியாத தலமாக இதை முன்னோர்கள் கண்டனர். மேலும் இத்தலத்தில் ஒன்பது பாசுரங்களில் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பொருள்களைச் சொல்லி அவற்றிற்கெல்லாம் அந்தர்யாமியாக இருப்பவன் எம்பெருமானே என அவர் நிறுவி “சேராத பொருள்களைச் சேர்க்கும் பெருமையன்” என்று பாடினார்.


கருடன், காவேரி, தர்ம தேவதை, மார்க்கண்டேயர் ஆகிய நால்வருக்கும் இத்தலத்தில் எம்பெருமான் தரிசனம் தந்துள்ளதாகப் புராணம் கூறுகிறது.
இந்த தலத்தின் சிறப்பைப் பற்றி பிரம்மாண்ட புராணம் விரிவாக விவரிக்கிறது.
மிருகண்டு மஹரிஷியின் புத்திரரான மார்க்கண்டேய மஹரிஷி பூமா தேவி தனக்கு மகளாகவும், திருமால் மாப்பிள்ளையாகவும் ஆக வேண்டும் என நெடுங்காலம் தவம் செய்தார். ஒரு நாள் துளசி வனத்தில் ஒரு அழகிய பெண்குழந்தையை அவர் கண்டார். அதை எடுத்து பூமாதேவி என்ற பெயரைச் சூட்டி அதை வளர்த்தார். குழந்தை வளர்ந்து திருமண வயதை அடைந்தது. ஒரு நாள் திருமால் ஒரு வயதான அந்தணர் வேடத்தில் மார்க்கண்டேய மஹரிஷியை அணுகி அவரது பெண்ணைத் தனக்கு மணம் முடித்துத் தருமாறு வேண்டினார். மார்க்கண்டேயர் அதற்கு மறுத்து பல காரணங்களைக் கூறினார். ஆனால் வந்தவர் விடவில்லை. கடைசியில் தன் பெண்ணுக்கு உப்புப் போட்டுச் சமைக்கத் தெரியாது என்று கூறினார் மார்க்கண்டேயர். அதற்கும் திருமால் விடவில்லை. செய்வதறியாது மார்க்கண்டேயர் திகைத்து நின்றார். திருமாலை வேண்டினார். உடன் திருமால் அவர் முன் தோன்றி உனக்கு மகளாக வந்தது பூமா தேவியே என்று கூறி அருளினார். அவர் வேண்டியபடியே பூமாதேவியை மணந்தார். பூமாதேவியை மணந்து அவள் சமைத்த உப்பில்லாத உணவை உண்டதால் அவர் பெயர் உப்பிலியப்பன் என்று ஆனது. இன்றும் உப்பிலியப்பனுக்கு உப்பு இல்லாத நைவேத்யமே செய்யப்பட்டு வருகிறது.
இந்தத் திருமண வைபவம் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சிரவண நக்ஷத்திர தினத்தன்று இங்கு நடைபெறுகிறது.
கருட சந்நிதிக்கு அப்பால் எந்த விதமான உப்பு சேர்த்த பண்டமும் உள்ளே கொண்டு செல்லப்படுவதில்லை என்பது இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு மரபாகும்.
பங்குனி மாதம் சிரவண நாளன்று இங்கு எம்பெருமான் அவதரித்தார். ஆகவே இந்த அவதார தினத்தில் திருத்தேருடன் ஒன்பது நாள் ப்ரஹ்மோத்சவம் நடைபெறுகிறது. அத்துடன் சிரவண தினம் மிக முக்கியமான தினம் என்பதால் இங்கு சிரவண தீபம் ஒவ்வொரு சிரவண நாளன்றும் ஏற்றப்படுகிறது.
இங்குள்ள பெருமாள் திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாகக் கருதப்படுகிறார்.
ஆலயத்திற்குள் கர்பக்ருஹத்திற்கு வெளியே ஸ்ரீ தேசிகன் சந்நிதியும், வெளி மண்டப தென்புறத்தில் அனுமன் சந்நிதியும், வடபுறத்தில் ஆழ்வார்கள் சந்நிதியையும், அதன் கிழக்கே ஸ்ரீ ராமன் சந்நிதியையும் காணலாம்.
குருவாயூர் கோவிலில் உள்ளது போலவே பக்தர்கள் தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒரு துலாபாரமும் இந்தக் கோவிலில் உள்ளது. இந்த திவ்ய தேச தலத்தில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்து அருளியுள்ளனர். ராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டுக்கள் இந்தக் கோவிலைப் பற்றிச் சிறப்புறக் குறிப்பிடுகின்றன.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் உப்பிலியப்பனும் பூமி தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருள் வாக்கு இது.
கையும் உரையும் கருத்தும் உனக்கே அடிமை
செய்யும்படி நீ திருத்தினாய் – ஐயா!
திரு விண்ணகராளா! சிந்தையிலும் எண்ணேன்,
பெரு விண்ணகர் ஆளும் பேறு!


நன்றி வணக்கம்!
****
tags–ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன், கோவில் , ஆலயம், அறிவோம்