Post No. 10,004
Date uploaded in London – 22 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 12 கட்டுரை எண் 9841 வெளியான தேதி
12-7-2021
புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 13
(41 முதல் – 45 முடிய)
ச.நாகராஜன்
41. மகாலக்ஷ்மி தோற்றம்
வைவஸ்த மனு பூர்வ ஜென்மத்தில் சுரதன் என்னும் பெயருடைய அரசனாக இருந்தான். ஒரு சமயம் அவனது பகைவன் அவனைத் தொற்கடித்தான். தனியே குதிரை மீதேறிச் சென்ற சுரதன் தீர்க்கதிருஷ்டி என்ற முனிவரது ஆசிரமத்தினுள் சென்று அவரை வணங்கினான். அவர் தேவியின் மஹிமையைப் பலவாறாகச் சொல்ல ஆரம்பித்தார். அதில் மகாலக்ஷ்மியைப் பற்றி அவர் கூறும் பகுதி இது:-
மகிஷாசுரன் சகல லோகங்களையும் சகல திக்பாலகர்களையும் வென்று ஆண்டு கொண்டிருக்கும் சமயத்தில் தேவர்கள் பிரமதேவரை அழைத்துக் கொண்டு சங்கரரும் விஷ்ணுவும் இருக்குமிடம் சென்று மகிஷாசுரனின் கொடுமைகளைக் கூறினர். அவனை வெல்லும் உபாயம் எது என்று சிந்தித்துக் கவலைப்பட, விஷ்ணுவிற்கு அதிக கோபம் உண்டாயிற்று. அதே போல ருத்ரமூர்த்திக்கும் கோபம் உண்டாயிற்று. இவ்வாறு யாவரிடத்தும் உண்டான கோபாக்னியானது ஒவ்வொரு ஓளியாக வெளி வரலாயிற்று.
அந்த ஒளிகளுள், ஆயிர சூரியப்ரகாசம் உள்ள சம்புவின் ஒளி முகமாகவும்,
யமனுடைய ஒளி தலை மயிராகவும்,
விஷ்ணுவினுடைய ஒளி கைகளாகவும்,
சந்திரனுடைய ஒளி ஸ்தன்யங்களாகவும்,
இந்திரனுடைய ஒளி இடையாகவும்,
வருணனுடைய ஒளி முழங்கால்களாகவும்,
பூதேவியினுடைய ஒளி நிதம்பமாகவும்,
பிரமனுடைய ஒளி பாதமாகவும்,
சூரியனுடைய ஒளி கால் விரல்களாகவும்,
வசுக்கள் ஒளி கை விரல்களாகவும்,
குபேரனுடைய ஒளி நாசியாகவும்,
பிரஜாபதியினுடைய ஒளி பற்களாகவும்,
அக்னியினுடைய ஒளி மூன்று நேத்ரமாகவும்,
சாத்தியர்களுடைய ஒளி இரண்டு புருவமாகவும்,
வாயுவினுடைய ஒளி இரண்டு காதுகளாகவும் ஆயின.
இவ்வாறு சகல தேவர்களுடைய தேஜோரூபங்களே ஓர் உருவாக மகிஷனை சம்ஹாரம் செய்ய மஹாதேவியானவள், மஹாலக்ஷ்மி என்னும் திருநாமத்துடன் தோன்றினாள்.
பின்னர், சிவன் சூலமும்,
விஷ்ணு சக்ரமும்,
வருணன் சங்கமும்,
அக்னி சக்தியும்,
வாயு வில்லும் பாணமும்,
இந்திரன் வஜ்ரம், ஐராவதம், கண்டாமணியும்,
யமன் காலகண்டமும்,
சூரியன் காந்திமாலையும்,
காலன் கடகமும் கவசமும்,
சமுத்திரராஜன் ஹாரம், வஸ்திரம், குண்டலம், சூடாமணி, தோள்வளை, சர்ப்பாபரணம், அட்டிகை நூபுரம் ஆகியனவற்றையும்,
விஸ்வகர்மா மோதிரமும்,
ஹிமவான் நானாவிதமான ரத்னங்களையும், சிம்மத்தையும்,
குபேரன் சுராபான பாத்திரத்தையும்,
ஆதிசேஷன் நாகஹாரமும் கொடுத்து மகிஷாசுரனைக் கொல்ல வேண்டுமென்று போற்றி வாழ்த்தினர்.
தேவி சந்தோஷித்து கர்ஜித்து மகிஷனோடு யுத்தம் செய்வதற்காக வர, அந்த அசுரன் சிக்ஷுரன், துர்த்தரன், துன்முகன், பாஷ்கலன், தாம்பிரகன், பிடாலன் முதலானவர்கள் சூழ்ந்து வர தேவியை எதிர்த்துப் போர் செய்தான்.
தேவி அவர்களையெல்லாம் நாசம் செய்து மகிஷனையும் பாசத்தினால் கட்டி கத்தியினால் சிரசை வெட்டினாள்.
அது கண்டு தேவர்கள் அனைவரும் தேவியைப் போற்றி வாழ்த்தினர்.
இவ்வாறு மகாதேவி மகிஷனைக் கொல்ல மகாலக்ஷ்மியாய்த் தோன்றினள் என்று அறிவாயாக!
-தேவி பாகவதம் பத்தாம் ஸ்கந்தம், 12ஆம் அத்தியாயம்
42. ஒவ்வோர் இந்திரிய உணர்வினால் ஒவ்வோர் ஜீவராசி நாசமடைவதற்கு உதாரணங்கள்!
கேட்பதாலும், ஸ்பரிச உணர்வினாலும், பார்வையினாலும், நாவின் ருசியாலும், மூக்கின் நுகரும் தன்மையாலும் நாசமடைவதற்கு உதாரணங்கள் பல உள்ளன.
புல்லாங்குழலின் இசையைக் கேட்டு புள்ளிமான் மயங்கி தான் இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் இருக்கிறது, உடனே அது வேடனால் பிடிக்கப்படுகிறது. இது காதால் கெடுவதற்கு உதாரணமாகும்.
புணர்ச்சியை விழையும் ஆண் யானையானது பெண் யானையைப் பின் தொடர்ந்து சென்று வேட்டைக்காரர்கள் அதைப் பிடிப்பதற்காக வெட்டியுள்ள படுகுழியில் விழுந்து பிடிக்கப் படுகிறது. ஸ்பரிச இன்பத்தால் கெடுவதற்கு இது உதாரணமாகும்.
மழைக்காலத்தில் எரியும் விளக்கைக் கண்டு விட்டில் பூச்சிகள் அது கனிந்திருக்கும் பழம் என்று நினைத்து அதில் விழுந்து எரிந்து தீய்ந்து போய் கண் பார்வையை இழக்கின்றன. இது கண் பார்வையால் கெடுவதற்கு உதாரணமாகும்.
தேனீக்கள் தேன் சுவையை விரும்பி அதைத் தன் தேன் கூட்டில் சேர்த்து வைத்திருக்க, வேடர்கள் தீயால் கூட்டினைக் கொளுத்தி அவற்றை விரட்டுவதும் சாகடிப்பதுமாகச் செய்து தேனைக் கவர்ந்து செல்கின்றனர்.
இது நாவால் கெடுவதற்கு உதாரணமாகும்.
தூண்டில் முள்ளில் கோர்த்துள்ள இறைச்சியின் நாற்றத்தை விரும்பி மீனானது அந்தத் தூண்டிலில் சிக்கி தன் உயிரை இழக்கிறது. இது நாசிப்புலனால் கெடுவதற்கு உதாரணமாகும்.
இப்படி ஒவ்வொரு இந்திரியத்தாலேயே ஒவ்வோர் ஜீவராசிகள் கெடும் போது பஞ்ச இந்திரியங்களைக் கொண்ட மனிதன் அடையக் கூடிய கேடுகள் கொஞ்சமாக இராது அல்லவா?
கருடனுக்கு நாராயணர் கூறியது – கருட புராணம்
43. சிவாலயம் எழுப்புவதால் அடையும் பலன்கள்!
நைமிசாரண்யத்தில் குழுமி இருந்த முனிவர்களைப் பார்த்து சூதர் கூறியது:- எவன் ஒருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்ததால் உண்டாகும் பலனைப் பெறுகிறான். அது மட்டுமல்ல, அவன் குலத்தில் பிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வர். பெரிதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஒருவன் மனத்தால் ஆலயம் எழுப்ப வேண்டும் என்று நினைத்தாலேயே அவன் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களிலிருந்து விடுபடுவான். அவன் ஆலயம் கட்டி முடித்தானாகில் சகலமான போகங்களையும் அடைவான்,
கருங்கற்களைக் கொண்டு ஆலயம் எழுப்புவானாகில், அக்கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆயிரம் வருஷம் சிவ லோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவான். சிவலிங்கத்தைச் செய்பவன் சிவ லோகத்தில் அறுபதினாயிரம் வருஷம் இருப்பான். அவன் வமிசத்தவரும் சிவ லோகத்தை அடையும் பலனைப் பெறுவர்.
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய எண்ணியவன் எட்டுத் தலைமுறைக்கு இறந்த தன் முன்னோர்களைத் தன்னுடன் சிவ லோகத்தை அடையச் செய்வான். ஒருவனால் செய்ய முடியவில்லை என்றாலும், பிறர் செய்ததைக் கண்டு, நாமும் செய்திருந்தால் நற்கதி அடையலாமே என்று நினைத்தாலேயே போதும், அவன் முக்தி அடைவான்.
- சிவ புராணம் – அத்தியாயம் சிவாலயம் எழுப்புவதால்
அடையும் பலன்கள்
44. சிவனை பூஜித்து நன்மை அடைந்தவர்கள்!
பகவானை ஆராதித்து எத்தனையோ பேர் நன்மை அடைந்துள்ளனர்.
சதமகன் என்னும் அசுரன் சிவபெருமானைக் குறித்து நூறு வருஷம் கடும் தவம் செய்து அவர் அனுக்ரஹத்தால் ஆயிரம் நகரங்களை அடைந்தான்.
யாக்ஞவல்கியர் என்னும் முனிவர் பகவானை ஆராதித்து உத்தம ஞானத்தை அடைந்தார்.
வாலகில்யர் என்னும் முனிவர் பகவானி அனுக்ரஹத்தால் ஒருவராலும் வெல்ல முடியாத கருடனை வெற்றி கண்டார்.
இன்னும் எத்தனை எத்தனையோ!
– சிவ புராணம்
45. ஹரிச்சந்திரன் சரித்திரத்தைக் கேட்பதின் பலன்!
எவன் ஒருவன் ஹரிச்சந்திர சரித்திரத்தைக் கேட்கின்றானோ, அவன் நாடோறும் சுகமே அடையப் பெறுவான். அதுமட்டுமல்ல, சுவர்க்கத்தை வேண்டியவன் சுவர்க்கத்தையும், புத்திரப் பேறு வேண்டியவன் புத்திரப் பேற்றையும், நல்ல மனைவியை வேண்டியவன் நல்ல மனைவியையும், ராஜ்யத்தை வேண்டியவன் ராஜ்யத்தையும் பெறுவான்.
இவ்வாறு சூத பகவான் நைமிசாரண்யவாசிகளிடம் கூறினார்.
-தேவி பாகவதம் ஏழாம் ஸ்கந்தம் அத்தியாயம் 27
***
INDEX
மகாலக்ஷ்மி தோற்றம்
ஒவ்வொரு புலனாலும் ஏற்படும் நாசம்
சிவாலயம் எழுப்பினால் ஏற்படும் பலன்கள்
சிவபூஜை தரும் நன்மைகள்
ஹரிச்சந்திரன் கதை
tags- மகாலக்ஷ்மி தோற்றம், சிவாலயம், சிவபூஜை