மஹரிஷி அரவிந்தர் – 1 (Post No.9973)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9973

Date uploaded in London –  14 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 9-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.

மஹரிஷி அரவிந்தர் – 1

.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நம் கண் முன்னாலேயே வாழ்ந்து உலகை உயர்த்திய மகான்கள் ஏராளம்.  இவர்களில் அரவிந்தர் புதிய ஒரு பொன்னான உலகத்தை சிருஷ்டிக்கத் தன்னை அர்ப்பணித்த பெரும் மஹரிஷி!.

அரவிந்தப் புதிர்

சென்ற நூற்றாண்டு கண்ட பெரிய மஹரிஷி அரவிந்தர்.

ஆனால் அவரை உலகம் முழுதுமாக இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அல்லது புரிந்து கொள்ள முடியவில்லை.

அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதத் துடித்த ஒரு அன்பர் அவரை அணுகிய போது அவர் சொன்ன பதில்: என் வாழ்க்கை மக்கள் பார்க்கக் கூடிய அன்றாட வாழ்க்கை நிகழ்வில் இல்லை” என்று பதில் கூறினார்.

அது அகத்தின்  மூலம் அண்ட பிரபஞ்சத்தில் ஏற்படுத்திய மகத்தான முன்னேற்றம் என்பதாலும் பிரம்மாண்டமான சக்தியை யோகத்தின் மூல்ம் பூமியில் இறக்க முயன்ற மஹா யாகம் என்பதாலும் அநத வாழ்க்கையை மேற்பார்வையாகப் பார்த்து உணர முடியாது;அதை எழுதி விவரிக்க முடியாது. அரவிந்தர் விடுவிக்க முடியாத ஒரு புதிர்!

அவரது அணுக்கத் தொண்டராக வாழ்ந்தவர் நிரோத் பரன்.

சுமார் 4000 கடிதங்களை அரவிந்தரிடமிருந்து பதிலாகப் பெற்றவர்.

103 வயது என்ற அதிசயமான நிறை வாழ்வை வாழ்ந்தவர் அவர்.

அவரிடம் அரவிந்தர் ஒரு சமயம் நான் காலத்திற்கு முன்பாகத் தோன்றிப் பிறந்து விட்டவன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அரவிந்த ஞானம்

அவரது ஞானம் யாராலும் அளக்க முடியாத அளவு எல்லையற்றது. அவர் தொடாத நல்ல பொருளே இல்லை. விளக்காத விஷயமே இல்லை.

 அரவிந்த அன்னை ஒரு முறை இப்படிக் குறிப்பிட்டார்: “அவர் டைப்ரைட்டர் முன்னால் அமர வேண்டியது தான்; அனைத்து பிரம்மாண்டமான ஞானமும் தட தடவென அருவி போல அங்கு வந்து விழும்” என்றிருக்கிறார்.

     அன்னை அவர்களே தன்னாலும் அவரை முழுமையாகப் புரிந்து கொள்ள  முடியவில்லை என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.  சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் அவருடன் ஆஸ்ரமத்தில் இருந்தாலும் அவரை முழுமையாகப் புரிந்து கொண்டவள் என்று சொல்ல முடியாது என்றிருக்கிறார்.

     இப்படிப்பட்ட ஒரு பெரும் மஹரிஷியைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து அவரது நூல்களைப் படிக்க வேண்டும்; அவரது உபதேச மொழிகளை ஓர்ந்து உணர்ந்து கடைப்பிடித்தல் வேண்டும்.

        அவரது அனுபவங்களும் அறிவுரைகளும் பொக்கிஷம் போல அப்படியே நமக்குக் கிடைத்துள்ளன என்பது இறைவனின் திருவருளாளும் நமது அதிர்ஷ்டத்தினாலும் என்றே கொள்ளலாம்.

      அரவிந்த கோஷ் என்ற இயற்பெயர் கொண்ட மஹரிஷி அரவிந்தர் 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் கிருஷ்ண தன கோஷுக்கும் ஸ்வர்ணலதா அம்மையாருக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். தனது சகோதரர்களோடு டார்ஜிலிங் லோரெட்டோ கான்வெண்டில் சேர்ந்து படித்த அவர் 1879ஆம் ஆண்டு மேற்கல்வி கற்பதற்காக அவர்களுடன் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜில் சேர்ந்தார். 250 பேர் எழுதிய ICS தேர்வில் 11வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். ஆனால் கிங்ஸ் காலேஜில் பயிற்சிக்காக சேர்ந்த அவர் அதில் ஆர்வம் இன்றி வேண்டுமென்றே தானாகவே தகுதியை இழந்தார்.   

      இந்தியாவின் சுதந்திர உத்வேகம் அவரை உந்தவே அங்குள்ள ரகசிய சங்கத்தில் உறுப்பினரானார். 1893இல் இந்தியா மீண்ட அவர் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடலானார். அவர் திரும்பிய கப்பல் விபத்துக்குள்ளாகி அவர் மறைந்தார் என்ற ஒரு தவறான தகவலைக் கேட்ட அவர் தாய் ஸ்வர்ணலதா தேவி மனம் பாதிக்கப்பட்டு நோயாளியானார்.

      இந்தியா திரும்பிய அரவிந்தர் பரோடா சம்ஸ்தானத்தில் பணியாற்ற ஆரம்பித்தார். ஏழு ஆண்டுகள் அங்கு பணி புரிந்த பின்னர் வங்காள தேசிய கல்லூரியில் முதல்வராகப் பணியாற்ற ஆரம்பித்தார். அப்போது கர்சான் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரிக்கவே ஒரு பெரும் எழுச்சி மக்களிடையே ஏற்பட்டது. இதனால் கொதித்த அரவிந்தர் இந்திய சுதந்திரப் போரில் தீவிரமாக ஈடுபடலானார். பல்மொழிகளில் வல்லுநர் என்பதாலும், ஏராளமான நூல்களைக் கற்றதனாலும் நுட்பமான அறிவைக் கொண்டிருந்ததாலும் தேசீய எழுச்சிக்கென பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார். 1905ஆம் ஆண்டு வந்தே மாதரம் என்ற இதழை ஆரம்பித்தார். சந்திரபாலருடன் பல்வேறு கூட்டங்களிலும் பேசலானார். அவரது பேச்சாலும் எழுத்தாலும் மிரண்டு போன ஆங்கில அரசு அவரை 1907இல் கைது செய்தது. மீண்டும் 1908இல் அலிப்பூர் குண்டு வீச்சுக் கேஸில் அவர் கைது செய்யப்பட்டு ஒராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு கிருஷ்ண தரிசனம் கிடைத்தது. அத்துடன் சிறையிலேயே விவேகானந்தரின் குரலை அவர் கேட்டார். இனி என்ன செய்ய வேண்டும் என்ற ஆதர்சமும் அவருக்குச் சிறையில் கிடைத்தது. சிறையில் யோக சாதனையில் அவர் ஈடுபட்டார்.

     அரவிந்தர் எள்ளளவும் பயமின்றி கர்மயோகி என்ற ஆங்கிலப் பத்திரிகை மற்றும் தர்மா என்ற வங்கப் பத்திரிகை ஆகியவற்றின் வாயிலாக தேசீய உணர்வை எழுப்பலானார்.

     மீண்டும் பிரிட்டிஷ் அரசு அவரை கைது செய்ய முனைவதாக அவருக்குத் தகவல் கிடைத்தது. 1910இல் அவருக்கு அந்தராத்மாவின் குரல் தெளிவாகக் கேட்டது – “பாண்டிச்சேரிக்குப் போ என்ற அந்தக் குரலைக் கேட்டு அவர் புதுவை நோக்கிப் பயணமானார். பிரெஞ்சு காலனியாக இருந்த புதுவைக்கு அவர் வரவே அவர் மீதான கைது வாரண்டை பிரிட்டிஷ் அரசு ரத்து செய்தது.

    அரவிந்தர் 1910ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி புதுவை வந்து சேர்ந்தார். மஹாகவி பாரதியார் அவரை வரவேற்றார். எளிமையான ஒரு வீட்டில் முதலில் தங்கி இருந்த அரவிந்தர் தனது யோக சாதனையை ஆரம்பித்தார். பிரம்மாண்டமான இறைசக்தியை பூவுலகில் இறக்க முனையும் அந்த சாதனை மஹாயோகம் – Integral Yoga – எனப்பட்டது.

    நாளடைவில் அரவிந்தரின் யோக ஆற்றலால் ஈர்க்கப்பட்ட சாதகர்கள் ஏராளமாகப் பெருகவே ஒரு ஆசிரமம் அமைக்கப்பட்டது. பாரிஸில் பிறந்த மிரா அல்பாஸா என்ற பெயரைக் கொண்ட அன்னை தம் தியானத்தில் ஒரு மஹாபுருஷரைக் கண்டார். அவர் அரவிந்தரே என்பதை உணர்ந்த அன்னை புதுவையில் வந்து தங்க ஆரம்பித்தார். 1926இல் அரவிந்த ஆசிரமத்தையும் அவரே நிறுவியதோடு தான் சமாதியாகும் 1973ஆம் ஆண்டு வரை அதைத் திறம்பட நிர்வகித்தும் வந்தார். 1968ல் உலக சமாதானத்திற்காகவும் நலனுக்காகவும் ஆரோவில் என்ற ஒரு நகரையும் அன்னை உருவாக்கினார்.

        அரவிந்தர் தனது ஆன்மீக சிந்தனைகளை 1914 முதல் 1921ஆம் ஆண்டு முடிய ஆர்யா என்ற இதழில் எழுதி வரலானார். சாவித்திரி என்ற மஹா காவியத்தையும் படைக்க ஆரம்பித்தார்.

      அவரது சாவித்திரி காவியம் 24000 வரிகள் கொண்ட, மரணத்தை வெல்ல வழி வகுக்கும் ஒரு மஹா காவியம்.

      தன் இறுதி வரை அவர் பலமுறை தன் அனுபவத்தில் ஏற்படும் மேம்பாடுகளுக்குத் தக அதை மாற்றி மெருகேற்றிக் கொண்டே இருந்தார்.

அந்தக் காவியம் படிப்பதற்கு சுவையானது; ஆனால் கஷ்டமானது. புரிந்து கொள்ளச் சற்று சிரமமானது. பலமுறை படித்தால் ஒரு சிறிது பொருள் புரியும்; ஆன்மீக முன்னேற்றம் அடைய வழி வகுக்கும்.

·                                                                           தொடரும்

tags — மஹரிஷி ,அரவிந்தர்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: