மஹரிஷி அரவிந்தர் – 2 (Post No.9976)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9976

Date uploaded in London –  15 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹரிஷி அரவிந்தர் – 2

ச.நாகராஜன்

அரவிந்தர் புதுவை வந்த தினத்திலிருந்து ஒரு அற்புதமான நட்பு அவருக்கும் மஹாகவி பாரதியாருக்கும் இடையே எழுந்தது. நட்பின் அபூர்வ விளைவுகளாக வேத ஆராய்ச்சி நடந்தது. அரவிந்தர் தமிழ்க் கவிதைகளை இரசித்து, ஆண்டாள், பாசுரத்தை (To the Cuckoo, I dreamed a dream) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பாரதியார் அவரை  தினமும் சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். ஏராளமான வேத சூக்தங்களை பாரதியார் அரவிந்தரிடமிருந்து கற்றார்.

அரவிந்தர் மேல் பேரன்பு கொண்டிருந்த மகாகவி, அவரைப் புகழ்ந்து,

“ஆதிசிவன் மேலிருக்கும் நாகப் பாம்பே  – எங்கள்        

        அரவிந்தப் பேர் புனைந்த அன்புப் பாம்பே!                  சோதிப்படத் தூக்கி நட மாடி வருவாய்! – அந்தச்                  

         சோலை நிழலால் எமது துன்பம் ஒழிவோம்!”             என்று பாடினார்.

பெரும்பாலும் மாலை நேரங்களில் அரவிந்தரை பாரதியார் சந்திப்பது தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் புதுவை வாழ்க்கை சகிக்க முடியாத ஒரு நிலை ஏற்படவே பாரதியார் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தார்.

கடைசியாக அரவிந்தரிடமிருந்து விடை பெறும் நாளும் வந்தது.

அந்த நாளைப் பற்றி பாரதியாரின் புதல்வியான சகுந்தலா பாரதி தனது நூலில் இப்படி விவரிக்கிறார்:

“ஸ்ரீ அரவிந்தரிடம்  கடைசிமுறையாக் என் தந்தை  விடை பெறப் போனபோது அவர்கள் தனியறையில் சம்பாஷணை நடத்தியதால் அதன் விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் விடைபெற்றுத் திரும்புகையில் ஸ்ரீ அரவிந்தரின் சாந்தி நிறைந்த ஞானவொளி வீசும் கண்கள் கண்ணீரால் மங்கியிருந்தன. என் தந்தையின் வீர விழிகளில் கண்ணீர் ததும்பி நின்றது. அது மட்டும் தான் நான் கண்டேன்.

ஸ்ரீ அரவிந்தரது ஆசீர்வாதத்தைப் பெற்று வீடு திரும்பினோம்.”

ஆங்கில சாம்ராஜ்யத்தையே ஆட்டுவித்த மகாவீரர், ஆன்மீக சிகரத்தில் ஏறி புதிய யோக சக்தியைப் பூவுலகில் இறக்கியவர் அரவிந்தர்.

தன் பாட்டுத்திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வந்தவர் தமிழ்க் கவிஞர் பாரதியார். வாராது வந்த மாமணி. வீயாச் சிறப்புடையவர். இவர்களின் கண்களில் பிரிவினால் அரும்பியது நீர் என்றால் அது புனித நீர் அல்லவா!

கொடுத்த வைத்த புதுவை பூமி சரித்திரத்தில் புனித பூமியாக நிரந்தர இடம் பெற்று விட்டது! அரவிந்தருக்கு திவ்ய திருஷ்டி உண்டு. எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன்பே அவர் அறிவார். எழுத்தாளரான வ.ரா. எனப்படும் ராமசாமி தன்னிடம் வருவதை அவர் முன் கூட்டியே கண்டார். அதே போல புதுவை கவர்னராக வருபவரையும் அவர் முன்பாகவே கண்டார். இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் ஆகஸ்டு 15 1947. அவரது பிறந்த நாள் ஆகஸ்ட் 15. இது தற்செயலான ஒன்று இல்லை, தொடர்பு உண்டு என்றார் அவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினை என்பது செயற்கையான ஒன்று. அது போகவேண்டும். போகும் என்று தீர்க்கதரிசனமாக அவர் உரைத்துள்ளார். பாரத தேசத்தின் புகழோங்கிய மேன்மையை அது மீண்டும் பெறும் காலம் மிக சமீபத்தில் உள்ளது என்ற சத்திய வாக்கையும் அவர் அருளியுள்ளார்.

       யோக சாதனையில் முழுவதுமாக இறங்கிய அரவிந்தர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு அதில் தீவிரமாக ஈடுபட்டார். 1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் நாள் அவர் சமாதியை அடைந்தார். அவரது பொன்னுடல் ஒளியுடன் அப்படியே தொடர்ந்து இருந்தது.நான்கு நாட்கள் கழித்து டிசம்பர் மாதம் ஒன்பதாம் நாளன்று அன்னையின் அருளுரையின் பேரில் அவர் உடல் ஒரு பேழையில் வைக்கப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது.

அரவிந்தர் மீண்டும் வருவார்

பிரம்மாண்டமான சக்தியை பூவுலகில் இறக்கும் பெரும் காரியத்தில் அவர் வெற்றி பெரும் தருணத்தில் அவர் முன்பாக பேரருள் சக்தி இரண்டு விருப்பத் தேர்வுகளை வைத்தது. ஒன்று அவர் தனிப்பட்ட முறையில் மேலான  முக்தி நிலையை எயதலாம். இன்னொன்று அவர் புவியை மேம்படுத்துவதற்காக இறக்க முயலும் அருள் சக்தியை தற்போதைய உடலை விட்டு விட்டு இன்னொரு  உடல் எடுத்தால் மட்டுமே முடியும்.

அரவிந்த மஹரிஷி தனது முக்தி நிலையை விரும்பவில்லை. மாறாகத் தன் உடலை உகுத்து விட்டு இன்னொரு  முறை புவிக்கு வந்து, விட்டு விட்டுச் சென்ற பணியைப் பூர்த்தி செய்து பேரருள் சக்தியை இறக்கும் விருப்பத் தேர்வைத் தேர்ந்தெடுத்தார்.

அவரே கூறிய படி இன்னொரு முறை நான் தோன்றுவேன் என்ற அவரது வாக்கு பலிக்காமல் போகாது.

அரவிந்தம்  மீண்டும் புவியில்  மலரும். அப்போது ஜீவ ஒளியுட்ன புத்துலகம தோன்றி அனைவரும் மேலாம் நிலையை எய்துவர்.

அரவிந்தரைப் படிப்போம்

ஆரம்ப சாதகர்கள் அரவிந்தரின் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்து அவர் கூறிய யோக முறையை அனுஷ்டானத்தில் கொண்டு வருவதன் மூலம அவரது பணிக்கு அணில் சேது அணை கட்டுவதில் ஆற்றிய சேவை போன்று சேவையைச் செய்ய முடியும்.

அரவிந்தரின் யோக முறை தனி ஒரு முறை என்பதாலும் இது வரை அப்படி ஒரு முறையை யாரும் கடைப்பிடிக்கவில்லை என்பதாலும் அது ஒப்பற்ற ஒன்றாக இலங்குகிறது.

அந்த முறையை உலகிற்கு இந்தியாவே அளிக்க முடியும். அளிக்கும் என்பது அவரது வாக்கு.

1997ஆம் ஆண்டு அரவிந்த ஆஸ்ரமம் அரவிந்தரின் எழுத்துக்களைத் தொகுத்து வெளியிடும் பணியில் ஈடுபட்டது. அவரது எழுத்துக்கள் அனைத்தும் முறையே தொகுக்கப்பட்டு 36 தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இதை இணையதளத்திலிருந்து பிடிஎஃப் வடிவில் – PDF FORMAT இல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 37வது தொகுதி இந்த தொகுதிகளில் அடங்கி இருப்பவற்றிற்கான INDEX ஆக அமைகிறது.

https://www.aurobindo.ru/workings/sa/index_e.htm என்ற தளத்தில் இவை பற்றிய விவரங்களைக் காணலாம்.

பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட இந்த அரவிந்த இலக்கியம் படிப்போருக்கு ஆன்மீகத்தில் பல இரகசியங்கள் எளிதாகப் புரிந்து விடும்.

எடுத்துக்காட்டிற்காக அவர் கூறியவற்றில் ஒன்றே ஒன்றை – கடவுளரின் அர்த்தங்களை – அவர் விவரித்துள்ளபடி பார்ப்போம்.

கடவுளரின் அர்த்தங்களை  அவரும் அன்னையும் (அரவிந்த ஆசிரம அன்னை) தெளிவாகக் கூறுகின்றனர்.

ஒரு பிரம்மாண்டமான  மஹா சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்குகிறது. அதுவே ஆத்ய சக்தி.

பிரபஞ்ச இறைத்தன்மையின் மூன்று பெரும் சக்திகள் மற்றும் ஆளுமை கொண்டவர்களே பிரம்மா,விஷ்ணு, சிவன்.

உருவாக்கம், படைப்புக்குப் பின்னால் இருப்பவர் பிரம்மா.

படைப்பவர் விஷ்ணு

தவத்திற்கு சிவன்

தெய்வீக சக்தியே தேவி

சிங்கத்துடன் கூடிய துர்க்கையே தெய்வீக பிரக்ஞை

மஹாகாளி உயரிய மட்டத்தில் உள்ளவள். தங்க மயமாக ஜொலிப்பவள்.

கடவுளர் தெய்வீகப் பணிகளை ஆற்றுபவர்கள்.

விக்கினங்களை நீக்க கணேசர்.

வெற்றியைத் தர முருகன்.

பக்திக்கு ஹனுமான்.

தெய்வீக அன்புக்கு ஸ்ரீ கிருஷ்ணர்

முழு அன்புமயத்திற்கு ராதை.

இதை உணர்ந்து வழிபட்டால் வாழ்க்கையில் உயர்வு நிச்சயம். அரவிந்தரும் அன்னையும் இப்படி ஏராளமான ஆன்மீக இரகசியங்களைக் கூறி அருளியுள்ளனர்.:

எங்கும் நிறை சக்தி அரவிந்த சக்தி

நிரோத்பரன் ஒரு முறை அவரைக் கேட்ட கேள்விக்கு எந்த ஒருவர் ஆழ்ந்த சிரத்தையுடன் ஆன்ம ஞானம் சித்திக்க விரும்பினாலும் அது தானாகவே அவர் காதில் விழுந்து விடும் என்று கூறி அருளியிருக்கிறார்.

ஒரு மேம்பட்ட சக்திக்காக தன் உடலை உகுத்து எங்கும் பரவியிருக்கும் அவரின் அருள் அரவிந்த பகதர்களுக்கு மட்டுமே உரிய ஒன்று இல்லை; எல்லோருக்கும் எல்லோரிடமும் அவரது கருணை மழை பொழிந்து கொண்டே இருக்கும்.

அவரை நினைவில் கொண்டு முன்னேறுவோம்!

நன்றி, வணக்கம்.

                           ********

tags- அரவிந்தர் – 2

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: