சித்த ஜெயம் ஒன்றே மாயையிலிருந்து விடுபட வழி : காதியின் கதை (Post.9980)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9980

Date uploaded in London –  16 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோக வாசிஷ்ட கதைகள்

சித்த ஜெயம் ஒன்றே மாயையிலிருந்து விடுபட வழி : காதியின் கதை!

ச.நாகராஜன்

யோகவாசிஷ்டத்தில் உபாஸன ப்ரகரணத்தில் வரும் கதை இது.

      மஹரிஷி வசிஷ்டர் அன்புடன் ராமரை நோக்கி, “சித்த ஜெயமே அதாவது மனதை ஜெயிப்பதே மாயையிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும்” என்று கூறி விட்டு அதை விளக்குவதற்காக காதியின் கதையைக் கூற ஆரம்பித்தார்.

     காதி பல கலைகளும் அறிந்த நன்கு படித்த ஒரு மனிதன். இளம் வயதிலிருந்தே காதிக்கு வாழ்வின் இன்பங்கள் எல்லாம் பிடிக்கவில்லை. வளர்ந்த நிலையில் தவம் புரிய ஆசைப்பட்ட அவன் விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற விரும்பினான். ஆகவே தன் மனைவியையும் மக்களையும் துறந்து தவம் புரிய கானகம் நோக்கிச் சென்றான். கடுமையான தவம் புரியவே அவன் முன் விஷ்ணு தோன்றினார். விஷ்ணுவிடம் காதி, மாயை எப்படி உதிக்கிறது என்றும் மாயை என்றால் என்ன என்று அறிய ஆசைப்படுவதாகவும் கூறினான். அப்படியே ஆகட்டும் என்று அவன் ஆசை நிறைவேற விஷ்ணு ஆசீர்வதித்தார்.

ஒரு நாள் காதி ஏரி ஒன்றில் குளிக்கச் சென்றான். குளிக்கும் போது தான் இறந்து விட்டதாகவும் தன் உடலை எரித்து விட்டதாகவும் அவன் உணர்ந்தான். சண்டாள குலத்தில் ஒரு குடும்பத்தில் அவன் பிறந்ததாகவும் அதே குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவன் மணந்து கொண்டதாகவும் அவனுக்குத் தோன்றியது.

பின்னர் ஒரு நாள் பயங்கரமான மழை ஒன்று பெய்ய அதில் அவனது குடும்பம் முற்றும் அழிந்தது. மிகுந்த துக்கத்துடன் அவன் காட்டில் அலையலானான்.அலைந்தவாறே அவன் ஒரு நகரத்தை அடைந்தான். அங்கு ஒரு பெரிய ஊர்வலம் யானை ஒன்று முன்னே செல்ல வந்து கொண்டிருந்தது. அந்த யானை அவன்  முன்னே வந்து நின்றது. அவனைத் தும்பிக்கையால் தூக்கி தன் முதுகின் மீது அமர்த்தியது. அந்த ஊர்வலத்தில் வந்தவர்கள் அந்த நகரத்தைச் சேர்ந்த மக்கள். யானையோ பட்டத்து யானை. அது அந்த ராஜ்யத்திற்கான அரசனைத் தேர்வு செய்ய வந்தது. அவன் நேராக அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு முடி சூட்டப்பட்டது. அந்த ராஜ்யத்தை அவன் திறம்பட ஆட்சி புரியலானான்.

ஒரு நாள் தனியாக அவன் அருகில் இருந்த ஒரு காட்டிற்குச் சென்றான். அங்கு பழங்குடியினர் வசிக்கும் ஒரு கிராமத்தை அவன் கண்டான். அந்த பழங்குடி மக்கள் அவனை அன்புடன் வரவேற்றனர். தங்களில் ஒருவன் அரசனாக்கப்பட்டதால் அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 நகரத்து மக்களுக்கு தங்களது அரசன் ஒரு தாழ்ந்த குலத்திலிருந்து வந்தவன் என்பது சில நாட்களில் தெரிய வந்தது. அவனைத் தங்கள் அரசனாக ஏற்றுக் கொண்ட தங்கள் முட்டாள்தனத்தை நினைத்து அவர்கள் வேதனைப் பட ஆரம்பித்தனர். அவர்கள் அவனை ஒரு தாழ்ந்த குலத்தவனைப் போலவே எண்ணலாயினர்; நடத்த ஆரம்பித்தனர். அவனால் தங்களுக்கு தீட்டு ஏற்பட்டு விட்டதாக அவர்கள் கருத ஆரம்பித்தனர். ஆகவே தமக்குத் தாமே தீயிட்டுக்கொண்டு தீக்குளிக்க அவர்கள் தீர்மானித்தனர். இதையெல்லாம் கண்ட காதி மிகுந்த துக்கம் அடைந்தான். அந்தத் தீயில் தானே விழுந்து உயிரை விடத் தீர்மானித்தான். அவன் உடல் எரிந்து கொண்டிருக்கும் போது திடீரென்று தனது கனவு நிலையிலிருந்து விழித்த காதி தான் ஏரியில் குளித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.

ஆக இப்படி காதி ஒரு சில கணங்களிலேயே இறப்பு, பிறப்பு, திருமணம், குடும்பம் சர்வநாசம் அடைந்தது, அரசனாக முடி சூடியது, திருப்பி வெறுத்து ஒதுக்கப்பட்டது, மறுபடி மரணம் அடைந்தது ஆகிய அனைத்தையும் அனுபவங்களாக அனுபவித்தான்.

 தான் யார் என்றும் எப்படி இப்படிப் பல்வேறு அனுபவங்களைக் குளித்துக் கொண்டிருக்கும் ஒரு சில கணங்களிலேயே தான் அடைய முடிந்தது என்றும் காதி எண்ணி எண்ணி ஆச்சரியப்பட்டான்.

  ஒரு நாள் காதியின் ஆசிரமத்திற்கு ஒருவர் விஜயம் செய்தார். அவர், தாழ்ந்த குலத்தவன் ஆட்சி புரியும் ஒரு ராஜ்யத்திற்குத் தான் சென்றதாகவும், அந்த ராஜ்யத்தின் அரசன் தான் தாழ்ந்த குலத்தவன் என்று அறியப்பட்டதால், தன்னைத் தானே எரியும் நெருப்பில் விழுந்து உயிரை விட்டு விட்டதாகவும் கூறினார். அத்தோடு அவர் அப்படிப்பட்ட ஒரு தேசத்தில் தான் சிறிது காலம் வசித்ததற்கு பிராயசித்தம் செய்ய பிரயாகைக்குச் சென்றதாகவும் கூறினார்.

தனது வாழ்க்கை சம்பவங்களோடு ஒத்திருக்கும் அவரது இப்படிப்பட்ட தகவலைக் கேட்ட காதி மிகுந்த ஆச்சரியத்திற்குள்ளானான். அவர் கூறியது உண்மைதானா என்பதை அறிய அவனுக்கு ஆசை வந்தது. அவன் அந்த ராஜ்யத்திற்குச் சென்று அந்த மக்கள் கூறியதைக் கேட்டான். தான் கேட்ட விவரங்கள் அப்படியே தனது அனுபவங்களுடன் ஒத்திருந்ததைக் கேட்ட காதி பிரமித்துப் போனான்.

 அவன் விஷ்ணு தனக்குக் கொடுத்த வரத்தை இப்போது எண்ணிப் பார்த்தான்.இது தான் மாயை, மனதின் சக்தி என்று இப்போது அவன் புரிந்து கொண்டான். இருந்த போதிலும் ஒரு அற்ப கனவானது எப்படி நிஜமாக இருக்க முடியும் என்ற ஆச்சரியம் அவ்னை விட்டு அகலவில்லை. மறுபடியும் அவன் தவம் புரிய ஆரம்பித்தான்.

 விஷ்ணு அவன் முன் தோன்றினார். அவன் கனவில் கண்ட அனைத்தும் மற்றும் நிஜமாகப் பார்த்த அனைத்தும் ஆக இந்த இரண்டுமே உண்மை இல்லை என்றார். அவை இரண்டுமே அவன் மனதில் உதித்தவையே என்றார் விஷ்ணு.

 காதிக்கு விஷ்ணு கூறிய விளக்கத்தால் திருப்தி ஏற்படவில்லை. அவன் உடனே பழங்குடியினர் வசிக்கும் அந்த கிராமத்திற்குச் சென்றான். அவர்கள் கூறியது அனைத்தும் தான் அனுபவித்ததை ஒத்திருந்ததை மீண்டும் ஒரு முறை அவன் கண்டான்.

  மறுபடியும் தவம் புரிய ஆரம்பித்தான். விஷ்ணு அவன் முன் தோன்றினார். காதி மீண்டும் ஒரு முறை அந்தக் கதையை சரி பார்த்ததாக அவர் கூறினார். ஒரு விஷயத்தைப் பலரும் கூறி விட்டதால் அது உண்மை என்றில்லை என்று கூறிய விஷ்ணு, தன்னை ஒரு தாழ்ந்த குலத்தவன் என்று அவன் எண்ணி வருகின்ற வரையில் அவனால் அந்த மாயையிலிருந்து விடுபடமுடியாது என்றார். தனது வாஸனையால் அவன் வெல்லப்பட்டான் என்றார் விஷ்ணு. பிறகு அவர் மனத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளைச் செய்யுமாறு அவனுக்கு அறிவுறுத்தினார். காதியும் தனது மனதை அடக்கும் பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்தான். நாளடைவில் தாழ்ந்த குலம் என்ற மாயை உணர்வு அவனை விட்டு நீங்கியது. இறுதியில் அவன் ஜீவன் முக்தனானான்.

        இந்தக் கதை எவ்வளவு தவம் செய்து மனதின் சக்தியை ஒருவன் பெற்றாலும் கூட மாயையிலிருந்து எப்படி  அவனால் விடுபட முடியவில்லை என்பதை உணர்த்துகிறது. மனதைப் பற்றியும் ஆத்மனைப் பற்றியும் விசாரம் செய்வது என்றே ஒரே வழி மட்டுமே உதவும் என்பதையும் காதியின் கதை நமக்கு உணர்த்துகிறது. ஆத்மஞானத்தை அடைய வேண்டும் என்று ஒருவன் தீர்மானித்து விட்டான் என்றால், உடனேயே அதற்கான தீவிரமான முயற்சியை அவன் மேற்கொண்டால் மட்டுமே அவன் அதை அடைவான்.

வசிஷ்டரின் இந்தக் கதையால் ராமர் பேருண்மையை அறிந்து கொண்டார்; நாமும் தான்!

***

INDEX

யோக வாஷிடம், உபாஸன ப்ரகரணம்

சித்த ஜெயமே மாயையிலிருந்து விடுபட வழி

வசிஷ்டர் ராமனுக்குக் கூறும் காதியின் கதை

காதியின் தவம், விஷ்ணு அவன் முன் தோன்றி மாயை பற்றி விளக்குதல்

காதியின் அனுபவங்கள்

tags- யோக வாசிஷ்ட கதை, காதி

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: