ஆலயம் அறிவோம்! வைஷ்ணவ தேவி திருத்தலம்! (Post No.9981)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9981

Date uploaded in London – –   16 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 15-8-2021 அன்று ஒளிபரப்பான உரை!

வைஷ்ணவ தேவி திருத்தலம்!

சங்க சக்ர கதா தத்தே விஷ்ணுமாதா ததாரிஹா |

விஷ்ணுரூபாதவா தேவீ  வைஷ்ணவீ  தேன கீயதே ||

விஷ்ணுவைப் போல சங்க, சக்ர, கதைகளைத் தரிப்பதாலும், அவருக்கு ஜனனியாக இருப்பதாலும், அவரைப் போலவே எதிரிகளை சம்ஹாரம் செய்வதாலும் வைஷ்ணவீ – விஷ்ணுவைச் சேர்ந்தவள் – என்ற பெயர் அம்பிகைக்கு ஏற்பட்டிருக்கிறது!

 ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது சக்தி தலங்களுள் தலையாய ஒன்றான வைஷ்ணவ தேவி திருத்தலமாகும். இந்தத் தலமானது திரிகூட மலையில் 5200 அடி உயரத்தில் கட்ரா நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஜம்மு நகரிலிருந்து 42 கிலோமீட்டரில் உள்ளது இது. சுமார் 14 கிலோமீட்டர் மலையில் நடைப்பயணமாக இயற்கைச் சூழலில் சென்று ஆலயத்தை அடையலாம். மலை மீது நடக்க முடியாதவர்கள் குதிரையை அமர்த்திக் கொண்டு செல்லலாம்.திரிகூட மலையைப் பற்றி ரிக்வேதம் கூறுவதால் இது மிகப் பழங்காலத்திலிருந்தே இருந்து வந்த தலம் என்பதை அறியலாம்.

மலையின் உச்சியில் உள்ள குகைக் கோவிலில் முப்பெரும் தேவிகளான லக்ஷ்மி, சரஸ்வதி, காளி ஆகியோர் குடி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர். குகை 30 மீட்டர் நீளத்தையும் ஒன்றரை மீட்டர் உயரத்தையும் கொண்டுள்ளது. குகையின் முடிவில் மூன்று பாறைகள் ஸ்வயம்புவாகத் தோன்றி சூலத்தின் மூன்று முனைகள் போல அமைந்துள்ளன. இப்பாறைகளே தேவியரின் அருவ வடிவம்; இவையே மாதா ராணியாக வழிபடப்பட்டு வருகிறது.

வைஷ்ணவி கோவிலைப் பற்றிய புராதன வரலாறு உண்டு. திரேதா யுகத்தில் பேய்களின் கொடுங்கோன்மை உச்சகட்டத்தை அடைந்த சமயம் லக்ஷ்மி, சரஸ்வதி, காளி ஆகிய முப்பெரும் தேவியரும் ஒளிப்பிழம்பான வைஷ்ணவி தேவியை திரிகூட உச்சி மலையில் உருவாக்கினர். பூமியை வாட்டிய அனைத்துப் பேய்களையும் வைஷ்ணவி தேவி மாய்த்தார். பின்னர் அவர் பூமியில் இருக்கத் திருவுளம் கொண்டு பாரதத்தின் தென்பாகத்தில் வாழ்ந்த ரத்னாகர் சாகர் – சம்ரிதி தேவி ஆகிய தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். ரத்னாகர் அவருக்கு வைஷ்ணவி என்ற திருநாமத்தைச் சூட்டினார். ஒன்பது வயதில் அவர் ராமரை வழிபடலானார். அவர் முன் தோன்றிய ராமர் இந்த அவதாரத்தில் ஏக பத்தினி விரதனாக இருக்கும் தான், அடுத்து வரும் கல்கி அவதாரத்தில் அவரை மணப்பதாகக் கூறி அருளினார்.

வைஷ்ணவி தேவி ராமரின் வெற்றிக்காக திரிகூட மலையில் உள்ள குகையில் நவராத்திரி ஒன்பது நாட்களும் தவம் மேற்கொண்டார். ராமர் வெற்றி பெற்றார். அதை நினைவு கூரும் வண்ணம்  இந்த நாட்களில் ராமாயணம் படிக்கும் வழக்கம் இன்றும் நீடிக்கிறது. அவர் திரிகுடா என அழைக்கப் படலானார்.                                         

இன்னொரு வரலாறும் உண்டு. கட்ராவிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹன்சாலி என்ற கிராமத்தில்  ஸ்ரீதரர் என்றொரு பக்தர் வசித்து வந்தார். அவர் முன் வைஷ்ணவி தேவி மிக்க அழகு வாய்ந்த பெண்ணாகத் தோன்றினார். அவர்  ஸ்ரீதரிடம் பக்தர்களுக்கு விருந்து படைக்கும் பண்டாரா என்ற ஒரு விருந்தை அளிக்குமாறு வேண்டிக் கொண்டார். அதற்கு இணங்கிய  ஸ்ரீதர் அனைவரையும் விருந்துக்கு அழைத்தார். அருகிலுள்ள இடங்களில் வசிக்கும் மக்களையும் விருந்துக்கு அழைக்கப் புறப்பட்டார். ‘பைரவ் நாத்’ என்ற பெயர் கொண்ட சுயநலம் வாய்ந்த அரக்கனையும் அவர் விருந்திற்கு அழைத்தார். பைரவ்நாத் ஸ்ரீதரிடம் விருந்து நன்றாக நடக்குமா என்று கேட்க ஸ்ரீதர் மிகுந்த கவலையுற்றார். ஆனால் அந்தப் பெண் மீண்டும் தோன்றி விருந்து அழகுற நடக்கும் என்றாள். அப்படியே பண்டாரா சிறப்பாக நடந்தது. வியப்புற்ற பைரவ்நாத் இதற்குக் காரணமாக அமைந்த அந்தப் பெண்ணைத் தேடி திரிகூட மலைகளில் ஒன்பது மாதம் அலைந்தார். ஆனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தப் பெண் அங்கிருந்து செல்லும் முன்பாக ஒரு அம்பை பூமியில் நோக்கிச் செலுத்தினாள். அங்கு பூமியிலிருந்து ஒரு நீரூற்று பீறிட்டுப் பொங்கியது. அது ஆறாகப் பெருகியது. அதுவே பாணகங்கை ஆறாகும். அதில் குளிப்போர் பாவங்கள் அனைத்தும் போகும்; தேவியின் திருவருளும் கூடும்.

பாணகங்கை ஆற்றின் கரையோரம் தேவியின் திருவடித் தடங்களை இன்றும் யாரும் காணலாம். ஆகவே இந்த ஆற்றின் கரைகளை சரண் பாதுகா என மக்கள் அழைக்கின்றனர்.

பின்னர் வைஷ்ணவி தேவி அத்கவரி என்ற இடத்தில் கர்ப்ஜூன் என்ற குகையில் இருந்து பல மாதங்கள் தவம் புரிந்தார். பைரவர் ஒருவாறாக தேவியைக் கண்டுபிடித்து அவரைக் கொலை செய்ய முயன்ற போது தேவியானவள் உக்கிரமான காளி ரூபம் எடுத்து பைரவரது தலையைத் துண்டித்தார். தேவி இப்படி காளியாக உருமாறியது தர்பார் என்ற இடத்திலுள்ள குகையின் வாயிலின் அருகே நடந்தது. தேவி பைரவரின் தலையைத் துண்டிக்கவே அந்த தலை விழுந்த இடம் பைரவ் காடி என்று அழைக்கப்படுகிறது. இது புனிதமான அந்தக் குகையிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தனது மரணத் தறுவாயில் பைரவர், தேவியிடம் தன்னை மன்னித்து அருள் பாலிக்குமாறு கூறவே, அன்னையும் அவருக்கு முக்தி அளித்தார்.

தன்னை தரிசிக்க அங்கு வரும் அனைவரும் தனது தரிசினத்திற்குப் பின்னர் பைரவரின் கோவிலுக்கும் சென்று தரிசித்தாலேயே யாத்திரை பூரணமாகும் என்னும் வரத்தையும் அளித்தார். தேவி தன்னை மூன்று சூல வடிவு கொண்ட பாறைகளாக மாற்றிக் கொண்டு அங்கேயே நீண்ட தவத்தில் ஆழ்ந்தார். தேவியைத் தேடி வந்த ஸ்ரீதர் இறுதியில் குகையை அடைந்தார். தேவியின் திரிசூலத்தைக் கண்டு அதை பல்வேறு வழிகளில் வழிபட ஆரம்பித்தார். மனம் குளிர்ந்த தேவி அவருக்குத் தரிசனம் தந்தார். அவரை ஆசீர்வதித்ததோடு தன்னை தரிசிக்க வரும் லக்ஷக்கணக்கான பக்தர்களையும் இன்றும் அவர் அருள் பாலித்துக் காத்து வருகிறார்.

மக்கள் லக்ஷக்கணக்கில் தரிசனத்திற்காக வருவதால் முன் அனுமதிச் சீட்டு பெற்றுக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 50000 பக்தர்களே செல்லலாம் என்ற கட்டுப்பாடு இப்போது விதிக்கப்பட்டிருக்கிறது. வைஷ்ணவி தேவி பற்றி தொலைக்காட்சித் தொடர்களும் பல திரைப்படங்களும் வெளி வந்துள்ளன. காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வைஷ்ணவி தேவிஅனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.  லலிதா சஹஸ்ரநாமத்தில் 892வது நாமமாக அமைவது இது: ஓம் வைஷ்ணவீ  நமஹா, ஓம்!

நன்றி வணக்கம்!

**

Tags — ஆலயம் அறிவோம், வைஷ்ணவ தேவி,  திருத்தலம், கோவில் 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: