
WRITTEN BY B.KANNAN, DELHI
Post No. 9971
Date uploaded in London – 13 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
B.KANNAN,Delhi
ஞானமயம் தமிழ் முழக்கம் அன்பர்களுக்கு தில்லியிலிருந்து கண்ணன், வணக்கம் பல. இன்றைக்கு நாம் பார்க்கப் போவது காஷ்மீரக் கவி பில்ஹனனைப் பற்றி.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பல புகழ் பெற்றச் சம்ஸ்க்ருதக் கவிஞர்களான, கல்ஹனா, பில்ஹனா, க்ஷேமேந்திரா, ராஜசேகரா,ரத்னாகரா மாத்ருகுப்தா ஆகியோரை நமக்கு அளித்துள்ளது.வடமொழி இலக்கியத்துக்கு அவர்கள் ஆற்றியப் பங்கு அளப்பரியது. இன்றைக்கு நாம் பில்ஹனாவைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம். தமிழ்ப் புலவர்கள் தமிழ்மொழியை அழகாகக் கையாண்ட விதத்தைக் கண்டு மகிழ்ந்தோம். அதுமாதிரி பில்ஹனா சம்ஸ்க்ருத எழுத்து ‘ப’ வரிசையின் நான்காம் மெய்யெ ழுத்தை வைத்து வார்த்தை ஜாலம் காட்டி மன்ன னையே எப்படி மிரளச் செய்தார் என்பதையும், அதன் தொடர்ச்சியாக அவர் இயற் றியச் சிருங்கார ரசம் மிளிரும் கவிதைத் துளிகளையும் கண்டு களிக்கப் போகி றோம். கட்டுரைத் தலைப்பில் உள்ளக் கள்வனுக்கும், கவிதைக்கும் இடையே யுள்ளச் சம்பந்தம் போகப்போகத் தெரியும்! அது ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஒரு காவியச் சுனை!
11-வது பொ.ஆ.பின் பிரவரசேனபுரம் எனும் தற்போதைய ஶ்ரீநகரில் கோன்முஷா கிராமத்தில் ஜேஷ்டகலசா-நாகராதேவி தம்பதிக்குப் பிறந்தவன் பில்ஹணன். புக்குண்டன் என்ற பெயரும் இவனுக்குண்டு. சிறு வயதிலிருந்தே கல்வி-கேள் விகளில் சிறந்து விளங்கி, சம்ஸ்க்ருத மொழியில் பாண்டித்யம் பெற்றவனாகத் திகழ்ந்தான். தன் கவியாற்றலை வெளியுலகத்துக்குக் காட்டத் தேசமெங்கும் யாத்திரை மேற்கொண்டான். புகழ் பெற்றப் பல பண்டிதர்களை மதுரா, பிருந்தா வனம், காசி, சோமநாதம், ராமேஸ்வரம் ஆகியவிடங்களில் இலக்கிய வாதப் போரில் வெற்றிவாகைச் சூடினான். காசியின் மிகப் புகழ் பெற்ற வித்வான் கோவிந்தாச்சாரியாரை வென்றது குறிப்பிடத் தக்கது.
“பாக்யேஷு நாஸ்தி ப்ரதிஷேதமார்க:” என்றக் கூற்றின்படி விதியின் மேல் அபார நம்பிக்கை வைத்திருந்தான். அதன் வழியே மதியைச் செலுத்தி அனைத்திலும் வெற்றி கண்டான். அவனது உணர்ச்சிமிக்கக் கவிதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அக்காலத்தில் இதற்கு ஒரு சொல்லடையே உண்டு.
“கிராமம், நாட்டுப்புரம், நகரம், காடு, சோலையில் வசிப்போர், பள்ளிக்கூட மாணவர், படித்தவர், முட்டாள், இளைஞன், வயதானவர் என அவன் கவிதை களைப் படித்து இன்புறாதவர்களை ராஜ்ஜியத்தில் காண்பது அரிது!” எனக் கூறப்படுவதுண்டு. கர்ணசுந்தரி எனும் நாடகத்தில் தன்னைப் பற்றிக் குறிப்பிடுகையில், “பாரதத்தின் சொர்க்கம் எனும் பூஞ்சோலையிலுள்ள ஒரு மரம் நான். அதன் வேர்களான வால்மீகி, வியாசர், காளிதாசன் ஆகியோரால் வளர்ந்தவன். இப்போது துளிர் விட்டு, பூ மலர்ந்து, காய்-கனிகள் நிறைந்த விருட்சமாக நிற்கிறேன்” என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறான். நாடகக் கலைஞர் நாராயண சாஸ்திரியார் எழுதிய நாடகம் “பில்ஹானியம்” கவியின் மூல சரிதத்தை விவரிக்கிறது.

வெற்றிக் களிப்பில் நாட்டைச் சுற்றி வருகையில் ஒரு சமயம் அவன் சௌராஷ்டிரப் பிரதேசத்தின் லக்ஷ்மி மந்திரம் என்னுமிடத்தை அடைந்தான். அவ்விடத்தை அரசாட்சி செய்துக் கொண்டிருந்த மன்னனைப் பற்றி இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. கவியைப் பற்றிக் கூறும் 164 பாடல்கள் கொண்ட “பில்ஹானியா” எனும் சிறு காவியம் ராஜா வீரஸிம்மன் என்றும், இளவரசி சந்திரலேகா எனவும் சொல்கிறது. “ரஹஸ்ய சந்தர்பா” என்ற மற்றொரு நூல் மன்னன் மதனாபிராமன், இளவரசி யாமினி பூர்ண திலகா என்றும் கூறுகிறது. சர்ச்சைக்குள் புகாமல், ராஜா, இளவரசி என்றே இங்குக் குறிப்பிடுவோம்.
அரசனிடம் தன் புலமையைக் காட்டி,பரிசில்களையும், அபிமானத்தையும் பெறுகி றான். இளவரசியின் இலக்கிய ஆர்வத்தை மேம்படுத்த பில்ஹன னையே ஆசிரியராக நியமிக்கிறான். ஆனாலும் அவன் மனதில் ஒரு நெருடல்-பெண்ணும் அழகானவள், கவியும் வசீகரமான இளைஞன் இருவரும் காதல் வயப்பட்டால் என்ன செய்வது? இரும்பும், காந்தமும் அருகே இருப்பது நல்ல தல்ல என்று நினைத்தவன் ஒரு திட்டம் தீட்டினான். அதன்படி, ஆசிரியர் பார்வை இழந்தவர் என்று மகளிடமும், இளவரசி கொடிய நோயினால் பீடிக்கப்பட்டவள் என்று கவியிடமும் சொல்லி வைக்கிறான். அவர்களுக் கிடையே ஒரு திரை மறைப்பை நிறுவுகிறான். படிப்பு தொடர்கிறது.
குரல் இனிமையும், அறிவாற்றலும் இருவரையும் ஒன்றிணைக்க முயல்கிறது. சரத் ருதுவின் களங்கமில்லாச் சந்திரன் பட்டொளி வீசி பவனி வரும் இரவு.
நிலவொளி அவனைக் கிறங்கடித்து விடுகிறது.”பாலுங் கசந்தடி, சகியே, படுக்கை நொந்ததடி, கோலக்கிளி மொழியும் செவியில் குத்தலெடுத்ததடி” என்ற உள்ளக் குமுறல், சந்திரனைப் பற்றியக் கவிதையாய் வெளிவந்தது! அதைக் கேட்ட இளவரசி திடுக்கிட்டாள். ஒரு குருடன் சந்திர ஒளியைக் கண்டு இப்படி அபாரமாகப் பாட முடியுமா எனச் சந்தேகம் கொண்டுத் திரையை விலக்கிப் பார்க்கிறாள் மெதுவாக.
இதோ காவிய நயம் மிக்க அப்பாடல்…
“
निरर्थकं जन्मगतं नलिन्या
यया न दृष्टं तुहिनांशुबिम्बम् । அதாவது,
துணையின்றி விடப்பட்டு, உணர்ச்சிகளை அமைதிப் படுத்தும் சந்திரனின் ஒளிக் கதிர்கள் படாமல்
வெட்டேர்த்தியாகக் காலம் தள்ளும் அல்லித் தாமரையின் (ஆம்பல்) வாழ்வும் ஒரு வாழ்வா? என்று மறுகுகிறான் பில்ஹனன்.
இதைக் கேட்ட இளவரசியின் மனமும் கலங்கியது. “தூண்டிற் புழுவினைப் போல், வெளியே சுடர் விளக்கினைப் போல், நீண்டபொழுதாக எனது நெஞ்சம் துடித்ததடி!” என மனதுக்குள் புலம்பினாள்.ஆனாலும் இந்தச் சிஷ்யையும் நாவன்மையில் குறைந்தவள் இல்லை என நிரூபிக்க, திரையின் மறுபக்கத்தி லிருந்து அவள் குரல் ஒலிக்கிறது.
இதற்குப் பதில் அளிக்கும் விதமாகப் பின் இரு வரிகளைச் சமஸ்யா பூர்த்தி முறையில் கூறுகிறாள் இளவரசி.
उत्पत्तिरिन्दोरपि निष्फलैव
कृता विनिद्रा नलिनी न येन ॥ அதாவது,
சந்திரனுக்கும் இது ஒரு பயனற்ற, பிரியோஜனமில்லாத வாழ்வே,
தூங்கும் அல்லியைக் குளிர்ந்தக் கதிர்களால் மிருதுவாகத் தடவி எழுப்பி விடத் தவறிவிட்டான், அல்லவோ!
என்று கூறியவாறு வெளிப்படுகிறாள். அவளும் நோக்கினாள், அண்ணலும் நோக்கினான் என்ற நிலை! உண்மை விவரம் தெரியவர , தனக்கு இனி அங்கு என்ன வேலை என்று மன்மதன் விலகுகிறான்.
இரு உள்ளங்களும் இணைகின்றன…..
ஒரு சாதாரண அன்றாடங்காச்சியை இளவரசி விரும்புகிறாள் என்பதை அரசனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எதை நினைத்துப் பயந்தானோ அது நடந்து விட்டதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பில்ஹன னைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிடுகிறான். சிவப்பு ஆடை தரித்து, கழுத்தில் சிவப்பு மாலை சுற்றிக் கொலைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறான்.
போகும்போது துடிதுடிக்கும் மனதில் அன்புக்கினியவளுடன் (நேரில் பார்க்காவிட்டாலும்) மகிழ்ச்சியுடன் கழித்த நாட்களை, எண்ணிப் பார்க்கிறான். உயிர் பறிபோகப் போகிறது,நரம்பில்லா வாத்தியத்தில் இசை எழுமோ, வாசிக்கத்தான் இயலுமோ என்றுத் தன்னையேக் கேட்டுக் கொள்கி றான். உள்ளத்திலிருந்து மடைதிறந்த வெள்ளம் போல் ரசனையுடன் கூடியக் காதல் மற்றும் சோகம் தோய்ந்தப் பாடல்கள் வெளிவந்தன. அவை இளவரசியின் உள்ளம் கவர்ந்தக் கள்வனின், வசந்ததாலிகா கவிதைச் சீரில் அமைக்கப்பட்ட 50 பாடல்கள், சோரபஞ்சசிகா, என்று அழைக்கப்படுகின்றன. காலத்தை வென்ற கவிதைத் துளிகள்! அவை ப்ரத்ருஹரி, அமருகா வடிவமைத்தப் பாடல் கவிதை இலக்கணத்தை ஒட்டி அமைந்துள்ளது என்பது அறிஞர்களின் கருத்தாகும். அனைத்துப் பாடல்களும் “அத்யாபி தாம்”–அப்போதும் கூட– என்றே ஆரம்பிக் கிறது. மாதிரிக்குச் சில:
6-வது பாடலில்……
அப்போதும் பிரிவாற்றாமையால் அவள் முகம் வாடி, வதங்கி
கண்கள் ஒளி இழந்துள்ளது நினைவில் ஓடுகிறது
விழிகள் மூடி,ஆறுதலாக, ஆரஅரவணைத்து, அவள் கருங்கூந்தலால்
. என்னை அவளுடன் பிணைத்துக் கொள்ள விழைகிறேன்!
38-வது பாடலில் இப்படியும்…….
கொலைக்களத்துக்குப் போகும் இவ்வேளையிலும் அவள் நினைவே என்னைப் பரவசப்படுத்துகிறது.
அவள் நிஜப் பெயர் எதுவாக இருக்கும்? ரதியோ, (அ) ஒருவேளை கிருஷ்ணரின் ராணி ஶ்ரீதேவியோ?
அவளைப் படைக்கும் போது பிரம்மா இப்படி நினைத்திருப்பாரோ?
மூவுலகோரையும் ஈர்க்கும் முழுநிறைவான அழகுத் தேவதையாக இருக்க வேண்டும், என்று!
புலம்பித் தவிக்கிறான். கொலைமேடை நெருங்கிவிட்டது….
தண்டனை நிறைவேற்றப்பட்டதா? இங்குதான் கதையில் ஒரு எதிர்பாராதத் திருப்பம்,ட்விஸ்ட், வருகிறது! சோகத்தில்ஒரு,புன்னகை.,புக்குண்டன்,கவிதையைக் கேட்க மன்னனும் அவ்விடம்,வந்துவிடுகிறான். நாட்டின் பூபதியைப் பார்த்து பில்ஹனன் கடைசியாக ஒரு கவிதை சொல்கிறான். அதுவே அவன் தலையைக் காக்கிறது என்றால் மிகையல்ல!
பட்டிர்நஷ்டோ பாரவி ச அபி நஷ்டோ
பிக்ஷுர்நஷ்டோ பீமசேனோபி நஷ்ட:|
புக்குண்டோ அஹம் பூபதி த்வம் ஹி ராஜன்
பம்பாவல்யாம் அந்தக சந்நிவிஷ்ட:||
காலன் ‘ப’ எழுத்துத் தொகுப்பில் வந்து விட்டான்,(அதிலுள்ள)
மனிதர்கள் ஒருவர் பின் ஒருவராக மடிகின்றனர்
பட்டி, பாரவி, பிக்ஷு, பீமன்,இதோ இப்போது நான், புக்குண்டன்
அடுத்து, பூபதி எனும் நீயல்லவோ, மன்னா!
‘ப’ தொகுப்பில் நான்காவது எழுத்து ‘ப'(bh)வை வைத்து அவன் செய்தச் சொல்லாடல் வியக்க வைக்கிறது. “இலக்கண மேதை பட்டி, கிராட்டார்ஜுனீயம் இயற்றிய பாரவி, பிக்ஷு எனும் சித்தார்த்தர்,,பண்டவர் பீமன், இதோ இப்போது நான்,
புக்குண்டன் எல்லோரையும் யமன் முறை வைத்து வரிசைக் கிரமமாக உயிரைப் பறிக்கிறான்.(ப, பா, பி, பீ, பு, பூ என்று) அடுத்து நிச்சயமாக பூபதி உன் முறைதான் வருகிறது. என்னைக் கொன்றாலும் (அ) கொல்லாமல் விட்டாலும்
உன் தலைக்கு மேல் வாள் தொங்கிக் கொண்டே தான் இருக்கும் என்று பயமுறுத்துகிறான். இனி எல்லாம் உன் கையில்,என்று
மறைமுகமாக எச்சரிக்கிறான். கொலைக்களத்திலும் சாதுரியமாகப் பேசி நிலைமையைச் சமாளித்தப்
புத்திகூர்மையை என்னவென்பது! மன்னனும் பில்ஹனனைப் பாராட்டி, தண்டனையை ரத்து செய்து, மகளையும் அவனுக்கே மணம்
செய்துக் கொடுத்தான்.
இக்கதையின் தென்னாட்டுப் பதிப்பு மங்கலகரமாக முடிகிறது. ஆனால் காஷ்மீரப் பதிப்பில் முடிவு அரைகுறையாகத் தெளிவில்லாமல் இருக்கிறது. பில்ஹனன் தன் மனைவியைப் பற்றிப் பின்னாளில் எதிலும் குறிப்பிடாமல் இருந்தது ஏன் என்பது ஒரு புதிர் தான்!
பிறகு தன் புலமையை வெளிப்படுத்தப் பல பிரதேசங்களுக்குச் சென்று முடிவில் 6வதுவிக்ரமாதித்யன்அரசாண்ட,கல்யாணி,நகரைஅடைந்துஅவன்,அரசவையை அலங்கரித்தான்.விக்ரமாங்கசரிதம் என்றப் புகழ் பெற்றக் காவியத்தையும் இயற்றினான்.
தன் கடைசி நாட்களை வாராணசி கங்கைக் கரையில் கழித்ததாகச் சொல்லப் படுகிறது.
காலத்தை வென்ற ஒரு கள்வனின் காதல் கவிதை இது!
கொசுறுத் தகவல் மூன்று……..
பில்ஹணன் (1948) டி.கே.எஸ். சகோதரர்கள், எம்.எஸ்.திரௌபதி நடிப்பில், கே.வி. சீனிவாசன் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம். சந்தர்ப்பத்துக்கு ஏற்றப் பாரதியாரின் “தூண்டிற் புழுவினைப் போல்” பாடலை
பத்ம விபூஷண் திருமதி டி.கே.பட்டம்மாள் உணர்ச்சிப் பொங்கப் பாடியுள்ளார்.
சிலமாத இடைவெளியில் இதன் அடுத்த பதிப்பு, பில்ஹணா அல்லது கவியின் காதல் (1948), கே.ஆர்.ராமசாமி, ஏ.ஆர்.சகுந்தலா நடிப்பில், பி.என்.ராவ் இயக்கத்தில், பாபநாசம் சிவன் இசையமைப்பில் வெளியானது. சிவன் சார் எழுதிய “என் சசிகலா” பாடலைக் கொலைக்களத்தில் தன் குரலில் கே.ஆர்.ஆர். பாடுகிறார். இப்பாடல் தற்சமயம் கிடைப்பது அரிதாய் இருக்கிறது.
இவை இரண்டுமே மக்களின் ரசனையை அவ்வளவாகக் கவரவில்லை.
SHABAB-இளமை-(1954), பாரத் பூஷன், நூதன் நடிப்பில், நௌஷத் இசையமைக்க, அமீர் குஸ்ருவின் தத்வார்த்தப் பாடல் வரிகள் இழையோடும் 18 சோகம்,சிருங்கார ரசம் மிகுந்தப் பாடல்களை ஷகீல் பதாயூனி எழுதியுள்ளார். அவ்வருடம் பினாகா கீத் மாலா தர வரிசையில் 7-ம் இடத்தைப் பிடித்துள்ளது இதன் ஒரு பாடல்.

tags -பில்ஹனா, கள்வன், சிருங்காரப் பாடல்கள், Bilhana
…