தமிழ்ப் புலவர்களின் ரஸிக்க வைக்கும் சொல்லாடல்–1 (Post No.9928)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 9928

Date uploaded in London – 3 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 267-2021 அன்று ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.

                                                                                                                                                                                                                                                                                                                                                     பா.கண்ணன்  புது தில்லி

தமிழ் முழக்கம் அன்பு நெஞ்சங்களுக்கு தில்லியிலிருந்து பேசும் கண்ணன் வணக்கம் பல.

ஞானமயம் ஒலிபரப்பு ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி அதைச்செவ்வனே முன்னோக்கி எடுத்துச் செல்லும் நிர்வாகக்  குழுவினருக்கு எனது மனங்கனிந்த இனிய நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ஞானச்சுடர், தமிழ் முழக்கம் பேச்சாளர்களுள் ஒருவனாக இருக்க வாய்ப்பளித்த தற்கு மனமார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு,ஞானச்சுடர் எனும் தலைப்புக்கேற்ப, கொஞ்சுதமிழ் தவழ்ந்து விளையாடும் தமிழ் இலக்கியத்தில் உள்ளச் சில சொல்லாடல்களை  ரஸித்து மகிழலாம், வாருங்கள்…

தமிழ்க் கவிஞர்களும், புலவர்களும் சொற்விளையாட்டில் வல்லவர்கள். ஒரு சொல்லை அது  குறிக்கும் வேறு சில பொருள்களுடன் சம்பந்தப்படுத்திப் பாடல்கள் புனைவதில் புலமைப் பெற்று விளங்கினர். காளமேகப் புலவர் ‘க’கர, ‘த’கர வர்க்கப் பாடல்கள் மற்றும் அவரும்,ஔவையாரும் கணித எண்களைக் கையாண்டுச் சிலேடை மிளிறச் செய்யுட்களை இயற்றி நம்மைப் பிரமிக்கவும் வைத்துள்ளனர். சைவ முதன்மை நாயன்மார்கள் நால்வரும், வைணவ ஆழ்வார்களும், தாங்கள் பாடியப் பதிகங்கள், பாசுரங்களை அணி இலக்கண வகையில், சம்ஸ்கிருதக் காப்பியங்களில் காண்பது போல் மொழி மாற்று, மாலை மாற்று, ஏகபாதம், வழிமொழி, இரதபந்தம் ஆகிய வேறுபல சித்திரக்கவி நடைகளிலும் இயற்றி நம்மை மகிழ்ச்சியுற வைத்துள்ளனர்.

இப்போது நாம் பார்க்கப் போவது நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் ஓர் அங்க மும்,அழகிய மணவாளதாசர் என்றறியப்படும்  பிள்ளை பெருமாள் ஐயங்கார் இயற்றிய, விஷ்ணுவைப் போற்றும் திருவரங்கக் கலம்பகம் நூலில் இடம் பெற் றிருக்கும் ஓர் அழகியப் பாயிரம் தான். பலவகைப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை போல், பலவகைப் பாக்களைக் கொண்டு அமைக்கப் பட்டதுதான் கலம் பகம். இத் தமிழ்ப் பாக்கள் தேவாரம், திவ்யப் பிரபந்தத்தின் வாயிலாக வளர்ச்சி யுற்றுக் கம்பனின் ராமாயணத்தில் முழு நிறை வடிவம் பெற்றுள்ளன.வடமொழி இலக்கண மரபைச் சார்ந்துச் செழித்து வளர்ந்துள்ளது எனலாம். தேவர்களைப் போற்ற 100, அந்தணர்-95, அரசன்-90, அமைச்சர்-70,வணிகர்-50, வேளாளர்-30 பாயிரங்கள் என வகைப்படுத்திப் பாடுவது பிரபந்தமாகும். இதைப் படிப்பவர், நல்லொழுக்கம், நல்வாழ்வு, நல்ல பக்தியுடையவர்களாக விளங்குவர் என்பது

நம்பிக்கை. இப்பாயிரம் 37-ன் ஒவ்வொரு அடியும் தமிழ் உயிர் எழுத்துக்களைக் கொண்டு அமைக்கப்பட்டு, அவை சில திவ்யதேசங்களின் பெருமையைஎடுத்துச் சொல்வது இதன் சிறப்பாகும்…அப்பாசுரம் இதோ………

அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை

ஆலிமா முகிலை வாலி காலனை                                   

இந்தளூருறை யெந்தைபெம் மானை

ஈசனான் முகன் வாசவன் றலைவனை

உள்ளுவா ருள்ளத் துள்ளுறை சோதியை

ஊரக நின்றரு ணீரகத் தடிகளை

எவ்வுண் மாயனைத் தெய்வநா யகனை

ஏர்மலி சிகரத்து நீர்மலை யாதியை

ஐவா யரவி லறிதுயி லமலனை

ஒருகான் மொழியினு மொழிகுவை நெஞ்சே

ஓதநீர் ஞாலத் துழலும்

ஔவியப் பிறப்பி லழுந்தி வாடுவதே

பொருள்: கடல் சூழ்ந்தப் பூவுலகில் அலைந்துத் திரிந்து, பொறாமை நிறைந்தப் பிறவிக் கடலில் மீண்டும் மூழ்கி வருத்தமடைவதை அறவேப் போக்கிட, ஸ்ரீரங்கத்துக் கரியகடல் நிறத்தவன், திருவாலியில் வீற்றிருந்தக் கோல அழகியசிங்கராக நீர் நிறைந்தக் கரியமேகம் போன்றுச்  சேவைச் சாதிப்ப வன்,வாலியை வதம் செய்தவன், இந்தளூர் வீரசயன பரிமள ரங்கநாதப் பெருமான், ஈசன், பிரமன், இந்திரன் ஆகியோரின் தலைவன்,அடியவர் நினைத்த வடிவில் விரைந்துச் சென்று அவர்களின் உள்ளங்களில் ஒளிர்பவன், திருவூரகம், திருநீரகத்தில் எழுந்தருளியுள்ளப் பெருமாள், திருவள்ளூர் மாயவன், திருநீர் மலை முதல்வன், பாம்பணையில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ளவன் ஆகி யோரின் திருநாமங்களில் ஒன்றையாவது போற்றித் துதித்து, வாழ்வு உய்ய வழி தேடிக் கொள்வாய், மட நெஞ்சே!   என்கிறார்

இங்கு, ஆலி—மழைத் துளி, ஏர்மலி—அழகியச் சிகரம், ஓதநீர்—குளிர்ந்த கடல் நீர், ஔவியம்–பொறாமை என்பதாம்.

இங்கு மணவாளதாசர் தொண்டைநாடு எனும் காஞ்சி உலகளந்தப் பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள, திரு நீரகம், திரு ஊரகம், திருக் காரகம், திருகார்வானம் ஆகிய நான்கு திவ்யதேசங்கள் பற்றியும், திருநீர்மலையில் பெருமாள் நான்கு கோலத்தில் சேவை சாதிப்பதையும் — மலையடிவாரத்தில் மகரிஷி வால்மீகிக்கு ராமராகக் காட்சியளித்த நீர்வண் ணப் பெருமாள் நின்றான் திருக்கோலம், நரசிம்மராக இருந்தான் வடிவம், ரங்கநாதராக கிடந்தான் கோலம், உலகளந்த வாமனனாக நடந்தான் கோலம்— என்று கோடிகாட்டிப் பரவசப் படுத் துகிறார். தமிழ் உயிரெழுத்துக்கள் இங்கு உண்மையிலேயே உயிர்ப் பெற்று விளங்குகின்றன என்றால் அது மிகையல்ல!

மற்றொன்று, திருமழிசை ஆழ்வார் உணர்ச்சிப் பொங்கும் ஆற்றல் மிக்கச் சொற்களைப் பாசுரங்களில் பயன்படுத்தி, திருமாலைப் போற்றி 120 விருத்தப் பாக்களைக் கொண்டு அருளிச் செய்த நூல் திருச்சந்த விருத்தமாகும்.

இது நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் முதல் ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் பாசுரங்கள் இனிய ஓசை கொண்டுள்ளதால் சந்த விருத்தம் என்று அறியப் படுகிறது. அவர் நாராயணனை (ஆறும் ஆறும் ஆறும் ஓர் ஐந்தும் ஐந்தும்) எண்களால் போற்றியுள்ளார். பர, வ்யூஹ, விபவ, அர்ச்சாவதாரங்களில் திருமால் காட்டியப் பெருமைகளைப் படித்தும், கேட்டும், வணங்கி வழிபடும் பாக்கியத்தை அளித்திருக்கும் நாராயணனின் கருணையைப்  போற்றி, அதன் மூலம் தான் பெற்ற நற்பயன்களை இப்பிரபந்தத்தில் விவரிக்கிறார்.

பாசுரம் 56 முதல் 61 முடிய திருக்குடந்தையில் உறையும் ஆராவமுதனை (சார்ங்கபாணி)ப் போற்றிப் பாடுகிறார். அதில் 57வது பாடல் இலக்கிய நயம் மிகுந்து மிளிர்கிறது.

சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்

அங்கமங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான்

கொங்கு தங்கு வார்குழல் மடந்தைமார் குடந்தை நீர்

பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே 

சங்க இலக்கியங்களிலும், சம்ஸ்க்ருதக் காவியங்களிலும் முக்கியமாக, காளிதாசனின் மேகசந்தேசம், நாயகன்-நாயகியோரின் பிரிவாற்றலால் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் புலவர்கள் உணர்த்தியிருப்பதைப் படித்திருப்போம். தலைவனின் சிறிது காலப் பிரிவால் தலைவியின் உடல் மெலிந்து, கைகள் சிறுத்து அணிந்திருந்த வளையல்கள் நழுவி விழுந்துவிடுமாம். அதேசமயம், அவன் வருகிறான் எனக் கேள்விப் பட்டால் உடல் பூரித்து, கைகள் பருத்து மிஞ்சியுள்ள வளையல்கள் கைக்குப் பொருந்தாமல் உடைந்து விடுமாம். இதை ஆழ்வார் இங்குப் பின்புலத்தில் ஓர் உருவகக் கதை மூலம்,’சங்கு தங்கு முன்கை நங்கை’ என நயம்படக் கூறுகிறார்.

ஆனால் இந்நிலை ஆராவமுதன்-ஸ்ரீமகாலஷ்மி தெய்வத் தம்பதியருக்குப் பொருந்தாது என மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். தெய்வத் தம்பதிக்கு விரக தாபம் என்பது தான் கிடையாதே! ஏனெனில் நாராயணனின் மார்பில் எப்போதும் வீற்றிருப்பவள் அல்லவோ, பெரிய பிராட்டியார். ஆனால் மானுட லட்சணங் களுடன் அவதரித்தச் சக்கரவர்த்தித் திருமகன் ஜானகியின் பிரிவால் மனம் அல்லலுற்றார். ‘சங்கு தங்கு முன்கை நங்கை’ சீதா தேவியும் இராவணனால் கவர்ந்துச் செல்லப்பட்டு இலங்கையில் பிரிவாற்றாமையை அனுபவித்தார் என்று மறை முகமாய்க் குறிப்பிடுகிறார்.

மேலும் நாரீமணிகளை அவர் வர்ணிக்கும் விதத்தைப் பாருங்கள்…தங்கள் கூந்தலின் பரிமள வாசனைக் குலையுமென்றும் பாராமல் சார்ங்கபாணியைச் சேவிப்பதற்கு முன் இளம் பெண்கள் காவிரியில் கூட்டம் கூட்டமாக வந்து நீராடுகிறார்களாம். உறுதியான உடல்வாகு கொண்ட மடந்தையர் நன்றாக மூழ்கி, அமிழ்ந்து நீராடுவதால் விலகியத் தண்ணீர் படித்துறை மேல்படி வரை எழும்பி மோதுகின்றதாம். அப்படிப்பட்டத் தடாகங்களை உடைய குடந்தை நகரில் தாமரைப் போன்ற அங்கங்களைக் கொண்ட ஆராவமுதன் சயனித்துச் சேவைசாதிக்கும் பேரழகைக் காணுங்கள் என்கிறார் ஆழ்வார்!

படித்துப் படித்து இன்புற வேண்டிய விருத்தப் பாக்கள் இவை…

நாயன்மார்களும் ஆழ்வார்களுக்குச் சற்றும் குறைந்தவர்கள் அல்லர். முதன்மைச் சைவக் குரவர்களுள் ஞானப்பால் அருந்தி, உமையம்மையின் அருளைப் பெற்ற ஞானக் குழந்தையாம் சம்பந்தர் பெருமான் இளம்வயதிலேயே தமிழில் சொல் அணிகளைக் கையாள்வதில் பெரும் புலமைப் பெற்று விளங் கினார் என்பதை அவரது திருமுறைப் பதிகங்களிலிருந்தே அறியலாம். பக்தி இலக்கியப் பாடல்களிலும் சொல் ஆட்சிப் புரிய முடியும் என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிய வைத்தவர் ‘எழுது மொழி தமிழ் விரகன், நற்றமிழ் ஞானசம் பந்தன்’ ஆவார். புதுவகை யாப்புக்களையும்,சந்தங்களையும் தமிழில் புகுத்தி, ஈசனைப் போற்றிப் பாடிப்  பரவியவர் இவரே.

முதலில் மாலை மாற்று அணி. இது ஒரு மிகப் பழையத் தமிழ்ச் சொல் ஆகும். சம்ஸ்க்ருத இலக்கியத்திலும் இது காணப்படுகிறது. ஆங்கிலத்தில் ‘பாலிண்ட்ரோம்’ எனப் பெயர். அதாவது முதலிலிருந்து இறுதி வரைப் படித்தால் அமையும் செய்யுளே, முடிவிலிருந்துத் தொடக்க எழுத்து வரைத் திருப்பிப் படித் தாலும் மூலப் பாடலாகவே அமைவது இதன் சிறப்பு. பூச்சரத்தை எப்பக்கம் திருப் பினாலும் ஒரேமாதிரியாகத் தோற்றமளிப்பதை ஒட்டி இவ்வகைச் செய்யுளுக்கு ‘மாலை மாற்று’ எனப் பெயர். விகடகவி, மோரு போருமோ, தேரு வருதேஎன்றச் சொற்றொடர்கள் எளிதானவை.ஆனால் பாடலில் அமைந்துள்ளப் பதங்களைப்

பிரித்துப் பொருள் காண்பது அவ்வளவு சுலபமல்ல. சொற்களைப் பலவாறு மாற்றியமைத்துப் பொருள் அறிய வேண்டிய வகையில் இயற்றியிருப்பது இதன் மற்றொரு சிறப்பாகும். மூன்றாம் திருமுறையில் இவற்றைச் சீர்காழி  தலம் பற்றியப் பதிகங்களில் படித்து மகிழலாம்.

நீவாவாயா காயாழீ கா வாவானோ வாராமே

மேரா வானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ (சீர்காழி, 3.1 பதிகம் 4 )

பொருள்: நீவா—என்றும் மாறாத,வாயா—உண்மைப் பொருளானவனே, கா—தாங்கிய, யாழீ—வீணையை உடையவனே, வான் நோவாராமே—கொடிய பிறவித் துயரம் எங்களை அண்டாமல், காவா—வந்துக் காப்பாயாக,

வான் நோவாவா—தேவர்கள் துன்பம் அடையாமல், மேரா—மேரு மலையை வில்லாக ஏந்தி முப்புரம் எரித்தவனே, காழீயா—சீர்காழி தலத்தில் உறைபவனே, காயா—ஆகாயச் சொரூபியே, வாவாநீ—நீ விரைந்து வந்து  அருள்வாயாக!

வாசமிகு இச்செய்யுள் மாலையில் இடமிருந்து வலமும், வலமிருந்து இடமும் மாறிமாறிப் படித்து ரசிக்கும் வகையில், மகேசன் திரிபுரம் எறித்தச் செயலையும், அவரது மற்றக் குணங்களையும் எப்படிச் சொல்கிறார், பாருங்கள்!

மற்றொரு சொல் அணி திருவியமகம். ஓர் அடியில் வரும் சொல் (அ) சொற்றொ டர் ஒரு குறிப்பிட்டப் பொருளில் வந்து, அடுத்து வரும் அடிகளில் அவை வேறு பொருளைக் குறிக்குமாறு அமைக்கப்படும் பாடல் இவ்வகையைச் சார்ந்ததாகும்.

காதம ரத்திகழ் தோடினனே, கானவனாய்க் கடி தோடினனே,

பாதமதாற் கூற்று உதைத்தனனே, பார்த்தன் உடலம் புதைத்தனனே,

தாதவிழ் கொன்றை தரித்தனனே, சார்ந்த வினைய தரித்தனனே,

போத மமரு முரைப் பொருளே, புகலி யமர்ந்த பரம் பொருளே. (3, 113-116)

பொருள்: காதில் தோடு அணிந்த ஈசன், காட்டில் வேடுவனாக விரைந்தோடித் திரிபவர், மார்க்கண்டேயனைக் காக்க யமனைத் திருப்பாதத்தால் உதைத்த  வர்,அர்ஜுனன் மீது அம்பு எய்து அவன் உடலைக் கவசம் போன்று மறைத்தவர், மகரந்தம் நிரம்பியக் கொன்றை மலர் மாலையை அணிந்தவர், அடியவர்களின் தீவினைகளைக் களைபவர், சிவஞானக் கருத்து அடங்கிய நீதி போதனையின் மூலப் பொருளாக விளங்குபவர், அவரே திருப்புகலி (சீர்காழி) எனும் திருத்தலத் தில் சட்டைநாதராக வீற்றிருக்கும் பரம்பொருள் ஆவார். இங்கு, தோடினனே (காது தோடு, காட்டில் திரிபவர்), உதைத்தனனே (உதைத்தல், உடலை மறைப் பது) , தரித்தனனே ( மாலை அணிதல், தீவினை அகற்றுதல்) என்ற  சொற்கள் இருவேறு செயல்களைக் குறிப்பிடும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன.

பொற்தாளத்தில் நாதமெழுப்பிப் பாட்டிசைக்கும் சின்னஞ்சிறு பாலகன் நாயன் மாரின் சொற்சிலம்ப விளையாட்டில் மனதைப் பறிகொடுக்காமல் இருக்கவே முடியாது! கொம்புத் தேனில் அமிழ்த்தெடுத்த பலாச் சுளைக்கு ஒப்பானவை அவரது பதிகங்கள்!

அடுத்தப் பகுதியில் மேலும் பிற தமிழ் அமுதத்தைப் பருகலாம், வாருங்கள்….

        ———————————————————————————————

tags- தமிழ்ப் புலவர், சொல்லாடல்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: